வரலாற்றுக் கதைகள் எவ்வாறு இன்றைய அரசியலில்!! (கட்டுரை)
அரசியலில், வரலாறு என்பது நாடுகள் மற்றும் சமூகங்களின் சித்தாந்தங்கள், அடையாளங்கள் மற்றும் அபிலாஷைகளை வடிவமைக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக செயல்படுகிறது.
‘பயன்தரு கடந்த காலம்’ என்ற கருத்து, குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதற்கு, பெரும்பாலும் இன-மத தேசியவாத அரசியலுக்காக, வரலாற்றுக் கதைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட வியாக்கியானம் மற்றும் கையாளுதலைக் குறிக்கிறது. வரலாற்றிற்கான இந்த அணுகுமுறை சமூகத்தை ஒன்றுபடுத்தவும் வல்லது, பிரிக்கவும் வல்லது. ஏனென்றால், ‘பயன்தரு கடந்த காலம்’ ஒன்று சமகால அரசியலினால் கட்டமைக்கப்படும் போது, அது சமகால சமூகம் சமகாலப் பிரச்சினைகளை குறித்த பயன்தரு கடந்த காலக் கண்ணாடியூடாகப் பார்க்கும் நிலையை ஏற்படுத்துகிறது.
இப்பத்தியானது காலத்திற்கும் இன-மத தேசியவாத அரசியலுக்கும் இடையிலான சிக்கலான உறவை மிகச்சுருக்கமாக ஆராய விளைகிறது. வரலாற்றுக் கதைகள் எவ்வாறு இன்றைய அரசியல் மற்றும் சமூக உரையாடலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைப் பற்றி நாம் பேச வேண்டியதாக இருக்கிறது.
வள்ளுவன் மதமற்றவனாகவும் இராவணன் சிங்களவனாகவும் சித்திரிக்கப்படுவதென்பது இருவேறு அரசியல் ‘தேசியவாத’ அரசியலின் ஒரே வகையாக பயன்தரு கடந்த கால அணுகுமுறையின் வௌிப்பாடுகளே!
தமிழகத்தின் ‘திராவிட’ அரசியலுக்கு, வள்ளுவனை மதநீக்கம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. சனாதன தர்மத்தின் எந்தவோர் அடையாளமும் வள்ளுவனுக்கு இருக்கக்கூடாது, ஏனென்றால் பழந்தமிழன் சனாதன தர்மத்தின் பாற்பட்டவன் அன்று என்று நிறுவ வேண்டியது ‘திராவிட’ தேசியவாதத்திற்கு அவசியம்.
அதுபோலவே, இராவணனை சிங்களவனாக சித்திரிக்க வேண்டியது ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் தேவை. சிங்கள-பௌத்தம் அண்மைய தசாப்பதங்கள் வரை, விஜயனின் வருகையோடுதான் சிங்கள வரலாற்றைத் தொடங்கியது. அது மஹாவம்சம் சொல்லும் வரலாறு. அதுவே உண்மை வரலாறா என்ற கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், அப்படியானால் விஜயனுக்கு முன் இங்கு வாழ்ந்தவர்கள் யார் என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது.
இதில், சிங்கள-பௌத்த தேசியவாதத்திற்கு சிக்கல்; தமிழ் மொழியின் தொன்மையினால் ஏற்படுத்தப்படுகிறது. தமிழ் மொழியின் தொன்மை உலகளவில் ஆய்வாளர்களால் அசைக்கமுடியாதளவிற்கு உறுதிசெய்யப்பட்டுவிட்டது. தமிழ்மொழியும், அதன் தாய்மொழியான ப்ரொடோ-திராவிடியன் மொழியும் இந்திய உப கண்டத்தின் தெற்கே பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்திருக்கின்றன என்பதை மறுக்க முடியாத நிலையில் சிங்கள-பௌத்த தேசியவாதம் இருக்கிறது.
அப்படியானால் விஜயனுக்கு முன்பு இங்கிருந்தவர்கள் சிங்களவர்கள் இல்லையென்றால், ‘சிங்களவர்கள்’ வந்தேறு குடிகளா என்ற கேள்வி எற்பட்டுவிடுமல்லவா. அதனை சமன்செய்யத்தான் கடந்த சில தசாப்தங்களில் புராண இராவணனை சிங்களவனாக்கும் பயன்தரு கடந்த காலமொன்றைக் கட்டியெழுப்பும் கைங்கரியத்தில் தீவிர சிங்கள-பௌத்த தேசியவாதிகள் ஈடுபட்டுவருகிறார்கள். நிற்க!
