ரணில் போட்ட பிள்ளையார் சுழி!! (கட்டுரை)
13ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் பாராளுமன்றத்துக்குள் கொண்டு வருவதற்கான பூர்வாங்க வேலையை செய்து முடித்திருக்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்திய போது அவர், நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்துக்கும் ஏற்ற வகையில், 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது முக்கியம் என்று கூறியிருந்தார்.
அதனை அடைவதற்கு திறந்த மனதுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி, பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். அத்துடன் இன்னொரு கோரிக்கையையும் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருக்கிறார்.
அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு முடிவையும் எதிர்ப்பது என்ற பாரம்பரிய நடைமுறையில் இருந்து எதிர்க்கட்சிகள் விலக வேண்டும் என்பதே அது.
அவசியமே இல்லாத ஒரு ஆட்டத்துக்குள் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தையும் நாட்டையும் இழுத்துச் சென்று கொண்டிருக்கிறார்.
1987இல் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால், பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை- தேரை இழுத்து தெருவில் கொண்டு வந்து நிறுத்தியது போல- பாராளுமன்றத்துக்கு மீண்டும் கொண்டு வருவதில் உறுதியாக இருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
அவரிடம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி இருக்கிறது. அரசியலமைப்பை செயற்படுத்துவதற்கான அதிகாரமும் இருக்கிறது.
ஆனால், அவர் அதனை கையாளுவதற்குப் பதிலாக, அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைக் கோருகிறார். உலகத்திலேயே மிகவும் கேலிக்கூத்தான விடயம் இது.
அரசியலமைப்பை செயற்படுத்துவதா என்று பாராளுமன்றத்திடம் அனுமதி கோரும் வழமை வேறெங்கும் இருந்ததாகத் தெரியவில்லை.
சொந்த அரசியலமைப்பையே செயற்படுத்தாத ஒரே நாடு இலங்கை தான்.
13ஆவது திருத்தச் சட்டத்தை 36 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தாத இலங்கை அரசு, அதனை நடைமுறைப்படுத்த மீண்டும் நாடாளுமன்ற அங்கீகாரத்தைக் கேட்பது ஒன்றும் ஆச்சரியமில்லை.
ரணில் விக்கிரமசிங்க நாட்டின் எதிர்காலம், வளர்ச்சி என்பனவற்றுக்கு 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது முக்கியம் என்று கூறியிருந்தாலும், அதனை செயற்படுத்தவதற்கான தற்துணிவு அவரிடம் இல்லை.
அதனால்தான் அவர் பாராளுமன்றத்தின் கையில் பந்தை தூக்கி வீசியிருக்கிறார்.
அரசியலமைப்பில் குறைபாடுகள் இருப்பது வழமை. அவற்றைத் திருத்திக் கொள்வதும் உலக வழக்கம்.
இலங்கையில் ஜே.ஆர். கொண்டு வந்த 1977ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பில் இதுவரை 22 திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
ஆனால், 1789 இல் நடைமுறைக்கு வந்து, 233 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் அமெரிக்க அரசியலமைப்பில், இதுவரையில் 33 திருத்தங்கள் தான் செய்யப்பட்டிருக்கின்றன.
திருத்தங்கள் செய்யப்படுவதால் அரசியலமைப்பு செம்மைப்படுத்தப்படுகிறது என்று அர்த்தமில்லை.
13ஆவது அரசியலமைப்பில் குறைபாடு அல்லது தவறு இருந்தால் அதனை திருத்துவது அல்லது நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
13ஆவது திருத்தச் சட்டத்தை அவ்வாறு நீக்க முயன்றால், ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி ஏற்படும்.
13ஆவது திருத்தச் சட்டத்துக்கு காரணமாக இருந்த இந்தியா அதனை இலகுவில் அனுமதிக்காது. அதனால் தான், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 13ஆவது திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு ஒப்புதல் பெறுவது என்ற பெயரில், – இதனை பாராளுமன்றத்துக்கு கொண்டு வருகிறார்.
ரணில் விக்கிரமசிங்க இந்த விபரீத விளையாட்டின், ஆபத்துக்களை உணர்ந்து கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை.
13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது அவசியம் என்று கருதுகின்ற அவர், அதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் கோருகிறார். ஆனால், 13 விடயத்தில், அதனை காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் முழுமையாக நடைமுறைப்படுத்தும் விடயத்தில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன.
பாராளுமன்றத்தில் காணப்படுகின்ற இந்த முரண்பாடுகளைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள ரணில் விக்கிரமசிங்க விரும்புவதாகத் தெரிகிறது.
அரசாங்கத்தின் திட்டங்கள் எல்லாவற்றையும் எதிர்க்கும் பாரம்பரிய நடைமுறையில் இருந்து எதிர்க்கட்சிகள் விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்ற ரணில் விக்கிரமசிங்கவுக்கு, 13 ஆவது திருத்த விடயத்தில் முக்கியமான சவால் ஆளும்கட்சியில் இருந்தே வரப் போகிறது என்பது தெரியாமல் இருக்காது.
