;
Athirady Tamil News

இலங்கையில் மரணதண்டனைச் சட்டம் !! (கட்டுரை)

0

43 ஆண்டுகளுக்குப் பின்னர், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி, பல அடிப்படை உரிமை மனுக்கள், தாக்கல் செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் மரணதண்டனையை நிறைவேற்றும் வகையில் தான் கையொப்பம் வைக்கப்போவதில்லை என சட்டமா அதிபரினூடாக அறிவித்துள்ளமையானது, இலங்கையில் மரணதண்டனை பற்றிய கண்ணோட்டம் என்ன என்பது பற்றி சற்று ஆராயத்தூண்டியுள்ளது.

புராதன காலம்தொட்டே, இலங்கையில் வெவ்வேறு வகையிலான மரணதண்டனை முறைமைகள் இருந்தபோதிலும், புத்தரது போதனைகளால் ஈர்க்கப்பட்ட இலங்கை அரசர்கள், தங்களது ஆட்சிக்காலத்தில் மரணதண்டனையை நிராகரித்துள்ளனர்.

அந்தவகையில், கி.பி முதலாம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட அமந்த காமினி அபய, மூன்றாம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட வொஹாரிக திஸ்ஸ, நான்காம் நூற்றாண்டின் இலங்கை மன்னன் ஸ்ரீ சங்கபோதி, பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட பராக்கிரமபாகு போன்றோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

(ஆயினும் களனி திஸ்ஸ, தாதுசேன, காசியப்பன் போன்றோர் மரணதண்டனை முறையை இறுக்கமாகக் கைகொண்டிருந்தார்கள்.)

1681ஆம் ஆண்டு குற்றவாளியொருவர் யானையால் மிதித்துக் கொல்லப்படும் காட்சியை, இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட வரலாற்றுப் பயணியான ரொபர்ட் நொக்ஸ் என்பவர் பதிவு செய்துள்ளார்.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது, இலங்கை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 285ஆவது பிரிவின்படி, மரண தண்டனையும் உள்ளடக்கியதாக இருந்தபோதிலும், கொடூரமான முறைகளில் மரணதண்டனை விதிக்கப்படுவது தடை செய்யப்பட்டு, அப்போதைய இலங்கை ஆளுநரான பிரெடரிக் நோத்தால் தூக்கிலிடும் முறை அமல்படுத்தப்பட்டது.

பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், பொது இடங்களிலும் கோட்டைகளிலும் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் 1871ஆம் ஆண்டு, கொழும்பில் உள்ள வெலிக்கடை சிறையிலும், அதைத் தொடர்ந்து கண்டி போகம்பரை சிறையிலும் தூக்குமேடைகள் அமைக்கப்பட்டன.

இலங்கையில் தூக்குத்தண்டனை முறை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர், தூக்கிலிடும் குற்றவாளியை அதாவது கறுப்புத்துணியால் மூடப்பட்ட மரணதண்டனை கைதியின் தலையை, தூக்குக்கயிற்றில் நுழைத்து குறிப்பிட்ட தண்டனையை நிறைவேற்றுபவருக்கு கொடுக்கப்பட்ட பெயர்தான் ‘அலுகோசு’.
உண்மையில் அலுகோசு என்பது, சுமார் 15 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்குள் நுழைந்த போர்த்துக்கேயரின் போர்த்துக்கேய மொழிச் சொல்லாகும்.

போர்த்துக்கேய மொழியின் Algoz (மரணசாசனத்தின் சரத்துகளை நிறைவேற்றும் அதிகாரம் பெற்றவர்) என்ற சொல், காலப்போக்கில் Alugosu என மருவி அந்தச் சொல்லே சிங்களத்திலும் தமிழிலும் ‘அலுகோசு’ என்றானது.
மரணதண்டனை நவீன நீதி முறைகளின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் அதை ஒழிக்கவேண்டும் என்றும் பல்வேறு கருத்துகள் வலுப்பெறத் தொடங்கிய பின்னர், பல நாடுகள் மரணதண்டனையை முற்றாக ஒழித்து விட்டன.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில், இப்போது மரணதண்டனை விதிக்கப்படுவது இல்லை. வேறு பல நாடுகளிலும் இது பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான நாடுகள், மரண தண்டனையை ஒழித்திருந்தாலும், உலக மக்கள் தொகையில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் மரண தண்டனை தக்கவைத்துள்ள நாடுகளில் வாழ்கின்றனர்.

