நெல்சன் மண்டேலா: உலகமே கொண்டாடிய தலைவரின் காதலை இந்திய வம்சாவளி பெண் ஏற்க மறுத்தது ஏன்? (கட்டுரை)
நெல்சன் மண்டேலா ஒருமுறை நகைச்சுவையாக இவ்வாறு தெரிவித்தார்: “பெண்கள் என் மீது பார்வையைச் செலுத்துகிறார்கள் என்றால், அது எனது தவறு அல்ல. உண்மையைச் சொல்வதென்றால், நான் எப்போதும் அதை எதிர்க்க மாட்டேன்.”
மூன்று முறை திருமணம் செய்துகொண்ட நெல்சன் மண்டேலா, உலகம் முழுவதும் பெண்களால் அதிகம் விரும்பப்பட்ட நபராக இருந்தார். வயது முதிர்ந்த காலத்திலும் கூட அவரால் பெண்களைக் கவர முடிந்தது.
ஆனால், மண்டேலாவின் காதலை ஏற்காத ஒரு பெண் இருந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் அமினா கச்சாலியா.
மண்டேலாவின் காதலை ஏன் இந்தப் பெண் நிராகரித்தார்?
தென்னாப்பிரிக்காவில், அந்நாட்டு அரசின் இனவெறிக்கு எதிரான இயக்கத்தில் அமினா பல்வேறு பங்களிப்புக்களை அளித்திருந்தார். அவருக்கு அப்போது 21 வயது தான் ஆகியிருந்தது. ஒருமுறை அவரது பிறந்த நாள் விழாவுக்கு நெல்சன் மண்டேலா வந்திருந்தார். இதே போல் நெல்சன் மண்டேலா போல்ஸ்மூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அவருக்கு ஆறுதல் கூறும் விதமாக அமினா அந்த சிறைக்குச் சென்று அவரைப் பார்த்துவிட்டுத் திரும்பினார்.
பின்னர் யூசுஃப் கச்சாலியா என்பவரை அமினா திருமணம் செய்துகொண்டார். அப்போது தான் மண்டேலா தனது இரண்டாவது மனைவியான வின்னியிடம் இருந்து விவாகரத்து பெறும் முயற்சியைத் தொடங்கியிருந்தார்.
நெல்சன் மண்டேலாவுடன் இணைந்து நிறவெறிக்கு எதிரான போராட்டங்களில் அமினா கச்சாலியா பங்கேற்றார்
“மண்டேலாவும் எங்களது பெற்றோர்களும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர் என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து சென்றார். என்னுடைய அம்மாவை மண்டேலா திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும், அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் 90களில் என்னிடமும், எனது சகோதரியிடமும் என் அம்மா சொல்லியிருக்கிறார்,” என அமினாவின் மகன் கலெப் கச்சாலியா தெரிவித்தார்.
அப்போது நெல்சன் மண்டேலாவின் வயது 80, அமினாவின் வயது 68.
மண்டேலாவைத் திருமணம் செய்துகொள்ள அமினா ஏன் மறுத்துவிட்டார் என கலெப்பிடம் நான் கேட்டேன்.
“அவர் மீது என் அம்மாவுக்கு உண்மையில் ஆழமான அன்பு இருந்தது. அதே நேரம் எனது அப்பாவின் நினைவுகளை மறக்க அவர் கொஞ்சம் கூட விரும்பவில்லை. என் அப்பா, அம்மாவை விட 15 வயது மூத்தவர். ஒருவேளை என் அப்பாவுக்குப் பின் வேறு ஒரு வயதான நபர் அவருடைய வாழ்க்கையில் நுழைவதை அவர் விரும்பாமல் இருந்திருக்கலாம்,” என்றார் அவர்.
மண்டேலா தனது பெற்றோருக்கு நல்ல நண்பராக இருந்தார் என அமினா கச்சாலியாவின் மகன் கலெப் கச்சாலியா தெரிவித்தார்.
கம்பீரமான மற்றும் நேர்த்தியான நடை
நெல்சன் மண்டேலா சிறையில் இருந்து விடுதலையான போது தான் முதல் முறையாக அமினாவை சந்திக்கும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாக பிரபல ஊடகவியலாளர் சயீத் நக்வி கூறுகிறார்.
அப்போது அமினாவின் கணவர் யூசுஃப் உயிருடன் இருந்தார். சிறையில் இருந்து வெளிவந்த பிறகு டெஸ்மண்ட் தூட்டுவின் இல்லத்தில் நெல்சன் மண்டேலாவைப் பார்க்கச் சென்றபோது, மண்டேலாவுக்குப் பக்கத்தில் அமினா அமர்ந்திருந்ததைப் பார்த்தாக அவர் கூறுகிறார்.
