புற்றுநோய் கட்டிகளுக்குள் மர்மமாக வாழும் நுண்ணுயிரிகள்- சிகிச்சையில் உதவுமா? (கட்டுரை)
நமது உடலில் ஏற்படும் கட்டிகள் மற்றும் அவற்றைச் சுற்றிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் நுண்ணுயிரிகளான பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளைப் புரிந்துகொள்வது, புற்றுநோய் எவ்வாறு உருவாகிறது என்பது மட்டுமல்லாமல் அதற்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்பதைப் புரிந்துகொள்வதற்கும் உதவியாக இருக்கலாம்.
நாம் வாழும் போது, நமது உடலில் ஏராளமான பிற நுண்ணுயிர்களும் வாழ்ந்துவருகின்றன. உடல் உறுப்புக்களான குடல் , வாய், மூக்கு மற்றும் தோல் ஆகியவை பல்வேறு வகையான நுண்ணுயிரிகளின் வாழ்விடங்களாக உள்ளன. அவை நம் ஆரோக்கியத்திற்கு நல்லதும் செய்கின்றன, கெட்டதும் செய்கின்றன. ஆனால் அண்மைய ஆண்டுகளில், நமது உடலில் ஏற்படும் கட்டிகளுக்குள்ளும், அவற்றைச் சுற்றிலும் நுண்ணுயிரிகள் வாழ்ந்து வரும் ஆச்சரியமளிக்கும் உண்மையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒருவரின் உடலில் உள்ள சொந்த உயிரணுக்களின் கூட்டம் ஒன்று முறையான செயல்பாடுகளைக் கடந்து தவறான செயல்களில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் கட்டுப்பாடின்றி வளர்வது தான் புற்று நோய் என பொதுவாக நாம் எண்ணுகிறோம்.
பல்வேறு வகையான உயிரணுக்கள் ஒன்று சேர்ந்து இது போல் செயல்படும் போது, உடலில் உள்ள ஆரோக்கியமான பிற உயிரணுக்கள் மற்றும் திசுக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் அவற்றை மட்டும் கண்டறிந்து அழிப்பது மிகவும் கடினம் என்பதால் தான் புற்று நோய் சிகிச்சை மிகப்பெரும் சவாலாக உள்ளது.
ஆனால் இப்படி ஏற்படும் புற்று நோய் கட்டிகள் மற்ற உயிரினங்களான பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகளின் வாழ்விடமாகவும் இருக்கின்றன. இந்த கட்டிகளைச் சுற்றிலும் அல்லது அவற்றிற்குள் இருக்கும் கேன்சர் செல்களுக்குள்ளும் இந்த நுண்ணுயிர்கள் செழிப்பாக வாழ்கின்றன. இருப்பினும், அண்மைக் காலம் வரை, இந்த நுண்ணுயிரிகள் கட்டிகளில் வாழ்ந்து வருவது குறித்து தெளிவாக புரிந்து கொள்ளப்படவில்லை.
இப்போது விஞ்ஞானிகள் இந்த கட்டிகளுடன் தொடர்புடைய நுண்ணுயிரிகள் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடையும் போது உதவுகின்றனவா அல்லது எந்தக் காரணமும் இன்றி இந்த கட்டிகளுக்குள் அவை சிக்கிக்கொண்டனவா என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். இது குறித்து ஆய்வுகளில் கிடைக்கும் பதில்கள் புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பது, மற்றும் நோய் தடுப்பில் மிகப்பெரிய மாற்றங்களை அளிக்கும் என நம்பப்படுகிறது.
விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு புற்று நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும்
2017 ஆம் ஆண்டு இஸ்ரேலின் ரெஹோவோட்டில் உள்ள வெய்ஸ்மேன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸில் நடத்தப்பட்ட ஆய்வில், புற்றுநோய் உயிரியலாளர் ரவிட் ஸ்ட்ராஸ்மேன் மற்றும் அவரது குழுவினர் மனித கணைய புற்றுநோய்களுக்குள் வாழும் சில பாக்டீரியாக்கள் பொதுவான கீமோதெரபி மருந்தை செயலிழக்கச் செய்வதன் மூலம் கட்டிகளைப் பாதுகாக்க முடியும் என்பதைக் கண்டறிந்தனர்.
