அதிவலதின் எதிர்காலம்: நாம் என்ன செய்ய வேண்டும்? (கட்டுரை)
உலகளாவிய ரீதியில் வலது தீவிரவாதம் அதிகரித்த வண்ணமுள்ளது. ஒருபுறம் பொருளாதார நெருக்கடிகள் அதிவலதுக்கான ஆதரவுத் தளத்தை அதிகரித்துள்ளன, மறுபுறம் அரசியல் மையநீரோட்டத்தின் பகுதியாக – இனத்துவம், மதம், மொழி, பிரதேசம், தேசியம் ஆகியவற்றின் வழி – இவை தம்மைக் கட்டமைக்கத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக பன்மைத்துவ சமூகங்களில் அதிவலதுக்கான ஆதரவுத்தளம் அதிகரித்துள்ளது. மத பன்மைத்துவம் சமூகக்கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் பல்லின நாடுகள் தீவிர வலது சித்தாந்தங்களின் முக்கிய நீரோட்டத்தைக் காணவியலுமாகிறது.
உதாரணமாக, ஆசியாவில், பல நாடுகளில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையும் அச்சுறுத்தல்களும் அதிகரித்து வருகின்றன. பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் கிறிஸ்தவ சிறுபான்மையினர், இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினர், மலேசியாவில் சீன சிறுபான்மையினர், இலங்கையில் முஸ்லீம், கிறீஸ்தவ சிறுபான்மையினர். இங்கு பொதுவான அம்சம் யாதெனில் சிறுபான்மையினர் வெளியாட்கள், ‘மற்றவர்கள்’ என்று கருதப்படும் ஒரு ஒற்றை இன-மத அடையாளத்தின் அடிப்படையில் ஒரு தூய சமுதாயத்தை உருவாக்கும் விருப்பமே அடியாழமாக உள்ளது.
இத்தகைய சொல்லாட்சிகள் மேற்கத்திய நாடுகளில் வன்முறையான தீவிர வலதுசாரிக் குழுக்களால் பயன்படுத்தப்பட்டதை எதிரொலிக்கின்றன. குறிப்பாக வெள்ளை மேலாதிக்க தீவிரவாதிகள், அடிக்கடி இனவாத தவறான செய்திகளை விளம்பரப்படுத்த இதே வேலையைச் செய்கிறார்கள். சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்துகிறார்கள்.
இன அல்லது இன ரீதியாக தூய்மையான சமூகத்திற்கான தேடலானது இந்த குழுக்களின் கதையாடல்களில் ஒரு முக்கியமான பொதுவான அங்கமாகும்.
கொரோனா பெருந்தொற்றும் அதைத் தொடர்ந்த உக்ரைன் யுத்தமும் ஆசியாவில் தீவிர வலதுசாரி சித்தாந்தங்களின் பரவலை விரைவுபடுத்த பயன்படுத்தப்படும் நிகழ்வுகளாகும். இந்தியாவில், இந்துத்துவா குழுக்களின் ஆதரவாளர்கள் வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் முஸ்லிம்களை ‘நோய்க்கொல்லிப் பரப்புனர்கள்’ என்று குற்றம் சாட்டி, இந்துக்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான சதித்திட்டத்தில் முஸ்லிம் சமூகத்தை உட்படுத்துகின்றனர்.
இலங்கையிலும் முஸ்லீம்களுக்கெதிரான திட்டமிட்ட அவதூறுகள் பரப்பப்படுகின்றன. முஸ்லீம்களுக்கெதிரான கண்டி வன்முறையை நிறுத்த அரசாங்கம் வாட்ஸ்அப் பாவனையையே நிறுத்த வேண்டி ஏற்பட்டது நினைவிருக்கலாம்.
