ஜி.ஜி யின் இணக்க அரசியலிருந்து தையிட்டி நில அபகரிப்பு வரை !! (கட்டுரை)
இலங்கைத் தீவு பௌத்த மதத்தை பாதுகாப்பதற்காக புத்தபிரானால் தேர்ந்தெடுக்கப்பட்ட. , அதாவது “”ஆசீர்வதிக்கப்பட்ட. பூமி”” என்ற மகா வம்சத்தின் ஐதீகத்திலிருந்து புனையப்பட்டதுதான் “”தம்மதீபக் கோட்பாடு”” இதன் அடிப்படையில் இலங்கைத் தீவை சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதே சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இலக்கு.
அந்த இலக்கை அடைவதற்காக அது தமிழர் தாயகத்தில் பௌத்த மயமாக்கல் , சிங்களமயமாக்கல் என்ற கொள்கையை கைக்கொள்கின்றது.
அதற்காக தமிழ் அரசியல் தரப்புக்களை இணக்க அரசியல் என்றும், நல்லிணக்க அரசியல் என்றும், தேசிய அரசாங்கம் என்றும், நல்லாட்சி அரசாங்கம் என்றும் கூட்டு சேர்த்து அரவணைத்து தமிழ் தலைவர்களின் ஆதரவுடன் தமிழின அழிப்பை கச்சிதமாக நிறைவேற்றுகிறது.
‘அணைத்துக் கெடுக்கும்’ தந்திரத்தை சிங்கள தேசம் கடந்த 75 ஆண்டுகளாக திறம்படச் செய்துவருகிறது. இலங்கைத் தீவில் தமிழர்களை இல்லாத ஒழிக்க வேண்டுமானால் தமிழர்களின் தாயக நிலப்பரப்பை அழிக்க வேண்டும்.
அவ்வாறு தமிழர் தாயக நிலப்பரப்பை அழிப்பதற்கு தமிழர் தாயகத்தை துண்டு, துண்டாக வெட்டி கேக் சாப்பிடுவது போல சிங்கள குடியேற்றங்களை நிறுவவேண்டும்.
தமிழர் தாயகத்தைச் சிங்களமயப்படுத்தி விட்டால் கால ஓட்டத்தில் தமிழர்கள் அழிந்து இத்தீவை சிங்கள நாடாக்கிவிடலாம் என டி. எஸ். சேனநாயக்காவிற்கு ஐவர் ஜன்னின்ஸ் புத்திமதி கூறினார்.
டி.எஸ் அதனை கெட்டியாக பிடித்துக் கொண்டு திட்டத்தை ஆரம்பித்தார் இலங்கைத் தீவை சிங்கள மயமாக்குவது என்ற செயற்திட்டத்தின் ஒரு பகுதிதான் பௌத்த விகாரங்களை தமிழர் தாயகத்தில் நிர்மாணிப்பது.
நிலங்களை அபகரிப்பது, சிங்கள குடியேற்றங்களை நிறுவுவது என் கொள்கையை கடைப்பிடிக்கலானார். டி.எஸ். சேனநாயக்காவின் தமிழர்தாயக அபகரிப்பு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தமிழினத்திலிருந்து ஒரு கோடாலிக்காம்பு தேவைப்பட்டது.
மீன்பிடிக் கைத்தொழில் அமைச்சு என்ற பதவியை விலையாகக் கொடுத்து ஜி.ஜி .என்ற குற்றவியல் சட்டத்தரணியை டி.எஸ். வாங்கினார்.
கிழக்கில் அம்பாறையில் கல்லோயா சிங்களக் குடியேற்றத்தை ஜி . ஜி. பொன்னம்பலம் முன்நின்று ஆரம்பித்து வைத்ததிலிருந்து தமிழ் தாகயம் சிதைக்கப்படுவது ஆரம்பமாகின்றது. பிரதமர் டி.எஸ். உடன் இணைந்து நின்று ஜி.ஜி. குடியேற்றத்திட்டக் களப்பணியாற்றும் ஒளிப் படங்கள் அரங்கில் உள்ளன.
அதன் விளைவுகளை இன்று வடக்கில் வெடுக்குநாரிமலை, குருந்தூர் மலை என விரிந்து இன்று யாழ்ப்பாணம் தையிட்டியில் வந்து நிற்கிறது.
