முஸ்லிம்களின் பயன்படுத்தப்படாத உலகபலம் !! (கட்டுரை)
உலகளவில் கணிசமாக முஸ்லிம்கள் வாழ்கின்ற போதிலும், அவர்களின் பிரச்சினைகள் சரியாக வெளிப்படுத்தப்படவில்லை என்பதுடன், அரபுலகம் அல்லது முஸ்லிம் நாடுகள், உலக முஸ்லிம்களுக்காக முன்னிற்கவில்லை என்பதும் இன்றைய உலக யதார்த்தமாகும்.
இலங்கையில் சுமார் 22 இலட்சம் முஸ்லிம்கள் வாழ்வதாக கூறப்படுகின்ற போதிலும், உத்தியோகபூர்வ புள்ளிவிவர தரவுகள், இன்னும் 20 இலட்சத்தை தாண்டவில்லை எனக் குறிப்பிடுகின்றன.
சிறுபான்மைச் சமூகங்களின் வரலாற்றை, சனத்தொகைப் பரம்பலை, அவர்களின் தியாகங்களை திரிபுபடுத்துவது போல, சனத்தொகைப் பருமனை குறைத்துக் காட்டும் கைங்கரியமும் இடம்பெற்றுக் கொண்டிருப்பது நாடறிந்த இரகசியமே!
இலங்கையில் புள்ளிவிவரத் தரவுகள் இப்படியாக அமைந்தாலும், உலக அரங்கில் முஸ்லிம்களின் பலம் என்பது வேறுவிதமாக அமைந்துள்ளது. குறிப்பாக, உலக முஸ்லிம்களின் சனத்தொகை இரண்டு பில்லியனையும் கடந்துள்ளது.
இஸ்லாம் என்பது உலகளவில் பின்பற்றப்படுகின்ற இரண்டாவது மிகப் பெரிய மதமாகும். இது முதலாவது இடத்துக்கு வந்துவிடும் என்ற பயங்காட்டும் நடவடிக்கைகள், முன்னெடுக்கப்படுகின்றன. ‘இஸ்லாமியபோபியா’ என்பது, இதனடிப்படையில் உருவேற்றப்பட்ட ஒரு கருத்தியல் எனலாம்.
முஸ்லிம் நாடுகள் என்று வகைப்படுத்தப்பட்ட பிரிவில் 26 நாடுகள் உள்ளன. இவற்றுள் 95 சதவீதத்துக்கும் அதிகமாக முஸ்லிம்கள் வாழும் நாடுகள் கணிசமாக உள்ளன. இவைதவிர, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடுகள், சுமார் 50 ஆகும். உலகளவில் ஐந்துக்கு உட்பட்ட நாடுகளைத் தவிர, ஏனைய எல்லா நாடுகளிலும் இஸ்லாம் மதத்தை பின்பற்றும் மக்கள் வாழ்கின்றார்கள்.
இதைப் பார்க்கின்ற போது, உலக அளவில் முஸ்லிம்கள் பலம்பொருந்திய சமூகம் என்று தோன்றினாலும், இன்று வரை உலகெங்கும் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற முஸ்லிம்களுக்காக, இந்தப் பலம் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் கவலைக்குரியது.
இந்துக்கள் அதாவது தமிழர்களும் பல நாடுகளில் வாழ்கின்றார்கள். ஆனால், இந்தியா உள்ளிட்ட ஓரிரு நாடுகளிலேயே இந்து மதத்தை பின்பற்றுகின்ற மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஆனால், இன்றைய நிலைவரப்படி தமிழர்களின் ஒற்றுமையும் ஒன்றுதிரண்ட பலமும், உலக அரங்கில் பலம்மிக்கதாக உள்ளதைக் காண்கின்றோம்.
உலகின் மிகப் பிரதான மதமான கிறிஸ்தவத்தை தமது மதமாகக் கொண்டுள்ள மேற்கத்தேய நாடுகளும் அமைப்புகளும், எந்த நாட்டிலாவது கிறிஸ்தவர்களுக்கு ஒரு பிரச்சினை எழும்போது, குரல் கொடுக்கின்றன; தன்னார்வமாக ஒரு நகர்வைச் செய்கின்றன.
அதுபோல, தமிழர்களுக்கு ஒரு சிறிய பிரச்சினை எழுந்தாலும் இந்தியா உடனடியாக களத்துக்கு வருகின்றது. உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் மக்கள் அதற்காக குரல் கொடுக்கின்றார்கள். இது தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால், தமிழ் மக்களின் பிரச்சினைகள் முக்கியத்துவம் பெறுவனவாக அமைகின்றன.
