கோட்டா தொடர்ந்து இருந்திருந்தால்… !! (கட்டுரை)
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளைப் பற்றி ஆய்வுகளை நடத்தி, அடிக்கடி பெறுமதி வாய்ந்த அறிக்கைகளை வெளியிடும் ‘வேடிட்டே ரிசேர்ச்’ என்ற அரச சார்பற்ற புத்திஜீவிகள் சபை, கடந்த வருடம் இடம்பெற்ற பொதுமக்கள் போராட்டத்தைப் பற்றிய கருத்துக் கணிப்பொன்றை நடத்தி, அதன் பெறுபேறுகளை அண்மையில் வெளியிட்டு இருந்தது.
அதன்படி, இலங்கை மக்களில் 60 சதவீதமானோர், ‘அரகலய’ என்று பொதுவாக அழைக்கப்பட்ட அப்போராட்டத்தால் மக்களின் அபிலாஷைகள் நிறைவேறவில்லை என்று தெரிவித்து இருந்தனர். 29 சதவீதமானோர் எக்கருத்தையும் தெரிவிக்கவில்லை. 11 சதவீதமானோர் மக்கள் எழுச்சியால், மக்களின் அபிலாஷைகள் நிறைவேறியுள்ளதாக கூறியுள்ளனர். அவர்கள், ஐக்கிய தேசிய கட்சிக்காரர்களாகத் தான் இருக்க வேண்டும்.
இனவாதத்தைத் தூண்டி, பதவிக்கு வந்து நாட்டின் பொருளாதாரத்தை முற்றாகவே சீரழித்து, வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ராஜபக்ஷர்கள் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினர் இந்தக் கருத்துக் கணிப்பின் பெறுபேறுகளையும், மீண்டும் தலைதூக்குவதற்காகப் பாவிக்கிறார்கள். “மக்களில் பொரும்பாலானோர் போராட்டத்தை நிராகரித்துள்ளனர்” என்று இந்தக் கருத்துக் கணிப்பைக் காட்டி வாதிடுகின்றனர்.
மக்கள் எழுச்சியின் காலத்தில், பதுங்கி இருந்துவிட்டு, பின்னர் தாம் மட்டுமன்றி இந்நாட்டை ஆட்சி செய்த சகல அரசாங்கங்களும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பாளிகள் என்று கூறியவர்கள், இப்போது தாமல்ல, மக்கள் போராட்டமே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறுமளவுக்கு, மக்களை முட்டாள்களாகக் கருதுகின்றனர்.
கடந்த வருடம், சுமார் நான்கு மாதங்களாக நீடித்த மக்கள் போராட்டமானது, எந்தவோர் அரசியல் கட்சியாலோ அமைப்பாலோ ஏற்பாடு செய்யப்பட்டதல்ல. அது, முன்னொருபோதும் காணாத பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களின் கோபாவேசத்தின் விளைவாகும். வெடிக்கும் தருவாயில் அது இருந்த போது, சில சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் அதனை வழிநடத்த முன்வந்தாலும், போராட்டமானது அவர்களால் உருவாக்கப்பட்டதொன்றல்ல!
கடந்த வருட ஆரம்பத்தில், எரிபொருளுக்கும் எரிவாயுவுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவியதை அடுத்து, பலர் அப்பொருட்களை கொள்வனவு செய்வதற்காக, கிலோ மீற்றர் தூரத்தில் வாரக் கணக்கில் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியதாயிற்று! 10 மணித்தியாலத்துக்கு மேற்பட்ட மின்வெட்டும் அமலாக்கப்பட்டது. இந்த நிலையில் மக்கள் கொதித்தெழுந்து, ஜனாதிபதியின் இல்லத்தின் முன் நடத்திய ஆர்ப்பாட்டம், பின்னர் இலட்சக் கணக்கில் மக்கள் கலந்து கொண்ட தொடர் போராட்டமாக மாறியது.
அவர்கள் வெறுமனே, வரிசைகளில் காத்திராமல் எரிபொருளையும் எரிவாயுவையும் கொள்வனவு செய்யும் வசதிக்காக போராடவில்லை. பொருளாதார நெருக்கடியால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த தமது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் தமது பொருளாதார நிலைத்தன்மையை உறுபடுத்தி, தமது குடும்பத்துக்கு போதுமான உணவையாவது நிரந்தரமாக வழங்கக்கூடிய வருமானத்துக்காகவும் தமது கண்முன்னேயே இடம்பெறும் மாபெரும் ஊழல், மோசடி, வீண்விரயம் ஆகியவற்றை நிறுத்துவதற்காகவும் அவ்வாறு மக்கள் சொத்தை அபகரித்தவர்களை தண்டிப்பதற்காகவுமே அவர்கள் பேராராடினர். போராட்டத்தின் பிரதான சுலோகமாக ‘கோட்டா கோ ஹோம்’ என்பது இருந்தது.
