;
Athirady Tamil News

மணிப்பூர் வன்முறை: நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தா? (கட்டுரை)

0

குளோபல் ரேட்டிங் ஏஜென்சியான மூடீஸ், இந்தியாவின் இறையாண்மை மதிப்பீட்டை (sovereign rating) ‘Baa3’ யாக தொடர்ந்து வைத்திருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் எல்லா G-20 நாடுகளையும் விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அது கூறியுள்ளது.

ஆனால் நாட்டில் சமீபகாலமாக நடந்துள்ள வன்முறையில் அரசியல் ஆபத்து குறித்தும் மூடீஸ் கேள்வி எழுப்பியுள்ளது. மூடீஸ் இன்வெஸ்டர் சர்வீசஸின் சமீபத்திய மதிப்பீட்டிலும் மணிப்பூர் சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் கருத்து வேறுபாட்டை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் அரசின் முயற்சி, சிவில் சமூக உரிமைகளில் குறைந்திருப்பதையும் மற்றும் அதிகரித்து வரும் வகுப்புவாத பதற்றங்கள் பற்றியும் இது பேசுகிறது.

“அரசியல் ஒருமுனைப்படுத்தல் அதிகரித்த போதிலும் அரசில் ஸ்திரமின்மை ஏற்பட சாத்தியமில்லை. ஆனால் உள்நாட்டு அரசியல் பதற்றங்களால் தற்போதைய பிரபலமான கொள்கைகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும். பிராந்திய மற்றும் உள்ளூர் அரசுகள் தொடர்பாகவும் இந்த சிக்கல் எழலாம். அத்தகைய சூழ்நிலையில், வறுமை மற்றும் சமத்துவமின்மை அபாயமும் அதிகரிக்கலாம். இதன் காரணமாக அனைவருக்கும் கல்வி மற்றும் அடிப்படை சேவைகள் வழங்குவதில் இடையூறு ஏற்படக்கூடும்,” என்று அறிக்கை தெரிவிக்கிறது.

பொதுவாக ரேட்டிங் ஏஜென்சிகள் அரசியல் ஆபத்தை விட பொருளாதார பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்துகின்றன.

மூடீஸ் அறிக்கையில் இந்தியாவின் பொருளாதாரம் பற்றி சிறப்பாக பேசப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தின் அபாயத்தை மதிப்பிடும் போது அரசியல் அபாயமும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.

இருப்பினும் இந்த முறை மூடீஸ் அதை மிக முக்கியமாக எடுத்துக்காட்டியுள்ளது. இதனாலேயே அதன் அணுகுமுறை குறித்து அதிகமாகப் பேசப்படுகிறது.

இதற்கு என்ன காரணம்? மூடீஸ், பொருளாதார வளர்ச்சி விகிதத்திற்கு பதிலாக அரசியல் அபாயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது ஏன்? இதைப் புரிந்து கொள்ள பிபிசி இந்தி, நாட்டின் இரண்டு பிரபலமான பொருளாதார நிபுணர்களிடம் பேசியது.

மூடீஸ் அறிக்கையில் அரசியல் ஆபத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது குறித்து புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொருளாதார பேராசிரியருமான அருண் குமாரிடம் கேட்டோம்.

அதற்கு பதிலளித்த அவர், “மூடீஸ் போன்ற எல்லா மதிப்பீட்டு நிறுவனங்களின் மதிப்பீட்டிலும் அரசியல் அபாயம் குறிப்பிடப்பட்டிருக்கும். இருப்பினும், அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. பொருளாதார வளர்ச்சி விகிதம் அல்லது பிற பொருளாதார மதிப்பீடுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆனால் இந்த முறை மணிப்பூர் வன்முறை மற்றும் ஹரியாணாவில் நிலவும் வகுப்புவாத பதற்றங்களைக் கருத்தில் கொண்டு மூடீஸ், அரசியல் ஆபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.

“முதலீடு என்பது எதிர்காலத்திற்கானது. எனவே, வரும் நாட்களில் அரசியல், பொருளாதார சூழல் எப்படி இருக்கும் என்பதை மதிப்பீடு செய்வது அவசியம். தற்போது மூடீஸ் வழங்கிய மதிப்பீட்டில், இந்தியாவின் மதிப்பீடு நேர்மறையாகவே வைக்கப்பட்டிருந்தாலும், வரவிருக்கும் ஆபத்துகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. ஒரு சிறந்த வளர்ச்சி விகிதத்தை கணித்துள்ளதுடன் கூடவே வளர்ந்து வரும் அரசியல் அபாயத்தையும் குறிப்பிட்டு, அறிக்கையை சமநிலைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என்றார் அவர்.

இருப்பினும் பெங்களூருவின் பிஆர் அம்பேத்கர் பொருளாதாரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், என்ஐபிஎஃப்பியின் பேராசிரியருமான என்ஆர் பானுமூர்த்தியின் கருத்து சற்று மாறுபட்டதாக உள்ளது.

