;
Athirady Tamil News

மாயக் காட்சிகளை புரிந்து கொள்ளல்!! (கட்டுரை)

0

நாட்டில் நடக்கின்ற சம்பவங்கள், நகர்வுகள் அனைத்தும் நாட்டினதும் மக்களினதும் முன்னேற்றத்துக்கானவை மட்டுமே என்று சொல்லிவிட முடியாது. மக்களது கவனத்தை திசை திருப்புவதற்காகவும் வேறு ஒரு விடயத்தின்பால் பராக்குக் காட்டி காலத்தை இழுத்தடிப்பதற்காகவும் நடந்தேறுகின்ற சம்பவங்கள் ஏராளம் உள்ளன.

கடந்த இரண்டு வருடங்களாக, இலங்கை எந்த நிலையில் இருக்கின்றது என்பதை உலகமே அறியும். பிற்போக்குத்தனமான, தூரநோக்கற்ற ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் காரணமாக, அரசியல் ஆளுகையிலும் பொருளாதாரத்திலும் முன்னொருபோதும் இல்லாத வீழ்ச்சி ஏற்பட்டது.

இந்த விடயத்தில் முழுப் பூசணிக்காயை சோற்றில் மூடி மறைப்பதற்கு அரசாங்கம் கடுமையான பிரயத்தனங்களை எடுத்து தோற்றுப்போனது. பொருளாதார நெருக்கடி, இன்று வரையும் இலங்கை பிரஜைகள் ஒவ்வொருவரது வாழ்க்கையிலும், சிறியதும் பெரியதுமான தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றது.

பொருனாதார நெருக்கடி உச்சத்தில் இருந்த போதுதான், உள்ளூராட்சி சபை தேர்தல் அறிவிப்பு வெளியானது. தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான நிதிநிலைமை இல்லை என்பதும், மக்கள் மனநிலை ரீதியாக தயாரில்லை என்பதும் நன்கு தெட்டத்தெளிவாக தெரிந்திருக்க, தேர்தலுக்கு தடபுடலான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதான ஒரு மாயத் தோற்றம் கட்டமைக்கப்பட்டது.

தேர்தல் என்ற அறிவிப்பு வெளியான பிறகு கணிசமான மக்கள் பொருளாதார நெருக்கடியை மறந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நமது ஊரில், வட்டாரத்தில் யார் வேட்பாளர் என்ற புதினம்தான் அவர்கள் ஆர்வம் காட்டும் விவகாரமாக மாறிப்போனது. இருப்பினும் கூட, வாக்களிப்பு என்ற ‘கிளைமேக்ஸ்’ வருவதற்கு முன்னரே தேர்தல் என்ற காட்சி இடைநிறுத்தப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர், நாட்டின் பொருளாதார குறிகாட்டிகளில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன என்பதை யாரும் மறுக்க முடியாது. அனுபவமும் அறிவும் சர்வதேசத்தின் நட்புறவும் மிக்க அவரைப் போன்ற ஒருவரால் அன்றி, வேறு எவராலும் இந்த நிலைமையை சமாளித்திருக்க முடியாது.

எவ்வாறிருப்பினும், இலங்கையில் ஏற்பட்ட டொலர் தட்டுப்பாடு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளை சீர்செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள், பொதுவாக தற்காலிகமானவை ஆகும். ‘உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு’ என்று பெயர் வைக்கப்பட்டாலும் இதுபோன்ற பல ஏற்பாடுகள் பெரும்பாலும் வெளிநாட்டு மூலங்களை நம்பியிருப்பவையாகும்.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, ஏற்றுமதியை அதிகரித்து, இறக்குமதியை குறைத்து, சென்மதி நிலுவையை சிறந்த நிலையில் பேணி, வெளிநாட்டு ஒதுக்கை ஸ்திரமாக்கி, இலங்கை நாணயத்தின் பெறுமதியை அதிகரிப்பதன் ஊடாக நீண்டகால அடிப்படையில் டொலர் அல்லது பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்படவில்லை.

அது உடனடியாக சாத்தியமற்றதாகவும் இருந்தது. வெளிநாட்டு நிதி உதவிகள், வெளியில் இருந்து கிடைக்கப் பெற்ற கடன்கள் என கிட்டத்தட்ட வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தன்மைகொண்ட தீர்வுகளே உடனடிச் சாத்தியமாக இருந்தன.

