முள்ளிவாய்க்கால் வலியுறுத்தும் சத்தியம் !! ( கட்டுரை)
தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் முடிவைச் சந்தித்து, இன்றோடு பதினான்கு ஆண்டுகளாகின்றன.
எட்டு தசாப்தங்களை எட்டிக் கொண்டிருக்கும் சுயநிர்ணய உரிமைக்கான தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் என்பது எழுச்சிக்கும் வீழ்ச்சிக்குமான அடையாளக் களம்.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச வெற்றிகள் என்று கொள்ளப்படும் அனைத்தும் ஆயுதப் போராட்ட காலத்திலேயே பெறப்பட்டவை. அதுவும், தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையேற்று போராட்டத்தை வழிநடத்திய முப்பது ஆண்டுகளில் கிடைக்கப்பெற்றவை.
வடக்கு – கிழக்கின் பெரும் பகுதியில், அரச தலையீடுகள் அற்ற இடைக்கால ஆட்சிக் கட்டமைப்பை இரண்டு தசாப்த காலம் விடுதலைப் புலிகள் முன்னெடுத்திருந்தனர். அதுதான், தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட அதியுச்சம் என்று கொள்ளலாம்.
அதுபோல, புலிகளின் இடைக்கால ஆட்சிக் கட்டமைப்பு, 2009 மே 18ஆம் திகதியோடு முடிவுக்கு வந்தது; ஆயுதப் போராட்டத்துக்கும் முடிவுரை எழுதப்பட்டது. அந்த முடிவுதான், தமிழ் மக்கள் இன்றும் மீண்டு எழ முடியாமல் திணறும் பெரு வீழ்ச்சியின் புள்ளி. அதிலிருந்து மீள்வதற்கான போராட்டத்தை தமிழ் மக்கள் மெல்ல ஆரம்பித்தாலும், கடந்த 14 ஆண்டுகளில் பெரிய அளவில் எதுவுமே நிகழ்ந்துவிடவில்லை.
முள்ளிவாய்க்கால் என்பது, ஆயுதப் போராட்டத்திற்கான முடிவுரை எழுதப்பட்ட இடம் மாத்திரமல்ல, 40,000க்கும் அதிகமானவர்களை அரச படையும் அதன் வெளிநாட்டு ஆதரவு சக்திகளும், உள்ளூர் துணைக்குழுக்களும் அழித்து ஒழித்த பகுதி. 12,000க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கான குறியீட்டுக் களம். நினைவேந்தலை மாத்திரமல்ல, நீதிக்கான கோரிக்கைகளையும் சேர்த்து வைத்திருக்கின்ற இடம், முள்ளிவாய்க்கால் ஆகும்.
தமிழ் மக்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்பதற்காக இலங்கை அரசும், விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு சக்திகளும் முன்னெடுத்த கோர யுத்தம், எந்தவித மனிதாபிமான தார்ப்பரியங்களும் போருக்கான அறமும் இன்றி முடித்து வைக்கப்பட்ட இடம் முள்ளிவாய்க்கால்.
உலகம் பூராவும் போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் பற்றி வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கின்ற மேற்கு நாடுகள் தொடங்கி, ஏதேச்சதிகாரம் செலுத்தும் சீனா போன்ற நாடுகள் வரையில், இறுதி யுத்தத்தில் இலங்கைக்கு கணிசமான உதவிகளை வழங்கியிருக்கின்றன.
போர் வலயத்துக்குள் சிக்கிய மக்களுக்கான மருத்துவ உதவி மறுக்கப்பட்டமை, உணவு வழங்கல் தடை செய்யப்பட்டமை என்று மனித குலத்துக்கு எதிரான அனைத்து குற்றங்களும் முள்ளிவாய்க்காலின் இறுதி நாள்களில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டன. அதையெல்லாம், இந்த நாடுகள் எல்லாமும் எந்தவித குற்றவுணர்ச்சியும் இன்றிப் பார்த்துக் கொண்டும் இருந்தன.