தமிழ் தலைவர்கள் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்று கூக்குரல் இட்டுக்கொண்டு அதே நேரத்தில் சிங்கள தேசத்தின் விருப்பு என்னவோ அந்த விருப்பை நிறைவேற்றுவதற்கான பாதைகளை தமிழர் தாயகத்தில் திறந்துவிட்டு எதிரிக்கு சேவகம் செய்வதனையே தமிழ் அரசியல் தலைமைகளின் செயல்பாடுகள் நிருபிக்கன்றன.
இன்றைய வடகிழக்கு நோக்கிய சிங்களமயமாக்கல் என்பது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆரம்பித்து வைத்ததுதான். எனவே தமிழர் தாயக அபகரித்திக்கு ஜி .ஜி. பொன்னம்பலமும் அவருடைய கட்சியும் பொறுப்புக்கூற வேண்டும்.
இன்று தையிட்டியில் ஜி. ஜி .யின் பேரனும் அவரின் சகாக்களும் கூக்குரலிடலாம். ஆனால் இவை எல்லாவற்றிற்குமான பொறுப்பு அகில இலங்கை தமிழ் காங்கிரசும் ஜி. ஜி. யும் என்பதை கயேந்திரகுமார் பொன்னம்பலம் முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும்.
அதற்காக ஒரு பகிரங்க மன்னிப்பு கேட்டுவிட்டுத்தான் ஆர்ப்பாட்டம், போராட்டம் என கூக்குரலிட வேண்டும். அதுவே அரசியலில் நாகரிகமும் ஜனநாயக முறைமையும் மரபுமாகும். பொறுப்புக் கூறலுக்கு தயார் இல்லை என்றால் போராட்டம் போலியானது.
சிங்கள பௌத்த தேசியவாதத்தின் இலக்கு இலங்கை தீவை முழுமையாக சிங்கள பௌத்த நாடாக மாற்றுவது. அந்த இலக்கை அடைவதற்கு பல்வேறு வகையான கொள்கைகளை சிங்களத் தலைவர்கள் கையாளுகின்றார்கள்.
சிதைக்கப்படும் தமிழர்தேசம்
சிங்கள தேசம் தனது இலக்கை நோக்கி மிக வேகமாகவே செயற்படுகிறது. ஆனால் தமிழர் தேசமோ இணக்க அரசியலில் சிக்குண்டு தமிழர் தேசம் படிப்படியாக சிதைக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
தமிழர் தேசத்தின் சிதைப்பு என்பது தமிழ் அரசியல் தலைமைகளின் அரசியல் அறிவியல் வறுமையும், கையாலாகாகாத் தனங்களின் வெளிப்பாடும்தான் என்பதை ஒப்புக் கொண்டேயாக வேண்டும்.
இலக்கு, கொள்கை இரண்டு சொற்களுக்கும் ஆங்கிலத்தில் policy என்ற ஒரு சொல்லுக்குள் அடங்கி விடுகிறது. இலக்கு என்பதை வடமொழியில் இலட்சியம் என்று குறிப்பிடப்படுகிறது.
கொள்கை என்பது கைகொள்ளுதல் அதாவது வழியை பின்பற்றுதல் அதையே தமிழில் “”வழிவகை”” என்ற பொருள் பொதிந்த விரிவான வார்த்தை உண்டு. அதனை ஆங்கிலத்தில் Road map என வழங்குகின்றனர்.
தற்போது தமிழில் அதனை வீதி வரைபடம் என்று மொழிபெயர்க்கின்றனர். இலட்சியத்தை அடைவதற்கான நடைமுறையே கொள்கை . சிங்களத் தலைவர்கள் இலங்கைத் தீவை சிங்களமயமாக்குவதற்கு காணி அபகரிப்பு, குடியேற்றம், பௌத்த விகாரம் அமைத்தல் போன்ற கொள்கைகளை கடைப்பிடிக்கிறார்கள்.
இலட்சியத்தை அடைவதற்கான நடைமுறைகளும் செயல்முறைகளும் கொள்கையாகும். இக்கொள்கைகள் சூழலுக்கும் காலத்திற்கும் ஏற்ப மாற்றமடையலாம். எனவே கொள்கையில் மாற்றங்கள் வரும் இலட்சியம் மாற்றம் அடையாது.
சிங்களத் தலைவர்களின் “”தம்மதீப”” என்ற இலட்சியம் மாற்றம் அடையாது. இலட்சியத்தை அடைவதற்காக கைகொள்ளப்படுகின்ற மார்க்கமே கொள்கையாகும். அது சிங்களத்தைப் பொறுத்தவரை தமிழின அழிப்பை மையப்படத்தியாதாகவே எப்பொதும் இருந்திருக்கிறது, இனியும் அப்படித்தான் இருக்கும்.
