பாராளுமன்றத்தின் புனிதமான அரங்குகளுக்குள் வெளியிடப்படும் அறிக்கை!! (கட்டுரை)
இங்கையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பாராளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி, நீதிபதிகளையும் நீதித்துறையையும் விமர்சிப்பதும், தாக்கிப் பேசுவதும் அதிகரித்து வருவதை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இந்த நடத்தை, பாராளுமன்றத்துக்கு வெளியே நடத்தப்பட்டால், நீதிமன்ற அவமதிப்புக்கு வழிவகுக்கும். நீதிமன்ற அவமதிப்பு என்பது, தண்டனைக்குரிய குற்றமாகும். நீதிமன்ற அவமதிப்புக்காக பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி திஸாநாயக்க, ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் சிறைத் தண்டனைக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது. அவர்கள் பொதுவௌியில் சொன்ன அதே கருத்து, பாராளுமன்றத்தில் சொல்லப்பட்டிருந்தால், பாராளுமன்ற வரப்பிரசாதத்தைப் பயன்படுத்தி அவர்கள் தப்பியிருக்கக்கூடும்.
பல ஜனநாயக நாடுகளைப் போலவே, இலங்கையிலும் பாராளுமன்ற சிறப்புரிமை என்பது ஆட்சிக் கட்டமைப்பில் முக்கியத்துவம் மிக்க இடத்தைப் பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்துவதை உறுதி செய்வதற்கும், பாராளுமன்றத்தின் புனிதமான அரங்குகளுக்குள் வெளியிடப்படும் அறிக்கைகளுக்கு எதிரான சட்டரீதியான விளைவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கும் இந்த வரப்பிரசாதம் வழங்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் இந்த வரப்பிரசாதமானது அரசியலமைப்பின் 4ஆம் சரத்து மற்றும் பாராளுமன்றம் (அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள்) சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றம் (அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள்) சட்டத்தின் மூன்றாவது சரத்தானது, பாராளுமன்றத்தில் பேச்சு, விவாதம், நடவடிக்கைகளுக்கான சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும், அத்தகைய பேச்சு, விவாதம், நடவடிக்கைகளுக்கான சுதந்திரம் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு வெளியே எந்த நீதிமன்றத்திலோ அல்லது இடத்திலோ குற்றஞ்சாட்டப்படவோ அல்லது விசாரிக்கப்படவோ முடியாது என்றும் வழங்குகிறது.
குறித்த சட்டத்தின் நான்காவது சரத்தானது, எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும், அவர் பாராளுமன்றத்தில் கூறிய அல்லது மனு, சட்டமூலம், தீர்மானம் மூலம் பாராளுமன்றத்தில் முன்வைத்த எந்தவொரு விடயம் அல்லது விடயத்தின் காரணமாகவும், எந்தவொரு குடியியல் அல்லது குற்றவியல் நடவடிக்கைகளுக்கும், கைது, சிறைத்தண்டனை அல்லது நட்டஈடுகளுக்கு பொறுப்பாகமாட்டார் என்று வழங்குகிறது.
குறித்த பாராளுமன்ற சிறப்புரிமையானது, ஜனநாயக மரபுகளில் தனது ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்டுள்ளது. முடியின் தலையீட்டிலிருந்து பிரித்தானிய பாராளுமன்றம் சுதந்திரம் பெறுவதற்கான போராட்டத்திலிருந்து, இந்தப் பாராளுமன்ற வரப்பிரசாதத்தின் வரலாற்று வேர்கள் தொடங்குகின்றன.