புலிகளை அழிப்பதற்காக, எத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை என்ற மௌனம், இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றங்களை விடக் கொடுமையானது.
முள்ளிவாய்க்கால் என்பது, தமிழ் மக்கள் எந்தவித ஆதரவும் இன்றித் தனித்து விடப்பட்டமைக்கான சாட்சிக் கூடம். தமிழ் மக்கள் தங்களின் விடுதலைப் போராட்டத்தை இனி எப்படி முன்னெடுக்க வேண்டும், எதை முன்னெடுக்கக் கூடாது என்பதற்கான வரையறைகளை, முள்ளிவாய்க்கால் முடிவுகள் திணித்திருக்கின்றன. அந்தத் திணிப்பு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டிருக்கின்றது.
கடந்த கால அனுபவங்களில் இருந்து, போராட்ட வடிவங்களை மாற்றிக் கொள்வதும், புதிதாக வடிவமைத்துக் கொள்வதும் போராடும் இனத்துக்கு வழக்கமானதுதான். ஆனால், போராடும் உணர்வை, முழுமையாக மழுங்கடிக்கச் செய்வதற்கான முயற்சிகளை தமிழர் தாயகம் எங்கும் விதைத்து, அதன் அறுவடைகளை தென் இலங்கையும் அதன் இணக்க சக்திகளும் தொடர்ந்தும் பெற்று வருகின்றன. அதற்கு, தமிழ்த் தரப்புகள் சிலவும் துணை போவதுதான் பெரும் அவலம்.
மதவாதம், சாதியவாதம், பிரதேசவாதம் தாண்டி, தமிழர் தாயகம் என்கிற அடிப்படையிலேயே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் பேரெழுச்சி கண்டது. தமிழ்க் கட்சிகளும், ஆயுதப் போராட்ட இயக்கங்கள் பலவும் தங்களின் பலவீனங்களாக சாதியவாதம், பிரதேசவாதத்தை கொண்டிருந்த போது, விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் தலைமைத்துவத்துக்கு நகர்ந்தது அதையெல்லாம் தாண்டி நின்றமையாலாகும்.
ஆயுதப் போராட்ட இயக்கங்களாக இருந்து இன்று, அரசியல் கட்சிகளாக மாறிவிட்ட பல முன்னாள் இயக்கங்களும் இன்றைக்கும் சாதிய, மதவாத, பிரதேசவாத மனநிலையோடு செயற்பட்டு வருகின்றன. அதாவது, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸும், இலங்கை தமிழரசுக் கட்சியும் மறைமுகமாக சாதியவாத, பிரதேசவாத சிந்தனைகள் சார்ந்து இயங்குவது போல!
மேம்போக்காக பார்க்கும் போது, இன்றைக்கு களத்திலுள்ள அரசியல் கட்சிகளும் முன்னாள் இயக்கங்களும் இந்தப் பிரிவினைகள், வேறுபாடுகளுக்கு அப்பாலானவை என்பது போல காட்டிக் கொண்டாலும், உள்ளூர அந்த நெடி, எரிச்சலையூட்டும் அளவுக்கு இன்னமும் இருக்கின்றது என்பதுதான் மிகப்பெரிய பின்னடைவு.
அதுவும், முள்ளிவாய்க்கால் போன்ற வீழ்ச்சிக்குப் பின்னாலும், இவ்வாறான பிரிவினைகள், வேற்றுமைகளை பிடித்துக் கொண்டிருப்பது என்பது, தமிழர் விரோத சக்திகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, வெண் சாமரம் வீசி வரவேற்பதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கின்றது.
