குழந்தைகள் ஆபாசப் படம் பார்ப்பதை தடுக்க பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?!! (கட்டுரை)
“இவன் 6வது படிக்கும் வரைக்கும் ஃபர்ஸ்ட் ரேங்க் தான் எடுப்பான். இப்போது படிப்பில் கவனமே செலுத்துவது கிடையாது. எங்களிடமும் எரிந்து எரிந்து விழுகிறான், என்னவென்று தெரியவில்லை” என 9ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவனை அவனது பெற்றோர்கள் மனநல மருத்துவரிடம் அழைத்து வந்தனர்.
மாணவனின் தனியாக பேசிய மனநல மருத்துவர் ஒருசில நிமிடங்களில் அவனின் பிரச்னை என்னவென்று தெரிந்துகொண்டார். அடுத்த சில மாதங்களுக்கு சிறுவனுக்கு சில தெரபிகள் வழங்கப்பட்டன. தற்போது அவன் மீண்டும் நன்றாக படிப்பதாக சிறுவனின் பெற்றோர் மருத்துவரிடம் கூறியுள்ளனர்.
அந்த சிறுமிக்கு 15 வயதுதான் இருக்கும். எந்நேரமும் மொபைலை கையில் வைத்துக்கொண்டே இருப்பதாக மனநல மருத்துவரிடம் பெற்றோர் வேதனையுடன் கூறினர்.
“அறைக்கு சென்று கதவை அடைத்துக்கொண்டு மொபைலே கதி என்று இருக்கிறாள். அதற்கு பாஸ்வேர்டு போட்டு வைத்திருக்கிறாள் என்பதால் என்ன செய்கிறாள் என்றும் தெரியவில்லை. கேட்டால், நண்பர்களுடன் பேசுவதாக கூறுகிறாள், எங்களிடம் எரிந்து விழுகிறாள்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் காரணத்தை கண்டுபிடிப்பதற்கு மனநல மருத்துவருக்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது தெரபிக்கு பிறகு சிறுமியிடம் மாற்றம் தெரிகிறது.
மேற்கூறிய சம்பவங்களில் இருவருமே மொபைலில் ஆபாசப் படங்களை பார்ப்பதற்கு அடிமையாகி இருந்தனர் என்கிறார் உளவியலாளரும் பாலியல் நிபுணருமான அசோக்.
பொது இடத்தில் ஆபாசப் படம் பார்த்ததாக தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி ஒருவர் தாக்கல் செய்த வழக்கை சில தினங்களுக்கு முன்பு விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாமல், யாருக்கும் பகிராமல் தனிப்பட்ட முறையில் ஆபாசப் படங்கள் பார்ப்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. சட்டப்படி அதை குற்றமாக கருத முடியாது என்று கூறியிருந்தது.
அதே நேரத்தில் இந்த தீர்ப்பில் மற்றொரு முக்கிய விஷயத்தையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது. “ஆபாசப் படம் பார்த்து குற்றம் இல்லை. அதேநேரத்தில், சிறார்கள் ஆபாசப் படம் பார்க்கத் தொடங்கிவிட்டால் அதன் பாதிப்புகள் நீண்ட காலத்துக்கு இருக்கும். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒன்றும்தெரியாத பெற்றோர்கள் அவர்களுக்கு மொபை வாங்கி கொடுத்துவிடுகிறார்கள்.
அதன் பின்னால் உள்ள ஆபத்து குறித்து பெற்றோர்கள் அறிந்துகொள்ள வேண்டும். பெற்றோர்களின் கண் முன்னே அவர்களின் செல்போனில் ஆக்கப்பூர்வமான செய்திகள், வீடியோக்கள் போன்றவற்றை குழந்தைகள் பார்க்கட்டும். கிரிக்கெட், ஃபுட்பால் போன்றவற்றை விளையாடட்டும்” என்று கூறியிருந்தது.
தற்போது சிறார்களின் கைகளில் மொபைல்கள் எளிதாக புழங்குவதால் அவர்கள் பாலியல் புகைப்படம், வீடியோக்கள் போன்றவற்றை தங்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ பார்ப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக உளவியல் நிபுணர் அசோக் எச்சரிக்கிறார்.
“ஒருவேளை குழந்தைகள் ஆபாசப்படம் பார்ப்பது குறித்து தெரியவந்தால் பெற்றோர்கள் பதற்றமடையாமல் இருக்க வேண்டும்.”
“கடந்த தலைமுறையினருடன் ஒப்பிடும்போது இந்த தலைமுறையினருக்கு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பாலியல் குறித்து அறிந்துகொள்ள வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. பிரபலமான சமூக வலைதளங்களில் கூட பாலியல் உள்ளடக்கங்கள் உள்ளன. இவற்றை குழந்தைகள் எளிதில் பார்க்கக்கூடிய சூழல் உள்ளது. ”
தவறான செயல்களைச் சித்தரிக்கும் ஆபாசப் படங்களை குழந்தைகள் பார்க்கும்போது, அத்தகைய நடத்தை சாதாரணமானது மற்றும் ஏற்றுக் கொள்ளத்தக்கது என்று அவர்கள் கருதக்கூடும். மாறிவரும் தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடும்போது ஆபாசப் படங்களை சிறார்கள் பார்ப்பதை கட்டுப்படுத்தும் முயற்சிகள் போதுமானதாக இல்லை.