இங்கிலாந்தில் 1689ஆம் ஆண்டின் உரிமைகள் சாசனம் பாராளுமன்ற சிறப்புரிமையின் சில அடிப்படைக் கொள்கைகளை அறிமுகப்படுத்தியது. இவை பிரித்தானிய பாராளுமன்ற மரபுகளோடு வளர்ச்சியடைந்தன. இந்தக் கொள்கைகள் உலகெங்கிலும் உள்ள ஜனநாயக அமைப்புகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னர் குறிப்பிட்டது போல, பாராளுமன்ற வரப்பிரசாதத்திற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று, பாராளுமன்ற அவைக்குள் பேச்சு மற்றும் விவாத சுதந்திரத்தைப் பாதுகாப்பதாகும். சட்டரீதியான பாதிப்புகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் அஞ்சாமல், பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படையாக விவாதிக்கவும், தங்கள் தொகுதிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு, குறிப்பாக தவறுகளுக்கு பொறுப்பேற்கவும், வெளிப்படையான மற்றும் நேர்மையான விவாதங்களை, வெளிப்படைத்தன்மையுடன் நடத்தவதற்கும் இந்த வரப்பிரசாதம் அவசியமாகிறது. இது வலுவான ஜனநாயகத்தின் அடிப்படையாகிறது.
மேலும், பாராளுமன்ற சிறப்புரிமையானது, சட்டமியற்றும் துறையானது அரசாங்கத்தின் நிறைவேற்று மற்றும் நீதித்துறைத்துறைகளில் இருந்து சுதந்திரமாக இருப்பதை உறுதி செய்வதன் மூலம் அதிகாரப் பிரிவுக் கோட்பாட்டை வலுப்படுத்துவதற்கும் முக்கிய பங்களிக்கிறது.
சில சட்ட நடவடிக்கைகளில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை பாதுகாப்பதன் மூலமும், அவர்கள் சுதந்திரமாக பேச அனுமதிப்பதன் மூலமும், பாராளுமன்ற சிறப்புரிமை பொது நலனை பாதுகாக்க உதவுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஊழல், தவறான நடத்தை மற்றும் அரசாங்க துஷ்பிரயோகங்களைப் பற்றியெல்லாம் தனிப்பட்ட விளைவுகளுக்கு அஞ்சாமல் அம்பலப்படுத்த இந்த வரப்பிரசாதம் அவசியமாகிறது. பொறுப்புக்கூறலை நிலைநிறுத்துவதற்கும் ஜனநாயக செயற்பாட்டில் பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணுவதற்கும் இது அத்தியாவசியமானது.
உலகெங்கிலும் உள்ள பல ஜனநாயக நாடுகளும் பாராளுமன்ற சிறப்புரிமையின் முக்கியத்துவத்தை அங்கிகரித்து, அதை தங்கள் அரசியலமைப்பு அல்லது சட்ட அமைப்புகளில் சேர்த்துள்ளமையானது பாராளுமன்றத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது மற்றும் ஜனநாயக செயல்முறையைப் பாதுகாப்பதன் பெறுமதி தொடர்பில் உலகளாவிய ரீதியில் ஒருமித்த கருத்து இருப்பதை நாம் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
ஆனால், நல்ல நோக்கங்களுக்காக வழங்கப்பட்டுள்ள இந்த வரப்பிரசாதமானது, தவறான மற்றும் முறையற்ற விடயங்களுக்குப் பயன்படுத்தப்படும் போது, அது இந்த வரப்பிரசாதத்தின் இருப்பையே கேள்விக்குட்படுத்தவதாகவும், இந்த வரப்பிரசாதத்தின் பெறுமதியைக் குறைப்பதாகவும் அமைகிறது.
இலங்கையில் மேன்முறையீட்டு நீதிமன்ற, மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கும் அல்லது பழிமாட்டறையும் செயற்பாட்டில் பாராளுமன்றத்தின் பங்கு முக்கியமானது. அத்தகையதொரு பிரேரணை, அல்லது நீதிபதியொருவருடைய நடத்தை பற்றிய பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு, அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, அது விவாதிக்கப்படும் போது, அந்த நீதிபதி பற்றி விவாதிப்பது ஏற்புடையதாகும். ஆனால், சம்பந்தமேயில்லாமல், பாராளுமன்றத்தில் ஒரு நீதிபதி பற்றியோ, நீதிபதிகள் பற்றியோ அவதூறுக்கருத்துரைப்பது என்பது பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளுக்கு, குறிப்பாக நிலையில் கட்டளை 83-ற்கு விரோதமானதாகும்.