இன்றைக்கு முள்ளிவாய்க்கால் என்பது, நினைவேந்தலை முன்பெடுப்பதற்கான களம் என்ற அளவில் சுருக்கப்பட்டுவிட்டது. அதிலும், தேர்தல் நோக்கு அரசியல்வாதிகளும், அக – புற விரோத சக்திகளின் ஏவல் தரப்புகளும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற விடயத்தையே கேலிக்கூத்தாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால், முள்ளிவாய்க்கால் நினைவுகளை ஆன்மாவோடு கொண்டு சுமக்கும் தமிழ் மக்களில் பெரும்பாலானோர், நினைவேந்தல் குளறுபடிகள் களத்தில் இருந்து விலகி நிற்கிறார்கள். இது, தொடர்ச்சியாகப் போராடி வரும் சமூகத்தின் போர்க்குணத்தின் மீது ஊற்றப்படும் விசமாகும்.
முள்ளிவாய்க்கால் நினைவுகளை, தமிழ் மக்களிடம் இருந்து பிரிந்தெடுப்பது என்பது தென் இலங்கைக்கும் அதன் நேச சக்திகளுக்கும் அவசரமாகக் தேவைப்படும் ஒன்று. விடுதலைப் புலிகளை அழித்தால் போதும், தமிழ் மக்களின் போர்க்குணத்தினை முற்றாக முடக்கிவிடலாம் என்று அந்தத் தரப்புக்கள் நம்பின. ஆனால், தமிழ் மக்கள், முள்ளிவாய்க்காலை போர்க்குணத்தின் ஓர்மத்தின் பகுதியாகவே மாற்றினார்கள்.
உறவுகளை நினைவுகூர மாத்திரமல்ல; அவர்களுக்கான நீதியை நிலைநாட்டவும் முள்ளிவாய்க்காலை ஒரு களமாக மாற்றினார்கள். அதுவும், முள்ளிவாய்க்கால் முடிவுகளை சந்தித்து சில மாதங்களுக்குள்ளேயே அதற்கு தயாராகிவிட்டார்கள். இதனை தென் இலங்கையோ, அதன் நேச சக்திகளோ எதிர்பார்க்கவில்லை.
அதனால்தான், தமிழ் மக்களின் போர்க்குணத்தின் குறியீடாக மாறிவிட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை சிதைப்பதற்காக தங்களின் ஏவல் சக்திகளை வைத்து குழப்பங்களை நிகழ்த்துகின்றன. அதைப் புரிந்து கொள்ளாது, தமிழ்த் தேசிய கட்சிகளும் வாக்கு அரசியல் என்ற குறுகிய சிந்தனைகளால் மறைமுகமாகத் துணைபோகின்றன.
இன்றைக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஏட்டிக்கு போட்டியாக தமிழ்த் தேசிய தரப்புகள் நடத்துகின்றன. அங்கு, அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டவர்கள் நினைவு கூரப்படுவதைக் காட்டிலும், தாமே முதன்மையானவர்கள் என்கிற தன்முனைப்பு மனநிலையே வெளிப்படுகின்றது.
ஏனெனில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலங்களில், தமிழ்த் தேசிய தரப்புகள் நிகழ்த்திவரும் நடவடிக்கைகளைப் பார்த்தால் அது தெளிவாக புரியும். 14 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும்கூட, முள்ளிவாய்க்காலில் ஒருமித்து ஒன்று கூடுவதற்கு சில தமிழ்த் தரப்புகள் தயாராக இல்லை. அவர்கள், தனி ஆவர்த்தனம் செய்யவே நினைக்கிறார்கள். அதனால், பாதிக்கப்படுவது தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கைகளேயாகும்.
முள்ளிவாய்க்காலில் இழக்கப்பட்ட உயிர்களுக்கும் சிந்தப்பட்ட குருதிக்கும் நீதி கோரி போராடுதல் என்பது, எதிரிகளை தண்டிப்பதனூடாக மாத்திரம் நிகழ்வதல்ல. முள்ளிவாய்க்கால் முடிவு தமிழ் மக்கள் மீது ஏன் திணிக்கப்பட்டதோ, அதைத் தாண்டி நின்று போராடுவதற்கான ஓர்மத்தையும் ஒற்றுமையையும்கூட ஒருங்கிணைப்பதற்கான களமாகவும் இருக்க வேண்டும். அதுதான், உண்மையான நினைவேந்தலாக இருக்க முடியும்.