ராஜராஜ சோழன்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தை துல்லியமாக அளவிட பயன்படுத்திய ‘உலகளந்தான் கோல்’!! (கட்டுரை)
500 ஆண்டுகளுக்கு முன்பாகவே வீர சோழபுரத்தில் மக்களின் கோரிக்கையை ஏற்று அப்போதைய அரசு வரிச்சலுகை வழங்கியதையும் நிலங்களை அளக்க பயன்படுத்திய நில அளவுகோல்கள் நீளத்தை மாற்றி அமைத்து அதை வரைபடமாக வெட்டி வைத்ததையும் பதிவு செய்துள்ளனர்.
தமிழ் நாட்டில் அரசாங்கம் என்பது அந்த காலம் முதல் இந்த காலம் வரை மக்களின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளது. தற்பொழுது வழங்கப்படும் இலவச திட்டங்கள், மானியங்கள், சலுகைகள் என பல்வகைப் பெயர்களில் வழங்கப்படும் திட்டங்கள் எல்லாவற்றிற்கும் முன்னோடியாக செயல்பட்டது சோழ அரசு. அவர்கள் பயன்படுத்திய நில அளவுகோல் மற்றும் நாயக்கர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அளவுகோல் உள்ளிட்ட விவரங்களை இந்த கட்டுரையில் காண்போம்.
நில அளவுகோல்கள் மற்றும் வரிச்சலுகைகள் குறித்த கல்வெட்டு பற்றி தெரிந்து கொள்வதற்காக கள்ளக்குறிச்சி அருகே உள்ள வீரசோழபுரம் கிராமத்தில் உள்ள நகரீஸ்வரமுடைய நாயனார் கோவிலுக்கு நேரடியாக சென்றோம். வேலைப்பாடுகள் நிறைந்த வீரசோழபுரம் நகரீஸ்வரமுடைய நாயனார் கோவிலின் உள்ளே செல்லும் பொழுது ஆங்காங்கே சிதிலமடைந்த சிலைகள் சிதறி கிடந்தன.
எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் ஆலயச் சுவர்கள் வெடிப்பு நிறைந்து காணப்பட்டன. சோழர்கள் காலத்தில் மிகப்பெரிய வணிக நகரமாகவும் பெரிய போர்க்களமாகவும் இருந்த இந்த வீர சோழபுரம் தற்பொழுது கேட்பாரற்று கிடக்கின்றது என்ற போதிலும் அவ்வப்பொழுது வரலாற்று ஆர்வலர்களும் தொல்லியல் துறை சார்ந்தவர்களும் வந்து பார்த்து செல்வதாக கூறுகின்றனர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ், சோழர்கள் கால நில அளவுகோல் குறித்து விரிவாக பிபிசியிடம் பேசினார்.
“இந்தியாவிலேயே சோழர்கள் ஆட்சி காலத்தில்தான் சோழ மண்டலத்தை பல வள நாடுகளாக பிரித்து நிலங்கள் முழுவதையும் 16 சாண் அளவுடைய கோலால் அளக்கப்பட்டது. இந்த கோல் உலகளந்தான் கோல் எனப்படும். ராஜராஜ சோழன் காலத்தில் இந்த கோலின் உதவி கொண்டு சேனாபதி ராஜராஜ மாராயன் என்பவரின் தலைமையிலான குழு கி.பி.1001- ல் தொடங்கி அடுத்த இரண்டு ஆண்டுகளில் நில அளவீட்டு பணியை முழுவதுமாக முடித்தது.
அப்போது நாட்டில் உள்ள அனைத்து வகை நிலங்களும் முழுமையாக அளக்கப்பட்டு அதனுடைய எல்லைகள், உரிமையாளர்களுடைய பெயர், விளை பொருட்களாகிய அனைத்து விபரங்களும் ஆவணப்படுத்தப்பட்டன. இதனால் ராஜராஜனுக்கு உலகளந்தான் என்ற பட்ட பெயரும் ஏற்பட்டது. மேலும் நிலப்பரப்பை கணக்கிட வேலி, குழி, சதுரச்சான், சதுரவிரல், சதுர நூல் போன்றவை அலகீடாக பயன்படுத்தப்பட்டது .
இதை தஞ்சை பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் மூலம் அறிய முடியும். இந்த கல்வெட்டின் படி 16 சாண் கோலால் 256 குழி மாவாக என்ற வாக்கியத்தில் இருந்து 16 சாண் நீளம் ஒரு கோலாக கணக்கிடப்பட்டுள்ளது. 256 சாண் ஒரு குழி என பெறப்படும். இது சோழர்கள் கால நில அளவை முறையாகும்” என்று கூறினார்.
