;
Athirady Tamil News

குருந்தூர் மலை பொங்கல் விழாவை இனவாதப்படுத்தும் சக்திகள் !! (கட்டுரை)

0

வடக்குக் கிழக்கைச் சேர்ந்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கொழும்பிலுள்ள வீடுகளை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்துவதற்கான அழைப்பை, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில விடுத்திருக்கின்றார்.

முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் அமைந்துள்ள ஆதி சிவன் ஐயனார் கோவிலில், கடந்த வாரம், நீதிமன்ற அனுமதியோடு பொங்கல் விழா நடைபெற்றது. அந்தப் பொங்கல் விழாவை தடுத்து நிறுத்துவதற்கு, பொலிஸாரும் தொல்லியல் திணைக்களமும் பௌத்த சிங்கள அடிப்படைவாத அமைப்புகளும் பல வழிகளிலும் முயன்றன. இறுதியாக, நீதிமன்றம் சென்று பொங்கல் விழாவை தடுத்து நிறுத்துவதற்கு முயன்றன.

எனினும், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம், பொங்கல் விழாவை வரைமுறைகளுடன் நடத்துவதற்கான அனுமதியை வழங்கியதுடன், விழாவுக்கான பாதுகாப்பை, பொலிஸார் உறுதிப்படுத்தவும் உத்தரவிட்டது. இதனால், ஏற்கெனவே நடக்க இருந்து, பௌத்த சிங்கள அடிப்படைவாத அமைப்புகளால் தடுத்து நிறுத்தப்பட்ட குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் பொங்கல் விழா, கடந்த வாரம் நடைபெற்று முடிந்தது.

வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் கோவில், முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் கோவில் என்பன, தற்போது தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. காலம் காலமாக, தமிழ் மக்களால் வழிபடப்பட்டு வந்த இந்தக் கோவில்கள் அமைந்திருக்கின்ற பகுதிகளை, தொல்லியல் பகுதிகள் என்று வரையறுத்துக் கொண்டு, பௌத்த சின்னங்களை அமைக்கும் ‘ஆக்கிரமிப்பு அரசியல்’ முன்னெடுக்கப்படுகின்றது.

குருந்தூர் மலையில் பௌத்த சின்னங்கள் பல நூற்றாண்டுகளாக இருக்கின்றன. ஆனால், அது சிங்கள பௌத்தத்தால் உருவானது என்ற ஆதரமற்ற உரிமை கோரல்களால், அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக இன முறுகல்களை தோற்றுவிக்கும் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றது.

இலங்கையில் தமிழ்ப் பௌத்தம் செழித்தோங்கிய காலம் உண்டு. அந்தக் காலத்தின் எச்சங்களே, குருந்தூர் மலையில் இருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்; அதைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

ஆனால், வரலாற்று எச்சங்களை, அதன் அடையாளங்களோடு பாதுகாப்பதற்குப் பதிலாக, தங்களின் இனவாத, மதவாத அரசியலுக்காக, தென் இலங்கை அரசியல் சக்திகள், சிங்கள பௌத்த அடையாளங்களை விதைக்க முயல்கின்றன. குருந்தூர் மலையில் நீதிமன்ற அனுமதியின்றி விகாரை அமைக்கப்பட்டு, வரலாற்று எச்சங்களை அழிக்கும் முயற்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

குருந்தூர் மலையில், தமிழ்ப் பௌத்த எச்சங்கள் காணப்படுவது போல, ஆதிசிவன் ஐயனார் வழிபாட்டு முறையும் நூற்றாண்டுகளாக காணப்படும் ஒன்று! அப்படியான நிலையில், அமைதியாக நடைபெற்றுவந்த குருந்தூர் மலை ஆதிசிவன் வழிபாடுகளுக்கு, தொல்லியல் திணைக்களம் தடைகளை விதித்தது. அப்பகுதி மக்களின் மத நம்பிக்கைகள், வழிபாட்டு உரிமைகள் மீது தடைகளை ஏற்படுத்தி அச்சுறுத்தியது.