பாராளுமன்றம் தன்னுடைய நடவடிக்கைகளை தானே ஒழுங்கமைக்கிறது. அதற்காக நிலையியற் கட்டளைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற நடவடிக்கைகளின் ஒழுங்கைப் பேணும் பொறுப்பும் அதிகாரமும் சபாநாயகரின் பாற்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தையை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துவதில் சபாநாயகரின் பங்கு மிக முக்கியமானது. சபாநாயகரானவர் பாராளுமன்ற ஒழுங்குமுறையின் பாதுகாவலராவார். விவாதங்கள் நாகரிகம் மற்றும் மரியாதைக்குரியதாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் ஒரு பாரபட்சமற்ற நடுவராக அவர் செயற்பட வேண்டும். பாராளுமன்ற சிறப்புரிமையை தவறாக பயன்படுத்தினால், குறிப்பாக நீதித்துறை மீது தாக்குதல்கள் நடத்தப்படும்போது சபாநாயகர் விழிப்புடன் இருக்க வேண்டும். எச்சரிக்கைகள், வெளியேற்றங்கள் அல்லது பிற பொருத்தமான நடவடிக்கைகள் மூலம், சபாநாயகர் அத்தகைய நடத்தைகள் பாராளுமன்றத்தால் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்ற தெளிவான செய்தியை வழங்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அது அவரது கடமை.
தனது நடவடிக்கைகளை, தானே ஆளும் பாராளுமன்றத்தின் அதிகாரம் என்பது முக்கியமானது. ஏனெனில் எந்தவொரு ஜனநாயகத்திலும் பாராளுமன்றம் என்பது ஒரு முக்கிய நிறுவனமாகும். அது புற ஆதிக்கங்கள் இல்லாது சுயாதீனமாக இயங்கவேண்டும். ஆனால் அதற்கு அர்த்தம் காட்டாற்று வௌ்ளம் போல கட்டுப்பாடு இன்றி இயங்குவது அல்ல. இந்த இடத்தில்தான் பாராளுமன்ற உறுப்பினர்களின் சுய கட்டுப்பாடு என்பது அவசியமாகிறது. இந்தச் சுய கட்டுப்பாடு என்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைப் பேசுவதற்கான உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், நீதித்துறையின் புனிதத்தை நிலைநிறுத்துவதற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சிறப்புரிமைகளை பொறுப்புடன் பயன்படுத்துவதை உறுதிசெய்வது மற்றும் நீதித்துறை செயல்முறையைத் தடுக்க அல்லது இழிவுபடுத்துவதற்கு அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதும் பாராளுமன்றத்தின் கடமையாகும்.
ஆகவே, பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குள் பின்பற்றுவதற்கு தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் நடத்தை விதிமுறைகள் தேவை. இந்த வழிகாட்டுதல்கள் பாராளுமன்ற சிறப்புரிமையின் பொறுப்பான பயன்பாடு மற்றும் அதன் துஷ்பிரயோகத்தின் விளைவுகளை வலியுறுத்த வேண்டும். பாராளுமன்றம் மற்றும் நீதித்துறை இரண்டின் தனித்துவத்தையும், மதிப்பையும் பேணுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கற்பிக்க பயிற்சித் திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்களும் அவசியம்.
பாராளுமன்ற சிறப்புரிமை என்பது ஜனநாயக ஆட்சியின் அடிப்படை அம்சமாக இருந்தாலும், நீதித்துறையை அவமதிக்கும் வகையில் தாக்குதல்களில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அது கேடயமாக இருக்கக்கூடாது. பேச்சு சுதந்திரம் மற்றும் நீதித்துறையின் புனிதத்தன்மை ஆகியவற்றுக்கு இடையே நுட்பமான சமநிலை பேணப்பட வேண்டும். எனவே, இத்தகைய துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு பலமான பொறிமுறைகள் பாராளுமன்றத்திற்குள் பாராளுமன்றத்தால் வலுவாக அமல்படுத்தப்படுவது மிகவும் முக்கியமானது. இது விரைவில் நடக்க வேண்டும்.