;
Athirady Tamil News

பைபிள் கூறுவதைப் போல் ‘ஏவாள்’ தான் உலகில் தோன்றிய முதல் பெண்ணா? மருத்துவ விஞ்ஞானம் கூறுவது என்ன?!! (கட்டுரை)

0

பூமியில் தோன்றிய முதல் பெண் ஏவாள் தான் என்றும், அவர் ஆதாம் உடன் இணைந்து மனிதகுலத்தை உ ருவாக்கினார் எனவும் பைபிள் கூறுகிறது. ஆனால் பைபிளின் இந்தக் கூற்றுக்கு மாறாக, விஞ்ஞான ஆய்வுகளின் படி, தென்னாப்பிரிக்காவின் ஜிம்பாப்வே மற்றும் போஸ்ட்வானா பகுதிகளாக இன்று அழைக்கப்படும் இடங்களில் 150,000 முதல் 200,000 ஆண்டுகளுக்கு முன் ஏவாள் வாழ்ந்திருப்பார் என்று அறியப்படுகிறது.

அவர் மனிதகுல வரலாற்றில் முதல் பெண் அல்ல. அவரது சகாப்தத்தின் ஒரேயொரு பெண் கூட அல்ல. ஆனால், பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இதுவரை வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, அவரது காலத்திற்கு பிந்தைய ஒவ்வொரு தலைமுறை மனிதர்களிலும் அந்தப் பெண்ணுடைய மரபணுவின் (டிஎன்ஏ) ஒரு சிறு கூறு இருக்கத்தான் செய்கிறது.

பைபிளின் கூற்றுக்கு மாறான, அறிவியலின் இந்தக் கூற்றை புரிந்து கொள்ள மனித உடல் செல்களுக்குள் உள்ள செல்களின் ஆற்றல் சாலை என அழைக்கப்படும் ‘மைட்டோகாண்ட்ரியா’வை பற்றி அறிய வேண்டியது அவசியமாகிறது.

மனித உடலின் அனைத்துச் செல்களும் மைட்டோகாண்ட்ரியா என்ற கட்டமைப்பை கொண்டுள்ளன. “இதை செல்களின் ஆற்றல் உற்பத்தி சாலைகள்” என்று சுருக்கமாக வரையறுக்கிறார் ரியோ கிராண்டே டூ சுல் பெடரல் பல்கலைக்கழகத்தின் உயிரியலாளர் கேப்ரியேலா சைபிஸ்.

இதையே வேறுவிதமாக வரையறுக்க வேண்டுமானால், நம் உடல் இயக்கத்துக்குத் தேவையான பொதுவான ஆற்றலை அளிக்கும் ஏடிபி மூலக்கூறுகள் நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள சர்க்கரையில் இருந்து கிடைக்கின்றன. உணவில் உள்ள சர்க்கரை சத்தை ஏடிபி மூலக்கூறுகளாக மாற்றும் முக்கியமான பணியை மைட்டோகாண்ட்ரியாக்கள் மேற்கொள்கின்றன.

இந்த வகையில் உடலின் ஆற்றல் உற்பத்திக்கு பயன்படும் இவை தனித்துவமான அம்சங்களையும், தங்களின் சொந்த மரபணுக்களையும் (டிஎன்ஏ) கொண்டுள்ளன.

மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ

சுமார் 20 ஆயிரம் வெவ்வேறு மரபணுக்களால் ஆனதும், மனிதனின் குணாதிசயங்கள் மற்றும் நோய்களுக்கான காரணங்கள் பெரும்பாலானவற்றை தீர்மானிக்க கூடியதுமான மைட்டோகாண்ட்ரியா செல்களின் உட்கருவில் பொதிந்துள்ளது.

மைட்டோகாண்ட்ரியா பொதுவாக செல்களின் உட்புறம் இருக்கும் என்றாலும், ஒரு செல்லின் உட்கருவுக்கு வெளியே அது 37 மரபணுக்களை கொண்டுள்ளது. இதை விஞ்ஞானிகள் மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ அல்லது எம்டீடிஎன்ஏ என்று அழைக்கின்றனர்.