நிலப்பரப்பை கணக்கிட வேலி, குழி, சதுரச்சான், சதுரவிரல், சதுர நூல் போன்றவை அலகீடாக பயன்படுத்தப்பட்டது .
நில அளவீட்டின் முன்னோடி ராஜராஜன்
மேலை நாடுகளில் நில அளவீடு செய்யும் பணி தொடங்குவதற்கு முன்பே மிக துல்லியமாக ராஜராஜ சோழன் அதை செய்துள்ளதாகவும் பேராசிரியர் ரமேஷ் கூறுகிறார்.
“இங்கு நாம் கூர்ந்து நோக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நிலத்தை அளந்து அதை பதிவு செய்த வழக்கம் மேலை நாடுகளில் தோன்றியது என்றும் கி.பி. 1085- ஆம் ஆண்டில் தான் நில அளவீடு செய்யப்பட்டதாகவும் கருத்து நிலவுகிறது. ஆனால் அதற்கு 85 ஆண்டுகளுக்கு முன்பே அதைவிட மிகத் துல்லியமான முறையில் ராஜராஜன் நில அளவைப் பணியை தெளிவாக செய்துள்ளார். இதை தமிழகத்தின் பல்வேறு கல்வெட்டுகள் மூலம் நாம் அறிய முடியும்.
மேலை நாடுகளில் 1620-வரை நிலப்பகுதிகளை கயிறுகள் பயன்படுத்தியே அளந்தனர். ஆனால் ராஜராஜன் காலத்தில் அளவீட்டுக்கு உலகளந்தான் கோல் பயன்படுத்தப்பட்டது. இந்த கோலை கொண்டு கணிதத்தின் உதவியோடு சோழ அதிகாரிகள் துல்லியமாக கணக்கிட்டு நிலத்தை அளந்தனர். இறையிலி நீளமாக இருந்த ஒரு நிலத்தின் பரப்பளவை தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டு ‘முக்காலே இரண்டு மக்காணி அரை காணிக்கு கீழ் அறையே மூன்று மாவின் கீழ் மூன்று மா அரைக்காணி முந்திரிகைக் கீழ் முக்காணிக் கீழ் முக்காலே ஒருமா’ என்று குறிப்பிட்டுள்ளது. இது ஒரு சதுர அங்குலத்தின் 50 ஆயிரத்தில் ஒரு பகுதி(1/50000Sqr inch) ஆகும்.
இந்த அளவு சிறிய பரப்பு கூட அளவிடப்பட்டு குறிக்கப்பட்டுள்ளது, ராஜராஜன் காலத்து நில அளவைத் தன்மையின் துல்லியத்திற்கு மிகப்பெரிய சான்றாகும். மேலும் உலகளந்தான் கோலின் நீளம் சுவர்களில் கோடுகளாக பொறிக்கப்பட்டு உள்ளது”என்று கூறினார்.
நிலங்களை அளப்பதற்கு பயன்பட்ட நில அளவுகோல் வரைந்து வைக்கப்பட்டுள்ள வீரசோழபுரம் கோவில் கல்வெட்டுகள் பற்றி கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் அருண்குமார் தெளிவாக எடுத்துரைத்தார்.
“தற்பொழுது சிறிய கிராமமாக நாம் பார்க்கின்ற இந்த வீரசோழபுரமானது அக்காலத்தில் மிகப்பெரிய வணிக நகரமாகும். எனவே தான் கல்வெட்டிலும் இது வீரசோழபுர பற்று என்று பொறித்து வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் ஏழு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கி.பி. 11-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ராஜாதி ராஜன் கல்வெட்டு சிறு பகுதி மட்டுமே உள்ளது இது முதலாம் ராஜராஜ சோழனின் மெய்கீர்த்தியாகும். பெரும்பான்மையான பகுதிகள் சிதைவடைந்துள்ளதால் செய்தியை முழுமையாக அறிய முடியவில்லை” என்று கூறினார்.
