இந்தோனீசியாவை உலுக்கிய ‘பழிவாங்கும் ஆபாசப்பட’ வழக்கு: வரலாற்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!! (கட்டுரை)
இந்தோனீசியாவில் ஒரு சிறுமிக்குத் தெரியாமல் அவருடைய அந்தரங்க காட்சிகளைப் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியான ஆல்வி ஹுசைன் முல்லா இணையத்தைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த தண்டனை போதாது என, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் பிபிசியிடம் பேசிய போது தெரிவித்தனர்.
இது குறித்து பிபிசியிடம் பேசிய பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர், “இந்த தண்டனை, குற்றவாளிக்கு எதிராக ஒரு நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், பாதிக்கப்பட்டவரின் வேதனைக்குத் தகுந்த தண்டனையாக இல்லை,” என்றார்.
இந்தோனீசியாவின் பாண்டன் மாகாணத்தில் இந்த குற்றம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தெரியாமல் அவருடைய வீடியோவை குற்றவாளி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் பிபிசியிடம் பேசிய போது, இது தொடர்பாக புதிய புகார் ஒன்றை காவல் துறையிடம் அளிக்கப்போவதாகவும், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் அடிப்படையில் குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதில் கோரிக்கை விடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
மறுபுறம், நீதிமன்றத்தின் நடவடிக்கை இந்தோனீசியாவில் ஒரு புதிய வரலாறு படைத்திருப்பதாகத் தெரிவிக்கும் காவல் ஆணையர் அமினா டார்டி, இது ஒரு முக்கிய தீர்ப்பு என்றும், இதற்கு முன்பு மிக அரிதாகவே ஒரு குற்றவாளியின் சமுகவலைதளப் பகிர்வுகள் மீட்கப்பட்டு, அவற்றின் அடிப்படையில் வழக்குகள் நடந்துள்ளதாகவும் கூறுகிறார்.
இருப்பினும், இந்த வழக்கில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கும் சமூக வலைதளங்களே காரணமாக அமைந்துள்ளன. குற்றவாளிக்கு கடுமையான தண்டனை விதிக்கவேண்டும் என சமூக வலைதளங்களில் பலர் பெரிய அளவில் பிரச்சாரம் செய்த நிலையில், இது போன்ற ஒரு தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் கருத்துக்களை அரசு தரப்பு புறந்தள்ளியதாகவும், எட்டு மாதங்கள் வரை அவரது கருத்துக்களைக் கேட்பதில் கூட ஆர்வம் காட்டவில்லை என்றும் சிறுமியின் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் இந்த குற்றச் சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் ஒரு பதிவை இட்டு அதைப் பலருக்கும் பகிர்ந்த பின்னரே இது குறித்து சமூக வலைதளங்களில் பெரிய அளவில் விவாதங்கள் எழுந்தன. அதன் பின் தான் இந்தோனீசிய அரசு இந்த குற்றம் குறித்து கவனம் செலுத்தத் தொடங்கியது.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு கடந்த வியாழக் கிழமையன்று நீதிமன்றம் தண்டனை விதித்தது. அதற்கு முன்பாக கடந்த ஜுன் மாதம் 26-ம் தேதியன்று, பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் ட்விட்டரில் இந்த குற்றம் குறித்து பல பதிவுகளைப் பகிர்ந்தார்.
இந்த வழக்கு தொடங்கிய பின்னர் தான், பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் தனது அடையாளத்தை பொதுவெளியில் தெரிவித்தார்.
பிபிசியிடம் பேசிய அவர், “எனது சகோதரிக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து பொதுவெளியில் பேசுவது ஒன்றும் அவ்வளவு மகிழ்ச்சியான விஷயம் கிடையாது. இதை பொதுவெளியில் நான் பகிரங்கப்படுத்திய போது, எனது சகோதரி மன ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளானார்,” என்றார்.
இருப்பினும், தனது சகோதரிக்கு நியாயம் கிடைக்க இதைவிட வேறு வழிகள் தனக்குத் தெரியவில்லை என பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரரான இமான் ஜனதுல் ஹாரி தெரிவித்துள்ளார்.
“இந்த குற்றம் தொடர்பான செய்திகள் பொதுவெளியில் தெரிவிக்கப்படாமல் இருந்திருந்தால், குற்றவாளிக்கு இது போன்ற தண்டனையே கிடைத்திருக்காது. அதனால் தான் நாங்கள் இந்த செய்தியை வைரல் ஆக்கினோம்,” என அவர் கூறினார்.
