;
Athirady Tamil News

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் (1883-1983) !! (கட்டுரை)

0

கறுப்பு ஜூலை இடம்பெறுவதற்கு சரியாக, ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கைத் தீவில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தே, இந்தக் கட்டுரை நோக்குகிறது. 1883ஆம் ஆண்டு, இலங்கையில் இரண்டு முக்கியமான சம்பவங்கள் நிகழ்ந்தன.

ஒன்று, கிழக்குக் கடற்கரையோரமும் இன்னொன்று மேற்குக் கடற்கரையை அண்டியும் அரங்கேறின. இவ்விரு நிகழ்வுகளும் 19ஆம் நூற்றாண்டின் இறுதி இரண்டு தசாப்தங்களில், இலங்கையின் முக்கியமான சமூக நெருக்கடிகள் குறித்த ஒரு சித்திரத்தைத் தருகின்றன.

1883ஆம் ஆண்டு மட்டக்களப்பில், மீனவச் சமூகத்துக்கும் கள்ளிறக்கும் சமூகத்துக்கும் இடையிலான முரண்பாடு, சாதிச் சண்டையாக முற்றி, கலவரமாக உருவெடுத்தது. இது குறித்த விரிவான குறிப்புகளை ஏ.சி டெப் எழுதிய ‘சிலோன் பொலிஸின் வரலாறு’ என்ற நூல் தருகிறது.

அக்குறிப்புகளின்படி, மட்டக்களப்பிலிருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில், மீனவ சாதியினருக்கும் கள் இறக்குபவர்களுக்கும் இடையில், சாதிப் பிரச்சினை கலவரமானது. தங்களது உயர்சாதிக்கு ஒப்பாக, சாதி ரீதியில் குறைந்தவராகக் கருதப்பட்ட கள்ளிறக்கும் சாதியினர் உடைகளை அணியத் தொடங்கியதை, மீனவ சாதியினரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இதனால் இரு தரப்புக்கும் இடையில் கைகலப்பாகத் தொடங்கி மோதல், கத்திச் சண்டையாகியது.

இத்தகவலை அறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து, பலரைக் கைது செய்தனர். இருந்தபோதும் மீனவ சமூகத்தினர் ஒன்று திரண்டு, கள்ளிறக்கும் சமூகத்தினரின் வீடுகளைத் தாக்கினர். வீடுகள் சூறையாடப்பட்டன; பல வீடுகள் எரிக்கப்பட்டன.

தங்களுடைய தகுதிக்கு ஒத்துப்போகவில்லை என்று உயர்சாதி அண்டை வீட்டுக்காரர்கள் கருதும் பாணியில், கள் இறக்குபவர்கள் உடை அணியத் தொடங்கியதை அடுத்து, கத்திகளுடன் கூடிய சண்டையாக தொடங்கியது. இதைத் தடுத்து நிறுத்திய பொலிஸார், பலரை கைது செய்தனர்.

பின்னர், மீனவர்கள் மீண்டும் திரண்டு வந்து, காவலில் இருந்த அவர்களைத் தாக்கியவர்களின் வீடுகளை தாக்கினர். அடுத்த நாளும், அவர்கள் ஒன்றுகூடி வீதிகளில் ஊர்வலம் நடத்தினர். ஆனால், எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை. இருப்பினும் துர்நடத்தை கொண்டவர்கள், வீடுகளை சூறையாடுவதற்கும் எரிப்பதற்கும் வாய்ப்பைப் பயன்படுத்தினர்.

கொலனியாதிக்க காலத்திலும் சாதிய ஆதிக்கம் மேலோங்கிய சமூகமாகவே இலங்கையும் குறிப்பாகத் தமிழ்ச் சமூகமும் இருந்தது என்பதை, இந்நிகழ்வு தெளிவாகக் காட்டுகின்றது. இனமுரண்பாடுகள் கூர்மையடைவதற்கு வெகுகாலத்துக்கு முன்பே, அகமுரண்பாடுகள் தீவிரமானதாகவே இலங்கையின் இனத்துவக் குழுக்கள் இருந்தன என்பதற்கான பல சான்றுகளில், மட்டக்களப்புக் கலவரம் ஓர் உதாரணம் மட்டுமே!

