;
Athirady Tamil News

தமிழ் மக்களை பிரித்தாள நினைக்கும் ரணில் !! (கட்டுரை)

0

தென் இலங்கையின் அரசியல் உத்திகளில் ஒன்றான, பிரித்தாளும் தந்திரத்தோடு ரணில் விக்கிரமசிங்க, இம்முறை தமிழ் மக்களை நோக்கி வந்திருக்கிறார்.

வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதன் மூலம், அவர் அதனை முன்னெடுக்க முயல்கிறார். இன்று வியாழக்கிழமை முதல் தொடர்ந்து மூன்று நாள்கள் அதிகாரப்பரவலாக்கம், வடக்கு அபிவிருத்தி பற்றி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று ஜனாதிபதி தரப்பு அறிவித்திருக்கின்றது.

இந்தப் பேச்சுவார்த்தையில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படாதுவிடத்து, அதில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரான இரா. சம்பந்தன் அறிவித்திருக்கிறார். அத்தோடு, கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை உடனடியாக அழைக்க வேண்டும்; அதன் மூலம் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான சூழலை ஜனாதிபதி ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றார்.

அதுபோலவே, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான டெலோ, புளொட்டின் தலைவர்களும் வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ளமையை கண்டித்துள்ளதோடு, அதில் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக, இரா. சம்பந்தன் வெளியிட்டுள்ள ஊடக அறிவித்தலில், பேச்சுவார்ததை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில், கூட்டமைப்பு அர்ப்பணிப்போடு இருக்கின்றது. அதிலும், சர்வதேச கண்காணிப்போடு அந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற வேண்டும் என்று விரும்புகின்றது என்றும் அறிவித்துள்ளதோடு, பேச்சுவார்த்தைக்கு கிழக்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றார்.

தமிழ்க் கட்சிகள் ரணிலின் அழைப்பை ஏற்பதானால், அந்தப் பேச்சுவார்த்தையில் சம்பந்தன் கூட கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்படும். ஏனெனில், அவர் திருகோணமலையைப் பிரதிநித்துவப்படுத்தும் உறுப்பினர். இப்படியான சின்னச் சின்ன விடயங்கள் எல்லாமும் பல்லிளிக்கும் அளவுக்கு தெளிவாக இருக்கின்றன.

இந்த வருட இறுதிக்குள், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முனைப்போடு தான் இருப்பதாக ரணில் தொடர்ச்சியாக அறிவித்து வருகிறார். ஏற்கெனவே அவர் கடந்த சுதந்திர தினத்துக்கு முன்னர், தீர்வு காணப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. அது தொடர்பில் அவர், தமிழ்த் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களோடு பேச்சுவார்த்தைகளையும் நடத்தியிருந்தார்.

ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் கணக்கில் எடுக்கப்படாது, குப்பையில் தூக்கி வீசப்பட்டன. இராணுவம் உள்ளிட்ட அரச படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகள் விடுவிப்பு, தொல்லியல் திணைக்களம், வனவளத் திணைக்களம், மகாவலி அதிகார சபை உள்ளிட்ட தமிழ் மக்களின் காணிகளையும், பாரம்பரிய சொத்துகளையும் ஆக்கிரமித்து அடாத்தாக பௌத்த கட்டுமானங்கள் தொடங்கி, சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபடுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பன உடனடியாக சாத்தியப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தரப்பு ஜனாதிபதியிடம் ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தது.

ஆனால், அவை தொடர்பில் எந்தவித முன்னோக்கிய செயற்பாடுகளையும் ஜனாதிபதியோ, அரசோ செய்யவில்லை. மாறாக, தனியார் காணிகளில் விகாரைகளை அமைப்பது உள்ளிட்ட அடாத்தான வேலைகளை இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வேலைகளிலேயே அரசு ஈடுபட்டிருக்கின்றது.

தொடர்ந்து தமிழ் மக்களை சீண்டும் வேலைகளை ரணிலும் அவரது அரசாங்கமும் செய்கின்றது. தீர்க்கமான அரசியல் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு முதல், பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்பும் முகமாக, செய்யவேண்டிய தமிழ் மக்களின் சில கோரிக்கைகளைக்கூட நிறைவேற்றுவதற்கு தயாராக இல்லாத ரணில், அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வைக் காணுவதற்கு அர்ப்பணிப்போடு இருக்கிறார் என்று எப்படி நம்ப முடியும்?

ஏனெனில், தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு ஏன், வடக்குத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்? இந்தப் பிரித்தாளும் தந்திரத்தினூடாக, தமிழ் மக்களை வடக்கு, கிழக்கு என்று இரு கூறுகளாக பிரித்தாள முடியும் என்று அவர் நம்புகிறார்.

ஏற்கெனவே, தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து ‘கருணா அம்மான்’ என்கிற விநாயகமூர்த்தி முரளிதரனை பிரித்தெடுத்திருந்தார். அதன்மூலம், புலிகளை இரண்டாக பிளக்கலாம் என்று நம்பினார். இப்போது, புலிகளின் காலத்துக்குப் பின்னரான தமிழர் அரசியலிலும் பிளவை ஏற்படுத்தி, தமிழ் மக்களின் கோரிக்கைகளை வலுவிழக்கச் செய்யலாம் என்பது ரணிலின் நகர்வு.