பொதுஜன பெரமுன 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதை எதிர்க்கிறது. அதனை முழுமையாக அமுல்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்று பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் சில வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
பொதுஜன பெரமுன இப்போது ஒன்றாக இல்லாமல் பிளவுபட்டு வேறு நிற்கிறது. எனவே, எல்லா தரப்புகளையும் ஒரே கோட்டுக்குள் கொண்டு வருவதும் கடினம்.
ஆனாலும், கலந்துரையாடல்களை நடத்தி ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்துகிறார்.
தேசியப்பிரச்சினை விடயத்திலும் சரி, 13 விடயத்திலும் சரி, எல்லாக் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குள் வருவது நடக்க முடியாத அதிசயம்.
ஏனென்றால் சிங்கள பௌத்த பேரினவாத மனோநிலை அவ்வாறானது. அது தமிழர் விரோத மனப்பாங்கு, சிந்தனையில் இருந்தே கட்டியெழுப்பப்பட்டது. தமிழ் மக்களுக்கு உரிமைகள் கொடுக்கக் கூடிய எதையும் ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் அது இருக்கிறது.
அவ்வாறான நிலை இருக்கும் வரையில் 13 விடயத்திலோ, அதற்கு அப்பாற்பட்ட தீர்வுகள் விடயத்திலோ ஒருமித்த ஆதரவைப் பெற முடியாது.
ஜே.ஆர். ஜயவர்தன தனது கட்சியை சேர்ந்த எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் முன்கூட்டியே திகதியிடப்படாத பதவி விலகல் கடிதங்களை வாங்கி வைத்திருந்தவர். அதனால் தான் அவரால், 13 ஆவது திருத்தத்தைக் கூட நிறைவேற்ற முடிந்தது.
இப்போதைய சூழலில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைக் கோருகிறார் என்றால், அது எதன் அடிப்படையில் என்ற கேள்வி வருகிறது.
பாராளுமன்றம் வாக்கெடுப்பின்றி அங்கீகாரம் அளிப்பதையே அவர் எதிர்பார்க்கிறார். அது நிச்சயம் நடக்கப் போவதில்லை.
அவ்வாறாயின், இதனை நடைமுறைப்படுத்துவதற்கு சாதாரண பெரும்பான்மை போதுமா அல்லது மூன்றில் இரண்டு விசேட பெரும்பான்மை தேவையா? அதனை தீர்மானிக்கப் போவது யார்?
மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காது போனால், அதனையே சாட்டாக வைத்து, 13ஐ நடைமுறைப்படுத்தக் கூடாது என்ற கோஷங்கள் கிளம்பும்.
நிச்சயமாக இதனை அடிப்படையாக வைத்து, 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்படலாம்.
அவ்வாறான நிலை ஒன்று ஏற்பட்டால், 36 ஆண்டுகளுக்கு முற்பட்ட, ஆறில் ஐந்து பெரும்பான்மை உறுப்பினர்களால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்தை, சரியா தவறா என்று ஆராயும் நிலைக்கு உயர்நீதிமன்றம் தள்ளப்படலாம்.
ஏற்கெனவே உயர்நீதிமன்ற வியாக்கியானத்தின் அடிப்படையில் பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு பிரேத பரிசோதனை நடத்துகின்ற நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ரணில்.
இது ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்புக்கும் ஆரோக்கியமானது அல்ல. இது எதிர்காலத்தில், பாராளுமன்றம் நிறைவேற்றிய எல்லாச் சட்டங்களையும் பாராளுமன்றம் மீள்பரிசீலனை செய்யக் கூடிய நிலையை உருவாக்கும்.
அதனை நடைமுறைப்படுத்துவதில் இருந்து தப்பிக்க பாராளுமன்றத்தின் ஆதரவைப் பெற்றால் போதும் என்ற நிலையையும் உருவாக்கும்.
ஜே.ஆர்.ஜயவர்தன தொடக்கம் ரணில் விக்கிரமசிங்க வரையான ஆட்சியாளர்கள், 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தாமல் நழுவி விட்டு இப்போது, அதனை செயற்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கோரப்படுகிறது.
பாராளுமன்றத்தில் இதனை ஏன் செயற்படுத்தவில்லை என்று எழுப்பப்படும் கேள்விகளுக்கு ஆட்சியாளர்கள் பதிலளிக்காமல் தப்பி விட்டனர். ஆனால், இந்த விவகாரம் உயர்நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டால் – அங்கு அரசியலமைப்பை ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்ற கேள்விக்குப் பதிலளிக்க வேண்டியிருக்கும்.
ஆக, 13 ஆவது திருத்தச் சட்டத்தை மாத்திரம், ஜனாதிபதி ரணில் தெருவுக்குக் கொண்டு வரவில்லை.
கூடவே பல பிரச்சினைகளுக்கும், தீர்க்கப்பட முடியாத நெருக்கடிகளுக்கும் அவர் இப்போது பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் என்பதே உண்மை.