இந்தத் தடை நடவடிக்கைகளுக்கு எதிராக, தமிழ் மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள். இதற்கு அந்தப் பகுதி தமிழ்த் தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். இதனை மோப்பம் பிடித்த இனவாத அரசியல் சக்திகள், தங்களின் தேர்தல் வெற்றிக்காக குருந்தூர் மலை, வெடுக்குநாறி விவகாரங்களை கையில் எடுத்துக் கொண்டிருக்கின்றன.

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, பிவித்திரு ஹெல உறுமயவின் உதய கம்மன்பில ஆகியோர், குருந்தூர் மலையில் பொங்கல் விழா நடத்தப்பட்டதை சகித்துக் கொள்ள முடியாமல், சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத் தீயை எரிய வைத்திருக்கிறார்கள். இந்த மூன்று அரசியல்வாதிகளும் அடிப்படைவாத சிங்களவாதிகளாக அடையாளம் பெற்றவர்கள்.

கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு, அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவர்கள். ஆனால், கடந்த வருடம் ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டம், பொதுஜன பெரமுனவை மக்கள் மத்தியில் பிரபலமில்லாமல் ஆக்கியது.

இன்றைக்கு தேர்தலொன்று நடைபெறுமாக இருந்தால் பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்ற கட்சிகளுக்கு பின்னால்தான் வரும் என்கிற நிலை உண்டு. அண்மைய கருத்துக்கணிப்புகளும் அதையே பிரதிபலிக்கின்றன. அப்படியான நிலையில், சரத் வீரசேகர, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோர் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

அப்படியான நிலையில், அவர்கள் வெற்றிபெறுவதற்காக கடந்த காலங்களில் கையாண்ட அதே இனவாத அரசியல் அணுகுமுறையை, இப்போதும் மூர்க்கமாக முன்னெடுக்கிறார்கள். அதன்மூலம், சாதாரண சிங்கள மக்களை இனவாத அலைக்குள் தள்ளி, தங்களால் வெற்றியை உறுதியாக்க முடியும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் பொங்கல் விழா நடைபெற்றதை சகித்துக் கொள்ள முடியாத சரத் வீரசேகர, பொங்கல் விழாவை நடத்துவதற்கான உத்தரவை வழங்கிய நீதிபதியை, மனநோயாளி என்று விளித்து குற்றஞ்சாட்டியிருக்கிறார். பாராளுமன்றத்துக்குள் என்ன பேசினாலும், சிறப்புரிமை என்கிற ஒன்றை வைத்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதால் சரத் வீரசேகர இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களில் ஈடுபடுகின்றார். அதன்மூலம், தன்னை ‘பௌத்தத்தின் காவலன்’ என்று நிறுவ முயல்கின்றார்.

இன்னொரு புறம், விமல் வீரவங்ச, “அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படாத நிலையிலேயே, குருந்தூர் மலையை தங்களின் சொந்த மலை போல காட்டிக் கொண்டு, தமிழ்த் தலைவர்கள் செயற்படுகிறார்கள். 13ஐ முழுமையாக அமலாக்கினால், சிங்கள மக்களை வடக்கு – கிழக்கில் அனுமதிக்கவே மாட்டார்கள்..” என்ற தொனியில் பேசியிருக்கிறார். அத்தோடு பொங்கல் விழா நடத்தப்பட்டதை, தமிழ்த் தலைவர்கள் பெரிய வெற்றியாக கொள்ள வேண்டியில்லை. சிங்கள மக்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்று எச்சரித்திருக்கிறார்.

சரத் வீரசேகர, விமல் வீரவங்ச ஆகியோரின் அச்சுறுத்தல்களைத் தாண்டி, இந்த விடயத்தில் உதய கம்மன்பில ஒருபடி மேலே சென்றிருக்கிறார். அதுதான், வடக்குக் கிழக்கைச் சேர்ந்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களில் கொழும்பிலுள்ள வீடுகளை முற்றுகையிடுவதற்கான அழைப்பு!