1870களின் இறுதிப் பகுதிகளில், பௌத்த மறுமலர்ச்சி என்பது கிறிஸ்தவத்தை எதிர்ப்பதை நோக்காகக் கொண்டும் ‘சுதேசி’கள் என்ற கருத்தாக்கத்தோடும் விருத்தி பெற்றது. கிறிஸ்தவ வீடுகளுக்கு பக்கத்தில் ‘பிரித்’ ஓதும் நிகழ்வுகளை, புத்தபிக்குகள் தொடர்ச்சியாகச் செய்து வந்தனர். இதற்கெதிராக, நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்ட போதும், அதை மதியாது ‘பிரித்’ ஓதும் நிகழ்வுகள் நடந்தன. இதன் மூலம், ‘பௌத்தர்களே தேசப்பற்றாளர்கள்’ என்ற ஓர் எண்ணக்கரு பரவலாக்கப்பட்டது.

1881ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களை எரிச்சலூட்டும் நடவடிக்கையாக, பௌத்த ஊர்வலங்கள் தொடர்ச்சியாக ஒழுங்கு செய்யப்பட்டன. இது குறித்துப் புகார்கள் அளிக்கப்பட்ட போதும், கொலனி நிர்வாகம் பௌத்தர்களைப் பகைத்துக் கொள்ள விரும்பாமையால், நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை.

இது ஒருபுறம், பௌத்தர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. மறுபுறம், நிர்வாகத்தின் பாராமுகம் காரணமாக எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்ற முடிவை கிறிஸ்தவர்கள் எடுத்தார்கள்.

கொச்சிக்கடையில் (கொட்டாஞ்சே​னை) புனித லூசியா தேவாலயம் 1779இல் கட்டப்பட்டது. இதற்கு மிக அண்மையிலேயே, பௌத்த விகாரை 1832இல் உருவாக்கப்பட்டது. இரண்டும் ஒன்றுக்கொன்று போட்டியாகச் செயற்பட ஆரம்பித்தன.

1843இல் ‘மிகெட்டுவத்த உன்னான்சே’ என்று அழைக்கப்பட்ட மொஹொட்டிவத்தே குணானந்தா தேரர் இதன் விகாராதிபதியானார். இவர், மக்களைக் கவரும் பேச்சாளராகவும் மதக்குரோதத்தை கக்குவதன் மூலம் வெறுப்புணர்வைத் தூண்டுபவராகவும் இருந்தார். இதனால் ‘பௌத்த மதத்தின் காவலன்’ போல தன்னைக் காட்டிக்கொண்டார்.

கொச்சிக்கடைக் கலவரத்தை அடுத்து, இது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணைக்குழு சமர்பித்த அறிக்கையில், இவர் குறித்த ஒரு தகவல் முக்கியமானது.
இவர், அமரபுர நிக்காயாவைச் சேர்ந்தவர். அமரபுர நிக்காய 1803ஆம் ஆண்டே உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்கத்துக்கும் சிங்கள சாதியமைப்புக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இது குறித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் நோக்கலாம்.

குணானந்தா தேரர், பௌத்த துறவியாகி பின்னர் காவியுடையைக் களைந்தவர். சாதாரண மனிதனாக வாழ்ந்துவிட்டு, பின்னர் மீண்டும் துறவறம் பூண்டவர். இதனால், இவர் தனக்கான அங்கிகாரத்துக்காக அதிதீவிர நிலைப்பாடுகளை எடுத்தார். விவாதங்களில் இவரது கீழ்த்தரமான மொழிப் பிரயோகங்களை, பிற மதத்தினர் மட்டுமன்றி இவரோடு நின்ற சகாக்களே கண்டித்துள்ளனர். ஆனால், இவருக்கு மக்களின் ஆதரவு இருந்தது.

விகாராதிபதியான உடனேயே தனது செல்வாக்கை விரிவுபடுத்த, குறித்த விகாரையைப் விரிவுபடுத்தி, புனித லூசியா தேவாலயத்தை விடப் பெரியதாகவும் பிரம்மாண்டமானதாகவும் உருவாக்க விளைந்தார். பௌத்த தத்துவங்களை விட, பெரிய விகாரைகளை அமைப்பதும் விகாரைகளுக்கான காணிகளை வாங்குவதும் என இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சி என்பது, புத்தரது போதனைகளுக்கு அன்றி, லௌகீய விடயங்களை முக்கியப்படுத்தியது. இதனாலேயே, இலங்கையின் பௌத்த மறுமலர்ச்சியை ‘புரட்டஸ்தாந்துப் பௌத்தம்’ என்று பேராசிரியர் கணநாத் ஒபயசேகர குறிப்பிடுகிறார்.

