தமிழ்நாடு அரசு ரசாயன சிலை கரைப்பை தடுக்க அஞ்சுகிறதா? அமைச்சர் என்ன சொல்கிறார்? (கட்டுரை)
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்கு ரசாயனம் கலந்த சிலைகளை தயாரிக்கக்கூடாது என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் தடைவிதித்தாலும், அந்த தடை மீறப்படுவதாக சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதோடு, ரசாயன சிலை தயாரிப்பவர்கள், கரைப்பவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.
ரசாயன சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் நீண்டநாட்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் சரிசெய்யமுடியாத அளவில் மாசுபாடு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இருந்தபோதும், நீர்நிலைகளை மாசுபடுத்தும் ரசாயன சிலைகள் தயாரிப்பது தொடர்வது ஏன் என்றும் தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தொய்வு தொடர்வது ஏன் என்றும் கேள்விகள் எழுகின்றன.
இந்த ஆண்டும், ரசாயன சிலைகள் பயன்பாட்டை கட்டுப்படுத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ஆனால் பிற மாநிலங்களில் சிலை தயாரிப்பு காலத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ரசாயன சிலை தயாரிப்பு நிறுத்தப்படுகிறது என்று ஆதாரங்களை சுற்றுச்சூழல் நிபுணர்கள் வைக்கிறார்கள். நீர்நிலைகளை மாசுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதுதான் விதிமீறல்கள் தொடர்வதற்கு காரணமாக அமைகிறது என்றும் சொல்கிறார்கள்.
விநாயகர் சதுர்த்திக்கு ரசாயனம் கலந்த சிலைகளை தயாரிக்கக்கூடாது என மாசுக்கட்டுப்பாடு வாரியம் தடைவிதித்தாலும், அது மீறப்படுவதாக சூழலியல் செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாடு முழுவதும் தினமும் சுமார் 14,600 டன் அளவு குப்பை உருவாகிறது. இந்த குப்பையின் அளவு என்பது ஒவ்வொரு ஆண்டும் 1.3சதவீதம் அதிகரித்துக்கொண்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, போகி போன்ற திருவிழா காலங்களில் குப்பை உருவாகும் அளவு என்பது தினசரி உருவாகும் குப்பையைவிட சுமார் 30 சதவீதம்வரை அதிகரிப்பதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவில், பத்து நாட்கள் சிலைக்கு தொடர் பூசைகள் செய்யப்படுகின்றன. முடிவில், சிலைகள் நீரில் கரைக்கப்படுகின்றன. அந்த பத்து நாட்களும் தொடர்ந்து உருவாகும் மறுசுழற்சி செய்யமுடியாத குப்பை மற்றும் நீர்நிலைகளில் சென்றுசேரும் சிலைகள் உள்ளிட்ட பொருட்களை கணக்கில் கொண்டால்தான், குப்பை ஏற்படுத்தும் தாக்கம் புரியும் என்கிறார்கள் நிபுணர்கள்.
குறிப்பாக, நீர்நிலைகளில் ரசாயன சிலைகளை கரைப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் இந்துமதியிடம் கேட்டோம். இவர் நீர் மாசு குறித்த ஆய்வுகளை நடத்திய அனுபவத்துடன், மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின், தொழில்நுட்ப நிபுணர் குழு உறுப்பினராக செயல்பட்ட அனுபவத்தையும் பெற்றுள்ளவர்.
ஒரே நாளில் தீடீரென பல ஆயிரம் ரசாயன சிலைகளை நீர்நிலைகளில் கொட்டுவது கட்டாயம் சுற்றுச்சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லும் அவர், ”பிளாஸ்டர் ஆப் பேரிஸ் கலந்து தயாரிக்கும் சிலைகளில், ஜிப்சம், சல்பர், பாஸ்பரஸ் உள்ளிட்ட ரசாயனங்கள் இருக்கும். செயற்கை வர்ணங்களில், மெர்குரி, நிக்கல், குரோமியம் உள்ளிட்ட ரசாயனங்கள் இருக்கும்.
