மருத்துவ தவறுகளுக்கு யார் பொறுப்பு ? !! (கட்டுரை)
மக்கள், வைத்தியத் துறையை நம்புவதைப் போல, உலகில் வேறு எதையும் நம்புவதில்லை. கண்கண்ட தெய்வங்களாகவே வைத்தியர்கள் பார்க்கப்படுகின்றார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கூட, வைத்தியரை ஒரு கட்டத்தில் நம்பிவிடுகின்றான்.
வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான போராட்டத்தில், மருத்துவம் அல்லது நோய் குணமாக்கல் என்பது மிகவும் உன்னத சேவையாக என்றும் இருக்கின்றது. அந்த வகையில், உலகெங்கும் நாள்தோறும் இலட்சக் கணக்கான மக்கள் மருத்துவ சேவையால் தமது இன்னுயிரைக் காத்துக் கொள்கின்றனர். இதற்காக மருத்துவத்துறை சார்ந்தோர் செய்கின்ற அர்ப்பணிப்பு அளப்பரியது.
தமது விருப்பு வெறுப்புகள், உடல்நிலை, மனநிலை எல்லாவற்றையும் ஒருபுறம் வைத்துவிட்டு, தம்மை நம்பி வரும் நோயாளிகளுக்காக சேவையாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இவர்கள் இருக்கின்றார்கள். கொவிட்-19 பெருந்தொற்று காலத்திலும் அவர்களது தியாகங்களை உலகம் கண்டு வியந்தது.
ஆனால், நாள்தோறும் இலட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்ற சமகாலத்தில், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வைத்தியசாலையில் இறந்து கொண்டும் இருக்கின்றன. சிகிச்சை பலனின்றி இறப்போர் இதில் அதிகம் பேர் என்று கூறலாம். மருத்துவத் தவறுகளாலும் அவ்வப்போது இறப்புகள் இடம்பெறுகின்றன.
கடந்த பல வருடங்களாக, இலங்கையில் மருத்துவத் தவறுகள் இடம்பெறுகின்றன. மருத்துவத் தவறுகள், பராமுகம், போதிய விடய அறிவின்மை, திட்டமிட்ட சதிச் செயல்கள் எனப் பலதரப்பட்ட காரணங்களால், உடல் உபாதைகளும் பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன. இதன் உச்சக்கட்டமாக மரணம் சம்பவிக்கின்றது.
ஆனால் இவையெல்லாம் பொதுவாக ஒரு குடும்பத்தின், ஓர் ஊரின் விவகாரமாக பார்க்கப்படுவதாலும், ஆதாரங்கள் இல்லாத காரணத்தாலும், தேவை ஏற்பட்டால் வைத்தியசாலை நிர்வாகம் அதனை மாற்றியமைத்துக் கொள்ள ஏதுவான களநிலைமைகள் இருப்பதாலும் அல்லது ஒரு கட்டத்தில் அக்குடும்பம், முயற்சிகளை கைவிட்டு விடுவதாலும் இழப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்த வரிசையில்தான், கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிறுநீரக மாற்று சிகிக்சைக்கு உட்படுத்தப்பட்ட ஹம்தி என்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் இப்போது பேசுபொருளாகி உள்ளது. ஒரு சிறுநீரகத்தை மாற்றுவதற்காகவே அவர் அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால் தவறுதலாகவோ அல்லது திட்டமிட்டோ இரண்டு சிறுசீரகங்களும் அகற்றப்பட்ட நிலையில், அச் சிறுவன் மரணமடைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஹம்தி முதலும் அல்ல கடைசியுமல்ல; இதேபோல், மருத்துவத் தவறுகள் அல்லது மருத்துவத்துறை தர்மங்களுக்கு அப்பாற்பட்ட காரியங்களின் பட்டியலும் மிக நீளமானது.
இலங்கையில் ஆயிரக்கணக்கான போலி மருத்துவர்கள் இருப்பதாக அரச அறிக்கைகளே கூறுகின்றன. கடமைக்கு சரியாக சமூகமளிக்காத வைத்தியர்கள், நேரம் பிந்தி வரும் மருத்துவ பணியாளர்கள், கவனயீனமாக செயற்படுகின்ற வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள், பணம் உழைக்கும் நோக்கத்தை மட்டுமே இலக்காகக் கொண்ட வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவர்கள் என பலதரப்பட்ட வகையறாக்களும் உள்ளன.
