இந்துசமுத்திர சீன ஆதிக்கத்துக்கு தடை ஈழத்தமிழரும் பாக்குநீரிணை அரசியலுமே! (கட்டுரை)
சீன ஆதிக்கம் இலங்கைத்தீவில் ஒரு படிமுறை வளர்ச்சியை கண்டு கொண்டிருக்கிறது. இதனை நடைமுறை அரசியல் நிரூபிக்கிறது.
சீனாவின் யுனான் மாகாணத்தின் ஒரு சகோதர மாகாணமாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தை தத்தெடுத்து இணைத்து அடிக்கட்டுமான அபிவிருத்தி என்ற பெயரில் திருகோணமலையின் சீன்குடா பகுதியில் கட்டுமானங்களை மேற்கொள்ளும் செயற்திட்டம் என்பது இலங்கைத் தீவில் இரண்டாவதாக திருகோணமலை துறைமுகமும் மிகவிரைவில் சீனமயமாகும் என்பதை தெளிவாக காட்டுகிறது.
இவ்வாறு இந்துசமுத்திர துறைமுகங்கள் சீனாவின் கைகளுக்கு சென்று விட்டால் இந்தப் பிராந்தியம் பெரும் சீரழிவை சந்திக்கும். அந்த சீரழிவின் ஆரம்பம் இலங்கை தீவிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட போகிறது. அது முதலில் ஈழத் தமிழர்களையும் தமிழகத தமிழர்களையுமே சிதைப்பதை இலக்காகக் கொண்டிருக்கும்.
தமிழின சீரழிவுகள்
சீனாவின் தமிழர்தாயக காலுான்றல் தடுக்கப்படாவிட்டால் தமிழினத்தை சீரழிக்கும். தமிழர்களை இந்த பிராந்தியத்தில் நிற்கதியாக்கும் என்பது தவிர்க்க முடியாமற்போகும்.
சீன அரசு ஒரு செயல்திட்டத்தை ஆரம்பித்தால் அது நீண்ட நோக்குடனும், நுணுக்கமான திட்டங்களுடனுமே மேற்கொள்ளப்படும்.
அதற்கு எதிராக வரக்கூடிய அனைத்து வகையான தடைகளையும் முன்கூட்டியே அறிந்து திட்டமிட்டு முறியடிக்க கூடிய மாற்றுத்திட்டங்களுடன்தான் சீனர்கள் முன்னெடுப்பர்.
வெறும் அரசியல் நிகழ்வுகளுக்குள்ளால் மேலெழுந்த வாரியாக இவற்றினை பார்க்காது ஆழமான அரசியல் வரலாற்று பின்புலத்துடனும், அச்செயல் தரவல்ல விளைவுகளில் இருந்தும் அணுகி ஆராயப்பட வேண்டும்.
சீனர்கள் வரலாற்று ரீதியாக தாம் எடுக்கின்ற செயற்திட்டங்களை நீண்ட கால நோக்கிலும் மிக அமைதியாகவும், உறுதியாகவும் முன்னெடுப்பர்.
இதற்கு நல்ல ஒரு உதாரணம் சீனப் பெருஞ்சுவர் பல நூற்றாண்டுகள் கடந்தும் தொடர்ச்சியாக பல மன்னர்கள் மாறிமாறி ஆட்சிக்கு வந்து சென்றாலும் கட்டுமானம் என்பது நிறுத்தப்படாமல் தொடர்ந்தும் கட்டப்பட்டது என்பதிலிருந்தும், அவர்கள் எந்த அந்நிய ஆதிக்கத்துக்கும் உட்படாமல் தொடர்ந்து தம்மை பல நூற்றாண்டுகளாக தம்பாரம்பரியத்தை பாதுகாத்தார்கள் என்பதிலிருந்தும், மேற்குலகத்துடன் அபின் யுத்தத்தின் போது அவர்கள் தங்கள் துறைமுகங்களை மேற்குலகத்திடம் இழந்தார்களே தவிர தங்கள் தேசத்தையும் அரசையும் கட்டுக்கோப்பாக பாதுகாத்தார்கள் என்பதிலிருந்தும் அவர்களுடைய ராஜதந்திர வியூகமும் நீண்ட தொலைநோக்குப் பார்வையையும் புரிந்து கொள்ள முடியும்.
