கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது !! (கட்டுரை)
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த ஏழாம் திகதி காலை கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு, கிளிநொச்சி அழைத்துச் செல்லப்பட்டு, கிளிநொச்சி பொலிஸின் வாக்குமூலம் பெற்ற பின்னர், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்வதிலும், உடனே நீதவான் முன்பு ஆஜர் படுத்துவதிலும், குற்றஞ்சாட்டப்பட்டவர் பிணையில் விடுதலை செய்யப்படுவதும் சாதாரண நடைமுறைதானே! அப்படியிருக்கையில், கஜேந்திரகுமாரின் கைது இவ்வளவு பேசப்பட என்ன காரணம் என எவரேனும் வினவலாம்.
கஜேந்திரகுமாரின் கைதானது, கஜேந்திரகுமார் என்ற தனிநபரின் மீதானதும், அவர் முன்வைக்கும் தமிழ்த் தேசிய அரசியலின் மீதானதுமான அடக்குமுறையாகப் பார்க்கப்படுவதற்கான நியாயங்கள் சில இருக்கின்றன என்பதை நடந்த விடயங்களை அலசிப் பார்க்கும் போது ஓரளவு புரிகிறது.
கஜேந்திரகுமாரின் மீதான குற்றச்சாட்டு என்ன? பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை.
அப்படி என்ன இடையூறு விளைவித்தார் என்ற கேள்வியிலே தேடலைத் தொடங்க வேண்டியதாகவுள்ளது.
யாழ்ப்பாணம், மருதங்கேணி பகுதியில் விளையாட்டுக் கழக உறுப்பினர்களை சந்திக்க கஜேந்திரகுமார் சென்று, அங்கு விளையாட்டுக்கழக உறுப்பினர்களை பொது மைதானமொன்றில் சந்தித்த வேளை, அங்கு சந்தேகத்திற்கு இடமான ஒருவர் நடமாடிக் கொண்டிருந்ததை அவதானித்த கஜேந்திரகுமாரின் பகுப்பாய்வு அதிகாரி, குறித்த நபரிடம் அவரது ஆளடையாளம் பற்றி வினவிய போது, அவர் தன்னை ஒரு பொலிஸ் புலனாய்வு அதிகாரி என குறிப்பிட்டிருந்தார்.
அவ்வேளை கஜேந்திரகுமாரின் பகுப்பாய்வு அதிகாரியும், கஜேந்திரகுமாரும் குறித்த நபரிடம் உங்கள் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரியபோது, அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அவரைத் தடுக்க கஜேந்திரகுமார் முயன்ற போது, அவரை உதறித்தள்ளிவிட்டு அந்த நபர் ஓடிச்செல்கிறார். அங்கு குறித்த நபருடன் வந்திருந்த இன்னொரு நபரை கஜேந்திரகுமார் தரப்பினர் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதற்கிடையில், குறித்த பொது மைதானத்தோடு ஒட்டியமைந்த பரீட்சை மையத்தில் கடமையிலிருந்த சிவில் உடை தரித்த பொலிஸாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவருக்கும், கஜேந்திரகுமாருக்கும் கடும் வாக்குவாதமும் நிகழ்ந்துள்ளது. இவையெல்லாம் ஊடகப் பதிவுகள் மூலமும், சமூக ஊடகப் பதிவுகள் மூலமும் நமக்கு அறியக்கிடைத்தவை.
இதேவேளை, மருதங்கேணி சம்பவம் தொடர்பில் எம்.பி கஜேந்திரகுமார், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் முறைப்பாடு செய்திருந்தார். ஆனால், அவர் பொலிஸில் முறைப்பாடு செய்தாரா என தெரியவில்லை.
ஓர் எம்.பியாக கஜேந்திரகுமார், குறித்த சந்தர்ப்பத்தில் நடந்துகொண்ட விதம் பற்றியும், வாக்குவாதத்தில் ஈடுபட்ட விதம் பற்றியும் பல தரப்பட்ட கருத்துகள் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படுகின்றன.
பாராளுமன்றத்திற்குள்ளேயே அப்பட்டமான ரௌடியிசத்தை முன்னெடுத்து, பாராளுமன்றச் சொத்துகளை சேதப்படுத்திய, பாராளுமன்றத்தை இயங்கவிடாது செய்த, எம்.பிக்களைக் கொண்ட கட்சியினர், கஜேந்திரகுமாரின் நடவடிக்கையை கேள்வி கேட்பதெல்லாம் பெரும் முரண்நகை. ஆனால், கஜேந்திரகுமார் இன்னும் கொஞ்சம் பக்குவமாக நிலைமையைக் கையாண்டிருக்கலாம் என்பதிலும் உண்மை இல்லாமல் இல்லை.
நாம் ஒரு பொது இடத்தில், இருந்து பேசும் போது, அருகில் இரண்டு பேர் வந்து நின்றால், அவர் யார், ஏன் நிற்கிறார் என்று வினவ வேண்டிய அவசியம் கிடையாது. அது பொது மைதானம். யாரும் வரலாம், நிற்கலாம். நேரடியாக அவர்கள் உங்களுக்கு இடையூறு விளைவிக்காத வரை, அவர்கள் யாரென்ற விசாரணை தேவையற்றது.
தனியார் இடத்திற்கும், பொது இடத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது.
மேலும், சாதாரணமாக அரசியல் நிகழ்வுகளை அரச புலனாய்வுத்துறைகள் அவதானித்து வருவது, அரசியல் யதார்த்தம். ஆகவே, இந்தப் பிரச்சினையின் ஆரம்பமே ஒரு தேவையற்ற விசாரிப்பில் தொடங்கியிருக்கிறது என்றே தோன்றுகிறது. அது எவ்வாறு அமையினும், கஜேந்திரகுமாரின் கைது என்பது இங்கு முற்றிலும் வேறோர் பரிமாணத்தையே காட்டி நிற்கிறது.