மருத்துவ தொழிலை கண்ணியமாகவும் மனச்சாட்சியுடனும் கடவுளுக்குப் பயந்தும் செய்கின்ற எத்தனையோ வைத்தியர்கள், மருத்துவப் பணியாளர்கள் இருக்கின்றார்கள். மனிதர்கள் என்ற வகையில், அவர்களின் கைகளாலும் தவறுகள், சிறிய குழறுபடிகள் இடம்பெறலாம் என்பது யதார்த்தமானது. அவற்றுக்கு அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்றாலும் கூட, அது வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கப்படலாம்.
ஆனால், திட்டமிட்டு அல்லது கவனயீனமாக நடக்கின்ற தவறுகள் அவ்விதம் நோக்கப்பட முடியாது. தம்மை நம்பி வருகின்ற ஒரு நோயாளியின் நோயைக் குணப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்கு அப்பாலான உள்நோக்கங்களுடன் மேற்கொள்ளப்படுகின்ற எந்த மருத்துவ சேவையையும் இந்த வகைக்குள்ளேயே உள்ளடக்க வேண்டியிருக்கின்றது.
மருத்துவத்தை ஒரு சேவையாக பார்க்காமல், அதனை ஒரு வியாபாரமாக மாற்றியுள்ள நூற்றுக்கணக்கான தனியார் வைத்தியசாலைகளும் ஆயிரக்கணக்கான வைத்தியர்களும் இங்கு கண்காணிக்கப்பட வேண்டியவர்கள். அரச வைத்தியசாலைகளில் நம்பிக்கை இழந்து, தனியார் வைத்தியசாலைகளை நோக்கி மக்களை அலையவிட்டதற்கு காரணம், அப்படிப்பட்டவர்களின் அர்ப்பணிப்பற்ற பணியாகும்.
அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்ற ஆயிரக்கணக்கான வைத்தியர்களுக்கு பின்னால் ஒழிந்து கொண்டு இருக்கின்ற இவ்வகையான சில வைத்தியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களால் மொத்த மருத்துவத் துறையும் சிலவேளைகளில் தலைகுனிந்து நிற்கின்றது. சிறுநீரகங்கள் இரண்டையும் பறிகொடுத்து, உயிரிழந்த ஹம்தி விடயத்திலும் அதுதான் நடந்திருக்கின்றது.
இலங்கையில் ஆயிரக்கணக்கான போலி மருத்துவர்கள் இருப்பதாகவும் அவர்கள் ஏதோ ஒருவகையில் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் அரசாங்கம் பல வருடங்களாக கூறி வருகின்றது. ஆனால், ஒரு நூறு போலி வைத்தியர்களையாவது கைது செய்து தண்டித்ததாக அறியக் கிடைக்கவில்லை.
சில வைத்தியசாலைகளில் பௌதீக வளப் பற்றாக்குறை, மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கின்றது. அதுவெல்லாம் ஒருபுறமிருக்க எல்லா வளங்களும் இருந்தும் கூட, முறையாக சேவையாற்ற தவறுகின்ற நிலைமைகளும் உள்ளன. சில வைத்தியர்கள் கடமையை கடமையாகச் செய்வதில்லை. அரச மருத்துவமனைகளை விட, தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று மேலதிகமாக உழைப்பதற்காக ஆலாய்ப் பறக்கின்றனர்.
அதேபோன்று, சில வைத்தியசாலைகளில் நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்கள், நோயாளிகள் விடயத்தில் கவனயீனமாகவும் பொறுப்பற்ற தன்மையுடனும் நடந்து கொள்வதை கண்கூடாகவே கண்டிருக்கின்றோம். இதுவெல்லாம் மருத்துவத் தவறுகளுக்கே இட்டுச் செல்கின்றன.
பல சத்திரசிகிச்சைகள் வெற்றியளிக்காமல் போயிருக்கின்றன. எத்தனையோ சிகிச்சைகள் பலனின்றி போயிருக்கின்றன. இதில் எல்லாம் பிரச்சினையில்லை. வைத்தியர்களும் அங்குள்ள பணியாளர்களும் முழு முயற்சி செய்தும், ஒருவரைக் காப்பாற்ற, குணப்படுத்த முடியவில்லை என்றால், அதற்காக வைத்தியவர்களை குறைகாண முடியாது.
ஆனால், பெரிய மருத்துவத் தவறுகள் மற்றும் கவனயீனமான செயற்பாடுகளால் ஏற்படுகின்ற இழப்புகள் பாரதூரமானவை ஆகும். அதுமட்டுமன்றி, வியாபார நோக்கத்துடன் அல்லது மோசடி அடிப்படையில் இடம்பெறுகின்ற சிகிச்சைகள், அதற்குப் பின்னால் உள்ள ‘மாபியா’ எல்லாம் எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. சிறுவன் ஹம்தியின் மரணமும் அவ்வகை சார்ந்ததாகவே நோக்கப்படுகின்றது.
