ஒரே இரவில் தீர்வு? !! (கட்டுரை)
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், வலைத்தளத்தில் எழுதிவரும் ‘உரலார் கேள்வியும் உலக்கையார் பதிலும்’ என்ற கேள்வி – பதில் தொடரில், அண்மையில் கேட்கப்பட்டிருந்த, ‘ரணில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகண்டுவிவார் போல இருக்கிறதே’ என்ற கேள்விக்கு, ‘ஏறச்சொன்னால் கழுதைக்குக் கோபம்; இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்’ என்ற நிலையில்த்தான், நமது இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் பலகாலமாய் நடந்து கொண்டிருக்கின்றன’ என்று தனது பதிலில் குறிப்பிட்டு இருந்தமை, கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருந்தது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, இலங்கை அரசாங்கம், தமிழ்த்தேசம் ஆகிய இருதரப்பினரிடையே ஏற்பட வேண்டுமாயின், இருதரப்பும் சமரசங்களுக்கும் விட்டுக்கொடுப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும். அது நடக்காத வரை, தீர்வு என்பது சாத்தியமில்லை.
ஆனால், இங்குதான் சூட்சுமமானதொரு நுட்பம் இருக்கிறது. இந்தச் சமரசங்களும் விட்டுக்கொடுப்புகளும் ஒரே இரவில் நடந்துவிட வேண்டுமென்ற அவசியம் இல்லை. அப்படி எதிர்பார்ப்பதும் யதார்த்தமானது இல்லை. ஆனால், நடைமுறையில் தமிழ்த் தேசிய அரசியலின் பிரச்சினை, இங்குதான் தொடங்குகிறது.
தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், தங்களுடைய மக்களாதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, அதீத பகட்டாரவாரப் பேச்சுகளையும் கொள்கை நிலைப்பாடுகளையும் முன்வைக்கிறார்கள். இதன் விளைவாக, தீர்வு காண்பதில் சமரசம் அல்லது விட்டுக்கொடுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடுகிறது.
ஏனென்றால், இன்று தமிழ்த் தேசிய அரசியல் பேசும், ஒன்றோடொன்று போட்டிபோடும் கட்சிகளும், ஒருவரோடொருவர் போட்டிபோடும் அரசியல்வாதிகளும் உளர். அதி தீவிர தேசியவாதப் பகட்டாரவார நிலைப்பாட்டில் இருந்து இம்மியளவேனும் பிசகினாலும் போட்டிக் கட்சி அல்லது போட்டியாளர் ‘துரோகி’ முத்திரை குத்தி, அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கிவிடுவாரோ என்ற பயத்திலேயே சமரசம், விட்டுக்கொடுப்பு ஆகியன பற்றி பேசக்கூட முடியாத சூழ்நிலையில், சமரசத்தின் பாலான தீர்வை விரும்பும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் கூட, சிக்கி நிற்கிறார்கள் என்பதுதான் யதார்த்தம்.
எந்தப் பிரச்சினைக்குமான அரசியல் தீர்வு என்பது, ஒரே இரவில் ஏற்பட்டுவிடாது. முழுமையான தீர்வு கிடைக்கும் வரை, இருந்த இடத்திலேயே இருப்போம்; முழுமையான தீர்வை நோக்கி ஓர் அடி கூட நகரமாட்டோம் என்பது அடிமுட்டாள்தனமான அரசியல்.
ஆனால், எங்கே அதைச் செய்யாவிட்டால் துரோகி என முத்திரை குத்தி, அரசியல் எதிர்காலத்தை அஸ்தமனமாக்கிவிடுவார்களோ என்ற பயத்தால் அரசியல் யதார்த்தம் புரிந்தவர்கள் கூட அமைதியாக இருக்கிறார்கள்.
தமிழ்த் தேசிய அரசியலில் இருக்கும் இதே பிரச்சினைதான், சிங்கள-பௌத்த தேசிய அரசியலிலும் இருக்கிறது. எங்கே தீர்வு தொடர்பில் சின்ன சமரசத்தை முன்வைத்தாலும், நாட்டைத் தமிழர்களுக்கு தாரைவார்த்துவிட்ட துரோகி என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்ற பயத்திலேயே சிங்கள இன அரசியல்வாதிகள் இருக்க வேண்டியதாக இருக்கிறது. இந்த விடயத்தில் தமிழ்த் தேசியமும் சிங்கள-பௌத்த தேசியமும் ஒரே மாதிரித்தான் இருக்கின்றன.