இதையடுத்து, நாட்டின் பொருளாதார வரைபில் மேல்நோக்கிய ஒரு நகர்வு அவதானிக்கப்பட்டது. அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி கணிசமாக உயர்வடைந்தது மட்டுமன்றி, பொருளாதார குறிகாட்டிகளிலும் முன்னேற்றம் எற்பட்டது.

இதனால் சில பொருட்களின் விலைகள் குறைவடைந்த போதும் அது பெரிய அளவில் இடம்பெறவில்லை. இந்த முயற்சிகள் மக்களின் வாழ்க்கையை பழைய நிலைக்கு கொண்டு வரவில்லை என்றாலும் கூட, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை துளிர்விடச் செய்தன.

ஆனாலும், இந்த முன்னேற்றங்கள் எல்லாம் தற்காலிகமானவை என்றும், மீண்டும் நாட்டின் பொருளாதாரம், நெருக்கடி நிலைக்கு தள்ளப்படும் என்றும் பொருளாதார நிபுணர்களும் அவதானிகளும் அப்போதிலிருந்தே கூறி வருகின்றார்கள். ‘இறக்குமதி செய்யப்பட்ட’ மூலங்களை நம்பியிருப்பதால் அதற்கான சாத்தியங்களே அதிகம் என அவர்கள் அபிப்பிராயப்பட்டனர்.

இந்தக் கருத்துகளை அரசாங்கம் பெரிதாக கண்டுகொள்ளாதது போலவே நடந்து கொண்டது. தற்போது எடுக்கப்படுகின்ற முன்னெடுப்புகள் முழுமையாக நாட்டை பழைய நிலைக்கு கொண்டுவரும் என்பதான தோற்றப்பட்டை அரசாங்கம் ஏற்படுத்தியிருந்தது எனலாம்.

இப்போது மீண்டும் டொலரின் பெறுமதி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. விலை குறைக்கப்பட வேண்டிய பல பொருட்கள்-சேவைகள் என்பவற்றின் விலைகள் இன்னும் குறைக்கப்படாதிருக்கின்ற ஒரு சூழ்நிலையில், சிறிய அளவில் குறைக்கப்பட்ட பொருட்களுக்கான விலைகளும் தவணை முறையில் மீளவும் அதிகரிக்கப்படுகின்றன. சேவைக் கட்டணங்களில் அதைவிட பன்மடங்கு அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, “கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட முன்னெடுப்புகளுக்கு எல்லா தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால் நாட்டில் மீண்டும் பின்னடைவு நிலை ஏற்படும். எனவே அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்” என்று அரசாங்கத்தில் உள்ளவர்களே கடந்த சில நாள்களாக பேசத் தொடங்கியுள்ளமை கவனிப்புக்குரியது.

முன்னதாக, மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் பொதுவாகவே நிலைபேறான தீர்வுகளை தரமாட்டாதவை என்றும் மீண்டும் நாட்டில் பொருளாதார தேக்கநிலை உருவாகலாம் என்றும் அதவானிகள் முன்கணித்துக் கூறிய வேளையில், அதனை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் எகத்தாளமான தோரணையில் செயற்பட்ட அரசாங்கம், இப்போது வேறு ஒரு கதை சொல்கின்றது.

இதற்கு நடுவிலேயேதான் 13ஆவது திருத்தத்தின் அமலாக்கம் பற்றியும் மாகாண சபைத் தேர்தல் பற்றியும் பேசப்படுகின்றது. அதுமட்டுமன்றி, அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாம் என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றமை கவனிப்புக்குரியது.

நாடு அதல பாதாளத்தில் இருந்த ஒரு கட்டத்தில், தேர்தல் ஒன்றை நடத்தவே முடியாது என்பதை நன்றாக அறிந்து வைத்துக் கொண்டு, உள்ளூராட்சி தேர்தல் படம் ஒன்றைக் காட்டி, மக்களை சில காலத்துக்குப் பராக்குகாட்டி, காலத்தை இழுத்தடித்தது போல, இன்னுமொரு மாயக் காட்சியை ஓடவிட அரசாங்கம் முனைகின்றதா? அல்லது, நிஜமாகவே தேர்தலை நடத்தி, 13 இனை வழங்க முயல்கின்றதா என்ற கேள்விகள் எழுகின்றன.