தனது சகோதரி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது குறித்தும், அது தொடர்பான வீடியோவை ஒருவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தது குறித்தும் மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து போராடிய பின்னர் தான் அரசு கைது நடவடிக்கை மேற்கொண்டதாக இமான் தெரிவிக்கிறார்.
இந்த மூன்று ஆண்டு காலத்தில், அவருடைய சகோதரி கடும் மனவேதனைக்கு உள்ளானதாகவும் அவர் கூறுகிறார்.
2022 டிசம்பர் 14 அன்று, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அடையாளம் தெரியாத இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து வந்த பதிவு ஒன்றில், அவர் மயக்கமாக இருந்த போது பாலியல் தாக்குதலுக்கு உள்ளான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
தனது சகோதரி அழுதுகொண்டே தன்னிடம் அனைத்து விஷயங்களையும் தெரிவித்ததாகவும், அதன் பின்னரே காவல் துறையின் உதவியை நாடியதாகவும் இமான் கூறுகிறார்.
நீண்ட நாட்களுக்கு நடந்த விசாரணையின் இறுதியில், 2023 பிப்ரவரி 21 அன்று குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
இந்த விசாரணை நடந்த காலகட்டத்தில் தனது குடும்பத்துக்கு பெரிய அளவில் அழுத்தங்கள் தரப்பட்டதாகவும் இமான் கூறுகிறார்.
“எனது சகோதரியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று தாக்கினார்கள். எனது சகோதரியின் கழுத்தில் கத்தியை வைத்து, கொலை செய்துவிடுவதாக இந்த குற்றவாளி மிரட்டினார்,” என்றார் இமான்.
“அந்த வீடியோவைக் காட்டி, தன்னை காதலிக்குமாறு குற்றவாளி என் தங்கையை மிரட்டினார்,” என்றும் இமான் தெரிவித்தார்.
இமான் தன்னுடைய சகோதரிக்கு நேர்ந்த கொடுமையை மூன்று பாகங்களாகப் பிரித்து ட்விட்டரில் பதிவிட்டார். அந்த பதிவுகளை பல மில்லியன் பேர் பார்த்தனர்.
இந்த வழக்கில், குற்றவாளியான ஆல்வி ஹுசைன் முல்லா மீது பல பிரிவுகளில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. இவற்றின் அடிப்படையில் அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கமுடியும்.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் நடைபெற்ற முதல் விசாரணை குறித்து தனக்கோ, தனது வழக்கறிஞருக்கோ எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என இமான் கூறினார்.
இரண்டாம் நாள் விசாரணையின் போது, அவரது சகோதரியை சாட்சியாக விசாரிக்க அழைத்த போது தான் விசாரணை குறித்து தனக்குத் தெரியவந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த குற்றத்தை மன்னிக்கும் படி நீதிமன்றத்தில் தனது சகோதரிக்கு மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், வேறு பல சவால்களைக் கடந்து தான் வழக்கில் வெற்றி பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தனது தங்கை பாலியல் ரீதியாகத் தாக்கப்பட்டது குறித்த வீடியோவை மடிக்கணினியில் இருந்து எடுத்து நீதிமன்றத்தில் ஒரு சாட்சியாக வைக்கக் கூட அரசு தரப்பு வழக்கறிஞர் அனுமதிக்கவில்லை என்றார் இமான்.
இது மட்டுமின்றி, தனது சகோதரிக்காக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், தனது சகோதரியை பலமுறை மிரட்டியதாகவும், அவரை நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் கண்ணியத்துடன் கையாளவில்லை என்றும் இமான் கூறினார்.
ஆபாச வீடியோ எடுத்த குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளிக்கு நீதிமன்றம் தண்டனை விதித்த போதிலும், குற்றவாளி மீது பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுக்களை எழுப்பவில்லை.
தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தனது சகோதரி தொடர்ந்து கூறி வரும் நிலையில், அது குறித்து நீதிமன்றம் எந்த விசாரணையையும் மேற்கொள்ளாத நிலையில், அதற்காக தனியாக ஒரு புகார் அளிக்கப்போவதாக இமான் கூறினார்.
பாண்டலாங் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி தனது தீர்ப்பை வாசித்த போது, சட்டவிரோத- ஆட்சேபனைக்குரிய விஷயங்களை வேண்டுமென்றே இணையதளத்தில் குற்றவாளி வெளியிட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன், அடுத்த 8 ஆண்டுகளுக்கு அவர் இணையதளத்தைப் பயன்படுத்தத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கும், தீர்ப்பும், தண்டனையும் இந்தோனீசியாவில் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என நம்பப்படுகிறது. நாட்டிலேயே முதன்முறையாக ஒரு தனிநபரின் இணையதளப் பயன்பாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது.