;
Athirady Tamil News

மலையகம் 200: இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிராக செயற்பட்டாரா ஜீ.ஜீ ? (கட்டுரை)

0

இந்திய வம்சாவளி தமிழ் மக்கள், இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ‘மலையகம் 200’ எனும் தொனிப்பொருளின் கீழ், பல நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இதில் அரச, மற்றும் அரச சாரா நிகழ்வுகள் எல்லாம் உள்ளடக்கம்.

‘இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு’ என்று மலையக மக்கள் தொடர்ந்து விளிக்கப்பட்டாலும், அவர்களின் பொருளாதார நிலை உயர்ந்தபாடில்லை. இந்நாட்டின் குடிமக்களில் ஒரு பகுதியினர் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதை எத்தனை காலத்துக்கு இந்த நாடும், நாட்டு மக்களும் சகித்துக்கொண்டிருக்கப் போகிறார்கள்? நிற்க!

இந்த நாட்டின் ‘குடிமக்கள்’ என்று குறிப்பிடும் போது, இந்நாட்டின் குடியுரிமையைப் பெற்றுக்கொள்ள இந்திய வம்சாவளி மக்கள் பட்டபாடும், அதனை அடைந்து கொள்வதற்கான மிக நீண்ட அரசியல் போராட்டத்தையும் நாம் மறந்துவிட முடியாது. இந்தத் தலைப்பு வரும்போதெல்லாம், ஜீ.ஜீ பொன்னம்பலம் மீதான ஓர் அவதூறும் மீண்டும் மீண்டும் பலராலும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

அதாவது, இந்திய வம்சாவளி மக்களுக்கான குடியுரிமை மறுப்பை ஜீ.ஜீ பொன்னம்பலம் ஆதரித்தார் என்ற அந்த அவதூறு, ஜீ.ஜீ பொன்னம்பலத்தையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸையும் மட்டுமல்ல, இலங்கை தமிழர்களையும் ஓரவஞ்சனையாளர்களாக சித்திரித்து விடுகிறது. ஆகவே, இந்த விடயத்தில் உண்மை என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியமாகிறது.

“இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டதை ஜீ.ஜீ ஆதரவளித்தார்” என்ற பிரசாரம், ஜீ.ஜீ, டீ.எஸ்.சேனநாயக்க தலைமையிலான அரசாங்கத்தோடு, ‘எதிர்வினை-ஒத்துழைப்பு’ அடிப்படையில் இணைந்துகொண்டு, அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், ஜீ.ஜீயின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸிலிருந்து பிரிந்து, ஆங்கிலத்தில் ‘ஃபெடறல் பாட்டி’ என்றும், தமிழில் ‘இலங்கை தமிழரசுக் கட்சி’ என்றும் பெயர்கொண்ட கட்சியை சா.ஜே.வே செல்வாநாயகமும் அவரது ஆதரவாளர்களும் தொடங்கியதிலிருந்து, அவர்களால் கடுமையாக ஜீ.ஜீக்கு எதிராக செயல்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை தொடர்பில் ஜீ.ஜீ பொன்னம்பலம் என்ன செய்தார், அவர் இழைத்த தவறு என்ன என்பது பற்றி இங்கு ஆராய்தல் அவசியமாகிறது.

இந்திய வம்சாவளித் தமிழர் தொடர்பில் ஜீ.ஜீ அக்கறையற்றுச் செயற்பட்டவராக இருக்கமுடியாது. ஏனெனில் அவர், ஆற்றிய 50 க்கு 50 உரையிலாகட்டும், சோல்பரி குழு முன்பு ஆற்றிய உரையிலாகட்டும், இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் சம உரிமை, பிரதிநிதித்துவ ஒதுக்கீடு பற்றியெல்லாம் பேசியிருந்தார். குறிப்பாக, சோல்பரி குழு, தமிழ்க் காங்கிரஸின் சாட்சியத்தைக் கேட்பதற்கென ஒதுக்கிய மூன்று நாள்களில், ஒருநாள் முழுவதையும் ஒதுக்கி, இந்திய வம்சாவளி மக்களின் உரிமைகள் பற்றியும், அவர்களுக்கான பிரதிநிதித்துவம் பற்றியும் பேசினார் ஜீ.ஜீ.