இந்த எம்டீடிஎன்ஏவை நம் தாய்மார்கள் இடமிருந்து நாம் மட்டுமே பெறுகிறோம். அதாவது கருவுறுதலின்போது பெண்ணின் கருமுட்டையும், ஆணின் விந்தணுவும் சேர்ந்து கருவுறுதல் நிகழும்போது, இரு உயிரணுக்களுக்கு இடையேயான இணைவு நிகழ்வில், ஆண் பாலணுவில் உள்ள மைட்டோகாண்ட்ரியா மறைந்துவிடும். எனவே, கரு எப்போதும் தாய்வழி மைட்டோகாண்ட்ரியாவின் மூலம் உருவாகிறது என்று மரபியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அவர்களின் இந்தக் கூற்று, எம்டீடிஎன்ஏ மூலம் துல்லியமாக இணைக்கப்பட்ட பல தலைமுறைகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெண்களால் மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு பரம்பரை இருப்பதை நிறுவ அனுமதிக்கிறது.

இவற்றுக்கு மேலாக, ஒவ்வொரு மகளுக்கும் ஒரு தாய் இருக்கிறார். ஆனால் எல்லா தாய்மார்களுக்கும் ஒரு மகள் இருப்பதில்லை. அதாவது ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை மட்டுமே இருந்தாலோ அல்லது அவர் சந்ததியை உருவாக்கவில்லை என்றாலோ, அவருடைய மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ எதிர்கால பேரக்குழந்தைகளுக்கு கடத்தப்படுவதில்லை.

எனவே, “மரபணுவின் அடிப்படையில் ஒரு தாயின் தாய்.. அவரது பாட்டி… அவரின் கொள்ளு பாட்டி யார் என்பதைக் கண்டறிய முடியும்” என்கிறார் பேராசிரியர் சைபிஸ்.

மைட்டோகாண்ட்ரியா பொதுவாக செல்களின் உட்புறம் இருக்கும்

மரபியல் பற்றிய அறிவு மற்றும் மரபணு வரிசைப்படுத்துதல், செயலாக்க தொழில்நுட்பங்களி்ல் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் எம்டீடிஎன்ஏவின் தோற்றத்தை புனரமைப்பது விஞ்ஞானிகளுக்கு சாத்தியமாகி உள்ளது.

டி கிளினிகாஸ் டி போர்டோ அலெக்ரே மருத்துவமனையின் மரபணு மருத்துவ ஆய்வகத்தைச் சேர்ந்த உயிரியலாளர் பிபியானா ஃபாம், நம் அனைவரின் மிகச் சமீபத்திய பொதுவான மூதாதையர் குறித்த முதல் தகவல் 1980களில் வெளியிடப்பட்டது என்று விளக்குகிறார்.

அவரது கூற்றுப்படி, இந்த ஆய்வுக் கட்டுரைகள் நமது மிக சமீபத்திய பொதுவான மூதாதையரின் காலத்தை குறிப்பிட தொடங்கின. அத்துடன் “மைட்டோகாண்ட்டிரியல் ஏவாள்” என்ற வார்த்தையும் இந்தக் கட்டுரையில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது. ஏவாளை பற்றிய மருத்துவ விஞ்ஞானத்தின் பார்வை என்ற பொருள்படும்படி குறிப்பிடப்பட்டுள்ள இந்த வார்த்தை, பைபிளில் ஏவாள் குறித்து கூறப்பட்டுள்ளதற்கு மாறான அர்த்தத்தை கொண்டுள்ளது.

மைட்டோகாண்ட்ரியல் ஏவாள் என்ற கருத்தாக்கத்தில் நிபுணர்களிடையே ஒருமித்த கருத்து இருந்தாலும், அவர் வாழ்ந்த காலம் எது என்பது இன்னும் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. மிகவும் நம்பகமான ஆய்வு கணிப்புகள், அவர் வாழ்ந்த காலம் குறித்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வேறுபாட்டை அளிக்கிறது.