காமாப்ரோட்டியோ பாக்டீரியா எனப்படும் ஒரு குறிப்பிட்ட வகை பாக்டீரியா, ஜெம்சிடபைனை என்ற கீமோதெரபி மருந்தின் வீரியத்தை அழித்திருக்கலாம் என அவர்கள் கண்டுபிடித்தனர்.
சிறுநீர்ப்பை, மார்பகம் மற்றும் கணையத்தில் காணப்படும் புற்றுநோய்கள் உட்பட பல புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க இந்த ஜெம்சிடபைன் பயன்படுத்தப்படுகிறது. இதையடுத்து இதே பாக்டீரியாவை பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலிகளுக்கு ஆராய்ச்சி குழுவினர் செலுத்தினர்.
அதன் பின், எலிகளின் புற்றுநோயும் மருந்தினால் குணப்படுத்த முடியாத அளவுக்குச் சென்றது. இதையடுத்து, ஆண்டிபயாடிக் கொடுத்து அந்த பாக்டீரியாக்களை அழித்த பின் புற்றுநோய் மருந்த நன்றாக வேலை செய்யத் தொடங்கியது.
இந்த கண்டுபிடிப்புகளுக்குப் பின், 2019 ஆம் ஆண்டில் ஜப்பானில் உள்ள தோஹோகு பல்கலைக்கழகத்தின் குழுவால் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள், புற்றுநோய் முத்திய நிலை பாதிப்பில் உள்ள நோயாளிகள் மற்றும் கீமோதெரபி மருந்துடன் தனியாக சிகிச்சை பெற்ற நோயாளிகள் மற்றும் கீமோதெரபிக்கு கூடுதலாக ஒரு ஆண்டிபயாடிக் சிகிச்சையைப் பெற்றவர்களுக்கும் இந்த ஆண்டிபயாடிக் கொடுப்பது பயன் அளித்தது தெரியவந்தது.
ஏற்கனவே புற்றுநோய் கட்டிகளில் இருந்த பாக்டீரியாகக்களை அழிக்கும் மருந்துகளுடன் புற்று நோய் சிகிச்சையும் அளிக்கப்பட்ட போது, சிறந்த பலன்கள் கிடைத்ததை அவர்கள் கண்டறிந்தனர் . இருப்பினும் இந்த நோயாளிகளின் புற்றுநோய் திசுக்களில் உள்ள பாக்டீரியாக்களின் அளவை அவர்கள் ஆய்வு செய்யவில்லை. ஆனால், புற்றுநோய் சிகிச்சையில் பின்னடைவை ஏற்படுத்திய பாக்டீரியாக்களை ஆண்டிபயாடிக் மருந்துகள் குறைத்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் ஊகித்தனர்.
புற்றுநோய் கட்டிகளுக்குள் என்ன நடக்கிறது என்பது குறித்து ஒரு அற்புதமான தகவலை இந்த ஆய்வுகள் கொடுத்தன.
ஸ்ட்ராஸ்மேன் மற்றும் அவரது குழுவினர் இப்போது இந்த ஆய்வு முடிவுகளை, கணைய புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டு, முதலில் சிகிச்சை அளித்த போது அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்ற நிலையில் இருக்கும் நோயாளிகளிடம் பரிசோதிக்க முடிவெடுத்தனர். அவர்களுக்கு ஆண்டிபயாடிக் கொடுத்து, அதனால் நோயாளிகளின் நிலை மேம்படுகிறதா என்பதைக் கண்டறிய கீமோதெரபி மருந்தான ஜெம்சிடபைனுடன், காமாப்ரோட்டியோபாக்டீரியாவுக்கு எதிரான மருந்தையும் நோயாளிகளுக்கு வழங்கினர்.
ஆனால் புற்றுநோய் சிகிச்சையிலிருந்து அந்த கட்டிகளைப் பாதுகாப்பதைத் தாண்டி இந்த பாக்டீரியா வேறு விதமான வேலைகளையும் செய்துகொண்டிருந்திருக்கலாம் என மருத்துவர்கள் கருதினர்.
