இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் மாரடைப்பு: கோவிட் தடுப்பூசி காரணமா? (கட்டுரை)
கோவிட் தொற்றுநோய் பரவலுக்குப் பிறகு மாரடைப்பால் உயிரிழப்பவர்களின், குறிப்பாக இளம் வயதில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஒரு கூற்று முன்வைக்கப்படுகிறது.
இதற்கு கோவிட்-19 தடுப்பூசிகளை சிலர் காரணமாகக் கூறுகின்றனர். இதன் உண்மைத் தன்மை என்ன?
யாராவது மாரடைப்பால் உயிரிழந்தால் அவரது இறப்புடன் கோவிட் தடுப்பூசியும் தொடர்புபடுத்திப் பேசப்படுகிறது.
நடிகர் விவேக், கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் ஆகியோர் மாரடைப்பால் உயிரிழந்தபோது சமூக ஊடகங்களில் இது குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டது. திடீர் மரணங்கள் குறித்து மக்கள் தங்கள் கருத்துகளையும், கவலையையும் வெளிப்படுத்தினர்.
தற்போது நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து மீண்டும் கோவிட் தொற்றோடும் கோவிட் தொற்று தடுப்பூசியோடும் மாரடைப்பைத் தொடர்புப்படுத்தி சமூக ஊடகங்களில் பேசத் தொடங்கியுள்ளனர்.
கோவிட் தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று கூறுகிறார் சென்னை மருத்துவக் கல்லூரியின் இதய நோய் பிரிவு பேராசிரியரான ஜி. மனோகர்.
“கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்தம் உறைவு (thrombosis) ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே இதய பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்த உறைவு பிரச்னை ஏற்படும்போது மாரடைப்பு வரும். எனவே, கோவிட் தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படுகிறது என்பதில் உண்மை இல்லை,” என்றார்.
அப்பல்லோ மருத்துவமனையின் இதய சிகிச்சை நிபுணரான மருத்துவர் ரெஃபை ஷவ்கத் அலி பிபிசியிடம் பேசுகையில், “மாரடைப்பின் கடைசி நிலைதான் இதய செயலிழப்பு (Cardiac arrest). கொரோனா தடுப்பூசி காரணமாகத்தான் இதய செயலிழப்பு ஏற்படுகிறது என்பதற்கு அறிவியல் பூர்வமாக எவ்வித ஆதாரமும் இல்லை,
கொரோனா தொற்றுக்குப் பிறகு மாரடைப்பு (Heart attack) ஏற்படுவது அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கு கொரோனா தடுப்பூசிதான் காரணம் என்று நாம் எவ்வித ஆதாரமும் இல்லாமல் கூறிவிட முடியாது,” என்றார்.
“இளம் வயதில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. வேலை தொடர்பான மன அழுத்தம், உணவுப் பழக்க வழக்கம், போதிய உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது, புகைப் பிடிக்கும் பழக்கம் போன்றவை காரணமாக மாரடைப்பு ஏற்படலாம்.
எனவே, இவற்றை எப்படி சரி செய்வது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். மிதமான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள் முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது,” என்று மருத்துவர் ரெஃபை ஷவ்கத் அலி அறிவுறுத்துகிறார்.
இதை ஆமோதிக்கும் மருத்துவர் மனோகரர், “25 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கெட்ட கொழுப்பு பரிசோதனையை தவறாமல் அடிக்கடி மேற்கொள்ள வேண்டும். சிஆர்பி, டி-டைமர் பரிசோதனை, லிபிட் ப்ரோஃபைல் பரிசோதனைகளைச் செய்வதன் மூலம் மாரடைப்பு வருமா, வராதா என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதற்குத் தகுந்த சிகிச்சை, உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்,” என்றார்.
அதேவேளையில், கொரோனாவுக்கு பின்னர் இதய நோய் தொடர்பாக தங்களிடம் சிகிச்சைக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார் ரெஃபை ஷவ்கத் அலி.
“கொரோனாவுக்கு பிறகு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகத்தான் உள்ளது. இதுதொடர்பாக இரண்டு விதமாக சந்தேகங்கள் உள்ளன.