இந்த வரலாற்று பின்னணியில் சீனர்கள் தங்களுடைய கற்றுக்கொண்ட பாடங்களின் இருந்து தற்போது இந்துசமுத்திரத்தின் துறைமுகங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை பட்டுப்பாதை என்ற பெயரில் மிக நேர்த்தியாக நகர்த்திச் செல்கிறார்கள்.
இந்துசமுத்திரத்துக்குள் சீனாவின் உள்ள நுழைவானது இந்தப் பிராந்தியத்தின் பெரும் அரசியல் மாற்றங்களையும், சமூகவியல் மாற்றங்களையும், பொருளியல் மாற்றங்களையும் ஏற்படுத்தும். அந்த மாற்றங்கள் தமிழ் தேசிய இனத்தின் அரசியல் இருப்பை அழித்து, தமிழினத்தினுடைய பண்பாட்டு விழுமியங்களை சிதைத்து இந்தப் பிராந்தியம் சீரழிக்கப்பட்டுவிடும்.
சீனாவின் பட்டுப்பாதை வியூகத்தில் இன்று பர்மாவின் கோகோதீவு, இலங்கையில் அம்பாந்தோட்ட துறைமுகம், பாகிஸ்தானின் குவாட்டர் துறைமுகம், ஆப்பிரிக்காவின் கிழக்கு கரையில் செங்கடலில் உள்ள டிஜிபுட்டி(Djibouti), கெனியாவின் லாமோத்தீவு என்பன சீனாவின் கைகளில் வந்துவிட்டது.
பிரம்மாண்டமாக ஊதிப் பெருத்திருக்கும் சீனாவின் பண்ட உற்பத்தி, மற்றும் அதனுடைய கார்ப்பரேட் நிறுவனங்களின் பெருவளர்ச்சி அடைந்திருக்கின்றன.எனவே சீனப் பண்டஉற்பத்திக்கு பெருந்தொகையான மூல வளங்கள் தேவைப்படுகிறது.
அத்தோடு உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களுக்கான புதிய சந்தைகளை தேடவும், கைப்பற்றவும், தொடர்ந்து நிலைபெறவும், சர்வதேச உற்பத்தியுடன் போட்டி போட வேண்டியும் உள்ளது.
இந்த அடிப்படையில்தான் சந்தையையும், மூலவளத்தையும் பெறுவதற்கு 62 ஆட்சிப் பிரதேசங்களை கொண்டிருக்ககக்கூடிய ஆபிரிக்க கண்டத்தின் 54 இறைமையுள்ள நாடுகள் உண்டு.
இவற்றில் தற்போது 40 நாடுகளில் சீனா நிறுவனங்கள் பிரமாண்டமான முதலீடுகளைச் செய்திருக்கிறது.
இந்துசமுத்திரத்தின் கடல் மார்க்கம்
மூல வளங்களை உற்பத்திச் சாலைக்கும் உற்பத்தி செய்யப்பட்ட முடிவு பொருட்களை சந்தைக்கும் கொண்டு செல்வதற்கு இந்துசமுத்திரத்தின் ஊடான கடல் மார்க்க கப்பல் போக்குவரத்து சீனாவுக்கு இன்றியமையாத தேவையாக என்று எழுந்து விட்டது.
இன்றைய உலகின் வர்த்தகத்துக்கு கப்பல் போக்குவரத்து இன்றியமையாதது. வர்த்தகம் என்பது ஒருவகைப் போர்தான். போர் என்பது வளங்களை சூறையாடுவதற்கு மேற்கொள்ளப்படுகிறது. வர்த்தகம் லாபத்தை ஈட்டுவதற்கானது அதாவது பொருளை ஈட்டுவதற்கானது.
எனவே போரினாலும் பொருளை ஈட்ட முடியும். வர்த்தகத்தினாலும் பொருளை ஈட்ட முடியும். போரினால் ஈட்ட முடியாத பொருளை வர்த்தகத்தினால் ஈட்ட முடிகிறது.