“மணிப்பூர் மற்றும் ஹரியாணாவில் நடந்தது கவலைக்குரிய விஷயம். ஆனால் இந்தியா மிகப் பெரிய நாடு. இதுபோன்ற நிகழ்வுகள் ஏதேனும் ஒரு பகுதியில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இது வளர்ச்சியின் மீது நீடித்த விளைவை ஏற்படுத்தப் போவதில்லை. உண்மையில் ரேட்டிங் ஏஜென்சிகளின் மதிப்பீடுகள், நீண்ட கால முதலீட்டாளர்களுக்கானது. இத்தகைய சம்பவங்கள் நீண்டகால வளர்ச்சியை பாதிக்காது. எனவே முதலீட்டாளர்களின் முதலீடு குறையும் என்று சொல்லமுடியாது,” என்று அவர் குறிப்பிட்டார்.

மூடீஸ் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து உற்சாகமாக உள்ளது. ஜி-20 நாடுகளுக்கு இடையே இந்தியாவின் வளர்ச்சி விகிதம் மிக அதிகமாக இருக்கும் என்று அது கூறியுள்ளது. ஆனால், மூடீஸின் மதிப்பீடு தொடர்பாக பேராசிரியர் அருண்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியானது, அமைப்பு சார்ந்த துறையின் செயல்திறனைப் பொருத்து மட்டுமே மதிப்பிடப்படுகிறது என்று அவர் கூறுகிறார்.

“மூடீஸ், சர்வதேச செலாவணி நிதியம், ADB அல்லது ஐ.நா. ஏஜென்சி என்று எதுவாக இருந்தாலும், இவை அனைத்துமே அரசின் தரவுகளின் அடிப்படையில் மதிப்பீட்டை முன்வைக்கின்றன. ஆனால் நம் அரசின் தரவுகள் சரியாக இல்லை. ஏனென்றால் அமைப்பு சாரா துறையின் செயல்பாடு இதில் தெரிவதில்லை,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கோள் காட்டும் பேராசிரியர் அருண்குமார், ”2016 இல் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது தொழில்கள் மூடப்பட்டன. சந்தைகள் மூடப்பட்டன. மொத்த சந்தைகளில் பணிகள் நிறுத்தப்பட்டன. ஆயினும்கூட அந்த ஆண்டில் எட்டு சதவிகிதத்திற்கும் அதிகமான வளர்ச்சி விகிதம் பதிவு செய்யப்பட்டது. இது தசாப்தத்தின் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதம் என்று சொல்லப்பட்டது. இந்தப்புள்ளிவிவரம் அமைப்பு சார்ந்த தொழில் துறையைச் சேர்ந்தது. ஏனென்றால் அமைப்புசாரா துறை முற்றிலுமாக மூடப்பட்டிருந்தது,” என்று குறிப்பிட்டார்.

“உண்மையில் நமது தரவுகள் அமைப்பு சார்ந்த துறையிலிருந்து வருகின்றன. எனவே இந்த அடிப்படையில் காட்டப்படும் வளர்ச்சி விகிதத்தை நம்ப முடியாது. இது சரியான வளர்ச்சி விகிதம் அல்ல.

நாம் 6-7 சதவிகித வளர்ச்சியைப் பற்றி பேசுகிறோம். ஆனால் உண்மையான வளர்ச்சி 1-2 சதவிகிதத்திற்கு மேல் இல்லை. உண்மையில் நமது பொருளாதாரம் உலகில் எட்டாவது அல்லது ஒன்பதாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும். ஐந்தாவது பெரிய பொருளாதாரம் அல்ல,” என்று அவர் கூறினார்.

இங்கு வளர்ச்சியை மதிப்பிடும் செயல்முறையில் தவறு உள்ளது என்கிறார் பேராசிரியர் அருண்குமார். அமைப்புசார்ந்த துறை வளரும் வேகத்தில் அமைப்புசாரா துறையும் வளர்ந்து வருகிறது என்று நாம் நம்பினால், அது தவறான மதிப்பீடு என்று அவர் கூறுகிறார்.

”பணமதிப்பிழப்பு, கொரோனா தொற்று, NBFC நெருக்கடி மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை அமைப்புசாரா துறையை உலுக்கிவிட்டது. கடந்த ஏழாண்டுகளில் பொருளாதாரம் நான்கு முறை பெரும் அதிர்ச்சியை சந்தித்தது. அப்படி இருக்கும்போது அமைப்புசாரா துறை அமைப்புசார்ந்த துறைக்கு நிகராக எப்படி முன்னேற முடியும். தரவுகளை சேகரிக்கும் முறையை மாற்ற வேண்டும் என்று 2016 இல் இருந்து மீண்டும் மீண்டும் எழுதி வருகிறேன். ஆனால் அரசு இதை செய்வதில்லை. எனவே நாம் அனைவரும் தவறான தரவுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்கிறோம்,” என்கிறார் அருண் குமார்.

”பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு 40 சதவிகித நடைபாதை வியாபாரிகளின் வணிகம் மூடப்பட்டுவிட்டதாக வியாபாரிகள் சங்கத் தலைவர் என்னிடம் கூறினார். ஆனால் இது வளர்ச்சி புள்ளிவிவரங்களில் பிரதிபலிக்கவில்லை. எட்டு சதவிகித வளர்ச்சி ஏற்படுகிறது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறோம்,” என்றார் அவர்.

“அதிகாரப்பூர்வமாகப்பார்த்தால், 2017-18ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் எட்டு சதவிகித வளர்ச்சி காட்டப்பட்டிருந்தது. கொரோனா தொற்றுநோய்க்கு முன், 2019-20 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 3.2 சதவிகித வளர்ச்சி காட்டப்பட்டது அதாவது அரசு புள்ளிவிவரங்களில் கூட வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது. ஏனெனில் பொருளாதாரத்தில் கிராக்கி (demand) இருக்கவில்லை. சாதாரண நுகர்வோரால் கிராக்கி உருவாக்கப்படுகிறது. அமைப்புசாராத் துறையில் 94 சதவிகிதமாக உள்ள தொழிலாளர்களால் பெரும்பாலான கிராக்கி ஏற்படுகிறது. அவர்களுடைய தொழில் படுத்துவிட்டது. வருமானம் குறைந்துவிட்டது, அந்த நிலையில் எங்கிருந்து கிராக்கி வரும்,” என்று அவர் வினவினார்.

“கொரோனா தொற்றுநோய்க்கு முன்பே நாட்டில் மந்தநிலை இருந்தது. 3.2 சதவிகித வளர்ச்சி விகிதம் அமைப்பு சார்ந்த துறையினுடையது. இதில் அமைப்புசாரா துறையையும் சேர்த்திருந்தால் வளர்ச்சி விகிதம் நெகட்டிவாக இருந்திருக்கும். பொருளாதாரம் மீட்சி அடைந்துள்ளதாக அரசு கூறுகிறது. ஆனால் இது அமைப்புசார்ந்த துறையின் மீட்சி,” என்று அவர் குறிப்பிட்டார்.

“இ-காமர்ஸ் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கொரோனா காலம் மற்றும் அதன் பிறகு இந்தத்துறை 20 முதல் 40 சதவிகிதம் வளர்ச்சி கண்டது. ஆனால் பொருளாதாரத்தின் வேகம் நின்றுவிட்ட நிலையில் இந்த வளர்ச்சி எங்கிருந்து வந்தது. அமைப்பு சாரா துறையின் கிராக்கியின் ஒரு பகுதியை அது விழுங்கிவிட்டது. தோல் பொருட்களுக்கு கிராக்கி அதிகரித்திருப்பதாக அந்த துறையின் உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள். தோல் பொருட்கள் துறையில் அமைப்புசாரா துறையின் பங்கு 80 சதவிகிதம். இங்கு குறையும் கிராக்கி, அங்கு வளர்ச்சியாக மாறுகிறது. லக்கேஜ் தொழில், பிரஷர் குக்கர் தொழில், பிஸ்கட் தொழிலிலும் இதேதான் நடக்கிறது. அமைப்புசாரா துறையின் கிராக்கி, அமைப்பு சார்ந்த துறையை நோக்கி நகர்கிறது,” என்று அருண் குமார் குறிப்பிட்டார்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அமைப்புசாரா துறையின் பங்களிப்பு சுமார் 50 சதவிகிதம் ஆகும். நாட்டின் தொழிலாளர்களில் 90 சதவிகிதம் பேர் அமைப்புசாரா துறையில் பணிபுரிகின்றனர்.

பாஜகவின் மூன்றாவது ஆட்சிக்காலத்தில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று பிரதமர் நரேந்திர மோதி சமீபத்தில் கூறியிருந்தார்.

ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தில் இருந்து மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவது பற்றி இந்தியா பேசுவது நல்ல விஷயம். ஆனால் இந்தியாவின் மக்கள்தொகை மிக அதிகம். இங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால்தான் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று பேராசிரியர் பானுமூர்த்தி கூறுகிறார்.

“மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற விரும்புவது அல்லது இலக்கு வைப்பது ஒரு நல்ல விஷயம். ஆனால் நாட்டின் குடிமக்களின் நல்ல வாழ்க்கைத் தரத்தை நாம் உறுதி செய்ய வேண்டும். மக்களிடையே தனிநபர் ஜிடிபி இடைவெளி அதிகமாக ஆகக்கூடாது. அதாவது வருமான சமத்துவமின்மை குறைக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.