2020 ஆம் ஆண்டில், ஸ்ட்ராஸ்மேனின் குழு, மார்பகம், நுரையீரல், கருப்பை, கணையம், மெலனோமா, எலும்பு மற்றும் மூளை புற்று நோய் ஆகிய ஏழு வகையான புற்றுநோய்களில் 1,500 க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் மருத்துவர்கள் ஆய்வு நடத்தினர். இதில் அந்த புற்று நோய் கட்டிகளில் வாழ்ந்துகொண்டிருந்த பாக்டீரியாக்கள் நோயெதிர்ப்பு செல்களுக்குள்ளும், புற்று நோய் செல்களுக்குள்ளும் இருந்த பாக்டீரியாக்கள் ஒவ்வொரு கட்டியிலும் ஒவ்வொரு விதமாக- தனித்துவமாக இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
” இந்த பாக்டீரியாக்கள் ஒவ்வொன்றும் அவை வாழும் கட்டிகளுக்கு ஏற்ப தனித்துவமான பாக்டீரியாக்களாக உள்ளன,” என்கிறார் ஸ்ட்ராஸ்மேன். “நுரையீரல் புற்றுநோயில், புகைபிடிப்பவர்கள் நிகோடினை சிதைக்கக்கூடிய அதிக பாக்டீரியாக்களை எவ்வாறு கொண்டுள்ளனர் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். – இது புகை தொடர்பான வளர்சிதை மாற்றமாகும். எலும்பு புற்றுநோய்களில், ஹைட்ராக்ஸிப்ரோலின் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவைக் காண்கிறோம். இது எலும்புக் கட்டிகளில் செறிவூட்டப்பட்ட வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும் கட்டிகளாக உள்ளன.”
பல சந்தர்ப்பங்களில், புற்றுநோய் செல்களைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் இந்த பாக்டீரியாக்கள் பாதிக்கப்பட்டவருக்கு உதவுகிறதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
சில வகையான மார்பக புற்றுநோய்களில் காணப்படும் பாக்டீரியாக்கள், உதாரணமாக, மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் ஆர்செனேட்டை கட்டுப்படுத்தும் விதத்தில் உள்ளன. மற்ற பாக்டீரியாக்கள் மைக்கோதியோல் எனப்படும் வேதிப்பொருளை உற்பத்தி செய்து, டிஎன்ஏவை சேதப்படுத்தும் எதிர்வினை ஆக்ஸிஜன் மூலக்கூறுகளின் அளவைக் குறைக்க உதவுகின்றன.
இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், கட்டிகளில் வாழும் பாக்டீரியா உண்மையில் புற்றுநோய் பாதிப்பை அதிகமாக்கும் என்பதையே பெரும்பாலான சான்றுகள் உணர்த்துகின்றன.
“புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள் எவ்வாறு இருக்கலாம் என்பது குறித்த ஆய்வுக் கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன,” என்கிறார் ஸ்ட்ராஸ்மேன். புற்றுநோய் செல்களை குறிவைத்து அழிக்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் திறனையும் பாக்டீரியா மாற்றுகிறது என்றும் “ஆனால் புற்றுநோய் கட்டிகளுக்குள் வாழும் பாக்டீரியாக்கள் குறித்த ஆய்வுகளில் நாங்கள் உண்மையில் தொடக்கநிலையிலேயே இருக்கிறோம். இதில் இன்னும் ஆழமான ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன,” என்றும் அவர் கூறுகிறார்.
இது தொடர்பாக ஏற்கெனவே சில குறிப்புகள் உள்ளன.
உதாரணமாக சீனாவில் 2022ம் ஆண்டு விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சிகளில், மார்பக புற்று நோய் பாதிப்பின் போது அந்த கட்டிகளில் வாழும் பாக்டீரியாக்கள், உடலின் பிற பகுதிகளுக்கும் எளிதாக நோய் பரவும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன என தெரியவந்துள்ளது.
எலிகளுக்கு இது போன்ற பாதிப்பு ஏற்பட்ட போது புற்று நோய் செல்கள் ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பயணம் செய்ததை ஆராய்ச்சியாளர்கள் ஏற்கெனவே கண்டுபிடித்துள்ளனர்.
இது போல் ரத்த ஓட்டத்தில் கலந்துள்ள புற்று நோய் செல்கள், புற்று நோய் தொடங்கிய இடத்திலிருந்து இப்படி உடலின் பல இடங்களுக்கும் சென்று அங்கும் நோய் பாதிப்பை ஏற்டுத்தும் ஆபத்துக்கள் உள்ளன. இருப்பினும் இவ்வாறு ரத்த ஓட்டத்தில் பயணிக்கும் ஒரு சில கேன்சர் செல்கள் தாமாகவே உடைந்து கழிவுகளாக வெளியேறிவிடுகின்றன.