இடதுசாரி இலக்கியங்களின் செல்வாக்குக்கு உட்பட் சிலர், ஜனாதிபதியின் அலுவலகத்தை பொது நூலகமாக்குவதற்கும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை பொதுமக்களின் பொழுதுபோக்குத் தளமாக மாற்றுவதற்கும் சிறுபிள்ளைத்தனமாக கனவு கண்டனர்.
ஆனால், போராட்டத்தின் விளைவாகவே பதவிக்கு வந்த புதிய ஆட்சியாளர்களால் அப்போராட்டம் திடீரென 2022 ஜூலை 22 ஆம் திகதி மிகக் கொடூரமாக நசுக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் இராணுவத்தினராலும் பொலிஸாராலும் காலிமுகததிடலிலிருந்து அடித்து விரட்டப்பட்டனர். போராட்டக்காரர்களின் சிறுபிள்ளைத்தனமான எதிர்ப்பார்ப்புகள் மட்டுமன்றி, நியாயமான எதிர்ப்பார்ப்புகளும் கனவுகளும் காற்றில் பறந்துவிட்டன.
அவ்வளவு காலம் பதுங்கியிருந்த ஊழல் பேர்வழிகள் புதிய நிர்வாகத்தை கேடயமாக பாவித்து தலைதூக்கினர். பட்டினிக்கும் அவல வாழ்க்கைக்கும் எதிராக போராடியவர்கள், பதுங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையிலேயே, ஏறத்தாழ வாராந்தமாக மிகவும் பயனுள்ள அரசியல் பொருளாதார ஆய்வறிக்கைகளை வெளியிடும் ‘வெரிட்டே ரிசேர்ச்’ நிறுவனம், மக்கள் போராட்டம் பற்றிய இந்தக் கருத்துக் கணிப்பின் பெறுபேறுகளை வெளியிட்டுள்ளது.
“அரகலயவால் மக்களின் அபிலாஷைகள் நிறைவேறியதாக நீங்கள் கருதுகிறீர்களா?” என்பது, அந்நிறுவனம் இக்கருத்துக் கணிப்புக்காக மக்களிடம் முன்வைத்த ஒரு கேள்வியாகும்.
போராட்டம் எவ்வாறு முடிவடைந்தது என்பதன் அடிப்படையில் பார்த்தால், போராட்டத்தால் மக்களின் அபிலாஷைகள் நிறைவேறியதா என்பதை அறிய, கருத்துக் கணிப்புக்கள் நடத்தத் தேவையில்லை. ஏனெனில், அது முறியடிக்கப்பட்டு நசுக்கப்பட்ட போராட்டமாகும். நசுக்கப்பட்ட போராட்டமொன்றால், மக்களின் அபிலாஷைகள் நிறைவேறியதாக கூற முடியாது.
போராட்டத்தால் மக்கள் எதிர்ப்பார்த்த எதுவுமே நிறைவேறவில்லை என்று கூற முடியாது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையாகும். அது நிறைவேறினாலும் அவருக்குப் பதிலாக, அவரது கட்சியின் உதவியாலேயே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகி இருக்கிறார். கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவின் பதவி ஏற்றலோ, அதுவரையிலான பொருளாதார போக்கிலோ அல்லது திட்டங்களிலோ எவ்வித மாற்றத்தையும் கொண்டு வரவில்லை.
