;
Athirady Tamil News

வெட்டுவான் கோவில்: அஸ்திவாரமே இல்லாமல் மேலிருந்து கீழாக பாண்டியர் கட்டியது எப்படி? ! (கட்டுரை)

0

கழுகுமலை வெட்டுவான் கோவில். பெரும் பாறையைக் குடைந்து கட்டப்பட்ட இந்தக் கோவில் ‘தென்னிந்தியாவின் எல்லோரா’ என்று அழைக்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் இருக்கும் இந்தக் கோவில், கி.பி. 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் மாறஞ்சடையன் என்பவரால் கட்டத் தொடங்கி முற்று பெறாமல் விடப்பட்டது.

இந்த கலை சின்னங்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கழுகுமலையின் பண்டைய காலத்து பெயர் ‘அரைமலை’. கழுகுமலையில் கிழக்குப் பக்கத்தில் வெட்டுவான் கோவில் அமைந்திருக்கிறது.

கி.பி. 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டு மன்னர்கள் மதுரையை தலைநகராகக் கொண்டு, புதுக்கோட்டையில் இருந்து கன்னியாகுமாரி வரை ஆட்சி செய்துள்ளனர். எனவே வெட்டுவான் கோவிலை 8ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பண்டைய மன்னர்களால் கட்டி இருக்கக்கூடும் என்கின்றார் தொல்லியல் ஆய்வாளர் வேதாச்சலம்.

கழுகுமலையின் பண்டைய காலத்துப் பெயர் ‘அரைமலை’. கழுகுமலையில் கிழக்குப் பக்கத்தில் வெட்டுவான் கோவில் அமைந்திருக்கிறது.

“இந்த மலையில் குடைவரைக் கோவில் மட்டுமல்லாமல் அதிக அளவிலான சமணர்களின் புடைப்பு சிற்பங்களையும் பார்க்க முடியும். தமிழகத்தில் வேறு எந்த இடங்களிலும் இந்தளவு சமணர்களின் சிற்பங்களைப் பார்க்க முடியாது,” என அவர் கூறுகிறார்.

பராந்தக நெடுஞ்சடையான் அல்லது முதல் வரகுணபாண்டியன் காலத்தில் இங்கு சமணர் பள்ளி உருவாக்கப்பட்டதாக கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் நகரில் அமைந்திருக்கும் கைலாசநாதர் கோவில் மற்றும் எல்லோரா குகைகளின் மாதிரி போல கழுகுமலை வெட்டுவான் கோவில் அமைந்துள்ளது.

ஆகவே, இதை தென்னிந்தியாவின் எல்லோரா என்று அழைக்கின்றனர். மேலும், வெட்டுவான் கோவில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட குடைவரைக் கோவில். தென்னிந்தியாவில் வேறு எந்தக் கோவிலிலும் இதைப் போன்று ஒரே கல்லில் குடைவரைக் கோவில் அமைக்கப்படவில்லை.
மற்ற குடைவரைக் கோவில்களில் இல்லாத தனி சிறப்பு

பொதுவாக கட்டடங்களைக் கட்டும்போது முதலில் அஸ்திவாரம் அமைத்து கீழ் இருந்து மேலாக கட்ட தொடங்குவார்கள். ஆனால், கழுகுமலை வெட்டுவான் கோவிலோ மேல் இருந்து கீழாக கட்டப்பட்டுள்ளது.

அஸ்திவாரம் எதுவும் இல்லாமல் பாறையை ‘பா’ வடிவத்தில் 7.50 மீட்டர் ஆழத்திற்கு சதுரமாக வெட்டியெடுத்து அதன் நடுப்பகுதியை கலசமாகக் கொண்டு, சிகரம், தளம், கூரை, பின்பு சுவர்கள் என மேல் இருந்து கீழ் நோக்கி குடையப்பட்டு உள்ளது.

மேலும் இந்த கோபுரத்தில் அமைந்திருக்கும் சிலைகள் அனைத்தும் ஒரே பாறையில் செதுக்கப்பட்டவை.

வேறு எந்தவித செதுக்கப்பட்ட சிற்பங்களும் இதில் பொருத்தப்படவில்லை. இது பார்ப்பதற்கு அகழ்வாராய்ச்சி செய்து கண்டெடுக்கப்பட்ட கோவில் போல் அமைந்திருக்கிறது.

இந்த கோபுரத்தில் அமைந்திருக்கும் சிலைகள் அனைத்தும் ஒரே பாறையில் செதுக்கப்பட்டவை

சிவனை முதன்மை கடவுளாகக் கொண்டு பல வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் கட்டப்பட்டன.

அதில் மிக முக்கிய கோவில்களில் ஒன்றுதான் மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத் நகரிலிருந்து உள்ள கைலாசநாதர் கோவில். இதற்கு ‘எல்லோரா குகைகள்’ என்று மற்றோரு பெயரும் உண்டு.