இன்னும் நாடு முழுமையான ஸ்திரநிலைக்கு வரவில்லை. கடன்மறுசீரமைப்பு இன்னும் முடிவுறுத்தப்படவில்லை என்பதுடன், உள்நாட்டு பொருளாதார கட்டமைப்பில் காத்திரமான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. விலையேற்றங்கள் மற்றும் தளம்பலான போக்குகள், மீண்டும் நெருக்கடிகளை நோக்கி இழுத்துச் செல்கின்றதா என்ற கவலையும் நாட்டு மக்களுக்கு ஏற்ட்டுள்ளது.

ஆகவே, தேர்தல் ஒன்றை நடத்தும் நிலை இப்போதும் கூட இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உள்ளூராட்சி தேர்தலையே நடத்த முடியாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், 13ஆவது திருத்தத்தோடு பின்னிப் பிணைந்த மாகாண சபை தேர்தலை நடத்துவதோ அல்லது ஜனாதிபதி தேர்தலுக்குச் செல்வதோ மிகக் கிட்டிய காலத்தில் நடைமுறைச் சாத்தியம் என்று கருத இயலுமா?

உள்ளூராட்சி தேர்தலை மட்டுமன்றி இழுத்தடிக்கப்பட்டு வருகின்ற மாகாண சபை தேர்தலையும் நடத்த வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆயினும் தேர்தலுக்கான நிதி வசதியோ, சாதக நிலையோ இல்லாத நிலையில் வெறுமனே அதுபற்றிக் கதைப்பது, அதுவும் அதிகாரப் பகிர்வுடன் மாகாண சபைகளை நிறுவப் போவதாக கூறுவதுதான் ஆழமாக நோக்கப்பட வேண்டிய விடயமாகும்.

உண்மையில், தமிழர்களுக்கு தீர்வை வழங்குமாறு சர்வதேச நாடுகள் பல அழுத்தம் கொடுக்கின்றன. கடன் உதவிகளின் போதும் இவ்வாறான நிபந்தனைகள் முன்வைக்கப்படுவதை நாம் அறிவோம். அத்துடன் தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு சிறிய தீர்வையாவது வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி இருப்பதாக தெரிகின்றது.

ஆனால், இதுவெல்லாம் இப்போது எந்தளவுக்கு சாத்தியம் என்பதுதான் இங்குள்ள வினாவாகும்.

மாகாண சபை தேர்தலை நடத்துவது என்றால் நிதி தேவை என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மிக முக்கியமாக, மாகாண சபை தேர்தலுக்கு முன்னதாக 13ஆவது திருத்தத்தை அமல்படுத்துவதா, எந்த அதிகாரங்களை வழங்குவது என்ற முடிவை அரசாங்கம் எடுத்தாக வேண்டும்.

சரத் வீரகேகரகளும் உதய கம்மன்பிலக்களும் மட்டுமன்றி வேறுபல தரப்பினரும் பகிரங்கமாகவே 13 இனை எதிர்க்கின்றனர். இவர்களது வாய்க்கு ஜனாதிபதி தரப்பு பூட்டுப் போடவில்லை. மாறாக, பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து தரப்பினரதும் பூரண சம்மதத்தை வேண்டி நிற்கின்றார்.

எனவே இப்போது 13 இனை நடைமுறைப்படுத்துவதும் அதன்பொருட்டு மாகாண சபை தேர்தலை நடத்துவதும் அவ்வளவு சுலபமான, அடுத்த வாரம் நடந்து விடக் கூடிய காரியங்கள் அல்ல என்பதை, அரசியலறிவு உள்ள அனைவரும் அறிவார்கள்.

அப்படியாயின், உள்ளூராட்சி தேர்தல் என்று கதைத்து மக்களை பராக்குக் காட்டியது போல, மீண்டும் மாகாண சபை தேர்தல், 13ஆவது திருத்தம், அதிகார பரவலாக்கல், ஜனாதிபதி தேர்தல் என்ற மாயத் தோற்றங்களை ஏற்படுத்தவும், அதன்மூலம் நாட்டில் நடக்கின்ற நிஜமான நெருக்கடிகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவும் சூட்சும முயற்சிகள் எடுக்கப்படுகின்றதா என்பதை மக்கள் சிந்திக்காமல் விட முடியாது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.