ஆன்மீக சிகிச்சை என்ற பெயரில் வன்கொடுமை – பெண்கள் இரையாவது எப்படி? (கட்டுரை)
ஆன்மீக சிகிச்சையாளர்கள் என்று தங்களைத் தாங்களே அடையாளப்படுத்தி கொள்பவர்கள், பல்வேறு பிரச்னைகளுடன் தங்களை நாடி வரும் பெண்களை பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கி வருகின்றனர் என்பது பிபிசி அரபு சேவைகளின் கள ஆய்வு மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
‘குர்ஆன் குணப்படுத்துதல்’ என்று அழைக்கப்படும் ஆன்மீக சிகிச்சையானது அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளில் பிரபலமான நடைமுறையாக இருந்து வருகிறது.
‘ஜின்’ எனப்படும் தீய ஆவிகளை தங்களின் உடம்பில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் நோய்களுக்கும், மன ரீதியான பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று நம்பி, ஆன்மீக சிகிச்சை மேற்கொள்பவர்களை நாடி பெரும்பாலான பெண்கள் செல்கின்றனர்.
இவ்வாறு மொராக்கோ மற்றும் சூடான் நாடுகளில் ஆன்மீக சிகிச்சைக்கு சென்ற பெண்களில் 85 பேருக்கு அங்கு பாலியல் ரீதியாக நேர்ந்த பல்வேறு கசப்பான அனுபவங்கள் குறித்து, கடந்த ஓராண்டுக்கு மேல் பிபிசி நடத்திய கள ஆய்வில் ஆதாரங்களுடன் கூடிய பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. இவற்றில் முக்கியமாக, ஆன்மீக சிகிச்சை என்ற பேரில் 65 பேர், தங்களிடம் சிகிச்சைக்கு வந்த பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.
ஆன்மீக சிகிச்சையாளர்கள் மீதான இந்தப் பாலியல் குற்றச்சாட்டுகளை உறுதி செய்ய தன்னார்வ நிறுவனங்கள், வழக்கறிஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன், மாதக்கணக்கில் பிபிசி உரையாடியது.
அத்துடன் பிபிசி பெண் பத்திரிகையாளர் ஒருவர், தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்தி கொள்ளாமல், ஆன்மீக சிகிச்சைக்கு சென்றபோது, சிகிச்சையாளர் ஒருவர் அவரிடமும் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்தார்.
இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில விவரங்கள் வாசகர்களுக்கு வருத்தம் அளிப்பதாக இருக்கலாம்.
தலால் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பெண், சில ஆண்டுகளுக்கு முன், காசா பிளாங்கா நகருக்கு அருகில் செயல்பட்டு வந்த ஓர் ஆன்மீக சிகிச்சையாளரிடம் மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்றார். அப்போது சுமார் 25 வயது பெண்ணாக இருந்த தலாலை, ‘ஜின் காதலன்’ என்ற தீய சக்தி ஆட்கொண்டுள்ளதன் விளைவாகவே, அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சிகிச்சையாளர் கூறியுள்ளார்.
அத்துடன் தலாலை தனிமையில் அழைத்து சிகிச்சை அளித்த அந்த நபர், தீய சக்தியை விரட்ட, கஸ்தூரி என்ற வாசனை திரவியத்தை நுகர சொல்லி உள்ளார். அதை நுகர்ந்ததும் தலால் சுயநினைவை இழந்ததால், அது ஒருவித போதைப்பொருளாக தான் இருந்திருக்கும் என்று பிபிசி கள ஆய்வு குழுவிடம் தெரிவித்தார்.
ஆன்மீக சிகிச்சை என்ற பெயரில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து, சூடான் மற்றும் மொராக்கோ நாடுகளில் பிபிசி கள ஆய்வு மேற்கொண்டது.
அதற்கு முன் எவ்வித பாலியல் அனுபவமும் இல்லாத தலால், போதை தெளிந்து கண்விழித்தபோது, அவரின் உள்ளாடைகள் அகற்றப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை உணர்ந்த அவர், ராகியிடம் ( ஆன்மீக சிகிச்சையாளர்) என்னை நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்று கோபமாக கேட்டுள்ளார்.
