ஊழலே விதிமுறையான நாட்டில் மற்றொரு சம்பவம்: தங்கக் கடத்தல் !! (கட்டுரை)
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், கடந்த மே 23 ஆம் திகதி தங்கம், அலைபேசி என்பவற்றை, சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டுவந்தபோது, சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இச்சம்பவமும் அதனோடு சம்பந்தப்பட்ட விடயங்களும் ஒரு தனி நபருடைய மோசடியாக கருதுவதா அல்லது இந்நாட்டின் அரசியல் கலாசாரத்தின் இலட்சணமாகக் கருதுவதா என்ற கேள்வி எழுகிறது.
1978ஆம் ஆண்டு, ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த பிரதி அமைச்சர் அநுர டானியல், தங்கம் கடத்திய போது, சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இப்போது அலி சப்ரி ரஹீமைப் பற்றி, பிரதான பிரவாகத்தின் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிடப்பட்டு வரும் கருத்துகளை பார்க்கும் போது, அநுர டானியல் சம்பவத்துக்குப் பின்னர், அலி சப்ரி ரஹீம் தான் முதன் முதலாக தங்கம் கடத்தி இருக்கிறார் என்று எவரும் நம்புவதாகத் தெரியவில்லை.
தான் உண்மையிலேயே தங்கம் கடத்தவில்லை என்றும், தனது நண்பரின் பொதியைத் தம்தோடு கொண்டு வந்ததாகவும் அதில் தங்கமும் அலைபேசிகளும் இருந்ததாகவும் ரஹீம் கூறியதையும் எவரும் நம்புவதாகத் தெரியவில்லை.
அவர் கடந்த மார்ச் மாதம் முதல், இந்தச் சம்பவம் இடம்பெறும் வரையிலான காலகட்டத்தில் ஆறு முறை டுபாய் நகருக்குச் சென்று வந்துள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து, அவரைச் சந்தேகக் கண்கொண்டே பலரும் பார்க்கிறார்கள்.
சுங்க அதிகாரிகள் செய்ததை, சட்டத்தை மதிக்கும் எவரும் குறைகூறப் போவதில்லை. ஆயினும், ரஹீமைத் தவிர்ந்த ஏனைய 224 எம்.பிக்களில் எவராயினும் அல்லது அவர்களின் நண்பர்கள், உறவினர்கள் எவராயினும் இது போன்ற கடத்தல் முயற்சியில் ஈடுபட்டு, அது சுங்க அதிகாரிகளுக்குத் தெரிய வந்தால், அவர்கள் இதேபோல் நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது.
தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை, ஒவ்வொரு பெயராக வாசித்துக் கொண்டு போனால், இந்தக் கேள்வி நியாயமானது என எவருக்கும் விளங்கும். சட்டத்தின் கை எட்டாத எவரும் அந்தப் பட்டியலில் இல்லையா?
அலி சப்ரி ரஹீம் கைது செய்யப்பட்டு, 74 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை அடுத்து, அன்றே விடுதலை செயயப்பட்டார். அதன் பின்னர் மறுநாள் அவர், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தவிசாளர் ஜனக்க ரத்னாயக்கவுக்கு எதிரான பிரேரணை மீது நடைபெற்ற வாக்கெடுப்பிலும் கலந்து கொண்டார். அன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், “கைப்பற்றப்பட்ட தங்கம் நான் கொண்டு வந்ததல்ல; அது எனது நண்பர் ஒருவருக்குச் சொந்தமானது” என்று கூறினார். டுபாய் விமான நிலையத்தில் குடியகல்வு அதிகாரியிடம் முத்திரை குத்துவதற்காக, என்னுடையதும் நண்பருடையதும் கடவுச்சீட்டுகளை ஒன்றாகக் கையளித்தபோது, அந்தக் குடியகல்வு அதிகாரி, நண்பரின் பொதிகளில் ஒன்றை, எனது பெயரிலுள்ள விமான அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிட்டார். தங்கமும் அலைபேசிகளும் அதிலேயே இருந்துள்ளன” என அவர் அப்போது கூறினார்.