இங்கு இன்னொரு கலாதியான உதாரணம் இருக்கிறது. இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, தீவிர தமிழ்த் தேசியவாதிகளும் ‘நரி’ என்கிறார்கள்; சிங்கள-பௌத்த தேசியவாதிகளும் அவ்வாறே அணுகுகிறார்கள். இத்தனைக்கும் இந்நாட்டில் இனப்பிரச்சினை ஒன்று இருக்கிறது; அது தீர்க்கப்பட வேண்டும் என்று பகிரங்கமாகச் சொன்ன ஒரேயொரு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டும்தான்.
இவ்வளவு ஏன்? இப்போதுள்ள பிரதான அரசியல் கட்சி தலைவர்களில் வேறு எவராவது இலங்கையில் இனப்பிரச்சினை இருக்கிறது; அது தீர்க்கப்பட வேண்டும் என்ற தொனியிலாவது பேசியிருக்கிறார்களா? அவர்களால் பேச முடியாது. அதுதான் தீவிர இன-மத தேசியவாத அரசியல் கிடுகுப்பிடி. அதிலிருந்து தப்ப முடியாதளவுக்கு இலங்கையின் அரசியல்வாதிகள் சிக்கிப்போய்க்கிடக்கிறார்கள்.
சரி! ரணில் தீர்வு பற்றி பேசுகிறார்; அவரோடு பேசி, இன்று கிடைப்பதை எடுத்துக்கொண்டு, அதனை மக்களின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்திக்கொண்டு, எதிர்காலத்தில் மேன்மேலும் கோரிக்கைகளை முன்வைத்து, எமது அரசியல் இலக்கு நோக்கிப் பயணிப்போம் என்று யோசிப்பதற்குக் கூட, இங்கு ஒரு தமிழ் அரசியல்வாதியும் கிடையாது. அப்படி இருந்தவர்கள் கூட, எங்கே தாம் ‘துரோகி’ முத்திரை குத்தப்பட்டு, அரசியலில் செல்லாக்காசாகி விடுவோமோ என்று பயந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பயணத்தின் இறுதிக் கோட்டை அடைய வேண்டுமானால், ஒவ்வோர் அடியாக வைத்துத்தான் போக முடியும். ஒரே பாய்ச்சலில் இறுதிக் கோட்டை அடைவதானால் அடைவேன்; இல்லையென்றால் நிற்கும் இடத்திலேயே நின்று கொண்டிருப்பேன் என்பது என்ன வகையான அரசியல்?
தமிழ்த் தேசிய அரசியல் என்பது, ஒரேயடியாக ஒரே இரவில் தாம் விரும்பும் தீர்வொன்றைப் பெறும் எண்ணப்பாட்டில் இருந்து, படிப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாக நீண்ட காலத்தில் தமது அபிலாஷைகளை அடைந்துகொள்ளும் ‘incrementalism’ எனும் பாதைக்கு மாற வேண்டும். இதற்கான சமிக்ஞைகள் கடந்த ஐந்து முதல் எட்டு ஆண்டு காலத்தில் தென்பட்ட போதும், அது அரசியல் முன்னரங்குக்குக் கொண்டு வரப்படவில்லை என்பது ஒட்டு மொத்தத் தமிழ் மக்களின் தோல்வி.
அரசியல் ஆய்வுப் பரப்பை அவதானித்த வரையில், அரசியல் மாற்றங்கள் என்பவை நீண்டகாலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் ‘incrementalism’ எனும் வகையில்தான் ஏற்பட்டு இருக்கின்றன. இதுதான் நியமம் என்கிற பேராசிரியர் போல் கேர்ணியின் கருத்தை நாம் கவனிக்கலாம். ஓர் அரசியல் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்றால், அதற்கு மிக நீண்ட காலம் தேவை; பல தசாப்தங்கள் தேவை. இதுதான் அரசியல் யதார்த்தம்.
ஸ்கொட்லாந்து என்பது, ‘incrementalism’ மூலமான அதிகாரப்பகிர்வுக்கு ஓர் உதாரணமாகத் திகழ்கின்றது. ஸ்கொட்லாந்துக்கான அதிகாரப்பகிர்வை அவதானிக்கும் போது, ‘incrementalism’ அணுகுமுறையின் நடைமுறை இயக்கத்தை அவதானிக்கலாம்.
