வடக்கையும் தெற்கையும் இணைக்கும் அடக்குமுறை !! (கட்டுரை)
வடக்கு, கிழக்கு வாழ் மக்கள், தமது சமூக அரசியல் உரிமைகளை அடைவதற்காக கடந்த நான்கு தசாப்தங்களாக, எவ்வளவு அடக்குமுறைகளை எதிர்நோக்கி இருப்பார்கள் என்பதை, இப்போதுதான் தெற்கில் வாழும் மக்கள் உணர ஆரம்பித்துள்ளார்கள். தம் மீதும் அரசாங்கம் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கும் நிலையிலேயே, அவர்கள் இந்த உணர்வைப் பெற்று வருகிறார்கள்.
தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு வயது நான்கு தசாப்தங்கள் என்பது அதன் அர்த்தம் அல்ல; அந்த அடக்குமுறை 1950 களிலேயே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஆனால், 1980களில் இருந்தே, அந்த அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், தெற்கே வாழும் மக்கள் மீது, இப்போதுதான் அரசாங்கம் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்பதும் அதன் அர்த்தம் அல்ல; அந்த அடக்குமுறை, இதற்கு முன்னர் ஒரு சிறிய குழுவை அதாவது, ஜே.வி.பியை குறிவைத்து கட்டவிழ்த்ததால், தெற்கே வாழும் மக்கள் அதன் பயங்கரத்தை உணரவில்லை.
இப்போது தெற்கே பெரும்பாலான மக்கள், பிரதான அரசியல் கட்சிகளை விட்டு ஒதுங்கும் நிலை உருவாகி வருவதால், அடக்குமுறையும் பெரும்பாலான மக்களை குறிவைக்கிறது. இதை அந்தப் பெரும்பாலான மக்களும் உணர்கிறார்கள்.
இதற்கு முன்னர் அடக்குமுறையானது வடக்கு, கிழக்கில் தனி நாட்டுக்கான போராட்டம் மற்றும் தெற்கில் ஆயுதப் பலத்தால் ஆட்சியைக் கைப்பற்றும் போராட்டம் போன்ற பாரிய அரசியல் போராட்டங்களையே குறிவைத்தது. ஆனால், தற்போதைய அடக்குமுறையானது அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்ட கருத்துச் சுதந்திரம், தொழிற்சங்கப் போராட்டச் சுதந்திரம் போன்ற அடிப்படை சுதந்திரங்களையே பறிக்க முற்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னரே, இந்தப் புதிய நிலைமை உருவாகி இருக்கிறது. அவர், மக்கள் ஆணை பெற்று ஜனாதிபதியாகவில்லை. மக்கள் ஆணை இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒருவருக்கு ஜனாதிபதியாவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் சட்டப் பிரமாணம் ஒன்றின் அடிப்படையிலேயே அவர் ஜனாதிபதியானார். பொருளாதார நெருக்கடியால் கோபமுற்ற மக்கள், கடந்த வருடம் இலட்சக்கணக்கில் வீதியில் இறங்கி நடத்திய பேராட்டமும் அவருக்கு உதவியது.
ஆனால், ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் அவர் மேற்கொண்ட முதலாவது நடவடிக்கை, தம்மை நாட்டில் அதிஉயர் பதவியில் அமர்த்திய போட்டக்காரர்களை, படையினரை ஏவி அடித்து விரட்டியதேயாகும். அதன் பின்னர், தம்மை ஜனாதிபதி கதிரையில் அமர்த்திய போராட்டத்தை, பாஸிசவாதம் என அவர் வர்ணித்தார். அன்று முதல் அவர், அது போன்றதொரு மக்கள் போராட்டம் தலைதூக்காதிருக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர், அவரது அரசாங்கத்தின் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ, புனர்வாழ்வு பணியகம் ஒன்றை தாபிப்பதற்கான சட்டமூலத்தை வர்த்தமானி மூலம் வெளியிட்டார். அதை அவர் அதே மாதம் 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
‘சிகிச்சைகள் மற்றும் புனர்வாழ்வு தேவைப்படுத்துகின்ற ஒளடதங்களில் தங்கியுள்ள ஆட்கள், முன்னாள் போராளிகள், வன்முறையான அதிதீவிர குழுக்களின் உறுப்பினர்கள், மற்றும் வேறு ஏதேனும் ஆட்கள், குழுவுக்கு புனர்வாழ்வளிப்பதே இந்தச் சட்டமூலத்தின் நோக்கம்’ என அதிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நோக்கத்தின் மூலம், அரசாங்கத்துக்கு எதிரானவர்களை எங்காவது அடைத்து வைப்பதற்கான திட்டமே இது என்பது தெளிவாகிறது. அதேவேளை, கடந்த வருடம் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தை அடுத்து, அதில் கலந்து கொண்டவர்களைக் குறிவைப்பதாகவும் அமைந்துள்ளது.
முன்னாள் போராளிகளுக்கு அரசாங்கம், எதற்காக இப்போது புனர்வாழ்வளிக்கப் போகிறது என்பது தெளிவாகவில்லை. அதேவேளை, அவர்களையும் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களையும் ஒரே கண்ணோட்டத்தில் அரசாங்கம் பார்க்கிறது. வன்முறையான அதிதீவிர குழுக்கள் என்றால், எவை என்பதும் தெளிவில்லாமல் இருக்கிறது.
அரசாங்கத்துக்கு எதிரானவர்களை, இந்த வகையினராக கருதி பொலிஸார் நடவடிக்கை எடுக்கலாம். ‘மற்றும் வேறு எதேனும் ஆட்கள்’ என்பதன் கீழ், எவரையும் புனர்வாழ்வு என்ற பெயரில் எங்காவது வருடக் கணக்கில் அடைத்து வைக்கலாம்.
இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் உள்ளிட்ட சிலர், அடிப்படை உரிமை மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதன் பிரகாரம், இந்தச் சட்டமூலம் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏனையவர்கள் இதில் உள்ளடக்கப்பட்டு உள்ளதன் மூலம், இந்தச் சட்டமூலம் மொத்தமாகவே அரசியலமைப்புக்கு முரணானது என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி அதனை சபையில் அறிவித்தார். அத்தோடு அரசாங்கம் அதனை கைவிட்டுவிட்டது.
இதற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இது போன்றதொரு சட்டத்தை கொண்டு வந்தார். அவர், தீவிரவாதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலொன்றை 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் திகதி வெளியிட்டார். அதன்படி தீவிரவாதி எனத் தாம் சந்தேகிக்கும் எவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, நீதிவானிடம் அறிவித்துவிட்டு, வழக்கு விசாரணையின்றி புனர்வாழ்வு நிலையத்தில் இரண்டு வருடங்கள் தடுத்து வைக்க பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், 2021ஆம் ஆண்டு ஓகஸ்ட் ஐந்தாம் திகதி அந்த வர்த்தமானியை இடைநிறுத்தியது.
விஜயதாஸவின் புனர்வாழ்வு சட்டமூலம், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அன்றே, ஜனாதிபதி ரணில் மற்றோர் அடக்குமுறை சட்டத்தை வர்த்தமானி மூலம் வெளியிட்டார். அதன் கீழ் அவர், கொழும்பு மற்றும் புறநகர் பிரதேசங்களில் எட்டு உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தினார். அதிலும் உயர் பாதுகாப்பு வலயங்களில் மக்கள் கூடுவதும், ஊர்வலம் நடத்துவதும் தடை செய்யப்பட்டது.
எனவே நாட்டில், மக்களின் ஆர்ப்பாட்டங்களை தடுப்பதே இந்த உயர் பாதுகாப்பு வலயங்களின் நோக்கமென்பது தெளிவாகிறது. அதாவது, கடந்த வருட மக்கள் எழுச்சியை அடுத்து, அரசாங்கம் ஆர்ப்பாட்டங்களைப் பற்றிய பயத்துடனேயே காலத்தை கடத்துகிறது.
ஆனால், இதற்கு எதிராகவும் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல அமைப்புகள் உயர்நீதிமன்றத்தை நாடவே ஒரு வாரத்துக்குப் பின்னர், அதாவது ஒக்டோபர் முதலாம் திகதி ஜனாதிபதி விக்கிரமசிங்க, மற்றொரு வர்த்தமானி மூலம் அந்த வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற்றார்.
ஆயினும், அரசாங்கம் அடக்குமுறைக்கான தமது முயற்சிகளை கைவிட்டுவிடவில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக, பயங்கரவாதத்துக்கு எதிராக புதிய சட்மொன்றை கடந்த மார்ச் 22ஆம் திகதி வர்த்தமானி மூலம் வெளியிட்டது. எனினும், அந்தப் புதிய சட்டமூலம், பயங்கரவாத் தடைச் சட்டத்தைப் பார்க்கிலும் மனித உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளது.
அச்சட்டத்தின்படி, ஒருவர் அல்லது ஒரு குழு, எதையாவது செய்யுமாறு அல்லது செய்யாது தவிர்க்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்தும் நோக்கத்துடன் மக்களின் அன்றாட வாழ்வுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்வது பயங்கரவாத குற்றமாகும். அதாவது, ஏதாவது கோரிக்கையை முன்வைத்து வீதிப் போராட்டம் நடத்துவதோ, வேலைநிறுத்தம் செய்வதோ பயங்கரவாத குற்றமாகும்.
இச்சட்டமூலம், கடந்த ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருந்தது. ஆயினும் அதற்கு எதிராக உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டத்தில் பல்வேறு தரப்பினர் முன்வைத்த விமர்சனங்களை அடுத்து, அரசாங்கம் அதை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை காலவரையறையின்றி ஒத்திவைத்துள்ளது.
இப்போது அரசாங்கம், இலத்திரனியல் ஊடக கட்டுப்பாட்டு ஆணைக்குழுவை நியமிப்பதற்கான சட்டமூலமொன்றை தயாரித்து வருகிறது. அதற்கான ஆலோசனைகள், ஏற்கெனவே ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அந்த ஆலோசனைகளின்படி, அதுவும் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை பறிப்பதற்கான முயற்சியாகவே தெரிகிறது.
இது போன்ற அடக்குமுறை சட்டங்கள், நாட்டு மக்களில் ஒருசாராரை மட்டும் பாதிக்கப் போவதில்லை. வடக்கு மக்களைப் போலவே, தெற்கு மக்களையும் பாதிக்கும். அதேவேளை, வடக்கு மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்துக்கும் நாடு முழுவதிலும் சமூக அமைப்புமுறையை மாற்றி அமைப்பதற்கான ஜனநாயக உரிமை போராட்டத்துக்குமான சகல வழிவகைகளையும் இந்த அடக்குமுறைச் சட்டங்கள் மூடிவிடும்.
அவ்வாறான அரசியல் போராட்டங்களைப் பற்றி, நினைத்தும் பார்க்க முடியாத நிலையை அவை உருவாக்கும். அந்த நிலைமை, ஏற்கெனவே ஓரளவுக்கு உருவாகியும் இருக்கிறது. இதை வடக்கிலும் தெற்கிலும் உள்ள அரசியல்வாதிகள். கூட்டாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.