இந்த புற்று நோய் செல்கள் சில நேரங்களில் தாமாக அழிந்து போகாமல் தற்காத்துக்கொள்கின்றன. இந்த செல்களுக்குள் இருக்கும் சில அமைப்புக்களின் உதவியுடன் இந்த பாதுகாப்பு அவற்றிற்குக் கிடைக்கிறது. இது போன்ற புற்று நோய் செல்களுக்குள் இருந்த பாக்டீரியாக்களை எலிகளின் உடலில் இருந்து விஞ்ஞானிகள் அகற்றிய போது, தொடக்கநிலை புற்று நோய் மட்டும் அப்படியே இருந்தாலும் பிற பாகங்களில் புற்று நோய் ஏற்படும் ஆபத்து குறைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
“குடல், தோல் போன்ற குறிப்பிட்ட உறுப்புகளில் உள்ள புற்றுநோய் கட்டிகளுக்குள் வாழும் பாக்டீரியாக்கள் அந்த கட்டிகள் மேலும் வளர ஊக்குவிக்கலாம் என்ற அதே நேரம் அதற்கு எதிராகவும் செயல்படலாம்,” என்கிறார் சுவிச்சர்லாந்து நாட்டின் லாசன் நகரில் செயல்படும் ஸ்விஸ் இன்ஸ்டிட்யூட் ஃபார் எக்ஸ்பெரிமென்டல் கேன்சர் ரிசர்ச்சின் டக்லாஸ் ஹனாஹன். “இருப்பினும் இது போன்ற தெரிவுகளால் எதிர்பார்த்த அளவுக்கு பயன்கள் கிடைக்கவில்லை.”
மற்ற ஆய்வுகள், ஈறு நோயுடன் தொடர்புடைய வாய்வழி பாக்டீரியாவான ஃபுசோபாக்டீரியம் நியூக்ளியேட்டம், வேறுபல புற்றுநோய்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என தெரிவிக்கின்றன. இந்த பாக்டீரியாக்கள் வாயில் இருந்து ரத்த ஓட்டத்தின் மூலம் பெருங்குடல் புற்றுநோய் செல்லுக்கு இடம்பெயரலாம் என்று தெரிகிறது.
ஒவ்வொரு பாக்டீரியமும் அதன் மேற்பரப்பில் குறிப்பிட்ட துகள்களைக் கொண்டு செல்கிறது. இந்த துகள்கள், புற்றுநோய் செல்களின் மேற்பரப்புடன் பிணைக்கப்பட்டு, அங்கே குவியத் தொடங்குகின்றன.
ஒருபுறம், இந்த பாக்டீரியா, புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியையும் பரவலையும் துரிதப்படுத்துவதோடு, புற்றுநோய் செல்களைக் கொல்லும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் திறனையும் தடுக்கிறது. ஃபுசோபாக்டீரியம் நியூக்ளியேட்டத்தால் உற்பத்தி செய்யப்படும் ஒரு புரதம் மனித நோயெதிர்ப்பு செல்களான டி செல்களின் மேற்பரப்பில் உள்ள மூலக்கூறு கட்டுப்பாட்டு பொறிமுறையுடன் பிணைந்து, அவற்றின் நோயெதிர்ப்பு திறனை மட்டுப்படுத்துகிறது.
மேலும், இந்த பாக்டீரியாக்கள், புற்றுநோய் கட்டிகளின் மருந்து எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கின்றன. இதனால் அவற்றைக் குணப்படுத்துவது ஒரு சவாலான செயலாக மாறுகிறது.