இவை தண்ணீரின் தன்மையை கடினமானதாக மாற்றுகின்றன. நீரில் கலக்கும் ரசாயனங்கள் பல இடங்களுக்கு பரவி, அங்குள்ள உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இந்த ஆபத்தான மாசுபாட்டிற்கு தீர்வு இல்லை. கடலின் ஆழம்வரை சென்று சேரும் இந்த கழிவுகள், கடலின் உட்பரப்பில் மாசுபாட்டை ஏற்படுத்தும்,” என்கிறார்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து ரசாயன கழிவுகள் கொட்டப்பட்டால், அந்த மாசுபாட்டின் அளவும் அதிகரித்து, கடல்வாழ் உயிர்களின் வாழ்வியலில் மோசமான தாக்கம் ஏற்படும் என்கிறார் இந்துமதி.
பிபிசி தமிழிடம் பேசிய மற்றொரு ஆய்வாளர் சுரேந்தர், நீர்நிலைகளின் தாங்குதிறன் குறித்த ஆய்வுகள் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்கிறார். ஒவ்வொரு நீர்நிலைக்கும் தாங்குதிறனை மீறிய அளவு கழிவுகள் கொட்டப்படும்போது, அந்த நீர்நிலையின் தன்மை மாறி, ஒருகட்டத்தில் அந்த நீர்நிலைகள் கழிவு தேங்கும் இடமாக மாறும் வாய்ப்புள்ளது என்கிறார்.
”சென்னையில் கடலில் சிலைகள் கரைக்கப்படுகின்றன. கடல் தண்ணீரில் எல்லா ரசாயனங்களும் கலந்துவிடுகின்றன. தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களில், குடிநீர் தேவைக்காக இருந்த பல ஏரிகள், குளங்கள் ஆகியவை காலப்போக்கில் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளதை பார்க்கமுடிகிறது. சென்னையில் கூட நீர்பிடிப்பு பகுதிகளாக செயல்பட்ட பல ஏரிகளில் இன்று குப்பை தேங்கியுள்ளது. இவையெல்லாம், தாங்குதிறனை மீறி, கழிவுகள் சேருவதால் ஏற்படும் சிக்கல்தான். ரசாயன கழிவுகள் தொடர்ந்து தேங்கினால், ஒரு கட்டத்தில் அந்த நீர்நிலை பிற உயிர்கள் வாழ முடியாத இடமாக மாறும்,” என்கிறார் சுரேந்தர்.
ஒரே நாளில் தீடீரென பல ஆயிரம் ரசாயன சிலைகளை நீர்நிலைகளில் கொட்டுவது கட்டாயம் சுற்றுச்சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் இந்துமதி கூறுகிறார்.
விதிகளை மீறி தொடர்ந்து ரசாயன சிலைகளை தயாரிப்பது ஏன் என்ற கேள்வியுடன் சிலை தயாரிப்பவர்களை அணுகினோம். சென்னை மணலி பகுதியைச் சேர்ந்த சிலை வடிவமைப்பாளர் முருகேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது), தொடக்கத்தில் ரசாயன சிலைகளை மட்டுமே செய்துவந்ததாகவும், தற்போது அதன் அளவை 70 சதவீதம் குறைத்துக்கொண்டதாகவும் கூறுகிறார்.
”சிறிய சிலைகளை களிமண் மற்றும் காகிதகூழ் கொண்டு செய்கிறோம். ஒருசிலர், 8 அல்லது 10அடி சிலை கேட்பார்கள். இதுபோன்ற சிலைகளை காகிதகூழ், கிழங்குமாவு கொண்டுசெய்தால், தொடர்ந்து 10 நாட்கள் பூசைகள் செய்து பின்னர் ஊர்வலத்தில் எடுத்துச்செல்லும்போது சிலையின் அழகு குறைந்துவிடும். ஒரு சில சமயம் சிலையின் பாகங்கள் உதிர்ந்துவிடும். பெரிய மாலைகளை போடுவார்கள், சிலையை இரண்டு மூன்று இடங்களில் ஏற்றி, இறக்குவார்கள். அதனால் சேதம் ஏற்பட்டால், அபசகுனமாக நினைப்பார்கள்,” என்கிறார் முருகேஷ்.