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத் திட்டத்தின் காரணமாக, பல உலக நிதி நிறுவனங்களால் கடன் பெற வாய்ப்பு கிடைத்தமை, தற்போதைய அரசாங்கத்தின் பெரு வெற்றியாகவும் பொருட்களுக்கான வரிசைகள் இல்லாமை, பொருளாதார முன்னேற்றமாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
அவை வெற்றியா, முன்னேற்றமா என்பது தனியாக ஆராயப்பட வேண்டிய விடயமாகும். அவை, வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும் அந்த நிலைமைக்கான அடித்தளத்தை இட்டவரும் பொருளாதாரத்தை இறுதியாக அழித்தவரும் ஜனாதிபதி கோட்டாபயாவார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை, தாமே ஆரம்பித்ததாக ஜனாதிபதி விக்கிரமசிங்க, பல இடங்களில் கூறிய போதிலும் கோட்டாவே அதைக் 2022 மார்ச் மாதம் ஆரம்பித்தார். அவ்வேலைத்திட்த்தின் கிழ், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புப் பணியை வழிநடத்தக்கூடிய நிபுணத்துவ அறிவோ அல்லது அதற்கான செல்வாக்கோ இலங்கையிலுள்ள எந்தவொரு நிறுவனத்திடமும் இல்லை. எனவே, அதற்காக சர்வதேச நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களான ‘லசாரட்’, ‘கிளிபர்ட் சான்ஸ்’ ஆகிய நிறுவனங்களும் கோட்டாவின் காலத்திலேயே தெரிவு செய்யப்பட்டன. அவற்றின் ஆலோசனைப் படியே தற்போது அப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி சீர்த்திருத்தங்களைப் பற்றி, நாணய நிதியம் கடந்த காலங்களில் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும், உண்மையிலேயே அந்நிதியம் கடந்த வருடம் பெப்ரவரி மாதமே, அதாவது கோட்டா அந்நிதியத்திடம் உதவி கோர முன்னரே, அவற்றை பற்றி தன்னிச்சையாகவே முடிவு செய்து கருத்து தெரிவித்து இருந்தது. அவை கடந்த வருடம் மார்ச் மாதம் அந்நிதியம் இலங்கையைப் பற்றி வெளியிட்ட நாட்டைப் பற்றிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
நாணய நிதியத்துடன் அரசாங்கத்தின் சார்பாக தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வரும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவையும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்த்தனவையும் அப்பதவிகளுக்கு நியமித்தவரும் கோட்டாவே.
நாணய நிதியம் உதவி வழங்க முன்வந்தால் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களும் மீண்டும் இலங்கைக்கு கடன் வழங்க முன்வரும் என்பதும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதுதான் தற்போது நடைபெறுகிறது.
அக்காலத்திலேயே உலக வங்கி தாம் ஏற்கெனவே இலங்கைக்கு வேறு திட்டங்களுக்காக வழங்கியிருந்த நிதியை எரிவாயு போன்றவற்றுக்காக செலவிட அனுமதி வழங்கியிருந்தது. எனவே, மக்கள் போராட்டத்துக்கான உடனடி காரணிகள் தற்போது காணக்கூடியதாக இல்லாதவிட்டாலும், போராட்டத்துக்கு முன்னர் இருந்த பொருளாதார பயணமே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அப்போதிருந்த அடிப்படை பொருளாதார காரணிகளும் மாறவில்லை. அவை, நாளை மக்களின் வாழ்வை அதள பாதாளத்துக்கு இழுத்துச் செல்லும் அபாயம் இன்னமும் இருக்கிறது.
அதாவது, கோட்டா தொடர்ந்து பதவியில் இருந்தாலும், தற்போதைய நிலைமை இதுவாகவே தான் இருந்திருக்கும். கோட்டாவைப் போலன்றி, ரணிலுக்கு இந்த விடயங்களைப் பற்றி, எந்த மேடையிலும் மிக அழகாகவும் விவரமாகவும் எடுத்துரைக்கும் அறிவாற்றல் இருக்கிறது.
நாட்டின் தற்போதைய நிலைமையை பொறுத்தவரை, இருவருக்கும் இடையிலான வேறுபாடு அவ்வளவு தான்! கோட்டாவின் ஆட்சி நீடித்திருந்தால் அரசியல் ரீதியாக நாட்டில் பல கொந்தளிப்புகள் இடம்பெற்றிருக்கலாம்.
போராட்டத்தின் பின்னரும் பொருளாதாரத்தில் மாற்றமேதும் இடம்பெறவில்லை என்பதை, மக்கள் உணர்ந்துள்ளதாக மேற்படி கருத்துக் கணிப்பின் மற்றொரு கேள்விக்கு மக்கள் அளித்துள்ள பதில்களால் தெரிகிறது.
“நாட்டை மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும்” என்ற கேள்விக்கு, 51 சதவீதமானோர் ஊழல் மலிந்த நிலைமையையும் தவறான நிர்வாகத்தையும் மாற்ற வேண்டும் என்று பதிலளித்துள்ளனர். 34 சதவீதமானோர் பொருளாதார முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 15 சதவீதமானோர் மட்டுமே, அரசாங்கத்தின் நிலைப்பாடான ஜனநாயகத்தை விட பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முதலிடம் வழங்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.