ரணில் எனும் ஏமாற்றுக்காரர் !! (கட்டுரை)
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது, ‘பாராளுமன்றமே அரசாங்கம்’ என்கிற புரிந்துணர்வின் அடிப்படையில் எட்டப்பட வேண்டும். அதைப் புரிந்து கொள்ளாது, தமிழ்க் கட்சிகள் நீண்ட தூரம் பயணிப்பதால் எந்தப் பயனும் இல்லை” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள காணொலி உரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு, பாராளுமன்றத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும். அதனை விடுத்து, தீர்வை வெளியில் தேடிக் கொண்டிருக்க முடியாது. அப்படித் தேடுவதாலும் தீர்வு கிடைத்துவிடாது என்றுதான் ஜனாதிபதி கூற விளைகின்றார். அதனால்தான், ‘பாராளுமன்மே அரசாங்கம்’ என்ற விடயத்தை, புதிதாகக் கண்டுபிடித்தது மாதிரி அவர் குறிப்பிடுகிறார்.
அத்தோடு, தமிழ்க் கட்சிகளை நோக்கி, பாராளுமன்றம் அனுமதிக்காத எதையும் தீர்வாக தன்னிடம் எதிர்பார்க்க வேண்டாம்; அதற்காக, இந்தியாவையோ, மேற்கு நாடுகளையோ துணைக்கு அழைத்து வந்தாலும், அதனால் எந்தப் பயனும் இல்லை என்பதுதான் அவரது உரையின் சாராம்சம்.
சுதந்திர இலங்கையில் இனமுரண்பாடுகளை அதிகம் தோற்றுவித்ததில் பாராளுமன்றத்துக்கு முக்கிய இடமுண்டு. தனிச் சிங்களச் சட்டம், பௌத்தத்துக்கு முதலிடம் தொடங்கி, நாட்டிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான சட்டங்கள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயே நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.
நாட்டில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் சிங்கள மக்கள். அந்தப் பெரும்பான்மையை, ஆட்சி அதிகாரத்துக்காக இனவாத, மதவாத அரசியலாக மாற்றியது, பாராளுமன்றத்துக்குள் இருந்த அரசியல்வாதிகள். அவர்களிடம் நீதி கேட்பது என்பது, ‘சாத்தானை வேதம் ஓத’க் கேட்பதற்கு ஒப்பானது.
பௌத்த மேலாதிக்க சக்திகளும் அவர்களின் ஏவல் பிள்ளைகளாக செயற்பட்ட தென்இலங்கை சக்திகளும், அதிக தருணங்களில் பாராளுமன்றத்தை தங்களின் மேலாதிக்க ஆக்கிரமிப்பு அரசியலை முன்னெடுப்பதற்கான அங்கிகரிக்கப்பட்ட அமைப்பாகவே கருதி வந்திருக்கின்றது. அந்த நிலை, இப்போதும் அப்படியேதான் இருக்கின்றது.
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து, அரசாங்கத்தை நோக்கி கேள்வி எழுப்பினால், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி, “நீங்கள் புலிப் பயங்கரவாதிகள்” என்று பேசுமளவுக்குத்தான், அதன் கண்ணியம் இருக்கின்றது.
அப்படிப்பட்ட ஓர் அரங்குக்குள் நின்றுகொண்டு, தமிழ் மக்களுக்கான தீர்வைக் காண வேண்டும் என்று கூறுவதை, ‘வடிகட்டிய நரித்தனம்’ என்றுதான் அடையாளப்படுத்த வேண்டும்.
மாற்றாக, தீர்வின்றித் தொடரும் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் அர்ப்பணிப்போடு வெளிப்படுத்தப்பட்ட செய்தி என்று, யாரும் நம்ப வேண்டியதில்லை.
ராஜபக்ஷர்களின் அரசியல் என்பது வெளிப்படையானது. தமிழ் மக்கள், தங்களின் அரசியல் பிரச்சினைகள் பற்றி பேசிக்கொண்டு, ஆட்சியாளர்களிடம் வரத் தேவையில்லை; வந்தாலும் எந்தப் பயனும் இல்லை என்பதுதான் ராஜபக்ஷர்களின் நிலைபபாடு. அப்படியான நிலைமையைத்தான், ராஜபக்ஷர்கள் ஆட்சியில் இருந்த 12 ஆண்டுகளும் நிரூபித்து இருக்கிறார்கள்.