ராஷ்டிரகூட மன்னர் கிருஷ்ணா என்பவரால் 8ஆம் நூற்றாண்டில் கைலாசா கோவில் கட்டப்பட்டது. மேலும் இது கைலாசா மலையை ஒட்டியவாறு அமைந்திருக்கும். இந்த கோவிலும் மேலிருந்து செங்குத்தாக ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த கைலாசா கோவிலை கட்ட 20 ஆண்டுகளில் சுமார் 40,00,000 டன் பெரிய பாறைகள் வெளியேற்றப்பட்டன என ஆய்வில் தெரிய வருகிறது.

அதேபோன்ற அமைப்பில் செதுக்கத் தொடங்கி, முற்றுபெறாத கோவில்தான் வெட்டுவான் கோவில்.

அதனால் இதை ‘தென்னகத்தின் எல்லோரா’ என்று அழைக்கின்றனர். மேலும் இந்தக் கோவிலிலும் சிவனையே முதன்மைக் கடவுளாக வைத்து கட்டப்பட்டது என்பதால் இது ‘மினி கைலாசா’ என்றும் அழைக்கப்படுகிறது.

கைலாசநாதர் கோவிலில் அமர்ந்திருப்பது போலவே இங்கும் கிழக்கு நோக்கி சிகரத்தில் சிவன் மற்றும் பார்வதியின் சிலை செதுக்கப்பட்டிருக்கும். சிவனும் பார்வதியும் உரையாடுவது போன்ற அமைப்பில் செதுக்கப்பட்டிருக்கும்.

பொதுவாக கட்டடங்களைக் கட்டும்போழுது முதலில் அஸ்திவாரம் அமைத்து கீழிருந்து மேலாக கட்டத் தொடங்குவார்கள். ஆனால், கழுகுமலை வெட்டுவான் கோவிலோ மேலிருந்து கீழாக கட்டப்பட்டுள்ளது.

வெட்டுவான் கோவில் மேல் இருந்து கீழ் செதுக்கப்பட்ட கோவில் என்பதால் அதிக நுட்பமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் வெட்டுவான் கோவில் ஒரே பாறையில் குடையப்பட்ட குடைவரைக் கோவில். பொதுவாக குடைவரைக் கோவில்கள் என்றால் மலை அல்லது பாறையின் பக்கவாட்டிலிருந்துதான் குடைய தொடங்குவார்கள்.

ஆனால், வெட்டுவான் கோவிலில் செங்குத்தாக இருக்கும் மலையின் உச்சியில் மேல் இருந்து கீழாக தலைகீழாக கலசம், சிகரம், தளம், கூரை என குடைந்து செதுக்கப்பட்டுள்ளது.

வெட்டுவான் கோவிலில் சிகரம், கருவறை, அர்ந்த மண்டபமும் உள்ளன. ஆனால் இந்தக் கோவில் முழுமையாக கட்டப்படவில்லை. இது முற்றுப்பெறாத கோவில். சிகரம் மட்டுமே முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் அமைத்திருக்கும் கருவரையில் இருக்கும் விநாயகரின் சிலை பிற்காலத்தில் வைக்கப்பட்டது.

வெட்டுவான் கோவில் சிகரத்தில் திசை காவலர்கள், வனராக மகளிர் மற்றும் திசை பெண்கள் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பாதி முற்று பெறாமலும், ஒருசில பிற்காலங்களில் சேதமானதாகவும் காணப்படுகின்றன

ஒரே கல்லில் மேலிருந்து கீழாகச் செதுக்கப்பட்ட சிகரத்தில் நுட்பமான சிலை வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வெட்டுவான் கோவிலில் உமாமகேஸ்வரன், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா ஆகியோரின் சிலைகள் சிற்ப வடிவத்தில் செதுக்கப்பட்டுள்ளன.

மேலும் விமானத்தின் நான்கு திசைகளின் மூலையிலும் நந்தி சிலைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் அதற்குக் கீழாக யாளி மற்றும் கபோதமும் அமைந்துள்ளன. கபோதம் கருவறைச் சுவரின் வெளிப்பகுதியில் மழைநீரானது படாமலிருப்பதற்காக அமைக்கப்படுவது.

சிகரத்தில் மேற்குத் திசையில் விஷ்ணு, வடக்குத் திசையில் பிரம்மா, தெற்குப் பக்கத்தில் தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் அமைந்துள்ளன.

தட்சிணம் என்றால் தெற்கு என்று ஒரு பொருள் உண்டு. அதைக் குறிக்கும் விதத்தில் வெட்டுவான் கோவிலின் சிகரத்தில் தெற்கு திசையில் தட்சிணாமூர்த்தியின் சிலை செதுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக தட்சிணாமூர்த்தி சிவன் கோவில்களின் தெற்கு திசையில் வியாக்யான முத்திரையை காட்டியப்படி அமர்ந்திருப்பார். ஆனால் வெட்டுவான் கோவிலில் மிருதங்க தட்சிணாமூர்த்தி அமைந்திருப்பது தனிச் சிறப்பு.