இலங்கையில் சிறுநீரக வர்த்தகம் இடம்பெறுவதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்தன. அதுபோல ஏனைய உடல் உறுப்புகளை கடத்தும் மோசடி வியாபாரங்களும் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகின்றன.
ஆனால், இவற்றையெல்லாம் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் காத்திரமான நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர்க்கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும் அதற்காக முன்னிற்கவில்லை. சுகாதாரத் துறையிலும் ஊழலும் இனவாதமும் புகுந்துள்ளதை கொரோனா ஜனாஸா எரிப்பின் போதே தெளிவாகக் கண்டோம். இப்படியான சூழ்நிலையில், இந்த மருத்துவ தவறுகளை திருத்துவது சாத்திமற்றுப் போய்க் கொண்டிருக்கின்றது.
இலங்கை சமூகத்திடையே பொதுவாக தவறுகளை தட்டிக் கேட்கின்ற தன்மை மிகக் குறைவாகும். தவறுகளை, சதி முயற்சிகளை முறியடிப்பதற்காக தொடர்ச்சியாக போராடுகின்ற போக்கு அறவே இல்லை.
அரசியல்வாதி, வியாபாரி, ஆசிரியர், வைத்தியர், அரச அதிகாரி என எல்லா தரப்பினரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். எனவே, தவறுகளைத் தட்டிக் கேட்க வேண்டிய தேவையுள்ளது.
குறிப்பாக, மருத்துவதுறை சார்ந்தோர் விமர்சிக்கப்படக் கூடியவர்கள் அல்லர் என்ற ஒரு மாயை கட்டமைக்கப்பட்டுள்ளது; அது நீக்கப்பட வேண்டும். மருத்துவர்கள் மட்டுமன்றி எல்லா தொழில் செய்வோரும் அதனைச் சரிவரச் செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும், சமூக முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்குமான கதவுகள் திறக்கப்பட வேண்டும்.
அந்தவகையில், நாட்டில் தவறு செய்கின்ற தரப்பினரைத் திருத்துவதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? பொறுப்பு வாய்ந்தவர்கள் பொறுப்புக் கூறலுடன் செயற்படுவதை உறுதி செய்வதற்கு தொடர்ச்சியாக மக்கள் எந்த வகையில் போராடியிருக்கின்றார்கள் என்ற கேள்விகள் எழுகின்றன.
இலங்கை மக்கள், ஒரு சமூகமாக முன்னெடுத்த போராட்டங்களில் அதிக காலம் நீடித்த போராட்டம் ‘அரகலய’ மட்டும்தான். அதுவும் கூட, ஐந்தாறு மாதங்களில் அடங்கிப் போனது. மற்றெல்லா கோஷங்களும் இரண்டு வாரங்களுக்குள் அடங்கிப் போவதுதான் வாடிக்கையாகவுள்ளது.
ஆட்சியாளர்கள் சரியில்லை என்றோம்; பஸ் விபத்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றோம்; மாணவர்களை துஷ்பிரயோகம் செய்கின்ற ஆசிரியர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றோம்; கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றோம்; ஆசிரியர்களை மதிக்காத மாணவர்களை திருத்த வேண்டும் என்றோம்; இயற்கை வளத்தை சூறையாடுகின்ற வியாபாரிகளை சிறையிலடைக்க வேண்டும் என்றோம்; ஆசிரியத் தொழில் முதல் வைத்தியதுறை வரை எல்லாவற்றையும் வியாபாரமாக்கும் போக்கை மாற்ற வேண்டும் என்றோம்.
இந்த எல்லாப் போராட்டங்களும் ஆகக் கூடியது ஒரு மாதம் வரையாவது நீட்டிக்கவில்லை. இவை எவற்றுக்கும் நல்ல தீர்வு கிடைக்கவும் இல்லை. அதற்கு இடையில் வேறு ஏதாவது ஒரு பிரச்சினை, விவகாரம் வந்தால் அதற்குப் பின்னால் கோஷம் எழுப்பிக் கொண்டு போய்விடுவோம். இரண்டு மாதங்களில் எல்லாம் மறந்து விடும். இதுதான் நமது வழக்கமாக இருந்து கொண்டிருக்கின்றது.
ஆகவே, வீடு உடைத்து திருடுகின்றவர்கள் முதல் தமது தொழிலில் திருடுகின்ற, தவறு செய்கின்ற, மோசடி செய்கின்றவர்கள் தொட்டு ஆட்சியில் ஊழல் செய்கின்றவர்கள் வரை, எல்லோர் விடயத்திலும் இலங்கையர்கள் ஒன்றுபட்டு, போராடாத வரை இவ்வாறான இழப்புகள் எல்லாம் தொடர்கதையாகவே இருக்கும்.