எனவே இந்த உலகில் போரும் வர்த்தகமும் தவிர்க்கப்பட முடியாத ஒன்று. அந்தப் போர்தான் இன்று வர்த்தகமாக உருவெடுத்து இருக்கிறது.
எனவே உலகப் பேரரசுகளின் வர்த்தகத்துக்கு தடை ஏற்படுகின்ற போது போர் தவிர்க்க முடியாது நிகழ்கிறது.
அவ்வாறுதான் சீனாவின் பெரு வர்த்தகத்திற்கு இந்து சமுத்திரப் போக்குவரத்தில் தடை ஏற்பட்டால் போர் தவிர்க்க முடியாதது நிகழும்.
அந்தப் போர் இந்து சமுத்திரத் துறைமுகங்களை கையகப்படுத்தவும், இந்து சமுத்திர போக்குவரத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் வல்லரசுகளும் அவற்றின் சார்பு நாடுகளும் போரிடுவது தவிர்க்க முடியாது.
இந்தப்போரில் ஈழத்தமிழினத்தின் கேந்திர அமைவிடம் காரணமாக அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ இந்தப்போட்டிகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது.
வர்த்தக விரிவாக்கம்
இந்துசமுத்திர கடலாதிக்க வரலாற்றில் சோழர்களுக்கு(9 தொடக்கம்12ம் நுாற்றாண்டு வரை) பின்னர் 1407-ல் சீனாவுக்கான அதிகார எல்லையை விஸ்தரிப்பது, அண்டை நாட்டு உறவுகளை விஸ்தரிப்பது, பன்னாட்டு வர்த்தகத்தை விரிவாக்குவது என்ற இலக்குகளோடு ஆசியாவின் தலைவனாக தன்னை நிலைநிறுத்த ஜூடி(யுங்லோ) மன்னன் விரும்பினான்.
அதனை நிறைவேற்ற சீனாவின் கடற்படை தளபதி அட்மிரல் ஷென் -ஹி (Admiral Zheng- He) மலாக்கா தொடுகட லூடாக இந்துசமுத்திரத்திற்குள் நுழைந்தார் அவர் 1432 வரைக்கும் இந்த சமுத்திரத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வைத்திருந்தார்.
அவளையில் 1409ல் சுமாத்திராத்தீவின் மேற்கு ஆட்சியாளன் செகண்டருக்கும்(Sekander) கிழக்குப்பகுதி குறுநில மன்னன் அலாவுதீனுக்கும்(Al abidin) இடையில் ஏற்பட்டிருந்த உள்ளூர் அரசியல் பிரச்சினையில் தலையிட்டு அலாவுதீனக்காக தனது பத்தாயிரம் படைவீரர்ககளை களத்தில் இறக்கி போரிட்டு செகண்டரை ஒழித்து அலாவுதீனை முழுத்தீவிற்குமான ஆட்சியளானாக்கினார்.
1409 இல் சுமாத்திரா தீவில் இந்து மன்னனை தோற்கடித்து ஒரு இஸ்லாமிய குறுநில மன்னனை மன்னனாக்கியதன் விளைவு இன்று இந்தோனேசியா உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடாக தோற்றம் பெற்றிருக்கிறது என்ற வரலாற்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
வாஸ்கோடகாமா யுகம்
1492 இல் போர்த்துக்கேய கடலோடி வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு வந்தார். அதன் பின்னர் ஏறத்தாழ ஒரு 400 ஆண்டுகள் வாஸ்கோடகாமா யுகத்தின் அரசியல், பொருளியல், தொழிநுட்பம் என்பனவே உலகப்பண்பாடாக தோற்றுவிக்கப்பட்டிருந்தது இ. வாஸ்கோடகாமா யுகமே இந்த உலகை நிர்ணயிக்கும் சக்தியாகவுமிருந்தது.
ஆனால் இன்று சீனா இந்துசமுத்திரத்தில் தலையெடுத்ததனால் கடந்த 400 ஆண்டுகால வாஸ்கோடகாமா யுகத்தை சீனாவின் அதீத தொழில்நுட்ப, இலத்திரனியல் வளர்ச்சி ஒரு சில பத்து ஆண்டுகளில் மேவி முறியடித்து ஒரு புதிய சீன யுகத்தை இந்த உலகத்தில் தோற்றுவித்துவிடும் அபாயம் தோன்றியிருக்கிறது.