ஸ்கொட்லாந்தின் அதிகாரப்பகிர்வை நோக்கிய பயணமானது நீண்ட வரலாற்றை உடையது. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தமக்கான சுயாட்சி மற்றும் சுய-ஆட்சிக்கான கோரிக்கை ஸ்கொட்லாந்தில் முக்கியத்துவம் பெற்றது. இந்த வளர்ந்து வரும் உணர்வுக்கு பதிலளிக்கும் விதமாக, பிரித்தானிய அரசாங்கம் 1998 ஆம் ஆண்டின் ஸ்கொட்லாந்து சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தையும் ஸ்கொட்லாந்து நிர்வாகத்தையும் ஸ்தாபித்தது.
ஆனால், ஸ்கொட்லாந்து தேசியம் வேண்டிய பல அதிகாரங்கள் அதற்கு இருக்கவில்லை. அதற்காக ஸ்கொட்லாந்து தேசியவாதிகள் அதனை நிராகரிக்கவில்லை. அதனை ஏற்றுக்கொண்டு, தொடர்ந்தும் தமது கோரிக்கைகளை முன்னெடுத்தார்கள்.
இந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாக, ஸ்கொட்லாந்து சட்டம் 2012 ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்துக்கு கல்வி, சுகாதாரம், நீதி போன்ற பல்வேறு கொள்கை பகுதிகளில் சட்டம் இயற்றும் அதிகாரத்தை வழங்கியது. தொடர்ந்து, ஸ்கொட்லாந்து சட்டம் 2016 ஆனது, 2014 இல் ஸ்காட்டிஷ் சுதந்திர வாக்கெடுப்பைத் தொடர்ந்து, மேலும் அதிகரித்த அதிகாரப்பகிர்வை வழங்கியது. இந்தச் சட்டம் வருமான வரி விகிதங்கள், பட்டைகள் போன்ற கூடுதல் கொள்கைப் பகுதிகள் மீதான அதிகாரத்தை ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்துக்கு வழங்கியது.
இந்த அணுகுமுறை, ஸ்கொட்லாந்து சுய-ஆட்சியின் பரிணாம வளர்ச்சிக்கு அனுமதித்தது. அரசியல் சுயாட்சி, பொறுப்புக்கூறல் உணர்வை வளர்த்தது. பெரும்பான்மை ஸ்கொட்லாந்து மக்கள், இந்தமுறையை நம்பியதன் விளைவுதான் 2014இல் ஸ்கொட்லாந்து பிரிவினைக்கான வாக்கெடுப்பில் ஐக்கிய இராச்சியமாக தொடர்வதற்கான ஆணையை ஸ்கொட்லாந்து மக்கள் வழங்கியிருந்தார்கள். இலங்கையர்கள் இதிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
ஆகவே, ஒரே இரவில் தீர்வு வேண்டும் என்று யோசிப்பதே அறிவுக்கு முரணானது. விட்டுக்கொடுப்புகள் என்பவை காலத்தின் தேவைக்கானது. அவை நிரந்தரமானவை என்று எவரும் முடிந்த முடிவுகளுக்கு வரத்தேவையில்லை. இந்த மனநிலைமாற்றம் என்பது, தமிழ்த் தேசிய அரசியலுக்கு மிக முக்கியமானது. தாழ்வுச்சிக்கல், அல்லது உயர்வுச்சிக்கல் என்ற மனநிலைகளிலிருந்து இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது அணுகப்படக்கூடாது. மாறாக, யதார்த்தமான, சமயோசிதமான, அறிவுபூர்வமான மனநிலையிலிருந்து இனப்பிரச்சினைக்கான தீர்வு அணுகப்பட வேண்டும்.
இன்று நீங்கள் விதை போடுங்கள்; நாளைய தலைமுறை, வளரும் கன்றுக்கு தண்ணீர் பாய்ச்சட்டும். அதற்கடுத்த தலைமுறை, வளரும் மரத்தைப் பாதுகாக்கட்டும். அப்படிச் செய்தால் அதற்கடுத்த தலைமுறை பழத்தை ருசிக்கலாம். இல்லை எனக்கு பழம் கிடைப்பதாக இருந்தால்தான் நான் எதையும் செய்வேன் என்று யோசித்தால், பூச்சியத்துக்குள் ஓர் இராச்சியத்தை கற்பனையில் கட்டி வாழ வேண்டியதுதான்.