விஞ்ஞானிகளின் விமர்சனம்

இத்தகைய சூழலில் ஏவாள் (ஈவ்) என்ற வார்த்தையை விஞ்ஞானபூர்வமாக பயன்படுத்துவதை ஆராய்ச்சியாளர்கள் சிலர் விமர்சிக்கின்றனர். இது ஏவாள் குறித்த விஞ்ஞான கருத்துக்கள் மற்றும் பைபிளில் அவர் குறித்து கூறப்பட்டுள்ளதற்கு இடையே ஓர் முரண்பாடான புரிதலை ஏற்படுத்துகிறது என்கின்றனர் அவர்கள்.

ஆனால், அறிவியலுடன் தொடர்பு படுத்தப்படும் ‘மைட்டோகாண்ட்ரியல் ஈவ்’ என்ற சொல், முற்றிலும் விஞ்ஞான சான்றுகளை அடிப்படையாகக் கொண்டது. இதற்கும், பைபிளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அத்துடன் இந்த வார்த்தை பிரயோகம் ஓர் ‘கவிதையின் உரிமத்தை’ போன்றது என்கிறார் சாவோ பாலோ பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த மரபியல் நிபுணரான தபிதா ஹுனெமியர்.

இதை மெய்பிக்க, உலகெங்கும் உள்ள பல்வேறு நபர்களின் எம்டீடிஎன்ஏவை வரிசைப்படுத்தி, இவற்றில் காணப்படும் தகவல்கள் மற்றும் பிறழ்வுகளை கணினிகளின் உதவியுடன் ஆய்வாளர்கள் ஒப்பிட்டனர். அதன் மூலம், இந்த மரபணு மாற்றங்கள் தலைமுறை தலைமுறையாக நிகழ்வதற்கு எவ்வளவு காலமாகும் என்பதை மதிப்பிடவும் அவர்கள் அறிந்து கொண்டனர்.

“இந்த மதிப்பீடுகளின் வாயிலாக, எம்டீடிஎன்ஏவில் கவனிக்கத்தக்க பிறழ்வுகள் ஏற்பட எவ்வளவு காலம் எடுத்தது என்பதை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது என்கிறார்” ஃபாம்.

மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ வரிசைமுறை மற்றும் கண்டறியப்பட்ட பிறழ்வுகளை ஒப்பிடுவதன் மூலம், விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் மனிதகுலத்தின் பாதையை மீட்டெடுக்க முடியும்.

மரபணு பிறழ்வு

இதிலிருந்து விஞ்ஞானத்தின் மதிப்பீட்டின்படி மைட்டோகாண்ட்ரியல் ஈவ் 150,000 முதல் 200,000 ஆண்டுகளுக்கு முன் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்திருப்பார் என்று அறிவியல் அறிஞர்களால் கணக்கிட முடிந்தது.

இந்த எம்டீடிஎன்ஏவை கொண்டுள்ள நபர்கள் எல் (L) மற்றும் எல் 0 (L0) என்று வகைப்படுத்தப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. அப்போதிலிருந்து அடுத்தடுத்த தலைமுறைகளில் எம்டீடிஎன்ஏ படிப்படியாக மாற்றமடைந்தது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

உதாரணமாக, ஆப்பிரிக்காவின் பிற பகுதிகளில் இந்த மரபணு மாற்றத்திற்கு உட்பட்டவர்கள் L1, L2, L3… என்ற அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பிற கண்டங்களுக்கு இடம்பெயர்ந்த நம் முன்னோர்களின் எம்டீடிஎன்ஏவில் அதிக பிறழ்வுகள் தோன்றின. மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் H,V மற்றும் R வகை மரபணு பிறழ்வுகள் பிற வகைகளுடன் ஆதிக்கம் செலுத்துகின்றன.

எனவே, மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ பற்றிய ஆய்வுகள், மனித இனம் எங்கிருந்து வந்தது என்பதில் இருந்து மர்மத்தை அவிழ்க்க உதவுகின்றன. அத்துடன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகெங்கும் உள்ள நமது முன்னோர்களின் ( அல்லது பெண் மூதாதையர்களின்) பாதையை மறுகட்டமைக்க அனுமதிக்கின்றன.