எனவே இந்து சமுத்திர போக்குவரத்தை தன் கட்டுப்பாட்டில் தொடர்ந்து தக்க வைப்பதற்கு சீனா எத்தகைய உயரிய நிலைக்கும் செல்ல தயாராகவே உள்ளது.
இலங்கைத்தீவில் சீனாவின் ஆதிக்கம்
இலங்கைத்தீவில் சீனாவின் ஆதிக்கம் சந்திரிகா குமாரதுங்கா ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அது ராஜபக்சகளின் ஆட்சிக் காலத்தில் ஒரு படிமுறை வளர்ச்சியை கண்டது. 2005ல் ராஜபக்சர்களை பதவியில் அமர்த்துவதற்கு சீனா மிகப்பெரிய வேலைத் திட்டங்களை செய்திருந்தது.
அது வன்னிவரை சென்று தன்னுடைய நாசக்கார சதிவேலைத் திட்டங்களை செய்திருக்கிறது என்பது இன்று அப்பட்டமாக தெரிகிறது. இங்கே ராஜபக்சக்கள்தான் சீனச் சார்புடையவர்களாக மட்டும் இருந்தார்கள் என்று கருதிவிடக்கூடாது.
இலங்கை அரசியலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சீனச்சாருடையதாக இருந்தது என்று வெளித்தோற்றத்தில் தென்படக்கூடும்.
ஆனால் அம்பாந்தோட்ட துறைமுக விவகாரத்தில் ராஜபக்சாக்கள் முன்னெடுத்ததை மேற்குலகத்தாலும் இந்தியாவாலும் விரும்பப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில்தான் அம்பாந்தோட்ட துறைமுகம் 99 வருட குத்தகைக்கு சீனாவுக்கு கையளிக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை மறந்து விடக்கூடாது.
ஆகவே இலங்கை தீவில் எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது சிங்கள பௌத்தத்தை பாதுகாப்பதற்கும். ஈழத் தமிழினத்தை அழித்தொழிப்பதற்கும்.
இந்திய எதிர்ப்பு வாதத்தை முன்னிலைப்படுத்தி முனைப்பாக செயல்பட்டுள்ளது.
இதனை டி. எஸ். சேனநாயக்க தொடக்கம் கே ஆர் ஜெயவர்த்தனா வரை காலத்துக்கு காலம் அதாவது 1947 -1987 வரையான காலகட்டங்களில் மேற்குலகத்துடனும் 2,000 ஆண்டுக்கு பின்னர் சீனாவுடனும் கூட்டுச்சேர்ந்திருப்பதை கடந்த நூறு ஆண்டு கால இலங்கைத் தீவின் அரசியல் வரலாறு நிருபிக்கிறது .
இப்போது யுனான் மாகாண கிழக்கு மாகாண சகோதரத்துவ இணைப்பு என்பது திருகோணமலையை மையப்படுத்தியே அமைந்துள்ளது.
சிங்கள பௌத்த அரசியல்
இந்த விடயம் சார்ந்து சீனாவின் யுனான் மாகாண ஆளுநர் இலங்கை விஜயத்தின் போது கிழக்கு மாகாண ஆளுநர் மாற்றப்பட்டு செந்தில் தொண்டமான் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஒரு மலையகத் தமிழர் அதுவும் ஒரு இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என தோன்றும்.
இது இந்தியாவின் அழுத்தத்தினால் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று மேல் எழுந்த வாரியாக பார்க்கின்ற போது தோன்றக்கூடும்.
ஆனால் உண்மையில் செந்தில் தொண்டமான் ஒரு தமிழராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால் அவர் இலங்கை அரசின் ஊழியர் என்பதை மறந்து விடக்கூடாது.
இலங்கை அரசினால் நியமிக்கப்படுகின்ற ஒருவர் இலங்கை அரசு எதை விரும்புகின்றதோ அதனையே அவரால் நிறைவேற்ற முடியும்.