ஆனால், ரணில் ஆட்சியில் இருக்கின்ற அனைத்துத் தருணங்களிலும், அதேவிடயத்தை சாயம் பூசிய வார்த்தைகளினூடாக வேறு வடிவில் கூறியிருக்கிறார்.
“பாராளுமன்றமே அரசாங்கம்; அங்குதான் தீர்வு காணப்பட வேண்டும்” என்பது, அதனை மட்டுந்தான் வெளிப்படுத்துகின்றது. அவர், பாராளுமன்றத்தால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும், கடந்த சுதந்திர தினத்துக்கு முன்னர், அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுவிடும் என்று அறிவித்தல் விடுத்தார். தமிழ்க் கட்சிகளையும் சில தடவை அழைத்து பேசினார். அங்கு பேசப்பட்ட விடயங்களில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.
ஏற்கெனவே, அரசாங்கமும் தமிழ் தரப்புகளும் பேசி, கண்ட இணக்கப்பாடுகள், காற்றில் விடப்பட்டவை மாதிரியே, இப்போதும் விடப்பட்டன. இப்போது, ரணில், இந்த வருட இறுதிக்குள், அரசியல் தீர்வைக் கண்டுவிட நினைப்பதாகக் கூறுகிறார். ஆனால், அதற்கான எந்த முனைப்பையும் அவர் சிறிதளவும் வெளிப்படுத்தவில்லை.
மாறாக, கவர்ச்சிகரமான அறிக்கை அரசியலூடாக, விடயங்களைக் கடக்க நினைக்கிறார். அதுவும், 2048 ஆண்டாகும் போது, “நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்ற வேண்டும்” என்று கூறுகிறார். இந்தக் கூற்று, தென் இலங்கை மக்களை நோக்கி விடுக்கப்படும், தேர்தல் வெற்றியை நோக்கிய அறைகூவல்!
தமிழ்த் தரப்பை நோக்கி, பௌத்த சிங்கள மேலாதிக்க சிந்தனை கோலொச்சும் பாராளுமன்றத்துக்குள்ளேயே தீர்வு காணப்படும்; அதற்கு இணங்கிக் கொள்ள வேண்டும்; அதைச் செய்யாது, வெளியில் நின்று கூப்பாடுபோடுவதால் பலனில்லை என்ற அறிவிப்பை ரணில் விடுக்கிறார்.
அதே நேரம், சர்வதேசத்தை நோக்கி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்துக்குள், இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண முயற்சிப்பதுதான் ‘ஜனநாயக நெறி’ என்று அவர் படம் காட்டவும் செய்கிறார். இதன்மூலம், தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற சர்வதேசத்தின் குரல்களைப் புறந்தள்ளவும் முடியும்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு இருக்கும் ரணிலுக்கு, தன்னை நோக்கிய புற அழுத்தங்கள் இருப்பதில் விருப்பமில்லை. ராஜபக்ஷர்களை விரட்டியடிக்க வீதிக்கு வந்த மக்களை, தான் அதிகாரத்தை அடையும் வரையில் ஆதரித்த ரணில், அதிகாரத்துக்கு வந்ததும் படை பலத்தைக் கொண்டு ஓடவிடத் தொடங்கினார்.
அவரின் உண்மை முகம் அதுதான்! அது, அதிகாரங்களை குறிவைக்கும் அரசியல்வாதிகள் கொண்டிருக்கும் ஒரே முகம்! அவரின் முகத்துக்கு ஜனநாயக முலாம் பூசிக் கொண்டு, மாற்றத்தின் சக்தி என்று பார்ப்பது எல்லாம் களவாணித்தனமாகும்.