இன்றைய நடைமுறையில் இலங்கைத் தீவில் தமிழின அழிப்பை வெற்றிகரமாக செய்வதற்கு நிலத்தை அபகரித்தல், மதத்த அழித்தல், பண்பாட்டை சிதைத்தல் என்பவற்றையே கைக்கொள்கிறது. அதற்காக பன்நாட்டு ஆதரவையும் அபிவிருத்தி முதலீடு என்ற போர்வையில் நிறைறேற்றுகின்றனர்.
தமிழினத்தைப் பொறுத்தளவில் தமிழ் மொழியை அழிக்க முடியாது. தமிழ் மொழி ஒரு வளர்ந்த இலக்கிய செழுமைமிக்க தொன்மையான செம்மொழி. அதை இலகுவில் அழித்துவிட முடியாது.
ஆனால் இலங்கை தீவில் இந்த மொழியை அழிப்பதற்கு அந்த மக்களின் பாரம்பரிய தாயக நிலத்தை அபகரித்து, மதத்தையும் பண்பாட்டையும் அழித்துவிட்டால் இனம் அழிந்துவிடும்.
இதனையே சிங்கள தலைவர்கள் அரசியலானது அரசியல் சட்டங்களுக்கு ஊடாகவும், அரசாங்க நடைமுறைகளுக்கு ஊடாகவும், விவசாய அபிவிருத்தி மீன்பிடி அபிவிருத்தி, கைத்தொழில் அபிவிருத்தி என்பவற்றுக்கு ஊடாகவும் தமிழர் நிலத்தை விழுங்கும் கொள்கையை இப்போது கையாள்கிறார்கள்.
எனவே ஈழத் தமிழர்கள் தங்கள் தாயக நிலத்தை பாதுகாக்கவும் நமது பண்பாட்டு விழிமியங்களை பாதுகாப்பதற்கும் போராட வேண்டும். இயற்கையுடனும் இருப்புடனும் இடையறாது போராடாத மனித சமூகம் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லாது அழிந்துவிடும்.
போராட்டம் என்பது பரந்துபட்ட மக்கள் சக்தியை திரட்டி தொடர் வெகுசன போராட்டங்களை நடத்த வேண்டும். அதை விடுத்து ஒரு கட்சி தன்னுடைய நான்கு – ஐந்து பேரைக் கொண்டு கொடிபிடிப்பதும், கூக்குரல் இடுவதும் போராட்டமாகாது.
இத்தகைய செயல்கள் இலங்கை அரசையும் பாதிக்காது. சர்வதேச கவனத்தையும் ஈர்க்காது. அதனால் எந்த பயனும் தமிழ்மக்களுக்கு கிடைக்காது. வேண்டுமென்றால் வாக்கு வங்கிக்காக நாங்கள் தனித்து போராடினோம் என்று மார்பு தட்ட மாத்திரமே உதவும். காலத்துக்கும் சூழலுக்கும் பொருத்தமான போராட்ட வழிமுறைகளை கைகொள்வதும் அதற்காக பரந்துபட்ட ஆதரவைத் திரட்டுவதும் அவசியமாகும்.
இன்று மாறிவரும் உலக ஒழுங்கில் தமிழ் மக்கள் உலகின் புதிய அரசியல் ஒழுங்கிற்கு ஏற்ற வகையில் புதிய கொள்கைகளை வகுக்க வேண்டும்.
இந்து சமுத்திர பிராந்தியத்தின் தவிர்க்க முடியாத கேந்திர ஸ்தானத்தில் தமிழர் தாயகம் இருப்பதினால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தமிழர் தாயகத்தின் கேந்திரத் தன்மை பெறுமதி வாய்ந்ததாக உள்ளது.
இதனை முதலீடாக பயன்படுத்தி இந்தியா-மேற்குலகம் உள்ளிட்ட இந்தோ-பசுபிக் செயற் திட்டத்தில் தமிழ் மக்கள் தம்மை ஒரு பங்குதாரர்களாக இணைத்துக் கொண்டால் மாத்திரமே இலங்கை தீவில் தமிழினம் நீண்ட நெடிய காலத்திற்கு நிலைத்து வாழமுடியும். இல்லையேல் இலங்கைத்தீவு சிங்களமயமாவதை யாராலும் தடுத்திட முடியாது.