“கொஞ்சமும் வெட்கமில்லாமல், என்னிடம் எப்படி இப்படி மோசமாக நடந்து கொள்ள முடிந்தது” என்று, ராகியிடம் கேட்டேன். அதற்கு அவர், “உன் உடம்பில் உள்ள தீய சக்தியை விரட்டுவதற்காக தான் இப்படி செய்தேன்” என்று தனது தகாத செயலை நியாயப்படுத்தினார் என்று தலால் பிபிசியிடம் தெரிவித்தார்.
தனக்கு நேர்ந்த இந்தக் கொடுமையை வெளியே சொன்னால், தமக்கு தான் அவமானம் என்று எண்ணிய தலால், ஆன்மீக சிகிச்சைக்கு சென்ற இடத்தில் நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து யாரிடமும் சொல்லாமல் மெளனமாகவே நாட்களை கழித்து வந்தார். ஆனால் சில வாரங்களுக்கு பிறகு தான் கருவுற்றிருந்ததை அறிந்தபோது அவர் அதிர்ச்சியிில் உரைத்தார். தன் உயிரை மாய்த்து கொள்ளவும் முயன்றார்.
அதன் பிறகு, தான் கர்ப்பம் தரித்துள்ளது குறித்து, தனக்கு சிகிச்சை அளித்த ராகியிடம் சொன்னபோது, “உன்னை பிடித்திருந்த ஜின் எனும் தீய சக்தி தான் கருவுற செய்திருக்க வேண்டும்” என்று அவர் பதிலளித்துள்ளார்.
தனக்கு நேர்ந்த இந்த கொடுமையின் விளைவாக, தான் பெற்றெடுத்த குழந்தையை பார்க்கவோ, அன்புடன் அரவணைக்கவோ, பெயர் சூட்டவோ மறுத்து, அந்தக் குழந்தையை தத்து கொடுத்துள்ளார் தலால்.
தனக்கு நேர்ந்த அவலம் குறித்து குடும்பத்தினர் அறிந்திருந்தால், அவர்கள் தன்னை இந்நேரம் கொன்றிருப்பார்கள் என்றும் தலால் பிபிசியிடம் தெரிவித்தார்.
தலாலை போல பாதிக்கப்பட்ட பெண்களில் பலர், ஆன்மீக சிகிச்சை என்ற பேரில், தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குறித்து புகாரளித்தால் அது தங்களுக்கே பாதகமாக அமையும் என்று அஞ்சுவதால் சட்டரீதியான நடவடிக்கையில் இறங்காமல் அமைதியாக இருந்து வருகின்றனர்,
அத்துடன் இவ்வாறு புகாரளித்தால் அது ஜின்களை (தீய சக்தி) பழி வாங்கத் தூண்டும் என்ற அச்சமும் தங்களுக்கு இருப்பதாக சில பெண்கள் கூறினர். இந்த அச்சத்தை எல்லாம் தாண்டி, சிலர் மட்டும் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்கின்றனர்.
தன் கணவரை பிரிந்த துயரில் ஆன்மீக சிகிச்சைக்கு சென்ற சூடானை சேர்ந்த சவ்சன் என்ற பெண், பாலியல் உறவுக்கு வற்புறுத்தப்பட்டார்
பாலியல் உறவு மூலம் மருந்து தயாரிக்க பரிந்துரை
சூடானை சேர்ந்த சவ்சன் என்ற பெண், தன்னை விட்டு பிரிந்து, இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வந்த தன் கணவரை மீண்டும் தம்மை நாடி வரும்படி செய்ய வேண்டும் என்று எண்ணினார்.
அதற்காக, ஓர் ஆன்மீக சிகிச்சையாளரை நாடிய அப்பெண், தனது கணவருக்கு ஏதாவது மருந்து கொடுப்பதன் மூலம், மீண்டும் அவர் தன்னுடன் சேர்ந்து வாழ்வார் என்று நம்புவதாக அவரிடம் கூறியுள்ளார்.
அதற்கு ஆன்மீக சிகிச்சையாளர் அளித்த பரிந்துரையை கேட்டு அப்பெண் அதிர்ச்சி அடைந்தார்.
“அவர் என்னுடன் பாலியல் உறவு மேற்கொள்வதாகவும், அப்போது வரும் உடல் திரவங்களை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு மருந்தை என் கணவருக்கு கொடுக்க வேண்டும்” என்றும் ஆன்மீக சிகிச்சையாளர் பரிந்துரைத்ததாக சவ்சன் கூறினார்.