இந்த வீரசோழபுரம் கோவிலில் ஏழு கல்வெட்டுகள் உள்ளன. அதில் நான்கு கல்வெட்டுகள் அரசு நிர்வாகத்தை பற்றி தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
அர்த்தமண்ட வடக்கு சுவர் பகுதியில் கி.பி. 1474-இல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு , ‘வீரசோழபுரத்தில் இருந்த அதிகாரி பல ஆண்டுகளாக நாட்டவர்கள் கடைபிடித்து வந்த ஒப்பந்த வரிமுறைகள் அடிப்படையில் அல்லாமல் பலவந்தமாக அல்லது மொத்தமாக நிர்ணயிக்கப்பட்ட தொகையாக வரிகளைப் பெற்று வந்ததை அவரின் கல்வெட்டு மூலம் அறிந்து இதனால் இப்பகுதி மக்கள் துன்புறுகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு, பழைய வழக்கமான வரி வழிமுறையை மீண்டும் கை கொள்ளுமாறும், அதன்படி தற்போது சோடிக் காணிக்கை வரியாக பெறும் 200-பொன்னில் 100-கழித்து மீதம் 100- பொன் மட்டும் வரியாக பெறுமாறும் ஸ்ரீமந் கண்ட நாராயணன் ஆனந்த தாண்டவப் பெருமாள் தொண்டைமானார் உத்தரவிட்டுள்ளார்’ என்ற செய்தியை கூறுகிறது.
அதேபோல் அர்த்தமண்டப தெற்கு அதிஷ்டமான குமுதப்ப பட்டை கல்வெட்டில் இப்பகுதியில் வரி வசூலிக்கும் அதிகாரி எந்த காரணத்தினாலோ ஓடி போனதால் நந்தன வருஷ வருவாய்க்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்ட உத்தரவு, கல்வெட்டாக பொறித்து வைக்கப்பட்டுள்ளது.
18 அடி நில அளவுகோல் 20 அடிகோலாக மாறிய வரலாறு….
விவசாயத்தில் விளைச்சல் என்பது எல்லா காலமும் இருந்ததில்லை. அந்த காலத்திலும் விவசாயிகள் வறட்சியின் காரணமாக கடும் அவதிப்பட்டு உள்ளனர். அப்பொழுதெல்லாம் வரி கட்ட முடியாமல் அவதிப்பட்டதையும் இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன, என்ற போதிலும் அந்த மக்களை காக்க சலுகைகளும், மானியங்களும் வழங்கி நல்லாட்சியும் தந்துள்ளனர். அதை வீரசோழபுரம் கருவறை தெற்கு அதிஷ்டான கல்வெட்டின் மூலம் அறியலாம் என்று முனைவர்அருண்குமார் கூறுகிறார்.
தொடர்ந்துபேசிய அவர், “பெருவணிக நகரமான இந்த வீரசோழபுரம் பகுதியில் வறட்சி அதிகமானதால் மக்கள் அவதிப்பட்டனர் உடனடியாக ஊர் முக்கியஸ்தர்கள், மக்கள் நேரடியாக அரசரை சந்தித்து முறையீடு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் ஆய்வு செய்த அரசர் மகதை மண்டல வீரசோழபுரம் பற்றில் நில வரிகளை குறைக்கும் பொருட்டு அதுவரை வழக்கத்தில் இருந்த 18 அடி நில அளவுகோலை 20 அடி கோலாக மாற்றி நிலங்களை அளந்து வரி நிர்ணயம் செய்யவும், நெல் விலையை சோடி 250 பொன் என்பதிலிருந்து 150 பொன்னாக குறைத்துக் கொள்ளவும் உத்தரவிட்டு வரி செலுத்துமாறு கூறினார். அந்த அளவுகோல் மாதிரியும் 20 அடி நீளத்திற்கு வரைந்து வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
மீண்டும் மாற்றி அமைக்கப்பட்ட அளவுகோல்
இதேபோல் வடக்கு அதிஷ்டான குமுதப்பட்டையிலும் நில அளவுகோல் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அதன் அடி 24 அடியாக உள்ளது. சில வருடங்களில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக மக்கள் அரசரிடம் முறையிட்டதன் எதிரொலியாக மீண்டும் அளவுகோலை மாற்றி அமைத்துள்ளதையும் அதை படமாக கல்வெட்டில் பொறித்து வைத்துள்ளதையும் இங்கு நாம் காண முடிகிறது.
“இந்த தகவல்கள் அந்த காலத்தில் அரசுக்கும் மக்களுக்கும் இருந்த நேரடி தொடர்பையும் அரசின் வெளிப்படை தன்மையும் எளிதில் விளங்கிக் கொள்ள முடிகிறது . கடந்த காலங்களில் மன்னர்கள் ஆட்சி காலத்திலும் மக்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்பட்டதையும், நிலங்கள் அளவீடு செய்து கணக்கில் வைக்கப்பட்டதையும் இந்த கல்வெட்டுகள் தெளிவாக உணர்த்துகின்றன”என்று கூறினார்.