பயன்தரு கடந்த காலமானது, விரும்பிய கதை /அடையாளத்தை வலுப்படுத்தும் வரலாற்று நிகழ்வுகள், புள்ளிவிவரங்கள் மற்றும் கதைகளின் நனவான தேர்வை உள்ளடக்கியதாகும். இன-மத தேசியவாத அரசியலில், இது பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட குழுவின் மேலாதிக்கம், உயர்வு, அல்லது விதிவிலக்கான மேன்மைத் தன்மையை எடுத்துக்காட்டும் வரலாற்று தருணங்களில் கவனம் செலுத்துகிறது.
இந்த அணுகுமுறை பெருமை மற்றும் ஒற்றுமை உணர்வை உருவாக்கும் அதே வேளையில், இது எங்களுக்கு எதிராக அவர்களுக்கு என்ற மனநிலையை வளர்க்கும்; மற்ற குழுக்களுடன் பதட்டங்களை அதிகப்படுத்தி, உண்மையான வரலாற்றுப் பதிவை சிதைக்கும்.
இன-மத தேசியவாத அரசியலானது, பல்வேறு தேவைகளுக்காக வரலாற்றுக் கதைகளை அடிக்கடி தனக்கேற்றாற் போல பயன்படுத்திக் கொள்கிறது. பகரப்பட்ட வரலாற்று அனுபவங்கள், கலாசார நடைமுறைகள் மற்றும் சின்னங்களை வலியுறுத்துவதன் மூலம், தலைவர்கள் ஒரு பொதுவான பதாகையின் கீழ் குறித்த அடையாளத்தைப் பகரும் மக்கள்கூட்டத்தை ஒன்றிணைக்கும் ஒரு கூட்டு உணர்வை உருவாக்க முயல்கிறார்கள். இதனால் தம்முடைய அரசியல் சித்தாந்த அடிப்படைகளுக்குச் சாதகமான நிலையை உருவாக்க எத்தனிக்கிறார்கள்.
இப்படியாக அந்த மக்கள் கூட்டம் அரசியல் ரீதியில் கட்டமைக்கப்படும் போது, அது குறித்த அடையாளத்தின் மீதான விசுவாசத்தையும் அர்ப்பணிப்பையும் உருவாக்கி, குறித்த சமூகத்திற்கு ஒரு சக்திவாய்ந்த உணர்வைத் தருவதாக அமைகிறது. இதுதான் இன-மத தேசியவாதிகள் பயன்தரு கடந்தகாலமொன்றை கட்டமைப்பதில் அதீத பிரயத்தனம் காட்டுவதற்கான காரணம்.
ஏனென்றால், பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் கிடைக்காத விசுவாசத்தை, இனப்பற்று பெற்றுத்தரும். பலமான இனப்பற்று கட்டியெழுப்பப்பட, பலமான வரலாற்று வேர்கள் அவசியம். அந்த வேர்களை உருவாக்கவே இந்த அரசியல்வாதிகள் முயல்கிறார்கள். இதில் இல்லாத வேர்களை உருவாக்குவதும், வேறு மரத்தின் வேர்களைப் பிடுங்கி தம்முடையதாக்கிக் கொள்வதுமெல்லாம் அடங்கும்.
இருப்பினும், வரலாற்றை இது போன்ற குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தாம் விரும்பியவாறு கையாள்வது, வெறுப்பையும் பிரிவினையையும் தூண்டலாம். இது நல்லிணக்கத்துக்கு இடையூறு விளைவிக்கும். இன-மத தேசியவாத அரசியல்வாதிகள் பெரும்பாலும் தமது இனக் குழுவுக்கு ஆதரவாக இருக்கும் கொள்கைகளை சட்டப்பூர்வமாக்குவதற்கு பயன்தரு கடந்த காலத்தை பயன்படுத்துகின்றனர்.
உதாரணத்திற்கு ஒரு நிலப்பரப்பை தம்முடையதாக்க வேண்டுமென்றால், இது எமது இனத்தின் மூதாதையர்கள் வந்திறங்கிய இடம்; இது எமது இனத்தின் முக்கிய அடையாளம்; வானிலிருந்து இறங்கிய இடம் என்று வரலாற்றுக் கற்பிதங்களை நிறுவிக்கொண்டு, அந்த நிலப்பரப்பிலிருக்கும் மற்றவர்களை விரட்டி, அந்த நிலத்தைக் கைப்பற்றிக்கொள்ள முடியும்.