“அவரது இந்த பரிந்துரை மூலம், பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்வதற்காக அந்த நபர் எதற்கும் துணிந்தவர் என்பதை உணர்ந்தேன். மேலும் இதுகுறித்து காவல் துறையிடம் புகாரளிக்கவோ, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவோ, என் கணவரிடம் கூட சொல்லவோ துணிய மாட்டேன் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருந்தது” என்று சவ்சன் பிபிசியிடம் தெரிவித்தார்.
பாலியல் சீண்டல் அல்லது துஷ்பிரயோகம் குறித்து சூடானில் பிபிசி கள ஆய்வு குழு பேசிய 50 பெண்களில், மூன்று பேர் தங்களுக்கு நேர்ந்த அவலத்திற்கு, தாங்கள் சார்ந்த மதத்தின் தலைவரான ஷேக் இப்ராஹிம் என்பவரை கைகாட்டினார்.
அவர் பாலியல் உறவு கொள்ளும்படி தன்னை கட்டாயப்படுத்தியதாக பெயர் கூற விரும்பாத பெண் ஒருவர் தெரிவித்தார்.
ஷேக் தன்னை பாலியல் உறவு வைத்து கொள்ள சொன்னபோது, நான் அவரை தள்ளிவிட வேண்டும் என்று எண்ணினேன். ஆனால், அதற்கான சக்தி இல்லாதவளாக உணர்ந்தேன் என்று அஃபாப் என்ற பெண் கூறினார்.
ஷேக்குகள் தங்களை பாலியல் சீண்டலுக்கு ஆளாக கட்டாயப்படுத்துவதை மக்களிடம் சொன்னால் அவர்கள் அதை நம்பவோ, ஏற்கவோ மாட்டார்கள். ஏனெனில், ஷேக்குடன் அறையில் என்னை யாரும் பார்க்கவில்லை. அப்படியானதொரு சூழலில், நான் சொல்வதை பொதுமக்கள் நம்புவதற்கு சாட்சிகளை எப்படி தயார் செய்வது? என்று அஃபாப் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, பிபிசி அரபு சேவைகள் பிரிவில் பணியாற்றும் ஒரு பெண் பத்திரிகையாளர், தம்மை யார் என்று வெளிக்காட்டி கொள்ளாமல், ரகசியமாக ஷேக் இப்ராஹிமை சந்திக்க ஒப்புக் கொண்டார்.
பிபிசி செய்தியாளர்கள் குழுவால், ரீம் என்று அழைக்கப்பட்ட அந்த பத்திரிகையாளர், தான் கர்ப்பம் தரிக்காததால் பாதிக்கப்பட்ட ஓர் வாடிக்கையாளரைப் போல தன்னை காட்டிக் கொண்டார்.
உடனே ஷேக் இப்ராஹிம், ரீமின் பிரச்னை தீர ஒரு மந்திரத்தைச் சொல்வதாக கூறினார். மேலும் கர்ப்பம் தரிக்க வழிவகை செய்யும் ‘மஹய்யா’ என்று அழைக்கப்படும் பானத்தை தயார் செய்து கொடுத்து, அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று தினமும் பருகும் படியும் ஷேக், பெண் பத்திரிகையாளரை அறிவுறுத்தினார்.
அதன்பின், தன் அருகில் நெருக்கமாக வந்து அமர்ந்த அவர், வயிற்றில் கைவைத்தாக கூறிய ரீம், தான் கையை எடுக்கும்படி கூறிய பின்பும், ஷேக் தன்னிடம் அத்துமீறி நடந்து கொள்ள முயன்றதால், தான் அந்த அறையை விட்டு ஓடி வந்துவிட்டதாக கூறினார்.
ஷேக்கின் அநாகரிகமான செயலால் தான் அதிர்ச்சியடைந்ததாக கூறிய ரீம், அவர் பெண்களிடம் இவ்வாறு நடந்து கொள்வது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பது அவரின் நடவடிக்கைகளே உணர்த்துகின்றன என்றும் அவர் கூறினார்.
ரீமுக்கு நிகழ்ந்த கசப்பான அனுபவம் குறித்து, ஷேக் இப்ராஹிமிடம் பிபிசி கேள்வி எழுப்பியது. அதற்கு, தம்மை நாடி வந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறவோ, அவரை துன்புறுத்தவோ இல்லை என்று கூறியவர், மேற்கொண்டு எதுவும் பேசாமல், திடீரென நேர்காணலை முடித்து கொண்டார்.