தீர்வுத்திட்டம் பற்றியோ, 13ஆவது திருத்தம் பற்றியோ அல்லது வடக்கு – கிழக்கு இணைப்பு பற்றியோ இந்தியா அழுத்தம் கொடுப்பதன் பின்னணியில், தமிழர்களின் மீதான அக்கறை மட்டுமே இருக்கின்றது என்று யாரும் கூற முடியாது. இதற்குப் பின்னால், இந்தியாவுக்கு ஓர் ‘அரசியல்’ இருக்கின்றது. இந்து சமுத்திரத்தின் இராணுவ, ஆதிக்க நோக்கங்கள், தமிழ் மக்களின் அபிலாஷைகளை விட அதிக செல்வாக்குச் செலுத்துகின்றன. ஆயினும், அதையெல்லாம் தாண்டி, தமிழர்களுக்காக முன்னிற்பது முக்கியமானது.
ஆனால், இதைவிட எண்ணிக்கையில் அதிக நாடுகள் முஸ்லிம் நாடுகளாக இருந்த போதிலும், இதைவிட அதிகமான சனத்தொகையை முஸ்லிம்கள் கொண்டிருந்த போதிலும், இலங்கை உட்பட எந்த நாட்டில் வாழும் இஸ்லாமிய மக்களின் பிரச்சினைகளும் சர்வதேச அளவில் முக்கியத்துவப் படுத்தப்படவில்லை. ஆதி சரித்திரத்தில் தொடங்கி, இன்று வரை மேற்குலகம் இஸ்லாத்தை மட்டம் தட்டுவதற்கான ஒரு சூட்சும திட்டத்தை கடைப்பிடித்து வருகின்றது. ‘இஸ்லாம் பயங்கரவாதத்தை, தீவிரபோக்கை போதிக்கும் சமயம்’ என்ற கருத்தியல் கட்டமைக்கப்பட்டு உள்ளது.
இதன்மூலம், ‘இஸ்லாமோபோபியா’ என்ற இஸ்லாத்துக்கு எதிரான பயங்காட்டல் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கு பின்னால் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் உள்ளடங்கலாக, பல ஐரோப்பிய நாடுகளும் துணைநிற்கின்றன.
அதுமட்டுமன்றி, அமெரிக்காவின் அல்லது மேற்குலக நாடுகளின் அடிவடிருடிகளாக இருக்கின்ற ஆட்சியாளர்களைக் கொண்டு ஆளப்படும் பல முஸ்லிம் நாடுகளும், இதற்கு மறைமுக ஒத்துழைப்பை வழங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்லாம்.
இது இவ்வாறிருக்க, ஆசிய பிராந்தியத்தில் முஸ்லிம்களை அல்லது அவர்களது மார்க்க ரீதியான அடையாளத்தை கட்டுப்படுத்துவதில், பல நாடுகளில் இரு மதக் கோட்பாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மியான்மர், இலங்கை போன்ற நாடுகளில் ஒரு விதமாகவும், இந்தியாவில் இன்னுமொரு விதமாகவும் முஸ்லிம்களின் சுயம் நசுக்கப்படுவதைக் கண்டுகொண்டுதான் இருக்கின்றோம்.
ஆயினும், அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் எதிராக, உறுதியான கூட்டு நிலைப்பாட்டை எடுக்க ‘வக்கில்லாத’ முஸ்லிம் நாடுகள், இலங்கை, இந்தியா, மியான்மர் போன்ற சிறிய நாடுகளில் நடக்கின்ற அநியாயங்களை தட்டிக்கேட்பதற்கும் தயக்கம் காட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது.
முஸ்லிம்களுக்கு என்ன நடந்தாலும், இஸ்லாமிய நாடுகள் பெரும்பாலும் மௌனம் காப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. ‘கண்டும் காணாதது போல’ இருப்பதற்கு அல்லது, கடைசிக் கட்டத்தில் ‘நீீலிக் கண்ணீர்’ வடிப்பதற்கே, பிரபல முஸ்லிம் நாடுகள் காத்திருப்பதாகச் சொல்லாம்.
பொஸ்னியா, சிரியா, பாலஸ்தீனம், லிபியா, டியுனிசியா, துருக்கி எனப் பல நாடுகளில் ‘பயங்கரவாதத்தை ஒழித்தல்’, ‘நீதியை நிலைநாட்டுதல்’ என்ற தோரணையில், அப்பாவி முஸ்லிம்கள் இலட்சக் கணக்கில் கூட்டுப்படைகளால் கொன்று குவிக்கப்பட்ட போது, சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அமீரகம், கட்டார், ஓமான் உள்ளிட்ட கணிசமான முஸ்லிம் நாட்டுத் தலைவர்கள் வாயைத் திறக்கவில்லை.
உலகில் இரகசியமான முறையில் பயங்கரவாதத்தை ஊட்டி வளர்ப்பதும், அதற்கு தீனி கொடுப்பதும் யார் என்று நமக்கும் தெரியும். எவ்வாறிருப்பினும் அது ஒழிக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அப்பாவி மக்களும் சேர்த்து கொல்லப்பட்ட போது, உலக முஸ்லிம்களின் ஒன்று திரண்ட பலம், ஒரு சிறிதளவேனும் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் நமது கவலையாகும்.