கொரோனாவுக்கு பிறகு கல்வி ஆன்லைனை அதிகம் சார்ந்துள்ளது. இதற்கு கணினி, மொபைல் போன்றவை இன்றியமையாதவையாக இருக்கின்றன. அதே நேரத்தில் குழந்தைகள் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதை பெற்றோர்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் அசோக் அறிவுறுத்துகிறார். அதன்படி,
குழந்தைகள் மொபைலை பயன்படுத்தும்போது அதில் அவர்கள் எதை பார்க்கலாம், எதை பார்க்கக்கூடாது என்பதை Parental control மூலம் நிர்வகிக்க வேண்டும்.
குழந்தைகள் மொபைலில் என்ன பார்க்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு அன்லிமிடெட் இணைய வசதி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்காமல் ஒருநாளைக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே இணையத்தை பயன்படுத்தும்படி செய்யலாம்.
அதிக நேரம் இணையத்தில் செலவிடக்கூடாது என்றும் அதனால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதையும் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.
10 வயதை கடந்த குழந்தைகளிடம் மொபைலை கொடுக்கும்போதே அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை சொல்லிக்கொடுக்க வேண்டும். இணையத்தில் உள்ள சில விஷயங்கள் பெரியவர்களுக்கானது. ஒருவேளை, நீங்கள் ஆடையில்லாத நபர்களின் படங்களை வீடியோக்களை பார்த்தால் அதுகுறித்து எங்களிடம் கூற வேண்டும் என்று பெற்றோர் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் பாலியல் தொடர்பாக எதாவது சந்தேகம் கேட்டால், அதனை தட்டிக்கழிக்காமல் அவர்கள் வயதுக்கு ஏற்றவகையில் கூறவேண்டும். பெற்றோர்களிடம் பதில் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் பிறரிடமோ, இணைத்திலோதான் இதற்கான பதிலை தேடுவார்கள். அது அவர்களுக்கு பாதிப்பைதான் ஏற்படுத்தும் என்கிறார் அசோக்.
“ஒருவேளை குழந்தைகள் ஆபாசப்படம் பார்ப்பது குறித்து தெரியவந்தால் பெற்றோர்கள் பதற்றமடையாமல் இருக்க வேண்டும். வயது அதிகரிக்க அதிகரிக்க பாலியல் ஈர்ப்பு அவர்களுக்கு ஏற்படும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பாலியல் வீடியோக்களை பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தினால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்று அவர்களுக்கு மென்மையாக எடுத்துக்கூற வேண்டும். அவர்களிடம் நாம் கோபத்தை காட்டுவது நிலைமையை மேலும் மோசமாக்கும்.” என கூறுகிறார்.
மேலும், “பதின்ம வயதில் குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து இடைவெளியை விரும்புவார்கள். அத்தகைய நேரத்தில் அவர்கள் பிறருடன் வெளியே சென்று விளையாடுவது போன்றவற்றில் ஈடுபடுவதில் தவறில்லை, ஆனால் தனிமையிலேயே இருப்பது, மொபைலில் அதிக நேரம் செலவிடுவது என இருந்தால் அவர்களிடம் சென்று பேச வேண்டும். அவர்களுக்கு ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்பதை கேட்டறிய வேண்டும். அவர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும். நம் மீது பெற்றோர்களுக்கு அன்பு உள்ளது என்ற எண்ணத்தை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, குடும்பமாக வெளியே செல்வது போன்றவை குடும்பத்தின் மீதான் அவர்களின் பிணைப்பை அதிகரிக்கும். பெற்றோரிடம் மனம் விட்டு பேசுவார்கள்” என்றும் அசோக் கூறுகிறார்.
பதின்ம வயதை எட்டும்போது பாலியல் குறித்த தேடல்கள் எழுவது என்பது இயற்கையானது. ஆனால், அதன் காரணமாக சிறார்கள் பாதை மாறிவிடாமல் இருக்க பாலியல் கல்வி அவசியம் என்கிறார் மனநல ஆலோசகர் அசோக்.
“மாதவிடாய் தொடர்பாக முன்பு பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. தீட்டாக பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அது குறித்து அனைவரும் அறிந்துகொண்டுள்ளனர்.இதுபோன்ற மாற்றம் பாலியல் விவகாரங்களிலும் தேவைப்படுகிறது. பதின்ம வயதில் உள்ள சிறார்களுக்கு புகைப்பிடித்தல், மதுவால் ஏற்படும் பாதிப்பு, பாலியல் கல்வி போன்றவை தொடர்பாக விரிவான பாடங்கள் தேவை. அப்போதுதான் அதுகுறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். இதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். ”