வரலாற்று முன்னுதாரணங்களில் சமகால முடிவுகளை தொகுத்து வைப்பதன் மூலம், தலைவர்கள் தங்கள் செயல்களை வரலாற்று ஒழுங்கை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளாக முன்வைக்க முடியும். இந்த மூலோபாயம் பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதற்கும் விமர்சனத்தைத் திசைதிருப்புவதற்கும் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.
கற்பனையில் உருவகித்த கடந்த காலத்தி்ற்காக, நிகழ்காலத்தில் அண்ணன், தம்பிகளாக வாழவேண்டியவர்கள் அடித்துக்கொண்டு சாகப்போகும் நிலையை இந்த அரசியல் விஷப்பரீட்சை உருவாக்கும் என்பதைப் பற்றியெல்லாம் இந்த அரசியல்வாதிகளுக்குக் கவலை கிடையாது. ‘பயன்தரு கடந்த காலம்’ என்பது அவர்களது அரசியலுக்கான பலமான ஆயுதமாகிறது.
இன-மத தேசியவாத அரசியல் மற்றும் பயன்தரு கடந்த காலத்தின் சிக்கலான தன்மையைச் சமாளிக்க, வரலாற்றுப்புலமை மற்றும் ஆழ்ந்த சிந்தனைக்கான அர்ப்பணிப்பு என்பன ஒரு மக்கள் கூட்டத்திற்கு மிக முக்கியமானது. நன்கு அறியப்பட்ட குடிமக்கள் மற்றும் விடாமுயற்சியுள்ள ஆராய்ச்சியாளர்கள் வரலாற்றுக் கதைகளை ஆராய்வதில், உண்மைகளை வெளிக்கொணர்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். திறந்த உரையாடலை ஊக்குவிப்பதன் மூலமும், பல்வேறு கண்ணோட்டங்களைக் கேட்கக்கூடிய சூழலை வளர்ப்பதன் மூலமும், சமூகங்கள் கையாளப்பட்ட வரலாற்றின் எதிர்மறையான தாக்கங்களைத் தணிக்க முடியும்.
ஆனால் இது இலகுவானதல்ல. ஏனென்றால், இன-மத தேசியவாதம் இதனை விரும்பாது. அது இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்கவே முயலும். ஏனென்றால், உண்மையான சுயாதீன வரலாறு அறியப்பட முயன்றால், அது சிலவேளைகளில், இன-மத தேசியவாதம் கட்டமைத்த பயன்தரு கடந்தகாலத்தை கேள்விக்குட்படுத்திவிடும், அல்லது பிழையென நிரூபித்துவிடும்.
ஆனால் இன்னொரு விஷயத்தையும் நாம் மறந்துவிடக்கூடாது. ‘பயன்தரு கடந்தகாலம்’ என்பது, எப்படி இன-மத அரசியலால், பிரிவினைக்கு பயன்படுத்தப்பட முடியுமோ, அதுபோல, தாராளவாத அரசியலால், அது சமூக ஒற்றுமையைக் கட்டியெழுப்பவும் பயன்படுத்தப்படலாம்.
கத்தி மரக்கறியை வெட்டி உணவுமளிக்கும்; ஆளை வெட்டிக் கொலையும் செய்யும். அதுபோலத்தான் பயன்தரு கடந்தகாலமும் அது ஒரு பலமான அரசியல் ஆயுதம்.
வரலாற்றுக் கதைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்து, பயன்படுத்தக்கூடிய கடந்த காலமானது, இன்றைய சமூகத்தைப் பிரிக்கும் அல்லது ஒன்றிணைக்கும் திறனைக் கொண்டுள்ளது.
இன-மத தேசியவாத அரசியல் தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாற்றைப் பயன்படுத்துவதில், குறுகிய கால ஆதாயங்களைக் கண்டாலும், நீண்ட கால விளைவுகளைத் தோற்றுவிக்கும். சமூகங்கள் தங்கள் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் வடிவமைப்பதில் வரலாற்றின் நுணுக்கமான பங்கை அங்கிகரிப்பது மற்றும் கடந்த காலத்துடன் வெளிப்படையான மற்றும் நேர்மையான ஈடுபாட்டின் மூலம் உள்ளடக்கம், புரிதல் மற்றும் நல்லிணக்கத்தை தீவிரமாக தேடுவது கட்டாயமாகும். இல்லையென்றால், ஒரு பொய்யை நம்பிக்கொண்டு அந்த சமூகம் வாழவேண்டியதுதான்.