தனது விகாரையைப் புதுப்பித்த குணானந்தா தேரர், அதை ஒரு திருவிழாவாக நடத்தத் திட்டமிட்டார். அதன்படி, ஏழு வாரங்கள் நீடிக்கும் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டன. ஒவ்வொரு நாளும் ‘பிரித்’ ஓதுவது, 500 பிக்குகளை ஊர்வலமாக அழைத்து வருவது எனப் பல நிகழ்வுகள் இதில் அடங்கின.

இதன் இறுதிநாளாக மார்ச் 31ஆம் திகதி மிகப்பெரிய பெரகரவுடன் நிறைவு செய்வது என்று முடிவாக, இதற்கான அனுமதியை கொலனிய நிர்வாகத்திடம் ஜனவரி மாதம் கோரப்பட்டது.

பெப்ரவரி மாதம் நகரில் சின்னம்மை வேகமாகப் பரவுவதாக பிரதம மருத்துவ அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து நிகழ்வுகள் எதையும் நடத்த வேண்டாம் என அரசாங்கம் விகாராதிபதியிடம் சொல்லியது. குணானந்தா தேரர், மார்ச் 31 வரை எதுவித நிகழ்வுகளையும் நடத்துவதில்லை என பிரித்தானிய நிர்வாகத்திடம் உறுதியளித்தார்.

நகரில் சின்னம்மை பரவவில்லை. இது பௌத்தத்துக்கு எதிரான கிறிஸ்தவர்களின் திட்டமிட்ட சதி என்ற கட்டுக்கதையை மக்களிடம் பரப்பினார். திருவிழாவுக்கான பணிகளைத் தொடர்ந்து செய்யுமாறு தனது ஆதரவாளர்களிடம் கேட்டுக் கொண்டார். விகாரைக்கான அன்பளிப்புகளையும் பெரகரவுக்கான பொருட்களையும் பக்தர்கள் தர வேண்டும் என்ற அவரது வேண்டுகோள் துண்டுப்பிரசுரங்கள், கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் விநியோகிக்கப்பட்டன.

ஆனால், இத்துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதற்கான அனுமதி பெறப்படாத நிலையிலேயே இவை நடந்தன. பெப்ரவரி மாத நடுப்பகுதி முதல், விகாரைக்குத் தினமும் பொருட்களைக் கொண்டு வரத் தொடங்கினார்கள். இந்நிகழ்வுகள், பௌத்தம் அரசுக்கும் அரசாங்கத்துக்கும் அப்பாற்பட்டதாக, உயர்வானதாக, நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மேலானதாக தன்னைக் கட்டமைத்துக் கொண்ட வரலாற்றின் பகுதியாக நோக்கப்பட வேண்டும்.

தினமும் தேவாலயத்தைத் தாண்டி, பெருந்தொனியில் ‘பிரித்’ ஓதியபடியும் வாத்தியங்கள் முழங்கியபடியும் ஊர்வலங்கள் சென்றன; கிறிஸ்தவர்களை எரிச்சலடைய வைத்தன. இவை தங்களது புனித பாஸ்கு காலத்திலும் நடக்குமோ என்று அவர்கள் கவலை அடைந்தனர். குணானந்தா தேரர், கிறிஸ்தவர்களின் புனித பாஸ்கு தினங்களில் மிகப்பெரிய ஊர்வலங்களைத் திட்டமிட்டார்.

மார்ச் மாதம் ஆறாம் திகதி, புனித லூசியா தேவாலயத்த்தின் மதகுருக்களில் ஒருவரான அருட்தந்தை மாசிலாமணி அடிகளார், பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பினார். ஆண்டுதோறும் தாங்கள் குருத்தோலை ஞாயிறு, பெரிய வெள்ளி, ஈஸ்டர் தினங்களில் ஊர்வலம் செல்வது வழக்கம். இம்முறை பௌத்தர்களும் அதே நாள்களில் ஊர்வலங்களைத் திட்டமிடுவதால், மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டார்.
முதலில் அனுமதி கோருபவர்களுக்கு அனுமதியும் பாதுகாப்பும் வழங்கப்படும் என பதில் அனுப்பப்பட்டது.

மறுநாள், அருட்தந்தை மாசிலாமணி அடிகளார், ஊர்வலத்துக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தார். இக்காலப்பகுதியில், கொச்சிக்கடைப் பகுதியில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையோர் தமிழர்களாக இருந்தனர்.

கொச்சிக்கடையில் மத முரண்பாடு பிரதானமானதாக இருந்தபோதும், இதற்கு ஓர் இனத்துவ அடையாளம் பின்புலத்தில் இருந்தது. இது சிங்கள-பௌத்த எதிர் தமிழ்-கிறிஸ்தவர் என்ற பரிமாணத்தையும் கொண்டிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.