இந்தநிலையில் கஜேந்திரகுமாருக்கு எதிராக பயணத்தடையுத்தரவு மருதங்கேணி பொலிஸாரினால் பெறப்பட்டிருந்தது.
கஜேந்திரகுமார் தனது ட்விட்டரில் வௌியிட்ட ஆவணங்களின் படி, கஜேந்திரகுமார் எம்.பியை, ஜூன் மாதம் எட்டாம் திகதி, காலை 10 மணிக்கு மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கும், வாக்கு மூலம் வழங்கவும் வருமாறு ஜூன் ஆறாம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸினூடாக கஜேந்திரகுமாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முதலில் இந்தத் தகவல் சிங்கள மொழியில் மட்டும் வந்தபோது, அதனை ஏற்கவில்லை. தமிழும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்று. ஆகவே ஒரு தமிழர் அரச ஆவணமொன்றை தமிழில் தருமாறு கேட்பது அவரது மொழியுரிமை. அதனை ஏற்றுக்கொண்டு பொலிஸாரும், குறித்த செய்தியை மும்மொழிகளிலும், ஆறாம் திகதியே கஜேந்திரகுமாருக்கு வழங்கியிருக்கிறார்கள். இதன்படி, அவரை மருதங்கேணி பொலிஸிற்கு எட்டாம் திகதி காலை 10 மணிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கிடையில், மருதங்கேணி சம்பவம் தொடார்பிலும், பொலிஸாரின் சட்டவிரோத நடவடிக்கை தொடர்பிலும் பாராளுமன்ற வரப்பிரசாத மீறல் விடயமொன்றை ஏழாம் திகதி எழுப்புவதற்கான அறிவித்தலை, சபாநாயகருக்கு ஆறாம் திகதியே எழுத்துமூலம் கஜேந்திரகுமார் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், திடீரென்று, ஏழாம் திகதி காலை, கஜேந்திரகுமார் பாராளுமன்றம் செல்லத் தயாரான போது, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.
எட்டாம் திகதி காலை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு தகவல் அனுப்பிவிட்டு, குறித்த நபருக்கு எதிரான பயணத்தடை உத்தரவையும் பெற்றுவிட்டிருந்த நிலையில், அவரை ஏழாம் திகதி காலையில் கைது செய்ய வேண்டியது ஏன்? இது முறையற்ற நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோதக் கைது என இந்த விடயத்திலேயே புலப்படுகிறது.
கஜேந்திரகுமாருக்கு எதிராக நீதிமன்றில் பயணத்தடை பெற்ற பொலிஸார், அவரைக் கைது செய்வது அத்தியாவசியமானது என்றால், நீதிமன்றிடம் அதற்கான ஆணையையும் கோரியிருக்கலாம். ஆனால், நீதிமன்றக் கட்டளை எதுவுமில்லாமல், பாராளுமன்றத்தில் வரப்பிரசாத மீறல் பிரச்சினையை எழுப்பவிருந்த ஒரு எம்.பியைக் கைது செய்தமை, சட்ட விரோதமானது என்பதை விட, அது ஒரு மிகப் பெரிய ஜனநாயக விரோதச் செயலாகும்.
ஒரு நியாயமான சபாநாயகர், இதனை உடனே தடுத்து நிறுத்தியிருப்பார். குற்றவியல் விடயங்கள் தொடர்பில் எம்.பிக்களைக் கைதுசெய்வது, பாராளுமன்ற வரப்பிரசாதங்களுக்குள் அடங்காது. ஆனால், அந்தக் கைது சட்டபூர்வமானதாக இருக்க வேண்டும்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினரை சட்டவிரோதமாகக் கைது செய்வது, அதுவும் அவர் பாராளுமன்றம் செல்லவதைத் தடுக்கும் வகையில் கைது செய்வது பாராளுமன்ற வரப்பிரசாதத்தை மீறும் செயலாகவே பார்க்கப்பட வேண்டும் என்பதோடு, பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயலாகவே பார்க்கப்பட வேண்டும்.
ஆனால், அதனை அப்படி பார்க்கும் நிலையில் இந்தச் சபாநாயகர் இல்லை என்பதையே அவரது நடவடிக்கைகளும், பேச்சும் கோடிட்டு காட்டி நிற்கின்றன.
இதனால்தான் கஜேந்திரகுமாரின் கைது என்பதை, அரச அடக்குமுறையின் இன்னொரு வடிவமாகப் பார்ப்பவர்களைப் பிழை சொல்ல முடியாதுள்ளது.
ஒரு பாராளுமன்ற உறுப்பினரையே பொலிஸார் இப்படி நடத்துகிறார்கள் என்றால், சாதாரண மக்களின் நிலையென்ன? அதிலும் குறிப்பாக அடக்குமுறைக்குள்ளாகும் சிறுபான்மை மக்களின் நிலையென்ன என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது.
டிரான் அலஸ் போன்ற மனித உரிமைகள் பற்றி கொஞ்சமும் அக்கறைகாட்டாத ஒரு நபரை, பொலிஸிற்குப் பொறுப்பான அமைச்சராக வைத்துக்கொண்டு, ரணில் விக்கிரமசிங்கவால் ஜனநாயக ஆட்சியை முன்னெடுக்க முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். இல்லை, அடுத்த தேர்தல் வெற்றிக்காக அவரும் தன்னை இனத்தேசிய அரசியலில் ஆழ்த்துவாரேயானால், அவர் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதை காலம் அவருக்கு தௌிவாக உணர்த்தும்.