சிறு வயதில் அமினா மிகவும் அழகாக இருந்திருக்கவேண்டும் என பிரபல ஊடகவியலாளர் நக்வி கூறுகிறார்.
“அமினாவைப் பார்த்தபோது, அவர் ஒரு காலத்தில் மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருந்திருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். அவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து பல்வேறு பணிகளை ஆற்றியிருக்கிறார். மேலும், அவர் மண்டேலாவின் நெருங்கிய தோழியாகவும் இருந்திருக்கிறார். இது மட்டுமல்ல, அவரது முதிர்ச்சியும், அறிவாற்றலும் மண்டேலாவுக்கு சமமாக இருந்தது,” என்று ஊடகவியலாளர் நக்வி கூறுகிறார்.
சுவாரஸ்யமான இன்னொரு கதை என்னவென்றால், 1948 இல் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கீத் மில்லர், அமினாவை காதலித்து வந்தார்.
அப்போது அவருக்கு திருமணம் ஆகவில்லை. அந்த நேரத்தில் மில்லர் உலகின் புகழ்பெற்ற ஆல்ரவுண்டராக இருந்தார்.
பிபிசி ஸ்டுடியோவில் ரெஹான் ஃபசலுடன் மூத்த ஊடகவியலாளர் சயீத் நக்வி
“அவர்கள் இருவரும் ஒரு விருந்து நிகழ்ச்சியில் சந்தித்துக்கொண்டனர். அதன் பின் மில்லர் அடிக்கடி இரவு பகல் பாராமல் அமினாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரால் அமினாவுடன் தொலைபேசியில் பேசமுடிந்ததே ஒழிய, நேரில் சந்திக்க முடியவில்லை. ஏனென்றால், அமினா ஒரு வெள்ளைக்கார பெண்ணல்ல.
அமினா வாழ்ந்து வந்த பகுதி இந்தியர்கள் வாழும் குடியிருப்பு. அமினாவின் கணவர் யூசுஃப் பாய் நிறவெறியை வென்றது குறித்து அடிக்கடி நகைச்சுவையுடன் கதைகளைக் கூறிவந்த நிலையில், வெள்ளையரான கீத் மில்லர் அப்பகுதிக்கு ஒருநாளும் வரமுடியவில்லை. இல்லை என்றால் அவர் அங்கு வந்து அமினாவை நேரில் சந்திக்க முயன்றிருப்பார்,” என்கிறார் சயீத் நக்வி.
இனவெறிக்கு எதிராகப் போராடி ஆப்பிரிக்க மக்களை மீட்டதால் நெல்சன் மண்டேலா ஒரு கதாநாயகனாகவே பார்க்கப்படுகிறார்.
அமினாவும் நெல்சன் மண்டேலாவும் சயீத் நக்வி இருந்தபோது பல முறை சந்தித்திருக்கின்றனர். ஆனால் நக்வி 1995ல் தென்னாப்பிரிக்கா சென்றபோது அமினாவின் கணவர் யூசுஃப் இறந்துவிட்டார்.
“இன்று மாலை சந்திக்கிறேன்,” என சயீத் நக்வி சொன்னபோது, மாலையில் சந்திக்க வாய்ப்பில்லை என்றும், அதுவரை மண்டேலாவுடன் தான் இருக்கப் போவதாகவும் அமினா கூறியதிலிருந்து அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த நெருக்கத்தை நக்வி நன்றாக உணர்ந்ததாகக் கூறுகிறார்.
அதன்பின் இதே போன்று பலமுறை நெல்சன் மண்டேலாவி் வீட்டில் அமினா இருந்ததை ஊடகவியலாளர் சயீத் நக்வி பார்த்திருக்கிறார்.
நக்வி அங்கே சென்றபோது, அப்போது தான் அமினா அங்கிருந்து கிளம்பி வேறு ஒரு இடத்துக்குச் சென்றதாக பல முறை கேள்விப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
“அதன் பின் மண்டேலா அமினாவை திருமணம் செய்துகொள்ள விரும்பியது மெதுவாக அனைவருக்கும் தெரியவந்தது,” என சயீத் நக்வி தெரிவிக்கிறார்.
நெல்சன் மண்டேலாவும் வின்னியும் 1958 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இருவரும் அடிக்கடி சிறையில் இருந்ததால் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியவில்லை.
பின்னொரு காலத்தில் அமினா கச்சாலியா அளித்த பேட்டி ஒன்றில் மண்டேலா குறித்த தனது இனிமையான நினைவலைகளைப் பகிர்ந்துகொண்ட போது, ஒருமுறை அவர் தென்னாப்பிரிக்காவின் அதிபராகத் தன் வீட்டுக்கு வந்ததை நினைவுகூர்ந்தார்.
இந்த பேட்டியில், “நான் அவருக்காக சமோசாவை தயாரித்துக் கொண்டிருந்தபோது, அவர் என் பின்னால் ஒரு சாதாரண இருக்கையில் அமர்ந்திருந்தார்,” என்றார்.
அமினா தமது சுயசரிதையான வென் ஹோப் அண்ட் ஹிஸ்டரி ரைம் (When Hope and History Rhyme) என்ற நூலில், “மண்டேலா தனது மூன்றாவது திருமணத்தில் கிரேஸ் மச்செல்லை மணந்த பின் ஒருமுறை எனது ஜோகன்னஸ்பெர்க் இல்லத்துக்கு வந்திருந்தார். அப்போது அவர் என் மீதான காதலை வெளிப்படையாகத் தெரிவித்தார். ஆனால் நான், ‘நீங்கள் தற்போது தான் புதிதாக மீண்டும் ஒருமுறை திருமணம் செய்துள்ளீர்கள். நான் எதற்கும் தயாரான, சுதந்திரமான பெண்ணாக இருக்கிறேன். ஆனால் நீங்கள் அப்படி இல்லை,’ என்றேன். இதனால் ஏமாற்றமடைந்த அவர், நான் சமைத்துவைத்திருந்த மீன்களைக் கூட உண்ணாமல் கோபத்தில் கதவை மூடிக்கொண்டு வெளியேறிவிட்டார்,” எனத் தெரிவித்துள்ளார்.
அமினா தனது சுயசரிதையில் தனக்கும், மண்டேலாவுக்கும் இடையில் இருந்த உறவு குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார்.
இந்த புத்தகத்தில், “மண்டேலா தனது காதலை உணர்வுப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை. ஒருவேளை அவர் அதிக காலத்தை சிறையில் கழித்ததால் அந்த உணர்வுகளை இழந்திருக்கலாம். எதைப் பற்றியும் யோசிக்காமல் அவர் நேரடியாக தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார். அதனால் அவருக்கு முறையாக என்னால் பதில் அளிக்கமுடியவில்லை. உண்மையில் நான் அவரை விரும்பினேன். ஆனால் மறைந்த எனது கணவரை வயது முதிர்ந்த பின்னரும் விரும்பியதைப் போன்ற உணர்வு அல்ல அது,” என அமினா குறிப்பிட்டுள்ளார்.
மண்டேலா 2004 ஆம் ஆண்டு தனது 85வது வயதில் பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தார்.
ஆனால், “அமினா தமது புத்தகத்தில் எழுதியிருந்தாலும், அல்லது அவரது மகன் கலெப் கச்சாலியா தெரிவித்திருந்தாலும், என்னைப் பொறுத்தளவில், மண்டேலா – அமினாவின் நெருக்கமான உறவுகளை ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் விரும்பவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது,” என சயீத் நக்வி கூறுகிறார்.
மேலும், “இனவெறியிலிருந்து தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்பிரிக்க மக்களை மீட்ட நெல்சன் மண்டேலாவை ஒரு கதாநாயகனாகவே அந்த மக்கள் கருதிவந்த நிலையில், அமினாவுடன் நெருக்கம் அதிகமாகியிருந்தால், அந்த சமூகத்தில் அவருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கும்,” என்றும் நக்வி கூறுகிறார்.
பொது இடங்களில் அரிதாகவே தோன்றும் மண்டேலா, தென்னாப்பிரிக்காவில் 2010 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார்.
“ஒரு இந்தியப் பெண்ணை திருமணம் செய்வதை விட, மறைந்த மொசாம்பிக் அதிபரின் மனைவியான கிரேஸ் மச்செல்லை மண்டேலா திருமணம் செய்வதே சிறந்த முடிவாக இருக்கும் என அப்போது புரிந்துகொள்ளப்பட்டது. இந்த வழியில் தான் அவரது மனம் மெதுவாகச் செலுத்தப்பட்டது. ஆனால் இதையெல்லாம் யாரும் உறுதிப்படுத்த முடியாது. ஒன்றை ஆம் என்றோ, இல்லை என்றோ நிரூபிக்கும் வாய்ப்புக்கள் இங்கே இல்லை. இருப்பினும் இது போன்ற நகர்வுகள் இருந்தன என்பதை என்னால் உறுதியாக நம்பமுடியும்.” என்றார் நக்வி.