DMZ: ராணுவம் இல்லாத மண்டலம் என்றாலும் கெடுபிடி அதிகம் – உள்ளே நுழைந்தால் என்ன நடக்கும்? (கட்டுரை)
இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படாத ஆனால், அதே நேரம் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் நிறைந்த எல்லைகள் என்று உலக நாடுகளில் சில பகுதிகள் உள்ளன. இவற்றில் ஓர் முக்கியமான பகுதியாக கொரியாவின் ராணுவ நடவடிக்கைகள் இல்லாத மண்டலம் (DMZ) திகழ்கிறது.
தென்கொரியா மற்றும் வடகொரியா சட்டப்படி விதித்துள்ள தடையின் காரணமாகவும், எப்போதும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பதாலும் இந்த மண்டலத்திற்குள் ஒருவர் நுழைவதென்பது அனேகமாக இயலாத காரியமாகவே கருதப்படுகிறது. இருநாடுகள் விதித்துள்ள தடைகள் மற்றும் பாதுகாப்பு கெடுபிடிகளையும் தாண்டி, யாரேனும் ஒருவர் இந்த எல்லைக்குள் பிரவேசித்து விடுவாரேயானால் அவர் உலக அளவில் தலைப்புச் செய்தியாக பேசப்படுபவராகி விடுகிறார். இப்படி உலக அளவில் கவனம் பெற்றுள்ள நபராக தான் அமெரிக்க இராணுவ வீரரான ‘திராவிஸ் கிங்’ தற்போது திகழ்கிறார்.
இரு கொரிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கின் காரணமாக, தென் கொரியாவில் குவிக்கப்பட்டுள்ள 28 ஆயிரம் 500 அமெரிக்க ராணுவ வீரர்களில் ஒருவர் தான் கிங். நேற்று முன்தினம் (ஜூலை 18) உரிய அனுமதியின்றி, வேண்டுமென்றே தென்கொரியாவின் டிஎம்இசட் எல்லையின் வழியாக வட கொரியாவுக்குள் நுழைந்திருக்கிறார் என்று இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த தன்னிச்சையான செயலுக்காக அவர் மீது கூடிய விரைவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க மற்றும் தென்கொரிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அங்கு அவர் வடகொரிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பார் என்று நம்புவதாக கூறும் தென்கொரிய ராணுவ அதிகாரிகள், இந்த விவகாரத்திற்கு தீர்வு காண வடகொரிய ராணுவத்துடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
சிறப்பான வாழ்வை தேடி தென் கொரியாவுக்கு பயணிக்கும் வடகொரியர்கள் மற்றும் பிற காரணங்களுக்காக வடகொரியாவுக்கு செல்லும் தென்கொரியர்கள் என டிஎம்இசட் எல்லைையை இரகசியமாக தாண்டுபவர்கள் தொடர்பாக கடந்த ஏழு தசாப்தங்களாக இருதரப்பிலும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.
டிஎம்இசட் என்று அழைக்கப்படும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த எல்லைப் பகுதி, 263 கிலோமீட்டர் நீளமும், 4 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. இது கம்யூனிச சிந்தாந்தத்தை கொண்ட வடகொரியாவையும், முதலாளித்துவம் பேசும் தென்கொரியாவையும் பிரிக்கிறது.
1950 முதல் 1953 வரை மூன்றாண்டுகள் நீடித்த கொரிய போர், 5 மில்லியன் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் உயிரை பலி கொண்டது. அதையடுத்து ஒரு வழியாக 1953 இல் வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே போர் நிறுத்த அமைதி உடன்படிக்கை கையெழுத்திட முடிவு செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் வரை இருநாடுகளுக்கும் இடையே எழும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில், ராணுவ நடவடிக்கைகள் இல்லாத எல்லைப் பகுதியாக டிஎம்இசட் மண்டலம் வரையறுக்கப்பட்டது. ஆனால்,போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் ஒருபோதும் கையெழுத்திடப்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே இன்றும் போர் பதற்றம் நீடித்து கொண்டிருப்பதாலும், புகைந்து கொண்டிருக்கும் பகை உணர்வாலும், வட கொரியா மற்றும் தென் கொரியா இடையேயான மோதலின் மிகப்பெரிய வரலாற்று அடையாளமாக டிஎம்இசட் மண்டலம் திகழ்கிறது.
டிஎன்இசட் மண்டலத்தில் இம்ஜின் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சுதந்திர பாலம், கொரியாவின் வடக்கையும், தெற்க்கையும் இணைக்கும் ஓரே பாலமாக திகழ்கிறது
வரலாற்று சிறப்புமிக்க பன்முன்ஜோம் நகரம்
வடகொரியாவின் எல்லைக்குள் அமைந்துள்ள பன்முன்ஜோம் நகரில், 1953இல் கொரிய சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்கு முன் இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற இடமாகவும், கூட்டு பாதுகாப்புப் படையின் தலைமையகமாகவும் திகழ்வதால் பன்முன்ஜோம் நகரம் உலக அளவில் இன்றும் கவனம் பெற்றுள்ளது.