இதனிடையே, பாலியல் சுரண்டல்கள் எதுவும் இல்லாமல், ஆன்மீக சிகிச்சை விரும்பும் பெண்களுக்கான பிரத்யேக மையத்தை கார்ட்டூம் என்ற இடத்துக்கு அருகே கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் ஷேக்கா பாத்திமா என்ற பெண்.
இந்த பிரத்யேக மையத்திற்கு செல்வதற்கான அனுமதி பிபிசி கள ஆய்வு குழுவுக்கு அளிக்கப்பட்டது. குழு அங்கு சென்றபோது, ஷேக்கா பாத்திமாவை சுற்றியிருந்த பெண்கள், தங்கள் புறச்சூழல் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருந்ததை பார்க்க முடிந்தது.
இந்த நிலையில் பெண்கள் எவ்வாறு பாதிப்புக்கு ஆளாவார்கள் என்பது குறித்தும், தங்களை மறந்த அவர்களின் இந்த நிலை, பிற ஆன்மீக சிகிச்சையாளர்கள் அவர்களை தவறாக பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கிறது என்றும் பாத்திமா கூறினார்.
ஷேக்குகள் தங்களைத் தொட்டு, தங்களது உடம்பில் இருக்கும் தீய சக்தியை விரட்டுவதாக நம்புவதாக பல பெண்கள் தெரிவிக்கின்றனர். ஷேக்குகளின் இந்த செய்கை, சிகிச்சையின் ஒரு பகுதி என்று அந்த பெண்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.
“இந்தப் பெண்கள் இவ்வாறு சொல்வதை கேட்பதற்கு உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்” என்று பிபிசி குழுவிடம் பாத்திமா தெரிவித்தார்.
ஆன்மீக சிகிச்சை என்ற பெயரில் பெண்களிடம் நடைபெறும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த ஆதாரங்களுடன், இந்த விவகாரத்தை, மொராக்கோ மற்றும் சூடான் நாடுகளின் அரசு உயரதிகாரிகள் கவனத்துக்கு பிபிசி கொண்டு சென்றது.
ஆன்மீக சிகிச்சையின்போது தங்களுக்கு பாலியல் ரீதியாக நேர்ந்த கசப்பான அனுபவங்களை பல பெண்கள் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர் என்று, சூடான் அரசின் இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குடும்பம் மற்றும் சமூக துறையின் தலைவர் டாக்டர் அலா அபு ஸெய்டிடம் தெரிவிக்கப்பட்டது.
முதலில் இதை நம்பத் தயங்கிய அவர், “ஆன்மீக சிகிச்சைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாததன் விளைவாக இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன என்று மட்டும் ஒப்புக்கொண்டார். மேலும் வேலை இல்லாதவர்கள், இதை ஒரு தொழிலாக பயன்படுத்தி வருகின்றனர்” என்றும் அலா அபு கூறினார்.
ஆன்மீக சிகிச்சை முறையை ஒழுங்குபடுத்துவதற்கான வழிமுறைகளை அரசு கடந்த காலங்களில் ஆராய்ந்தது. ஆனால், நாட்டின் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக, தற்போது அதற்கு முன்னுரிமை அளிக்க முடியவில்லை என்றும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆன்மீக சிகிச்சை விவகாரத்தை கட்டுப்படுத்த தனி சட்டம் தேவை என்று தான் கருதவில்லை என்று மொரோக்கோ அரசின் இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சர் அஹ்மத் தௌபிக் கூறினார்.
“இதுபோன்ற விவகாரங்களில் சட்டரீதியான தலையீடுகளை மேற்கொள்வது கடினம். மத கல்வி மற்றும் விழிப்புணர்வு பிரசங்கங்கள் மூலம் தான் இதற்கு தீர்வு காண வேண்டும்” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆன்மீக சிகிச்சை என்ற பெயரில் பெண்களுக்கு நடைபெறும் பாலியல் கொடுமைகள் தொடர்பான நிறைய ஆதாரங்கள் இருந்தும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க சூடான் மற்றும் மொரோக்கோ அரசு அதிகாரிகள் தயங்குகின்றனர். எனவே, இந்தத் தொழிலுக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருப்பவர்களுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டிய கடமை பெண்களுக்கு தான் உள்ளது.