சுதந்திரத்திற்குப் பின்னும் இலங்கை சட்டத்தின் பிரகாரம் தூக்குத்தண்டனை முறைமை அமலில் இருந்தபோதிலும் 1956இல் பிரதமராக ஆட்சிக்கு வந்த எஸ். டபிள்யூ.ஆர்.டீ பண்டாரநாயக்கவால் மரணதண்டனை இல்லாமலாக்கப்பட்டது.
எனினும், அவரது படுகொலையைத் தொடர்ந்து 1959ஆம் ஆண்டு மீண்டும் மரணதண்டனை அமல்படுத்தப்பட்டது.

எனினும் இத்தகைய தண்டனைகளுக்கு எதிராக, உலகம் பூராவும் வலுப்பெற்றிருந்த எதிர்ப்புகள் காரணமாக, 1976ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசிய கட்சி, மரணதண்டனை தொடர்பான சட்டக்கோவையில் ஏற்படுத்திய திருத்தங்களின் பிரகாரம், வழக்கினை விசாரிக்கும் நீதிபதி, சட்டமா அதிபர், நீதியமைச்சர் ஆகியோரின் ஒப்புதலுடன் ஜனாதிபதியின் ஒப்புதலும் அவசியமாக்கப்பட்டது.

இறுதியாக 23.06.1976 அன்று து.ஆ சந்திரதாஸ என்பவருக்கே மரணதண்டனை வெலிக்கடை சிறையில் நிறைவேற்றபட்டது என்பதுடன், 1978ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஆட்சிக்கு வந்த இலங்கை ஜனாதிபதிகள் எவரும், மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான தீர்ப்புகளை செயற்படுத்தும் வகையில் ஒப்புதல் வழங்கி கையெழுத்திட மறுத்துவிட்டனர்.

எனினும், மரணதண்டனைக்கு எதிரான பலத்த எதிர்ப்புகள் இருந்து வருகின்றபோதிலும் சட்டக்கோவையில் மரணதண்டனை இன்னுமே நீக்கப்படவில்லை என்பதால், இலங்கை சிறைகளில் தற்போது ஐநூறுக்கும் மேற்பட்ட மரணதண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என ஆய்வில் வௌிவந்த புள்ளிவிவரம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் தூக்கிலிட்டு மரணதண்டனை வழங்கும் வரலாற்றில், ‘மறு சிறா’ என்று அழைக்கப்படும் டி. ஜெ சிறிபால என்பவரது மரணம், இன்றுவரையில் சர்ச்சைக்குள்ளான ஒன்றாகவே காணப்படுகின்றது.

ஏனெனில், மிகவும் இளவயதினரான இந்தக் குற்றவாளி, மூன்றுமுறை சிறையிலிருந்து தப்பித்தமையால், மீண்டும் தப்பித்துவிடுவாரோ என்கிற அச்சத்தில், சிறைக்காவலர்களால் அதிகப்படியான மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, ஆழ்ந்த மயக்கத்திலுள்ள நிலையில், கண்டி போகம்பர சிறைச்சாலையில் வைத்து, தூக்கில் இடப்பட்டமையானது மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்தியா, அமெரிக்கா, இந்தோனேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜப்பான், இலங்கை போன்ற நாடுகளைப்போலல்லாது மரண தண்டனையின் எண்ணிக்கையை இரகசியமாக வைத்திருக்கும் ஒரு நாடு சீனா என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மரண தண்டனை வழங்குவது நடப்பில் இருந்தாலும், பத்து வருடங்களாக யாருக்கும் மரண தண்டனை வழங்கப்படாமல் இருந்தால் அவை ‘மரண தண்டனை ஒழிப்பு நடைமுறையில் இருக்கும் நாடுகள்’ என்று அழைக்கப்படும் எனவும் பொதுவாக கருதப்படுகின்றது.

இப்படியான வரலாற்று பின்னணிகளுடன் மரணதண்டனை என்ற விடயம் காணப்பட்டாலும், கடுமையான குற்றத்தை இழைக்கும் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தால் மரணதண்டனை வழங்கப்பட்டாலும் அது பெயரளவில் மாத்திரம் சட்டமாக காணப்பட, காலப்போக்கில் குறித்த தண்டனை ஆயுள்தண்டனையாக மாறும் போக்கே அதிகமாக காணப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.