தீவிர வலதுசாரி வன்முறை தீவிரவாதத்தின் அப்பட்டமான எழுச்சியானது ஜனரஞ்சக அரசியலின் எழுச்சி மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் உள்ள பன்மைத்துவ ஜனநாயகங்களுக்கு விடுக்கப்படும் சவால்களுடன் தொடர்புடையது. சிறுபான்மையினருடனான பதற்றம், காலனித்துவ கடந்தகால வரலாறுகள் ஆகியன பெரும்பாலும் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தப்பட்டு, அதிகாரத்தில் இருக்கும் கட்சிகள் பெரும்பான்மை ஆட்சியைப் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட மத அரசியல் மையங்களுடன் கைகோர்க்க வேண்டியிருந்தது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் இணையம் வழியாக தகவல் மற்றும் தவறான தகவல்களை அணுகும் சகாப்தத்தில், எதிர்ப்பு அல்லது விமர்சனத்தை அடக்குவதற்கு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பயன்படுத்திய நிகழ்வுகளுடன் இணைந்து அதிவலது அச்சுறுத்தலை அதிகப்படுத்தியுள்ளது.
உலகளாவிய தெற்கில் உள்ள பல நாடுகளில் பத்திரிகை சுதந்திரம் குறைந்து வருகிறது. அரசாங்கங்கள் பொது நிகழ்வுகளுக்கு ஊடக நிறுவனங்களின் அணுகலைக் கட்டுப்படுத்துகின்றன, பகிரங்கமாக பத்திரிகைகளைத் தாக்குகின்றன, சில சமயங்களில் அரசாங்கத்திற்கு பாதகமான செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்களை கைது செய்தல், குற்றஞ்சாட்டுதல் போன்றன நிகழ்கின்றன.
இந்த இயக்கவியல் இரண்டு விடயங்களைச் செய்கிறது. ஒன்று உரிமைகளுக்காக ஊடகக்குரல்கள் அடங்கிப் போகின்றன. இரண்டு, பெரும்பாலும் ஊடகங்கள் மற்றும் தகவல்தொடர்பு தளங்களில் அதிக தீவிரவாத நிலைகளை மேம்படுத்தவும் ஊக்கப்படுத்தவும் உதவுகிறது. ஆதிவலதின் பிரதான இயங்குதளங்களாக ஊடகங்கள் மாறுகின்றன.
உலகளாவிய தெற்கில் தீவிர வலதுசாரிகளைப் புரிந்துகொள்வதற்கு, அது ஜிஹாதிசத்திற்கான பதில் என்ற எண்ணத்திற்கு அப்பால் பார்க்க வேண்டும், ஆனால் வரலாற்று வேர்களை ஒப்புக்கொள்வது மற்றும் தனிப்பட்ட மற்றும் தீவிர வலதுசாரி இயக்கங்கள் பிராந்தியம் மற்றும் முழுவதும் ஓஃப்லைன் மற்றும் ஒன்லைனில் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதும் அவசியம்.
அதேவேளை புலம்பெயர்ந்தோர் தீவிரவாத சித்தாந்தத்தை வலுப்படுத்துகின்றனர் என்ற உண்மையையும் ஏற்றாக வேண்டும். எடுத்துக்காட்டாக, புலம்பெயர்ந்த இந்தியர்கள் இந்தியாவில் இந்துத்துவா சித்தாந்தத்திற்கு பங்களித்தது மட்டுமல்லாமல், அவர்கள் குடியேறிய நாடுகளில் இந்த தீவிர வலதுசாரி சித்தாந்தங்களை ஊக்குவித்து மேற்கத்திய சமூகங்களில் உள்ள தீவிர வலதுசாரி குழுக்களுடன் எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்பதை ஆராய்ச்சி காட்டுகிறது.
மேலும், பல்வேறு பசுபிக்-ஆசிய தீவிர வலதுசாரி இயக்கங்கள் மேற்கத்திய வலதுசாரி சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு ‘ஆசியர்களுக்கான ஆசியா வை ஊக்குவிக்கும் ஒன்லைன் அமைப்பை உருவாக்கி வருவதாக தகவல்கள் உள்ளன. தென்னாசிய புலம்பெயர் சமூகங்களின் அதிவலது நடத்தை நன்கறியப்பட்டதே.