எனவே சிங்கள பௌத்த அரசின் உதிரி பாகங்களாக செயல்படுகின்ற தமிழ் அதிகாரிகள் அந்த சிங்கள பௌத்த அரசின் ஓட்டுனர்களின் திசையிலேயே பயணிப்பார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
அதை விடுத்து மேலெழுந்த வாரியாக பார்த்துவிட்டு இந்திய அரசின் அழுத்தத்தினால் செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்றும், சீனாவின் கிழக்கு மாகாண உள்நுழைவை இந்தியா ராஜதந்திரத்தால் தடுத்து விட்டது என்று அப்பாவித்தனமாக பேசுவது அரசறிவியலுக்கு முரணானது.
சிங்கள ராஜதந்திரத்தை பொறுத்தவரையில் தாம் எதை விரும்புகிறார்களோ அதனை தம் எதிரிகளைக் கொண்டும், எதிரிகளுடைய நண்பர்களைக் கொண்டும் செய்ய வைப்பதுதான். இதற்கு இன்னுமொரு உதாரணத்தை சொல்லியே ஆக வேண்டும்.
தமிழிழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் நடந்த கடந்த 40 ஆண்டுகால ஆண்டு கால கட்டத்தில் இந்தியாவில் இலங்கைக்கான தூதுவர்களாக, தூதரக அதிகாரிகளாகவும் டெல்லியில், சென்னையிலும் இருந்த கடமையாற்றிய அதிகாரிகளின் பெயர் பட்டியலை அவதானித்தால் அதில் 90 வீதமானவர்கள் மலையகத் தமிழர்களும், தமிழ் பேசும் இஸ்லாமிய தமிழர்கள் என்ற உண்மை தெரியவரும்.
தமிழீழப் போராட்டங்கள்
எனவே தமிழ் பேசும் மக்களின் கையைக் கொண்டு தமிழீழப் போராட்டத்தின் கண்ணைக் குத்திய வரலாற்றை நாங்கள் மிகவும் ஆழமாக பரிசீலனை செய்ய வேண்டும். அதனைக் கவனத்தில் கொள்ளாமல் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் பற்றி பேசுவது அபத்தமானது.
இவ்வாறுதான் தமிழர் தாயக அபகரிப்பிற்கான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டபோது தமிழ் அரசியல்வாதிகளையும், தமிழ் அரசு அதிகாரிகளையும் பயன்படுத்தியே சிங்கள குடியேற்றங்கள் திட்டமிடப்பட்டன, நிறைவேற்றப்பட்டன,
நிர்வகிக்கப்பட்டன என்பதனையும் இந்த இடத்தில் சுட்டிக் காட்டுவது சாலப் பொருத்தமானது. எனவே 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட ராஜதந்திர பாரம்பரியமிக்க பௌத்த சிங்கள ராஜதந்திரமும், 3500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொடர் ராஜதந்திர வளர்ச்சிக்கு உட்பட்ட சீன ராஜதந்திரமும் இணைந்து மேற்கொள்ன்ற அரசியல் சதுரங்கத்தில் தமிழ் மக்களோ, இந்திய ராஜதந்திரமோ இலகுவில் அடிபட்ட போகும் வாய்ப்புகளே அதிகம் உள்ளது.
எனவே தமிழ்மக்களும், இந்தியாவும் இத்தகைய பலம்மிக்க ராஜதந்திர கட்டமைப்புக்களை எதிர்கொள்வது என்பது மிகக் கடினமானது.
இங்கே முற்றிலும் அறிவியல் ரீதியாக புத்திபுர்வமாக ஆழ்ந்த அவதானத்துடன் செயல்படுவதும் அவசியமானது.
இந்து சமுத்திர பிராந்தியத்தின் கடலாதிக்கமும் அதே நேரத்தில் ஈழத்தமிழருக்கும் இந்தியாவுக்குமான அரசியலும் பாக்குநீரினை அரசியலும் இணைந்து ஒருமித்துச் செயற்பட்டாலே ஒழிய இந்து சமுத்திர கடலாதிக்கத்தை சீனாவின் பிடியிலிருந்து மீட்பது என்பது இலகுவான காரியம் அல்ல.