குறிப்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டை முற்றுகையிட்டு போராட, பௌத்த சிங்களவர்கள் தயாராக வேண்டும் என்றிருக்கிறார்.

அத்தோடு, வடக்கு – கிழக்கில் பௌத்தர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது போலான விடயத்தை, தென்இலங்கையில் விதைக்கிறார். வடக்கு – கிழக்கில் பௌத்த வழிபாட்டு உரிமைகளை யாரும் எந்தக் காலத்திலும் தடுக்கவில்லை. மாறாக, வடக்கு- கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெறும் அத்துமீறிய பௌத்த ஆக்கிரமிப்பு, அடையாளத் திணிப்புக்கு எதிராகவே மக்கள் போராடுகிறார்கள்.

குருந்தூர் மலையில் காணப்படும் தமிழ்ப் பௌத்த எச்சங்களை, அப்படியே பாதுகாக்க வேண்டும் என்பதுதான் தமிழ் மக்களின் கோரிக்கை. வடக்கு – கிழக்குக்கு வெளியில் காணப்படும் வரலாற்று எச்சங்கள், அப்படியே தொல்லியல் திணைக்களத்தால் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், வடக்கு – கிழக்கில் காணப்படும் வரலாற்று எச்சங்களைக் கொண்ட பகுதிகளில் மாத்திரம், சிங்கள பௌத்த அடையாளங்களைக் கொண்ட கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனால், வரலாற்று எச்சங்கள் அழிவுக்கு உள்ளாகின்றன. இது, திட்டமிட்ட பௌத்த சிங்கள அடையாளத் திணிப்பாகும். இது, நாட்டின் வரலாற்றைத் திரித்து எழுதும் அறமற்ற செயல். நாட்டின் மீது விசுவாசத்தைக் கொண்டிருக்கின்ற யாரும், வரலாற்று எச்சங்கள் மீதான அழிப்பை ஆதரிக்க மாட்டார்கள்.

ஆனால், தேர்தல் அரசியலுக்கான இனவாதத்தை கையில் ஏந்திவரும் சரத் வீரசேகர போன்றவர்கள், வரலாற்று திரிப்புகளை செய்து, சிங்கள இனவாதத்தை விதைப்பதில் குறியாக இருக்கிறார்கள். இது, வரலாற்றுத் துரோகமாகும். இதைத் தென்இலங்கை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், காலப்போக்கில் தங்களின் தேர்தல் வெற்றிக்காக, தென்இலங்கை மக்களையும் கூறுகூறாகப் பிரித்தாண்டு, நாட்டை இன்னும் மோசமான பாதைக்கு கொண்டு சென்று சேர்த்து விடுவார்கள்.

தென் இலங்கை மக்களால் தோற்கடிக்கப்பட்டு துரத்தப்பட்ட மேர்வின் சில்வா என்ற அரசியல்வாதி, வடக்கில் பௌத்த விகாரைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால், ஏற்படுத்தியவர்களின் தலைகளை கொய்வேன் என்று பொது மேடையில் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அவர் மீது இன்னமும் எந்தவித சட்ட நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அவர், சுதந்திரமாக உலாவிக் கொண்டிருக்கிறார்.

மேர்வின் சில்வா, தன்னுடைய அரசியல் கோமாளித்தனங்களால் கடந்த காலங்களில் கவனம் பெற்றவர். குறிப்பாக, முன்னேஸ்வரம் பரமேஸ்வரி கோவில் வழிபாட்டு நடைமுறைகளில் தலையீடுகளைச் செய்து, குழப்பங்களை ஏற்படுத்தி இருந்தார். அப்போது அவர், ராஜபக்‌ஷர்களின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார். இப்போது அவர் அரசியல் பங்காளியாக இல்லை. ஆனால், பகிரங்க கொலை அச்சுறுத்தல் விடுத்த பின்னும் அரசினால் பாதுகாக்கப்படுகின்றார்.

இப்படியான அரசியல் நெறியுள்ள தென் இலங்கையை எதிர்கொண்டுதான், தமிழ் மக்கள் தங்களின் அரசியல் உரிமையை பாதுகாக்க வேண்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.