இதுமட்டுமின்றி, ஃபுசோபாக்டீரியம் நியூக்ளியேட்டத்தின் டிஎன்ஏ, மார்பக புற்றுநோய் செல்களில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்ததில், உலகின் எந்த பாகத்தில் புற்று நோய் ஏற்பட்டாலும் அங்கெல்லாம் இவை பாதிப்பு ஏற்படுத்தும் தன்மையைப் பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. ஒரு ஆய்வின் போது இந்த பாக்டீரியம் எலிகளுக்கு கொடுக்கப்பட்டது. அது புற்றுநோய் மேலும் பரவக்காரணமாக மாறியதையும், பின்னர் ஆண்டிபயாடிக் மருந்துகள் அளிக்கப்பட்டபோது, அந்த நிலை பின்னோக்கித் திரும்பியதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது போன்ற காரணங்களின் அடிப்படையில் பார்த்தால், புற்று நோய் சிகிச்சையில் ஆண்டிபயாடிக் மருந்துகளையும் சேர்த்துக்கொள்ளலாம் என்ற ஆர்வம் அதிகரிக்கும். ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல. நமது உடலில் உள்ள பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் நமக்கு நன்மை பயப்பவைகளாக உள்ளன. இது போல் ஆண்டிபயாடிக் மருந்துகளைச் செலுத்துவதன் மூலம் அவற்றிற்கு ஆபத்து ஏற்பட்டு, நன்மையை விட தீமைகள் அதிகரிக்கும் நிலையும் ஏற்படும் என ஹனாஹன் தெரிவிக்கிறார்.
இதற்கு மாறாக, புற்றுநோய் கட்டிகளில் வாழும் பாக்டீரியாக்கள் குறித்து முழுமையாகப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். புற்றுநோய் கட்டிகளில் பல குழுக்களாக வாழும் பாக்டீரியாக்கள் அவற்றிற்குள் உதவிகளையும் பெற்றுக்கொள்கின்றன. இது போன்ற விஷயங்களில் மேலும் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
புற்றுநோய் கட்டிகளில் வாழும் பாக்டீரியாக்கள் குறித்து மேலும் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது
பெருங்குடல் புற்று நோய் சிகிச்சைக்குப் பயன்படும் 5-ஃப்ளோரூராசில் (5-fluorouracil — 5-FU) என்ற மருந்தை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளலாம். புற்றுநோயாளிகளுக்கு பெரும் தொல்லையாக இருக்கும் ஃபுசோபாக்டீரியம் நியூக்ளியேட்டம் என்ற பாக்டீரியாவை இந்த மருந்து அழிக்கும் என்றாலும், உடலில் சாதாரணமாகக் காணப்படும் எஸ்கெரிச்சியா கோலி (Escherichia coli) என்ற பாக்டீரியா இந்த மருந்தை செயலிழக்கச் செய்துவிடுகிறது.
அமெரிக்காவின் சியாட்டிலில் உள்ள பிரெட் ஹட்சின்சன் புற்றுநோய் மையத்தின் புற்றுநோய் நுண்ணுயிரியலாளர் சூசன் புல்மேன் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் 5-FU -ன் செயலற்ற தன்மையால், அது புற்று நோயைக் குணப்படுத்தாது என்றும், ஃபுசோபாக்டீரியம் நியூக்ளியேட்டத்தின் பெருக்கத்தையும் கட்டுபடுத்தாது என சோதனைக்கூடங்களில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் ஃபுசோபாக்டீரியம் நியூக்ளியேட்டத்தின் வளர்ச்சி அதிகமாகி நோயாளிக்கு பெரும் ஆபத்து ஏற்படும்.
இது போல் பாக்டீரியாக்களுடன் தொடர்புடைவையாக 33 வகையான புற்று நோய்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. டிஎன்ஏவைப் பரிசோதனை செய்வதற்காக சான் டீகோவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் நமக்குக் கிடைத்திருக்கும் நவீன தொழில்நுட்பங்களுக்குத் தான் நன்றி செலுத்தவேண்டும்.
இந்த தொழில்நுட்பங்களைக் கொண்டு புற்று நோயைக் கண்டறிவதிலும் பல்வேறு நன்மைகளை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். நோயாளியின் ரத்தத்தைப் பரிசோதிப்பதன் மூலம் குறிப்பிட்ட புற்றுநோய் கட்டியில் உள்ள டிஎன்ஏவை மட்டும் கண்காணிப்பதன் மூலம் இது போன்ற நன்மைகள் ஏற்படும்.