தமிழ் மக்களை தொடர்ச்சியாக அடக்கி ஒடுக்க வேண்டும் என்பது தென் இலங்கையின் பௌத்த சிங்கள மேலாதிக்க சக்திகளின் நிலைப்பாடு. அதற்கு, தமிழ் மக்கள் ஓரணியில் திரள்வதை தடுப்பதற்கான சதித்திட்டங்களை அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்காக கருணா தொடங்கி பலரையும் பயன்படுத்தவும் செய்திருக்கிறார்கள்.

ஆனால், தமிழ் மக்கள், தமது பாரம்பரிய நிலமாக வடக்கு- கிழக்கை கருதுவதிலிருந்து எந்தக் காலத்திலும் பின்நின்றதில்லை. ஏனெனில், அது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடத்தப்படும் உரிமைக்கான உணர்வு.

வடக்கு, கிழக்கு என்று தமிழ் மக்களை பிரித்தாண்டுவிடலாம் என்று தென் இலங்கை காலங்காலமாக முயன்று வந்திருக்கின்றது. அதற்காக, தங்களின் ஏவல் குழுக்களையும், நிறுவனங்களையும் கொண்டு படுபயங்கர ஆட்டங்களை எல்லாம் ஆடியிருக்கின்றது.

ஆனால், அந்தப் பிரித்தாளும் தந்திரங்களை எல்லாம் தாண்டி, தமிழ் மக்கள் ஓரணியில் நின்றிருக்கிறார்கள். அது, பிரதேசவாதம் என்கிற குறுகிய சிந்தனைகளுக்கு அப்பால், தேசிய விடுதலை, சுதந்திர உணர்வு சார்ந்தாக எழுந்து வந்த அரசியலின் விளைவால் ஏற்பட்டது. அதனை எந்தவொரு தருணத்திலும் தமிழ் மக்களும், அவர்களின் அரசியலை முன்னெடுக்கிற தரப்புகளும் கைவிட முடியாது.

எண்ணிக்கை அடிப்படையில் நாட்டில் சிறுபான்மைகளாக இருக்கும் தமிழ், முஸ்லிம் மக்கள், ஓரணியில் திரண்டுவிடக்கூடாது என்பதில் தென் இலங்கை சுதந்திரத்துக்கு முன்னர் இருந்து கவனமாக இருந்திருக்கின்றது; அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றது.

தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையிலான முரண்பாடுகளை தூபமிட்டு வளர்த்து, அதில் குளிர்காய்ந்தது தென் இலங்கை. இன்றைக்கு கடந்த கால முரண்பாடுகள் அளவில் இல்லை என்றாலும், கடந்த கால கறுப்பு பக்கங்களை தமிழ், முஸ்லிம் மக்கள் சுமக்க வேண்டி வந்திருக்கின்றது.

அந்த வெற்றியைச் சுவைத்துக் கொண்டிருக்கும் தென் இலங்கை, வடக்கு – கிழக்கு என்று தமிழ் மக்களை துண்டாடுவதன் மூலம், தமிழ் மக்கள் என்பது வடக்கில், அதுவும் யாழ்ப்பாணத்துக்குள் இருக்கும் சில இலட்சம் பேர் என்று சர்வதேசத்திடம் நிறுவும் முயற்சிகளில் ஈடுபடுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் பௌத்த அடையாளங்களை வலிந்து நிறுவுவதன் மூலமும், காணி ஆக்கிரமிப்பின் மூலமும் முக்கால் வாசிக்கும் மேலான நிலத்தை பௌத்த சிங்கள மேலாதிக்கம் விழுங்கிவிட்டது. வடக்கிலும் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் அரைவாசிப் பகுதிகளை அரச திணைக்களங்கள் ஆக்கிரமித்துவிட்டன. அங்கு, பௌத்த அடையாளங்கள் திணிக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்திலும் இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள வலிகாமத்தில் சட்டத்துக்கு முரணாக தனியார் காணிகளில் விகாரைகள் கட்டப்படுகின்றன.

இவ்வாறாக, தமிழ் மக்களின் இருப்பை முழுவதுமாக கேள்விக்குள்ளாக்கும் வேலைகளை தென் இலங்கை எந்தவித தயக்கமும் இன்றி, முன்னெடுத்து வருகின்றது. இந்தச் செயற்றிட்டத்தின் புதிய காவலனாக ரணில் இப்போது இருக்கின்றார்.

டீ.எஸ்.சேனநாயக்க தொடங்கி, பண்டாரநாயக்க, ஜே.ஆர் ஜெயவர்தன, மஹிந்த ராஜபக்‌ஷ என்று பௌத்த சிங்கள மேலாதிக்க சக்திகளின் காவலர்களின் முகங்கள் மாறியிருக்கின்றன. ஆனால், அவர்களின் செயற்பாடுகளில் எந்தவொரு காலத்திலும் மாற்றம் ஏற்பட்டதில்லை. இப்போது ரணில் அந்த முயற்சிகளில் ஈடுபடுகிறார்.

இதைப் புரியாது, ரணிலுக்கு வெள்ளையடிக்கும் சக்திகள், தமிழ் மக்களுக்கு எதிரான அருவருப்பான ஆக்கிரமிப்பு அரசியலுக்கு துணைபோகிறார்கள். அதனை தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.