ரசாயன சிலைகளை செய்வது விதிமீறல் என்றபோதும், வாடிக்கையாளர்கள் கேட்பதால் நிராகரிக்கமுடியவில்லை என்றும் அவர் சொல்கிறார்.
”ரசாயன சிலைகளை குறைவான செலவில் முடியும். பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். எங்களிடம் ரசாயன சிலை நான்கு அடி அளவுள்ள சிலை ரூ.6,000ல் கிடைக்கும். இதே களிமண் அல்லது கிழங்குமாவு சிலைகள் விலை குறைந்தது ரூ.8,000வரை ஆகும்,” என்கிறார் முருகேஷ். அதோடு, களிமண் கிடைப்பதில் பிரச்னை இருப்பதால், ஆர்டர்கள் குவியும்போது, ரசாயன சிலைகளை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
ரசாயன சிலைகள் குறித்த விழிப்புணர்வை விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் மாதத்தில் ஏற்படுத்துவதை விட, குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார் சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர் அருள்செல்வம்.
சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஒவ்வொரு மாவட்டத்திலும், குறிப்பிட்ட நீர்நிலைகளில் சிலை கரைப்பிற்கான இடத்தையும் அறிவித்துள்ளது. அந்த இடங்களில் மட்டும்தான் கரைக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
பிபிசி தமிழிடம் பேசிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஜெயந்தி, நீர்நிலைகளில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் உள்ள பகுதி(eco sensitive zone) தவிர மற்ற பகுதியில்தான் சிலைகளை கரைக்கவேண்டும். அதுவும் இயற்கை பொருட்களை கொண்டுமட்டும் சிலைகள் செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறோம் என்றார்.
”செயற்கை வண்ணங்களுக்கு மாற்றாக இயற்கை பொருட்களை எப்படி பயன்படுத்தலாம் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். இந்த மாற்றம் ஒரே ஆண்டில் சாத்தியம் இல்லை. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் களிமண் சிலைகள் அதிகரித்துள்ளன என்பதை எங்கள் களஆய்வில் கண்டறிந்துள்ளோம்,” என்கிறார் ஜெயந்தி.
ரசாயன சிலைகள் குறித்த விழிப்புணர்வை விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் மாதத்தில் நடத்துவதைவிட, குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து நடத்தவேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார் சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர் அருள்செல்வம்.
”சிலை தயாரிப்பு வேலைகள் 70 சதவீதம் வரை மூன்று மாதங்களுக்கு முன்னதாக முடித்துவிடுவார்கள். அதனால், கடைசி தருணத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதைவிட, ஆண்டில் பலமுறை ஏற்படுத்துவது அவசியம். அதேபோல, சிலை தயாரிப்பு காலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால்தான் ரசாயன சிலைகள் தயாரிப்பதை தொடக்கத்தில் தடுக்கமுடியும்,” என்கிறார்.
மேலும், விதிமீறலில் ஈடுபடுவோர் மீது உடனடி நடவடிக்கை எடுப்பது, சிலை தயாரிப்பு மையங்களை சீல் வைப்பது போன்ற செயல்களில் மாசுக்கட்டுப்பாடு வாரியம் அக்கறை காட்டவேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
ரசாயன சிலையை கரைக்கக்கூடாது என்று தடுத்தால், அது மதரீதியான பிரச்னையாக மாறும் வாய்ப்புள்ளது என்று சொல்கிறார் அமைச்சர் மெய்யநாதன்.
தொடர்ச்சியாக விழிப்புணர்வு அளித்தபோதும் ஒரு சில விழாக்குழுவினர், விதிகளை மீறி ரசாயன சிலைகளை கரைப்பதால், மாசுபாட்டை தடுக்கமுடியவில்லை என்று சொல்கிறார் அமைச்சர் மெய்யநாதன்.