விமானப் பயணிகள் இவ்வாறு செய்வது ஒன்றும் புதிய விடயமோ சட்ட விரோதமோ அல்ல. நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் விமானத்தில் ஏறப் போகும் போது, கடவுச் சீட்டுகளை ஒன்றாக கொடுப்பது வழமை. அப்போது அவர்கள் விமானத்தில் ஏற்றுவதற்காக கையளிக்கும் பொதிகளும் மொத்தமாக ஒருவரின் அல்லது இருவரின் பெயர்களில் உள்ள விமான அனுமதிப் பத்திரத்திரங்களில் குறிப்படுவதும் வழமை.
ஆனால், அவர் இந்தக் கதையை அவரது பொதிகளைப் பரிசோதனை செய்த சுங்க அதிகாரிகளிடம் கூறியதாக எந்தவொரு செய்தியிலும் குறிப்பிடப்படவில்லை.
‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான புலனாய்வுக் கட்டுரையின்படி, சுங்க அதிகாரிகள், அலி சப்ரி ரஹீமிடம் பொதிகளில் என்ன இருக்கிறதென்று கேட்ட போது, தங்கமும் அலைபேசிகளும் இருப்பதாக அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால், அவரது நண்பருக்கு டுபாய் சுங்க அதிகாரிகள் வழங்கியிருந்த பற்றுச்சீட்டின்படி, தங்கம் அந்த நண்பருக்கு உரியவையாகும் என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவருக்கு சொந்தமாக இருந்த போதிலும், அவை முறையாக அறிவிக்கப்படாமல் கொண்டு வரப்பட்டவை என்பதால், கடத்தல் பொருட்களாகவே கருதப்படுகின்றன. அதனாலேயே பாராளுமன்ற உறுப்பினருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இங்கே, சட்ட விரோதமான செயல் இடம்பெற்று இருப்பதை மறுக்க முடியாது.
“பொதியில் என்ன இருக்கிறது” என்று கேட்ட போது, “தங்கமும் அலைபேசிகளும்” என்று எம்.பி கூறியதால், உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியாமல், நண்பரின் பொதியை தற்செயலாக கொண்டு வந்ததாக அவர் கூற முடியாது. எனவே, அப்பொருட்கள் எம்.பியின் நண்பருடையதாக இருந்தாலும், கடத்தல் அல்லது கடத்தலுக்கு உதவியமை என்ற குற்றச்சாட்டிலிருந்து அவருக்குத் தப்பிக்கவும் முடியாது. மார்ச் மாதத்திலிருந்து ஆறு முறை அவர் டுபாய் சென்றிருப்பதால், ஒவ்வொரு முறையும் அவர் தங்கம் கடத்தியிருக்கிறார் என்ற சந்தேகத்திலிருந்து தப்பித்துக் கொள்ளவும் முடியாது.
சுங்க அதிகாரிகள் பொருட்களைக் கைற்றிய போது, உதவி பெறுவதற்காக ஜனாதிபதியின் செயலாளருக்கும் பிரதமருக்கும் தொலைபேசி அழைப்புகளை எம்.பி எடுத்ததாகவும், ஆனால் அவருக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என்றும் செய்திகள் கூறின. தாம் அரசாங்கத்தின் மேலிடத்திலிருந்து உதவி கோரியதாகவும் அவர்கள் உதவி செய்ய மறுத்ததால், தாம் ஜனக்க ரத்னாயக்கவுக்கு எதிரான பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததாகவும் அலி சப்ரி ரஹீமும் கூறியிருந்தார்.
சட்ட விரோத செயலில் ஈடுபட்டு மாட்டிக் கொள்ளும் எவரும், சட்ட விரோதமாகவே தப்பித்துக் கொள்ள முயல்வதும் புதிய விடயமல்ல. அவர்களுக்கு அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருந்தால், அந்த அரசியல்வாதிகளின் உதவியை நாடுவதும் புதிய விடயம் அல்ல. இது சட்ட விரோதமான செயலாக இருந்தாலும் அரசியல் நாகரிகமற்றதாக இருந்தாலும் சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாட்டுக்கு முரணானதாக இருந்தாலும் இவையெல்லாம் ஊழல் மலிந்த இலங்கையின் சமூக அரசியல் கலாசாரத்தின் அங்கங்களாகும்.
தமக்கு அரசாங்கம் உதவாத காரணத்தாலேயே, தாம் ஜனக்க ரத்னாயக்க விவகாரத்தின் போது அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்ததாக ரஹீம் கூறியதை சுட்டிக் காட்டிய நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, அந்தக் கூற்று அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் அளிக்கப்பட்ட கௌரவமாகும் என்றார்.