அமெரிக்காவுடனும் மேற்கத்தேய நாடுகளுடனும் திரைமறைவு உறவுடன் இருந்த, இப்போது உறவு கொண்டாடுகின்ற அரபுலக ராஜாக்கள், தங்களது பதவியையும் நலன்களையும் இதன்மூலம் தக்கவைத்து, பாதுகாத்துக் கொண்டார்கள்.
முஸ்லிம் விரோத போக்குக்கு எதிராக நெஞ்சை நிமிர்த்திக் கதைத்த தைரியமுள்ள இஸ்லாமிய ஆட்சியாளர்களைப் போல, தம்மையும் அழித்துவிடுவார்களா, நமது நாட்டிலும் ஒரு பயங்கரவாத இயக்கத்தை உட்புகுத்தி நாசமாக்கிவிடுவார்களா என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது.
சரி! பலம்பொருந்திய நாடுகள் விடயத்தில் இவ்வாறு நடந்து கொண்டாலும் இலங்கை போன்ற நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கின்ற இன, மத ஒடுக்குமுறைகள், உரிமைப் பறிப்புகள் பற்றியாவது முஸ்லிம் நாடுகள் குரல் கொடுத்திருக்கலாம்; அதுவும் நடக்கவில்லை என்பதை அறவே ஜீரணிக்க முடியாது.
குறிப்பாக, இலங்கை எப்போதும் அரபு நாடுகளில் தங்கியிருக்கின்றது; உதவிகளை எதிர்பார்க்கின்றது. அப்படியென்றால், இலங்கை முஸ்லிம்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை எழுந்தால், சற்று இறுக்கிப் பிடித்தாலே, சம்பந்தப்பட்டவர்கள் தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வார்கள்.
ஆனால், இனவாத அடக்குமுறை, மத நெருக்கடி தொடக்கம் ஜனாஸா எரிப்பு வரை அது நடக்கவில்லை. கடைசிக் கட்டத்தில் ஓ.ஐ.சி அமைப்பு அறிக்கை விட்டதே தவிர, தனியொரு முஸ்லிம் நாடோ, மன்னரோ காட்டமான அழுத்தங்களை தொடர்ந்து கொடுக்கவில்லை. இலங்கை முஸ்லிம்கள் விடயத்தில், முஸ்லிம் நாடுகள் இவ்விதம் மெத்தனமாகச் செயற்படுவதற்கு, மேலே குறிப்பிட்டவை தவிர, அவர்கள் பக்கத்தில் வேறு பல காரணங்களும் உள்ளன.
மறுபுறத்தில், இந்தப் பலத்தை பயன்படுத்திக் கொள்வதற்கு இலங்கை முஸ்லிம் சமூகம் சரியான நகர்வுகளைச் செய்யவில்லை என்பது நமது பக்கத்தில் உள்ள மிகப் பெரிய குறைபாடும், விமர்சனத்துக்கு உரிய விவகாரமும் ஆகும்.
இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களின் நீண்டகால, குறுங்கால பிரச்சினைகள் என்ன, அவற்றின் ஆழ அகலங்கள் என்ன என்பதை முதலில் முஸ்லிம் தலைவர்களும், எம்.பிக்களும் படித்தறிந்து கொண்டிருக்க வேண்டும். அவற்றை சரியாக ஆவணப்படுத்தி, சர்வதேசத்திடமும் குறிப்பாக முஸ்லிம் நாடுகளிடமும் முன்வைக்க வேண்டும்.
முஸ்லிம்களுக்கு எதிராக அநியாயங்கள் நடக்கின்ற சந்தர்ப்பத்தில் அரசாங்கம், ஆட்சியாளர்களுக்கு வால்பிடித்துக் கொண்டிருக்காமல், அப் பிரச்சினைகளை பொதுவெளியிலும் உலகுக்கு கேட்கும் வண்ணமும் முன்வைத்திருக்க வேண்டும். கொழும்பிலுள்ள தூதரகங்கள் ஊடாக, அதற்கான அழுத்தத்தை பிரயோகித்திருக்க வேண்டும்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் அப்படிச் செய்யாமல், செயற்றிட்டங்கள், அபிவிருத்தித் திட்டங்கள், மத அடிப்படையிலான வேலைத்திட்டங்கள், வீதி அபிவிருத்திகள், கட்டட நிர்மாணங்கள், தொழில் வாய்ப்புகள். தேர்தல்கால உதவிகளை முதன்மைப்படுத்திய உறவை, தூதரகங்களுடன் பெரும்பாலும் கொண்டிருந்ததால், ஏற்கெனவே மெத்தனப் போக்குடன் செயற்படும் முஸ்லிம் நாடுகளுக்கு அது சாதகமாகப் போய்விட்டது.
ஆக மொத்தத்தில், இவ்வளவு பலம் இருந்தும், இஸ்லாத்தை பின்பற்றுவோரை கேட்பாரற்ற ஒரு சமூகம்போல மாற்றி இருக்கின்றார்கள் என்றால், அதற்கு கைப்பொம்மைகளான இஸ்லாமிய நாடுகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம் பெயர்தாங்கி ஆயுத இயக்கங்களும் முக்கிய காரணம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.