;
Athirady Tamil News

கால்களால் இசை மீட்டும் சப்திகா – பிறவிக் குறைபாட்டை வென்று சாதிக்க துடிக்கும் பெண்!! (கட்டுரை)

0

காதல் ஒருவரை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும் எனக் கேள்விப்பட்டிருப்போம். இது தன்னம்பிக்கைக்கும் பொருந்தும். பொருந்தும்.

ஒருவர் தன் மீது முழு நம்பிக்கையைக் கொண்டுவிட்டால், அவர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு மிகச் சிறந்த சான்றாக, கைகளே இல்லாமல் பிறந்தும்கூட கால் விரல்களால் இசையமைத்து ஆச்சர்யப்படுத்தும் சப்திகா விளங்குகிறார்.

இலங்கையைச் சேர்ந்த சப்திகாவுக்கு பிறக்கும்போதே இரண்டு கைகளும் இல்லை. இருந்தாலும் அவர் தனது கால் விரல்களால் இசை மீட்டுகிறார்.

“இந்தக் குழந்தையை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள், எங்காவது அனாதை இல்லத்தில் கொடுத்து விடுங்கள்” என்று, சப்திகா பிறந்தபோது, அவரது பெற்றோரிடம் சிலர் நேரடியாகவே கூறினார்கள்.

ஆனால், சப்திகாவின் பெற்றோர் சோர்ந்து போகவில்லை. தங்கள் குழந்தையை பேரன்புடன் அரவணைக்கத் தொடங்கினார்கள்.

தனக்கு கைகள் இல்லையென்பதை ஒரு குறையாகக் கருதாமல் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற தனது லட்சியத்தை நோக்கிப் பயணிக்கிறார் இந்த தன்னமிக்கை மிக்க பெண்

இலங்கையின் வடக்கு மாகாணம் வவுனியாவை சேர்ந்த சத்திய சீலன்- ஜூடி ஆகியோரின் மகள் சப்திகா. அவருக்குப் பிறக்கும்போதே இரண்டு கைகளும் இல்லை.

வலது காலில் மூன்று விரல்கள், இடது காலில் நான்கு விரல்கள் மட்டுமே உள்ளன. எனினும் இதை குறையாகக் கருதாமல் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற தனது லட்சியத்தை நோக்கிப் பயணிக்கிறார் இந்த தன்னமிக்கை மிக்க பெண்.

“உங்களால் அவளை வளர்க்க முடியாது என்று நிறைய பேர் கூறினார்கள். அப்போது கவலையாகத்தான் இருக்கும். மூத்த மகள் நடக்க ஆரம்பித்தபோது இவள் நடக்க முடியாமல் இருந்தாள். பின்னர் நான்கு வயதில் திடீரென நடக்க தொடங்கினாள்,” என்று கூறுகிறார் சப்திகாவின் தாய் ஜூடி.

சப்திகா இப்போது வளர்ந்து நிற்கிறார். அவருக்கு இப்போது இருபது வயதாகிறது. தனக்கு கைகள் இல்லை என்பதை குறையாக நினைத்து சப்திகா சுருண்டுவிடவில்லை. தனது கால்களை தனக்கான கைகளாகவும் அவர் பயன்படுத்திக் கொள்கின்றார்.

சப்திகா கால்களால் எழுதுகிறார், ஓவியம் வரைகிறார், கால்களால் தலை வாரிக் கொள்கிறார். கால்களைக் கொண்டு நீர் அருந்துகிறார், தன்னை ஒப்பனை செய்து கொள்கிறார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கால்களால் இசையமைக்கின்றார்.

“முதலில் கீபோர்ட் வாசிப்பதை விருப்பம் இல்லாமல்தான் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். ஆனால், தொலைக்காட்சிகளில் இசை நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது ‘நாமும் பாடுவோம் தானே, இசை அமைப்போம் தானே’ என அதன் மீது ஆர்வம் ஏற்படத் தொடங்கியது. அதன் பிறகுதான் இசையை மீண்டும் ஆர்வத்துடன் கற்கத் தொடங்கினேன்,” என்கிறார் சப்திகா.

சப்திகா குழுந்தையாக இருக்கும்போது, அவரது தாய் வழி தாத்தா மனோகரன், சப்திகாவுக்கு ‘ஓகன்’ இசைக்கருவியை கால்களால் இசைக்கக் கற்றுக் கொடுத்தார். எதேச்சையாக அதைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கியிருந்த மனொகரன, சப்திகா அதை வேகமாக கற்றுக்கொண்டது தன்னை ஆச்சரியப்படுத்தியதாகக் கூறுகிறார்.