ஆகவே, இந்திய வம்சாவளித் தமிழர்கள் தொடர்பில் ஜீ.ஜீ அக்கறையற்றிருந்தார் என்று சொல்லமுடியாது. அப்படியாயின் அம்மக்களின் பிரஜாவுரிமை பறிபோவதற்குக் காரணமான சட்டங்களுள் ஒன்றுக்கு ஜீ.ஜீ ஆதரவளித்தாரா? அப்படி ஆதரவளித்தாராயின் அதன் மூலம் அம்மக்களுக்கு ஜீ.ஜீ பெரும் அநீதி இழைத்துவிட்டாரல்லவா என்ற கேள்வி நிச்சயம் எழுகிறது.

இந்த விடயம் கொஞ்சம் சிக்கலானது. ஆனால், எளிமையாக புரியவைக்க முயல்கிறேன். இங்கே இரண்டு சட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

முதலாவதாக, 1948ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க இலங்கை பிரஜாவுரிமைச்சட்டம்.

மற்றயது, 1949ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க இந்திய – பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்டம்.

பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியின் கீழ், கொலனித்துவ நாடுகளிலுள்ள அனைத்து மக்களும் பிரித்தானிய முடியின் குடிமக்களாக இருந்தார்கள். கொலனித்துவத்தில் இருந்து நாடுகள் சுதந்திரம் பெற்றபோது, ஒவ்வொரு சுதந்திர நாடும் தமக்கென குடியுரிமைச் சட்டத்தை வரைந்து கொள்ளுதல் அவசியமானது. அவ்வகையில் 1948இல் அன்றைய டி.எஸ் சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம், இலங்கை பிரஜாவுரிமைச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. இது சமர்ப்பிக்கப்பட்டபோது ஜீ.ஜீ .பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், எதிர்க்கட்சியில் இருந்தது.

குறித்த சட்டமூலமானது பின்வருமாறு வழங்கியது:

(அ) இலங்கையில் பிறந்த ஒருவருடைய தகப்பன், இலங்கையில் பிறந்தவராகவோ, அல்லது

(ஆ) அவருடைய தந்தை வழிப் பேரனும், தந்தை வழிப்பாட்டனும் இலங்கையில் பிறந்தவர்களாகவோ இருந்தால்,

அவர் இலங்கைப் பிரஜையாகவே கருதப்படுவர். அத்துடன்,

(இ) இலங்கைக்கு வெளியே பிறந்தவர் இலங்கை பிரஜையாக மதிக்கப்பட வேண்டுமேயானால் அவருடைய தந்தையும், தந்தை வழிப் பேரனும் இலங்கையில் பிறந்திருத்தல் வேண்டும். அல்லது,

(ஈ) அவரின் தந்தை வழிப்பேரனும், பாட்டனும், இலங்கையில் பிறந்திருத்தல் வேண்டும்.

இச்சட்டமூலம் இந்திய வம்சாவளி மக்கள் பிரஜாவுரிமையைப் பெறமுடியாத நிலையை ஏற்படுத்தியது. இதனை அப்போது எதிர்க்கட்சியில் இருந்த ஜீ.ஜீ. பொன்னம்பலம் கடுமையாக எதிர்த்தார். இதைக் கடுமையாக எதிர்த்து, அவர் பேசியது 1948ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்ற ஹன்சார்டின் 1821 – 1861 பக்கங்களில் பதிவாகியுள்ளது.

இதனை இலங்கை-இந்திய காங்கிரஸ் கட்சியும், ஏனைய இடதுசாரிக் கட்சிகளும் கூட கடுமையாக எதிர்த்தன. ஆகவே, இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை பறிபோவதற்கு ஜீ.ஜீ பொன்னம்பலம் ஆதரவளித்தார் என்பதில் உண்மையில்லை.

மாறாக, அனைத்துத் தமிழ்க் கட்சிகளைப் போலவும் அவர் அன்று அதனை மிகக் கடுமையாக எதிர்த்தார் – எதிர்த்தே வாக்களித்தார். ஆயினும் அன்றைய அரசாங்கத்திடம் பெரும்பான்மை இருந்ததால், அது அச்சட்டத்தை நிறைவேற்றியது.
இதன் பின்னர், ஜீ.ஜீ பொன்னம்பலம் – அன்றைய பிரதமர் டீ.எஸ் சேனநாயக்கவுடன் எதிர்வினை – ஒத்துழைப்பு’ வழங்குவது பற்றிப் பேச்சு நடத்தியபோது, பிரஜாவுரிமை இழந்த இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் முக்கிய கோரிக்கையாக வைத்திருந்தார். அதனை அன்றைய பிரதமர் டீ.எஸ் சேனநாயக்க ஏற்றுக்கொண்டிருந்தார்.