நில அளவுகோல்கள் தரும் தகவல்கள்…..
வீரசோழபுரம் நகரிஸ்வரமுடைய நாயனார் கோவிலில் அதிஷ்டான ஜகதியில் இரண்டு நில அளவுகோல்கள் குறித்த கல்வெட்டுக்கள் அதன் நேர் மேலே அதிஷ்டன குமுதத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த அளவுகோல்கள் மற்றும் கல்வெட்டுகள் வசுதேவ நாயக்கர், திம்மப்ப நாயக்கர் காலத்தில் ஏறக்குறைய கிபி 1440 ஆண்டு ஆட்சியாளர்கள் காலத்தில் வெட்டப்பட்டுள்ளது.
இந்த இரண்டு அளவுகோல்களையும் அளந்து பார்த்ததில் நில அளவுகோல்கள் முறையே 20 அடி (237 அங்குலம்) மற்றும் 24 அடி (286 அங்குலம்)நீளம் உள்ளன. மேற்கண்ட அளவுகோல்களையும் அதன் நீளங்களையும் அந்த தகவலையும் கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சி ராயபாளையம் ஸ்ரீ கச்சி பெருமாள் கோவிலில் உள்ள கி.பி.1447- ஆம் ஆண்டு கல்வெட்டு கூடுதல் தகவலையும் தருகின்றது.
மகதை மண்டல நாட்டவர்கள் ஒன்று திரண்டு அரசிடம் இப்பகுதி மக்கள் வரிச்சுமையால் துன்புறுவதை எடுத்துக் கூறி அதனைப் போக்க தற்போது உபயோகித்து வரும் 18 அடி நில அளவுகோலை 20 அடியாக மாற்றி அதன் அடிப்படையில் புதிய வரிகளை நிர்ணயித்துக் கொள்ள அனுமதி கேட்ட தகவலையும் அதற்கு அரசர் இசைந்து அவ்வாறே செய்து கொள்ளுமாறும் கூறியதை கச்சி ராயபாளையம் கச்சிபெருமாள் கோவில் குமுதப்பட்டையில் ஆணையாக உள்ளதை இன்றும் காணலாம்.
அதேபோல் கள்ளக்குறிச்சி அருகே கூகையூர் ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் கோவிலிலும் நில அளவுகோலும் அது குறித்த கல்வெட்டுகளும் தெளிவாக காணப்படுகிறது. அதை தற்பொழுதும் நாம் காண முடியும் என்று அருண்குமார் கூறினார்.
நில அளவீடு செய்ய பயன்படுத்தப்பட்ட செயின்கள்
சோழர்கள் காலத்தில் இத்தகைய நில அளவீடு முறைகள் இருந்த நிலையில் தற்போது எத்தகைய அளவீடு முறைகள் பின்பற்றப்படுகின்றன என்று கள்ளக்குறிச்சி மாவட்ட நில அளவை துறையின் உதவி இயக்குனர் நாகராஜனிடம் கேட்டோம்.
அதற்கு அவர், “தமிழ்நாட்டில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்பட்டது.
1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,
2. பிரிட்டிஷ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை
3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : சதுர மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்.
தற்போது எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் அளவீடு செய்யப்படுகிறது. லிங்க்ஸ் என்று சொல்லப்படக் கூடிய செயின் மூலமான அளவிற்கு பிறகு தற்பொழுது மெட்ரிக் அதாவது டேப் வைத்து நிலங்கள் அளவீடு செய்யப்படுகிறது . தற்பொழுது அதைத் தாண்டி ஜியோ மெட்ரிக் என்று சொல்லப்படக்கூடிய மிக துல்லிய அளவிடும் பயன்படுத்தப்படுகிறது” என தெரிவித்தார்.
அறிவியல் வளர்ச்சி அடைந்த இந்த காலத்தில் பல்வேறு அளவீடு முறைகள் பயன்பாட்டுக்கு வந்த போதிலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சோழர்கள் மிக துல்லியமான அளவீடு செய்ததையும் அதன் அளவீட்டு முறையையும் தஞ்சை பெரிய கோவிலில் பொறித்து வைத்துள்ளார்கள். இது சோழர்கால நில அளவீடுகளின் துல்லியமான தன்மைக்கு மிகப் பெரிய சான்றாகும்.