சுதந்திர இலங்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, தந்தை செல்வா தொடங்கி இன்றைக்கு இரா.சம்பந்தன் வரையில், போராடித் தோற்ற வரலாறுதான் பதிவாகி இருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சியும், அதிலிருந்து முளைத்த சுதந்திரக் கட்சியும், அதன் பின்னால் இந்தக் கட்சிகளில் இருந்து விரிந்த பொதுஜன பெரமுனவும், ஐக்கிய மக்கள் சக்தியும், தமிழர் பிரச்சினையை ஒரே கண்ணோட்டத்தில் மாத்திரமே அணுகி வந்திருக்கின்றன.
பௌத்த மேலாதிக்க சிந்தனைகளுக்கு அப்பால் நின்று, தமிழ் மக்களையோ, அவர்களின் பிரச்சினைகளையோ அணுகுவதற்கு அந்தக் கட்சிகள் ஒருபோதும் தயாராக இருப்பதில்லை. ஏனெனில், இந்தக் கட்சிகளின் அடிப்படைச் சிந்தனை என்பது, மகாவம்ச மனநிலையில் இருந்து கட்டமைக்கப்படுவது. அது, தமிழ் மக்களை வில்லன்களாக சித்திரிக்கும் அரசியலின் நீட்சி.
அத்தோடு, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டால், ஆட்சியை அடைவதற்கான இலகுவான கருவியாக இதுவரை கையாண்டுவந்த இனவாத அரசியல் எனும் தீயை, கையில் ஏந்த முடியாது. தேர்தல் வெற்றிக்கு எந்தவித உழைப்பும் இல்லாமல் இனவாத, மதவாத அரசியலைத் தூண்டினால் இலகுவான வெற்றியைக் கண்டுவிடலாம் என்பதுதான், இலங்கை அரசியலின் ஒரே வரலாறு!
நிலைமை அப்படியிருக்க, அந்தக் கருவியை கைவிடுவதற்கு எந்த அரசியல்வாதியும் தயாராக இருக்கமாட்டார்கள். அதனால்தான், அவ்வப்போது தமிழர் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய பேச்சுகளுக்கு புற அழுத்தங்களால் இணங்கினாலும், தென் இலங்கை ஆட்சியாளர்கள் அதை எப்படியாவது தட்டிக்கழிக்கவே செய்திருக்கிறார்கள்.
ரணிலும் இப்போது அதைத்தான் செய்கிறார். ‘பாராளுமன்றமே அரசாங்கம்’ என்கிற வார்த்தை ஜாலம், தட்டிக்கழிப்பதை நோக்கியதுதான். ஆனால், அதில் அவர் செப்படிவித்தையொன்றைக் காட்ட விளைகிறார். அதாவது, பாராளுமன்றத்துக்குள் தீர்வைக்கான முயற்சிக்கிறேன். ஆனால், ராஜபக்ஷர்களினால் சூழப்பட்ட பாராளுமன்றம் அதற்கு இணங்கவில்லை. அதனால், தன் மீது குற்றமில்லை என்று சர்வதேசத்தின் கேள்விகளில் இருந்து நழுவ நினைக்கிறார்.
அத்தோடு, பாராளுமன்றத்துக்குள் தீர்வு என்று பேசினால், தமிழ்த் தரப்புகள், சிறிதுகாலம் கூச்சல் போட்டுவிட்டு ஓய்ந்துவிடும். அதனால், அவர்களின் தொல்லையும் இல்லை. ஏனெனில், கடந்த காலத்தில் தமிழர் பிரச்சிகைளுக்கான தீர்வு குறித்த எந்த முயற்சிகளையும் பாராளுமன்றம் அனுமதித்ததேயில்லை. மாறாக, பிரச்சினைகளை அதிகரிக்கவே செய்திருக்கின்றது. அதனால், தமிழ்க் கட்சிகள் கத்திக் களைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பது வெளிப்படையான செய்தி.
ரணில் என்கிற பழுத்த அரசியல்வாதி, தனது இறுதிக் காலத்தில் கிடைத்த ஜனாதிபதி என்கிற அதியுச்ச அதிகாரத்தை இறுகப் பற்றிக் கொள்வதற்காக, ஒட்டுமொத்த நாட்டையும், சர்வதேசத்தையும் ஏமாற்றி ஆட நினைக்கிறார்.
அவ்வளவுதான். அதைத் தவிர்த்து அவரது உழைப்பாளர் தினச் செய்தியில் எதுவும் இல்லை.