உலகளாவிய தெற்கில் வலதுசாரி தீவிரவாதம் எவ்வாறு உருவாகியுள்ளது என்பதை மறுகட்டமைக்க, சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களுக்கு அரசாங்கங்கள் எவ்வாறு பதிலளிக்கின்றன என்பதைப் பற்றிய ஒரு விமர்சனப் பார்வை தேவைப்படுகிறது.
பல நாடுகளில் அரசாங்கங்கள் அதிவலது வன்முறையைக் கண்டும்காணாமல் விடுகின்றன. அதிவலது தீவிரவாதிகளால் நடத்தப்படும் குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படாமல் இருப்பது வழக்கமாகிவிட்டது. அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் இல்லாமை, ஓரங்கட்டப்பட்ட சிறுபான்மையினரை மேலும் தீவிரமயமாக்குவதற்கும் வன்முறையின் சுழற்சிக்கும் வழிவகுக்கும்.
தீவிர அதிவலது இயக்கங்கள் ‘மேற்கத்திய பிரச்சினை’ என்று கருதப்படும் வரை, உலகளாவிய தெற்கில் அவர்களின் அச்சுறுத்தல் குறைத்து மதிப்பிடப்படும். அது இன்று ஒருவகையில் இது அரசாங்கங்கள் அதிவலதின் செயற்பாடுகளைக் கவனியாது விடுவதற்கான நல்ல சாட்டாக உள்ளது. ஆசியாவில் தீவிர வலதுசாரிகளின் எழுச்சி வெறுமனே ஒரு தேசியப் பிரச்சினை அல்ல; ஆனால் பிராந்தியம் முழுவதும் பல்வேறு இனச் சிறுபான்மையினர் மற்றும் பிராந்தியத்திற்கு வெளியே புலம்பெயர் சமூகங்கள், குறிப்பாக அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பா முழுவதும் இருப்பதால், எளிதில் பிராந்திய தாக்கத்தை ஏற்படுத்தலாம். இந்த தீவிர வலதுசாரி சித்தாந்தங்களில் சில திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றன.
இலங்கை போன்ற தென்னாசியச் சூழலில் அதிவலதை எவ்வாறு எதிர்கொள்வது என்ற வினா முக்கியமானது. இதற்கு சில அடிப்படைப் புரிதல்கள் அவசியம். முதலாவது, இந்த அதிவலது இயக்கங்கள் அதிகாரத்தில் உள்ளன அல்லது அதிகாரத்தின் வாசலில் உள்ளன என்பதையும், தேர்தல் மூலமாகவோ அல்லது வேறு வழிகளில் அதிகாரத்தைப் பெற்றவுடன், அதை விட்டுக்கொடுக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை என்ற உண்மையை ஏற்றாக வேண்டும்.
1932-33இல் ஜனநாயக தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த ஹிட்லரிடம் இருந்து இந்த இயக்கங்கள் கற்றுக்கொண்ட முக்கிய பாடம் ஒன்று இருந்தால், அது இதுதான். பா.ஜ.க தலைவர் அமித் ஷா, அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு தனது கட்சிதான் ஆட்சியில் இருக்கும் என்று தம்பட்டம் அடித்துள்ளார். இலங்கையில் கோட்டாபயவை ஆதரித்த ‘வியத்மக’ இவ்வகைப்பட்ட சிந்தனையிலேயே இயங்கியது. ஆகவே, அவர்களைத் தேர்தல்களில் வெற்றிபெறாமல் தடுப்பது மிகவும் முக்கியமானது.
இரண்டாவது, பெண்களின் உரிமைகளுக்காக உலகெங்கிலும் போராடிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், அதிவலது கட்சிகளும் ஆளுமைகளும் வலுவாக பெண் வெறுப்புணர்வைக் கொண்டுள்ளனர். எனவே, அதிவலது எதிர்ப்பு இயக்கத்தின் அரசியலில் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் முக்கிய பங்கு வகிப்பது மிகவும் முக்கியமானதாகும்.