அது உண்மையாயினும், இலங்கையில் அரசாயல்வாதிகளில் குறிப்பாக ஆளும் கட்சி அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள், இலஞ்சம் பெறுபவர்கள் என்ற குற்றச்சாட்டை சியம்பலாபிட்டிய மறந்து இருக்க மாட்டார்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் உள்ளிட்ட பல விடயங்களின் போது, தாம் அரசாங்கத்தை ஆதரித்த போதும் அரசாங்கம் தமக்கு உதவி செய்ய முன்வராததால் தாம், மேற்படி பிரேரனைக்கு எதிராக வாக்களித்ததாக எம்.பி ரஹீம் முன்வைக்கும் கருத்தை நியாயப்படுத்த. முடியாது.
தமது சொந்த நலன்களின் அடிப்படையில், எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் பிரேரணைகளுக்கும் சட்டமூலங்களுக்கும் ஆதரவாகவோ எதிராகவோ வாக்களிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது பணத்துக்காக வாக்களிப்பதற்குச் சமமாகும். அவர்கள் ஒவ்வொரு பிரேரணையினதும் சட்டமூலத்தினதும் உள்ளடக்கம், நாட்டுக்கும் மக்களுக்கும் எந்தளவு பயனளிக்கும் என்பதன் அடிப்படையிலேயே, தமது வாக்கை அளிக்க வேண்டும். அதற்காகத் தான் மக்கள் அவர்களை தெரிவு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்புகிறார்கள். ஆனால், நடப்பது அதுவல்ல!
இதுவும் புதிய விடயமல்ல. ‘ரணில் விக்கிரமசிங்க புலிகளின் ஏஜன்ட்’ என்றும் ‘ஏகாதிபத்தியவாதிகளின் அடிவருடி’ என்றும் பல தசாப்தங்களாக கூறித் திரிந்தவர்கள் எத்தனைப் பேர், அமைச்சுப் பதவிகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இப்போது ஜனாதிபதியாக இருக்கும் அதே ரணிலை போற்றிப் புகழ்கிறார்கள். இதுவும் சொந்த நலனுக்காக எடுக்கும் அரசியல் முடிவுகளேயாகும்.
கடந்த கால கட்சித் தாவல்கள் அனைத்துமே, சொந்த நலன் கருதி மேற்கொள்ளப்பட்ட அரசியல் நடவடிக்கைகளாகும். பொதுவாக, அரசியல்வாதிகள் சொந்த நலனுக்காகவே அரசியலைப் பாவிக்கிறார்கள்.
அரசாங்கம் தமக்கு உதவாதமையாலேயே தாம் மேற்படி பிரேரணைக்கு எதிராக வாக்களித்தாக எம்.பி ரஹீம் கூறுவதால், அதற்கு முன்னர் அவர் அப்பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவே இருந்துள்ளார் என்பது தெளிவாகிறது. மின் கட்டணத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் ஆலோசனைகளை, ஜனக்க ரத்னாயக்க எதிர்த்தமையே, இந்தப் பிரேரணையை கொண்டு வரக் காரணம் என்பதையும் அவர் அறிந்திருப்பார்.
எம்.பி ரஹீமை, பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை எவரும் குறைகூற முடியாது. எனினும் கப்பம், கொலை போன்றவற்றுக்காக குற்றவாளிகளாக நீதிமன்றங்களால் தீர்ப்பு வழங்கப்பட்டு, மேன்முறையீடு செய்துள்ளவர்களும் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள்.
போதைப்பொருள் குற்றத்துக்காக பொலிஸ் அதிரடிப் படையினர் வீட்டை முற்றுகையிட்ட போது, முன்னாள் ஜனாதிபதி ஒருவர் தலையிட்டு பாதுகாக்கப்பட்ட ஒருவரும் இருக்கிறார். இது போன்ற நீண்ட பட்டியலை முன்னாள் பாராளுமனற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டு இருந்தார்.
ஓர் அரசியல்வாதி பாரதூரமாக சட்டத்தை மீறினால், மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தார்மிக உரிமையை இழக்கிறார். ஆனால், ஒருவரை மட்டும் நீக்கி, நல்லாட்சி காண முடியாது. அமைப்பு முறையை மாற்றும் வழிமுறையையே தேட வேண்டும்.