முதலாவதாக, கொரோனா தடுப்பூசியால் இது ஏற்படுகிறதா என்பதுதான் அந்த சந்தேகம். அடுத்ததாக, கொரோனா காலத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் எவ்வித உடல் உழைப்புகளும் இன்றி கொழுப்பு அதிகமான உணவுகளைச் சாப்பிட்டு இருந்துள்ளோம். இதன் காரணமாகவும் மாரடைப்பு அதிகரித்திருக்கலாம்,” என்றார்.
இந்த விவகாரத்தில் இந்திய அரசு தெளிவுப்படுத்துவதுதான் சரியாக இருக்கும் என்று அவர் கூறுகிறார். அதோடு, கொரோனா தடுப்பூசி போடத் தொடங்கியதும் இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் மருத்துவமனை அளவில் சிறிய சிறிய ஆய்வுகளை நடத்தியதாகவும் கூறினார்.
அந்த ஆய்வுகளில், “தடுப்பூசி காரணமாக ரத்தம் உறையும் தன்மை அதிகரிப்பதும் அதன்மூலம் மாரடைப்பு ஏற்படுகிறது என்பதையும் நாங்கள் கண்டுபிடித்தோம்.
ஆனால், தற்போது 3 ஆண்டுகள் கடந்தும் மாரடைப்பால் உயிரிழப்பதுடன் கொரோனா தடுப்பூசியை தொடர்புபடுத்துவது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை,” என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இது தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருகிறது என்றும் மூன்று மாதங்களில் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் கூறினார்.
ஆனால் இதுவரை முடிவுகள் வெளியிடப்படவில்லை எனக் கூறும் ரெஃபை ஷவ்கத் அலி , “கொரோன தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படுகிறது என்பதற்கும், ஏற்படவில்லை என்பதற்கும் அறிவியல் பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை.
எனவே, ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டால்தான், இந்த விவகாரத்தில் தெளிவு கிடைக்கும்,” என்றார்.
கடந்த ஜூலை 21ஆம் தேதி மக்களவையில் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
கோவிட் பரவலுக்கு பின்னர் நாட்டில் இதய செயலிழப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதா என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இதய செயலிழப்பால் உயிரிழந்தவர்களில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமா என்றும் பாஜக எம்பிக்களான ரவீந்திர குஷ்வாஹா, காகன் முர்மு ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “கோவிட்-19 பரவலுக்குப் பிறகு சில இளைஞர்களின் திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளன. இருப்பினும், இதுபோன்ற மரணங்களுக்கான காரணத்தை உறுதிப்படுத்தப் போதுமான ஆதாரங்கள் தற்போது கிடைக்கவில்லை.
இது தொடர்பாக அறிந்துகொள்ள ஐசிஎம்ஆர் ஆய்வுகளை நடத்தி வருகிறது. 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் திடீரென உயிரிழக்கும் சம்பவங்களில் தொடர்புடைய அம்சங்கள் போன்றவை தொடர்பாக ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பபௌகிறது.
அதோடு, 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவர்களில் கோவிட் தடுப்பூசியால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து மற்றொரு ஆய்வும் இளைஞர்களின் திடீர் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிதல் தொடர்பாக மூன்றாவது ஆய்வும் நடத்தப்படுகிறது,” என்று பதிலளித்தார்.
மணி கண்ட்ரோல் இணைய ஊடகத்துக்கு கடந்த ஜூன் மாதம் பேட்டியளித்த ஐசிஎம் ஆர் இயக்குநர் ராஜிவ் பால், “இணை நோய்களைத் தவிர மூன்று முக்கிய காரணங்களையும் நாங்கள் ஆய்வு செய்கிறோம்.
உயிரிழந்த நபர் கோவிட் தடுப்பூசி செலுத்தியிருந்தாரா? அவருக்கான பாதிப்பின் தீவிரம் என்ன? அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு நீண்ட நாட்கள் கோவிட் பாதிப்பின் (Long Covid) அறிகுறிகள் இருந்ததா? என்பதை பார்க்கிறோம்.
தடுப்பூசி, நீண்ட கோவிட், நோயாளியின் பாதிப்பு நிலை ஆகிய கோணங்களில் இளைஞர்களின் இறப்புகளை மதிப்பீடு செய்கிறோம். ஒரு சில வாரங்களில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளிவரும்,” என்று தெரிவித்திருந்தார். இருப்பினும், இதுவரை எந்த முடிவுகளும் வெளியாகவில்லை.