”ரசாயன சிலையை கரைக்கக்கூடாது என்று தடுத்தால், அது மதரீதியான பிரச்னையாக மாறும் வாய்ப்புள்ளது. இதனை அமைதியான முறையில் சரிப்படுத்தவேண்டுமெனில், விழாவை ஒருங்கிணைப்பவர்கள் அவர்கள் மதநம்பிக்கையுடன் விழாவை நடத்துவது மட்டுமே போதாது, இயற்கையை மாசுபடுத்தக்கூடாது என்ற பொறுப்புணர்வுடனும் செயல்படவேண்டும்,” என்கிறார் அமைச்சர்.
இதுவரை ரசாயன சிலைகளை வைத்திருந்த விழாக்குழுவினர், தயாரித்தவர்கள், கரைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று அமைச்சர் மெய்யநாதனிடம் கேட்டபோது, இதுவரை அதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.
”மத ரீதியான விவகாரம் என்ற நிலையில், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருப்பவர்களிடம் சிலையை கரைக்கக்கூடாது என்று சொன்னால், பொதுஅமைதியை கெடுக்கும் நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது என்பதால் அறிவுறுத்தல்தான் கொடுக்கிறோம். குறைந்தபட்சம், அடுத்த ஆண்டு, இதேபோன்ற ரசாயன சிலைகளை கொண்டுவரக் கூடாது என்று வலியுறுத்துகிறோம். ரசாயன சிலைகள் கரைக்கும் இடத்திற்கு கொண்டுவரக்கூடாது என்பதற்காக, இந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி அதிகாரிகள் அதிகளவில் பங்குபெற்று, கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்,” என்றார்.
பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் சிலை தயாரிக்கும் இடங்களில் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன என்றும் விதிகளை மீறும் ரசாயன சிலைகளை கரைக்க செயற்கை குளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என சுற்றுச்சூழல் நிபுணர்கள் குறிப்பிடுவது பற்றி கேட்டபோது, ”தமிழ்நாட்டிலும் ஆய்வுகள் நடத்துகிறோம். இந்த ஆண்டு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார்.
மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்று சிலை தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் கோவிந்தராஜன் கூறுகிறார்.
அமைச்சர் மெய்யாநாதன் பேசுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் களிமண்சிலைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறுகிறார். சிலை கரைக்க வரும் வேளையில் நடத்தப்பட்ட கள ஆய்வில் பசுமை சிலைகள் பயன்பாடு அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது என்கிறார் .
சென்னையில் களிமண் சிலை செய்து விற்பனை செய்யும் தயாரிப்பாளர்களிடம் பசுமை சிலைகளுக்கு எதிர்பார்ப்பு உள்ளதா என்று கேட்டறிந்தோம்.
பிபிசி தமிழிடம் பேசிய சிலை தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் கோவிந்தராஜன்(52) மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்பது தனது விற்பனையில் தெரிகிறது என்கிறார். இவர் சென்னை கோயம்பேடு பகுதியில் மூன்று தலைமுறையாக களிமண் சிலை தயாரித்து, விற்பனை செய்துவருகிறார்.
”களிமண் சிலையை தேடி வந்து வாங்குகிறார்கள். நான்கு அடி சிலை வரை களிமண்ணை கொண்டு திருத்தமாக செய்து கொடுக்கிறோம். வாட்டர் கலர் கொண்டு அழகாக வர்ணம் தீட்டுகிறோம். விநாயகர் சதுர்த்தி காலத்தில், குறைந்தது 5,000 சிலைகள் செய்வோம். சுமார் ஆயிரம் சிலைகள்வரை இந்த ஆண்டு அதிகமாக ஆடர்கள் வந்துள்ளன. என் குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து இந்தமுறை சிலைகளை செய்கிறோம்,” என்கிறார் கோவிந்தராஜன்.
விநாயகர் சதுர்த்தி விழா பல நாடுகளிலும் கொண்டாடப்படுவதால், பல வெளிநாட்டு முகவர்களுக்கு சிலைகளை அனுப்புவதாகவும் சொல்கிறார்.