சப்திகா குழுந்தையாக இருக்கும்போது, அவரது தாய் வழி தாத்தா மனோகரன், சப்திகாவுக்கு ‘ஓகன்’ இசைக்கருவியை கால்களால் இசைக்கக் கற்றுக் கொடுத்தார்

“எனக்கு 15 வயதில் இருந்தே இசைமீது ஆர்வம் உண்டு. சப்திகாவுக்கு கீபோர்ட் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று அவள் முன்பு வைத்தேன். கால் விரல்களைப் பிடித்து அவளுக்கு இசைக்க கற்றுக்கொடுத்தேன். இரண்டு, மூன்றுதான் அவளுக்கு வாசிக்க கற்றுக்கொடுத்தேன். அதற்குப் பின்பு, என் கைகளைத் தட்டிவிட்டு அவளே கால் விரல்களால் இசைக்கத் தொடங்கி விட்டாள்,” என்று மனோகரன் நம்மிடம் தெரிவித்தார்.

தற்போது சினிமாப் பாடல்கள், கிறிஸ்தவப் பாடல்களை இசைக் கருவியால் சப்திகா வாசிக்கின்றார், பாடுகின்றார். இவற்றுக்கு மேலாக சொந்தமாகவும் பாடல்களை உருவாக்கியுள்ளார். தானே வரிகள் எழுதி, பாடி, இசையமைத்த பல பாடல்கள் சப்திகாவிடம் உள்ளன.

சப்திகா இவ்வாறான ஆற்றல்களுடன் வளர்ந்து வருகின்றமைக்கு, அவருடைய குடும்பத்தின் ஆதரவும் நம்பிக்கையும் பேருதவியாக உள்ளன. சப்திகாவின் தந்தை சத்திய சீலன், தாய் ஜூடி, அக்கா ஜெனி, தங்கை சாம்ஷிகா, தாத்தா மனோகரன் ஆகியோர் சப்திகாவை எப்போதும் கண்களுக்குள் வைத்துப் பார்க்கின்றனர்.
கால் விரல்களால் இசையை மீட்டும் பெண்
படக்குறிப்பு,

சப்திகா கால்களால் எழுதுகிறார், ஓவியம் வரைகிறார், கால்களால் தலை வாரிக் கொள்கிறார், கால்களைக் கொண்டு நீர் அருந்துகிறார், தன்னை ஒப்பனை செய்து கொள்கிறார்

தான் ஓர் இசையமைப்பாளராக வேண்டும் என்பதும், தனது இசையால் தான் அறியப்பட வேண்டும் என்பதும் சப்திகாவின் கனவாக உள்ளது. அதற்காக அவர் உழைக்கின்றார்.

நண்பர்களுக்காக, அப்பாவுக்காக, தாய்நாட்டிற்காக, வாழ்க்கையே போராட்டமாக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்காக நான்கு பாடல்களை கம்போஸ் செய்து வைத்துள்ளதாக சப்திகா கூறுகிறார்.

“படித்துக் கொண்டு உனக்கு விருப்பமானவை அனைத்தையும் செய்” என்று, சப்திகாவுக்கு எப்போதும் உற்சாகமளிப்பவர் அவரது தந்தை சத்தியசீலன்.

இவர் வவுனியாவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றுகிறார். சப்திகாவுக்கு அவரின் தந்தை சிறகுகளாக இருக்கின்றார். அதனால் பல எல்லைகளைத் தாண்டி சப்திகாவால் பறக்க முடிகின்றது.

இதுகுறித்து சத்திய சீலன் நம்மிடம் பேசியபோது, “பல மருத்துவர்களிடம் சப்திகாவை கொண்டு சென்று காண்பித்தோம். அப்படி ஒருமுறை சென்றபோது ஒரு மருத்துவர், ‘இந்தப் பிள்ளை இயல்பாகவே எல்லாவற்றையும் செய்யத் தொடங்கும்.

அவளுடைய செயலை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு அதற்கு ஏற்ப முயற்சிகளைச் செய்தால் அவளை முன்னுக்குக் கொண்டு வந்துவிடலாம்’ என எனக்கு அறிவுறுத்தினார்,” என்றார்.

ஐந்து வயதிலேயே அவர் நன்றாக இசைக்கருவியை வாசிக்க தொடங்கிவிட்டதாகக் கூறும் சத்திய சீலன், ஆரம்பத்தில் அவர் குறித்து கவலை இருந்திருந்தாலும், தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

பாடசாலை படிப்பில் சிறந்து விளங்கிய சப்திகா, தனது இசையாற்றல், ஓவியத் திறமை போன்றவற்றுக்காகப் பல விருதுகளை வென்றுள்ளார்.

“இயல்பாக உள்ள மற்ற பிள்ளைகளைவிட என் பிள்ளை நிறைவாகவே இருக்கிறாள்,” என்கிறார் சப்திகாவின் தந்தை.

கால்களால் காற்றை வருடும் சப்திகா, சப்தங்களை ஆளுகின்ற ராணியாவார் என்கிற நம்பிக்கை, அவரிடமும் அவரது குடும்பத்தினரிடமும் நிறையவே உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.