இது குறித்து ஆய்வாளர் வேதாச்சலம் கூறும்போது, “தென் திசை கடவுளான தட்சிணாமூர்த்தி ரிஷிகளுக்கு யோகத்தையும், ஞானத்தையும் குருவாக அமர்ந்து உபதேசிக்கும் வடிவமாக கருதப்படுகிறார்.

ஜடாதாங்க முனிவர் போன்றோருக்கும் ஆசிரியராக தட்சிணாமூர்த்தி இருந்திருப்பதாகக் கூறப்படுகிறது. சிவாலயங்களில் மகாராஜலீலாசனம், அர்த்தபத்மாசனம், யோகாசனம், உத்குடிக்காசனம் போன்ற யோக ஆசனங்களில் அமர்ந்து, வியாக்யான முத்திரையை காட்டியப்படி அமர்ந்திருப்பார்.

தட்சிணா மூர்த்தி யோகம், ஞானம், கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர். தட்சிணா மூர்த்தி ஓர் இசை பிரியர். தமிழ்நாட்டில் பக்தியை வளர்ப்பதில் இசை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

அதற்கு ஏற்றாற்போல் தட்சிணாமூர்த்தி கையில் ‘மிருதங்கம்’ வைத்தபடி உலக உண்மைகளை உணர்த்தும் பொருட்டு இந்த வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் லால்குடியில், வீணையை ஏந்தியவாறு தட்சிணாமூர்த்தி அமர்ந்திருப்பார்,” என்றார்.

ஒரே கல்லில் மேலிருந்து கீழாக செதுக்கப்பட்ட சிகரத்தில் நுட்பமான சிலை வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திசைகளை ஆளும் தெய்வங்களை திசை காவலர்கள் என்று குறிப்பிடுவர். பண்டைய காலத்தில் கோவில்களின் சுவர்கள் மற்றும் கூரைகளில் திசை காவலர்களின் உருவத்தைச் செதுக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

வெட்டுவான் கோவில் சிகரத்தில் திசை காவலர்கள், வனராக மகளிர் மற்றும் திசை பெண்களின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பாதி முற்று பெறாமலும், ஒருசில பிற்காலங்களில் சேதமானதாகவும் காணப்படுகின்றன.

பொதுவாக சிவாலயங்களில் பூதகணங்களின் சிற்பங்கள் தனி வரிசையாகச் செதுக்கப்பட்டிருக்கும்.

பூத கணங்களின் தலைவராக கணபதி குறிப்பிடப்படுகிறார். அனைத்து சிவ ஆலயங்களிலும் கூரையைத் தாங்கியபடி பூத கணங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

பூதகணங்கள் வெவ்வேறு முகபாவங்களுடன் இடம்பெற்றிருக்கும். மனித முகம், வானர முகம், விலங்கு முகம், இசை கருவிகளை வசித்தவாறு, நடனமாடியவாறு, பாம்பைக் கொண்டு விளையாடுவதுபோல பல்வேறு அமைப்புடன் வெட்டுவான் கோவிலின் சிகரத்தில் பூதகணங்கள் செதுக்கப்பட்டிருக்கும்.

வெட்டுவான் கோவிலுக்கு அருகில் அதிக அளவிலான பண்டைய காலத்து சமணர்களின் புடைப்புச் சிற்பங்களைப் பார்க்க முடியும்

வெட்டுவான் கோவிலுக்கு அருகில் அதிக அளவிலான பண்டைய காலத்து சமணர்களின் புடைப்புச் சிற்பங்களைப் பார்க்கமுடியும்.

தமிழ்நாட்டில் அதிக அளவிலான சமணர்களின் சிற்பங்களை ஒரே இடத்தில் இங்கு காணலாம். மலையின் சரிவில் சமணத் திர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

மேலும் இங்கு சமண சித்தாந்தம் போதிக்கப்பட்டது. இந்த சிற்பங்கள் பண்டைய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் தோற்றிவிக்கப்பட்டவை என்றும் கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகிறது.

பல்லவர்களின் கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள இடம் தான் மாமல்லபுரம் என்று அழைக்கப்படும் கடற்கரைக் கோவில்.

பல்லவர்களின் நுட்பமான கட்டட கலைகளில் ஒன்று பஞ்ச ரதங்கள். மகாபாரதத்தில் ஐந்து பாண்டவர்களான தர்மன் (யுதிஷ்டிரன்), பீமன், அர்சுனன், நகுலன், சகாதேவன் மற்றும் அவர்களின் மனைவி திரௌபதியின் ரதங்கள் ஒவ்வொன்றும் ஒரே கிரானைட் பாறையிலிருந்து ரதமாகச் செதுக்கப்பட்டுள்ளது.

அதைப் போல வெட்டுவான் கோவிலில் ஒரே பாறையில் இருந்து சிகரம் செதுக்கப்பட்டுள்ளது என்று ஆய்வாளர் வேதாச்சலம் குறிப்பிடுகின்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.