ஆராய்ச்சியாளர்கள் ரவிட் ஸ்ட்ராஸ்மேன் தலைமையில் 2022ல் மேற்கொண்ட ஒரு ஆய்வில் புற்று நோய் கட்டிகளில் மேலும் ஒரு நுண்ணுயிரான பூஞ்சைகளும் இருப்பது தெரியவந்துள்ளது. 35 வகையான புற்றுநோயாளின் உடலில் உள்ள கட்டிகளில் பூஞ்சைகள் இருப்பதை அந்த குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
“அதிக அளவு பாக்டீரியாக்களைக் கொண்டிருந்த புற்றுநோய் கட்டிகளில் அதிக அளவில் பூஞ்சைகளும் இருந்ததை நாங்கள் கண்டறிந்தோம். அதே போல் குறைந்த அளவில் பாக்டீரியாக்கள் இருந்த கட்டிகளில் குறைந்த அளவே பூஞ்சைகளும் இருந்தன, ” என்கிறார் ரவிட் ஸ்ட்ராஸ்மேன்.
“நாங்கள் சில கட்டிகளில் நுண்ணுயிரிகள் இருப்பது கட்டுப்படுத்தக்கூடிய தன்மை இருந்ததையும், சில கட்டிகளில் அவற்றை அனுமதிக்கக்கூடிய தன்மை இருந்ததையும் கண்டறிந்தோம்.” என்கிறார்.
பாக்டீரியாக்களைப் போலவே சில வகை பூஞ்சைகளும் புற்றுநோய் கட்டிகளுக்கு ஆதரவாக நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கக்கூடியவைகளாக இருந்தன.
மலாசீசியா குளோபோசா என்ற பூஞ்சை ஒருவகையான கணையப் புற்றுநோய் தீவிரமடைவதற்குக் காரணமாக இருந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தும் மார்பக புற்று நோயாளிகளின் உடலில் இருந்த கட்டிகளிலும் இதே வகையான பூஞ்சைகள் கண்டறியப்பட்டன.
கணைய புற்று நோய் கட்டிகளில் இருந்த சிலவகை பூஞ்சைகள் நோயெதிர்ப்பு செல்களை அழித்து, புற்று நோய் கட்டிகள் மேலும் உருவாவதை ஊக்குவிக்கும் செயல்களிலும் ஈடுபடுகின்றன.
2022ல் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில், கேண்டிடா பூஞ்சைகள் அதிகமாக காணப்படும் வயிற்றுப் புற்றுநோய் பாதிப்பின் போது கட்டிகளில் வீக்கம் அதிகரிப்பதை ஊக்குவிக்கும் வகையில் அவை செயல்பட்டது தெரியவந்துள்ளது. பெருங்குடல் புற்று நோயின் போது இதே நிலை ஏற்பட்டால் அது நோய் பரவுவதற்குக் காரணமாக அமைந்ததையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
இந்த பூஞ்சைகள் குடலின் வெளிப்புறத் தோல் பலவீனமடையும் போது அதிவேகமாக அதிகரிக்கின்றன என்று என்று கார்னெல் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியலாளர் இலியான் இலீவ் கூறுகிறார்.
இது போன்ற ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புக்களும் அவகமாக அதிகரித்துவரும் நிலையிலும், புற்று நோய் கட்டிகளுக்கும், அவற்றில் வாழும் நுண்ணுயிரிகளுக்கும் இடையே உள்ள உறவுகள் குறித்து இன்னும் நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவேண்டியிருக்கிறது.
முதலில் புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியில் நுண்ணுயிரிகள் பங்கு வகிக்கின்றனவா, அல்லது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இந்த கட்டிகளுக்கு அவை வந்தடைகின்றனவா, புற்றுநோயைக் குணப்படுத்துவதில் இந்த நுண்ணுயிரிகளை நாம் எந்த அளவுக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என ஏராளமான கேள்விகளுக்கு விடைகளைத் தேடவேண்டிய நிலை உள்ளது.
வரவிருக்கும் ஆண்டுகளில், புற்று நோய் கட்டியை அண்டி வாழும் நுண்ணுயிரிகளை குறிவைப்பது, புற்றுநோய் செல்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள உதவும். இது முன்கூட்டியே நோயை கண்டுபிடிப்பது, அதற்குப் பின் உடனடியாக சிகிச்சைகளைத் தொடர்வது உள்ளிட்ட விஷயங்களில் மருத்துவத் துறைக்கு பெரிய அளவில் உதவிகளை அளிக்கும். ஆனால், அதற்கான ஆரம்பப் பணிகள் இப்போது தான் தொடங்கியுள்ளன.