அதன்பின்னர், அன்றைய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சரவை அமைச்சரானார் ஜீ.ஜீ பொன்னம்பலம். பிரஜாவுரிமை இழந்த இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுப்பதாக, தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற டீ.எஸ் சேனநாயக்க 1949ஆம் ஆண்டில் இந்திய – பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்ட மூலத்தை பாராளுமன்றத்துக்குக் கொண்டு வந்தார்.

இந்திய – பாகிஸ்தானியர் பிரஜாவுரிமை சட்டமூலத்தின்படி, இலங்கையில் குடும்பமாக ஏழு வருடங்கள் வசித்தவர்களும், விவாகமாகாமல், பத்து வருடங்கள் வசித்தவர்களும் பிரஜாவுரிமை பெறுவதற்கு உரிமை பெற்றார்கள். இலங்கை-இந்திய காங்கிரஸும், தமிழ்க் காங்கிரஸும் ஏழு வருட காலப்பகுதியை, ஐந்தாகக் குறைக்கக் கோரின. ஆனால், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்தச் சட்டமூலம் சட்டமானால் ஏறத்தாழ பிரஜாவுரிமையை இழந்த இந்திய வம்சாவளி மக்கள் ஒரு இலட்சம் (100,000) பேர் பிரஜாவுரிமையைப் பெறக்கூடிய சந்தர்ப்பம் இருந்தது. இந்த சட்டமூலத்துக்குத்தான் ஜீ.ஜீ பொன்னம்பலம் ஆதரவாக வாக்களித்திருந்தார்.

இலங்கை பிரஜாவுரிமைச் சட்டம் இழைத்த அநீதியை, இந்திய-பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்டம் முற்றாக சரிசெய்து விடவில்லை. அது ஒரு முழுமையான தீர்வுமில்லை. ஆனால் இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களில், ஏறத்தாழ ஒரு லட்சம் பேருக்கென்றாலும் பிரஜாவுரிமை கிடைக்க இந்திய-பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்டம் வழிவகுத்ததனால், ஜீ.ஜீ. அதனை ஆதரித்திருக்கலாம்.

உண்மையில் இதைவிட நியாயமான, முழுமையான தீர்வொன்றுக்காக ஜீ.ஜீ பொன்னம்பலம் உழைத்திருக்க வேண்டும். ஆனால், இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை பறிபோக ஜீ.ஜீ பொன்னம்பலம் ஆதரவளித்தார் என்ற கருத்தில் உண்மையில்லை. ஏனெனில், அந்தச் சட்டமூலத்தை ஜீ.ஜீ பொன்னம்பலம் கடுமையாக எதிர்த்திருந்தார்.

மாறாக, இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தொகை இந்திய வம்சாவளி மக்களுக்கேனும் பிரஜாவுரிமை வழங்கிய இந்திய – பாகிஸ்தானியர் பிரஜாவுரிமை சட்டத்துக்கே அவர் ஆதரவளித்திருந்தார் என்பதே நிதர்சனம்.
‘ஃபெடறல் பாட்டி’ என்ற ‘இலங்கை தமிழரசுக் கட்சி’, தன்னுடைய அரசியல் குறு-இலாபத்துக்காக ஜீ.ஜீ பொன்னம்பலத்துக்கு எதிராக தொடங்கிய ஒரு பிரசாரம், தேவையற்றதொரு கறையாக இலங்கை தமிழர் அரசியல் மீதே படிந்துள்ளது.

இனியாவது, இந்தப் பிரசாரத்தின் பொய்மை உணரப்பட வேண்டும். ‘மலையகம் 200’, இந்தத் தீவில் 200 வருடங்களாக ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் குரலை அனைவரிடமும் கொண்டு போய்ச்சேர்க்கட்டும். அம்மக்களுக்கு விடிவு பிறக்கட்டும்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.