அதாவது, “மனிதனுக்கு இருந்த ஒரு பொதுவான மூதாதையரின் எம்டீடிஎன்ஏவில் இருந்து, இன்று இருக்கும் மற்ற அனைத்து எம்டீடிஎன்ஏக்களும் பெறப்பட்டுள்ளன” என்று சுருக்கமாக கூறுகிறார் மரபியல் அறிஞரான ஹுனெமியர்.

“நாங்கள் எல்லோரிடமும் ஒரே மாதிரியான எம்டீடிஎன்ஏவை பற்றி பேசவில்லை. ஆனால் காலப்போக்கில் இதில் ஏற்பட்ட பிறழ்வுகளின் தொகுப்புகளை ஒருங்கிணைக்கும் பரம்பரைகளைப் பற்றி பேசுகிறோம்” என்றும் அவர் கூறுகிறார்.

மைட்டோகாண்ட்ரியல் ஈவ் எனும் அறிவியல் கூற்றின் அடிப்படையில் ஏவாள் என்பவர், இந்த உலகின் முதல் பெண் அல்ல. அவருக்கு முன் பல தலைமுறைகள், அதாவது அவருடைய தாய், பாட்டி, கொள்ளுப்பாட்டி என இருந்துள்ளனர். அத்துடன் பிற இனங்களைச் சேர்ந்த மூதாதையர்களின் ( (ஹோமோசேபியன்ஸ்) பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியின் மூலம் மனித பேரினம் பரிணமித்தது என்பது மரபியல் அறிஞர்களின் கருத்தாக உள்ளது.

“சில நேரம் இந்த தலைகீழ் கணக்கீட்டை நாம் தொடர்ந்து மேற்கொண்டால், ஹோமோசேபியன்ஸ் எனப்படும் மனித இனங்கள் அல்லாத வேறு சில இனங்களின் மிக சமீபத்திய பொதுவான மூதாதையர்களை பெறுவோம்” என்று சைபிஸ் கூறுகிறார்.

சைபிசின் இந்த விளக்கத்தின்படி, விஞ்ஞான ஆய்வுகளின்படியிலான ஏவாள் ஒருவர் மட்டும் அவரது காலத்தில் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை. அவர் வாழ்ந்த இடத்திலேயே வேறு பெண்களும் வாழ்ந்திருக்கலாம்.

இருப்பினும் இந்த கணக்கீடுகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளை உள்ளடக்கி இருப்பதால், இதுதொடர்பாக இதுநாள்வரை வெளியிடப்பட்டுள்ள கணிப்புகள் மற்றும் மதிப்பீடுகளில் கணிசமான அளவு நிச்சயமற்ற தன்மை இருக்கிறது என்று நம்புகிறார் சைபிஸ்.

ஆனால், “ஏவாள் குறித்த விஞ்ஞானரீதியாக தங்களிடம் உள்ள தகவல்கள் சிறப்பான மதிப்பீடுகள்” என்றும் அவர் கூறுகிறார்.

மேலும், “ மனிதர்களின் இடப்பெயர்வு மற்றும் மக்கள் தொகை செயல்முறைகள் மிகவும் சிக்கலானவை என்பதையும் நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்பதையும் அவர் ஒப்புக் கொள்கிறார்.

இருப்பினும், “மரபணு பகுப்பாய்வு, செல் மூலக்கூறு அமைப்புகள் உள்ளிட்டவை சிறப்பாக மதிப்பிடுவதை நவீன விஞ்ஞான முன்னேற்றங்கள் சாத்தியமாக்கி உள்ளன. அதனுடன் ஏவாள் குறித்த அறிவியல்ரீதியான தேடலில் நாங்கள் தொடர்ந்து சிறப்பாகவும், நேர்த்தியாகவும் செயல்படுவோம்” என்கிறார் உயிரியலாளர் பிபியானா ஃபாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.