வட கொரியா மற்றும் தென் கொரியாவின் எல்லைகளை வரையறுக்கும் சிமெண்ட்டால் குறிக்கப்பட்டுள்ள கோடும், சோதனைச் சாவடிகளும் இந்த நகரின் முக்கிய அடையாளமாக திகழ்கின்றன. சமீபகாலமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடமாகவும் பன்முன்ஜோம் மாறி உள்ளது. இங்கு போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான இடம், அதன் அருகில் அமைந்துள்ள கூட்டுப் பாதுகாப்பு பகுதி உள்ளிட்டவற்றை அவர்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.
வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே 1953 இல் சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனாலும் கடந்த 70 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே அவ்வபோது போர் பதற்றம் ஏற்பட்டு கொண்டுதான் உள்ளது. இருநாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் ஏற்படும் போதெல்லாம் அதை தணிக்கும் விதமாக, அமைதி மற்றும் நல்லிணக்க பேச்சுவார்த்தைகள் நடைபெறும் இடமாக கொரியாவின் டிஎம்இசட் மண்டலம் விளங்கி வருகிறது.
குறிப்பாக, கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தை தணித்து, இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட ‘சன்ஷைன் பாலிசி’ குறித்து 1998 -2008 இடைப்பட்ட இரு தசாப்தங்களில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதன் மூலம் இந்த எல்லைப் பகுதி, உலக அளவில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெற்றது.
சமீப காலத்தில் சொல்ல வேண்டுமானால், வடகொரியா மற்றும் தென்கொரியா நாட்டு தலைவர்கள் பங்கேற்ற உச்சி மாநாடு பன்முன்ஜோம் நகரில் 2018 இல் நடைபெற்றது. அத்துடன் கொரியப் போருக்கு பிறகு, தென் பிராந்தியத்தில் காலடி எடுத்து வைத்த முதல் தலைவர் என்ற பெருமையை பெற்றார் வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன்.
இதேபோன்று 2019 இல் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை, டிஎம்இசட் மண்டலத்தில் தான் சந்தித்து பேசினார். இதன் மூலம் வட கொரிய எல்லையில் காலடி எடுத்து வைத்த முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
1976 இல், மரம் ஒன்று வெட்டப்பட்டதையடுத்து அமெரிக்க ராணுவத்தினருக்கும், வட கொரியர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதலை விவரிக்கும் புகைப்படம்
பதற்றங்களும், அதன் விளைவான சம்பவங்களும்
வடகொரியா, தென் கொரியா மற்றும் அமெரிக்க ராணுவத்தால் கொரியாவின் டிஎம்இசட் மண்டலம் தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்டும், கண்காணிக்கப்பட்டும் வருகிறது. இந்த பகுதியில் பொதுமக்களை காண்பது அரிதான விஷயமாகவே உள்ளது. குடியிருப்புகளோ, வணிக வளாகங்களோ இந்தப் பகுதியில் இல்லை. தென்கொரியாவின் பெரும்பாலான பகுதிகள் மக்கள்தொகை நெருக்கம் அதிகமுள்ள இடங்களாகவே அறியப்படுகின்றன. இதற்கு மாறாக, கொரியாவின் டிஎம்இசட் மண்டலம் அமைந்துள்ள பகுதி, பல்லுயிர் பெருக்கத்திற்கு சாதகமான இயற்கை சூழல் நிறைந்த பகுதியாக திகழ்கிறது.
தீவிர கண்காணிப்புக்கு உட்பட்டுள்ள மண்டலமான இப்பகுதியில் வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன.
1976 இல் இந்த மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில், வடகொரியர்களால் கோடாரியால் வெட்டப்பட்டு இரு அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
2017 இல், வட கொரிய வீரர் ஒருவர், இந்த மண்டலத்தின் வழியாக தென் கொரியாவுக்குள் நுழைய முயன்றார். அப்போது தென் கொரிய ராணுவம் அவரை நோக்கி ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டது. இருப்பினும் அந்த தாக்குதலில் இருந்து வடகொரிய வீரர் உயிர் தப்பினார்.
குறைந்த எண்ணிக்கையிலான வடகொரியர்களும், தென்கொரியர்களும் பரஸ்பரம் இந்த மண்டலத்தின் வழியே எல்லையை கடக்க தான் செய்கின்றனர்.
ஆனாலும், பாதுகாப்பு கெடுபிடிகள் நிறைந்த டிஎம்இசட் பகுதியைக் கடப்பது என்பது யாருக்கும் மிகவும் கடினமான முயற்சியாகவே இருந்து வருகிறது.
நாட்டின் தெற்கே தப்பிச் செல்ல முயற்சிக்கும் வடகொரியர்களில் பெரும்பாலானோர், மூன்றாவது நாட்டில் தஞ்சம் புகும் நோக்கில் சீனா வழியாக பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தொலைவுக்கு ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர்.
கொரிய தீபகற்பத்தின் அரசியலில் தொடர்ந்து நிலவும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மாறிவரும் சர்வதேச உறவுகளின் விளைவாக, டிஎம்இசட் எனப்படும் ராணுவ நடவடிக்கைகள் அற்ற மண்டலம் 21 ஆம் நூற்றாண்டிலும் வட கொரியா மற்றும் தென்கொரியாவை பிரிக்கும் அடையாளமாகவே இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான பனிப்போர் அரசியல் நீடிக்கும் வரை இந்த மண்டலமும் இருக்கத்தான் செய்யும்.