தாய்மார்களால் கைவிடப்படும் சிறுவர்கள்
எதிர்கால தலைமுறையின் இன்றைய விதைகளான சிறுவர்கள் சொல்லில் விவரிக்க முடியாத பாரிய பிரச்சினைகளை அனுபவிக்கும் சூழலிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறான பிரச்சினைகளுக்கு சிறுவர் கைவிடுதலும் பிரதான காரணமாகும்.
இன்றைய நவீன உலகில் “சிறுவர்களை கைவிடுதல்” முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதுடன், அது தொடர்பான சம்பவங்களும் அதிகரித்துக்கொண்டே செல்வதைக் காணலாம். அந்த வகையில் ஒரு தாய் தனது பிள்ளைகளிடம் இருந்து தன்னை உடல் ரீதியாகவோ உளவியல் ரீதியாகவோ விலக்கிக்கொள்ளும்போது கைவிடப்படுதல் ஏற்படுகிறது. இவ்வாறு சிறுவர்கள் கைவிடப்படுவதை இரண்டு வகைகளாக பார்க்கலாம். அதில் ஒன்று சிறுவர்களின் உடல் ஆரோக்கியம், பாதுகாப்பு, அவர்களின் நலன் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் சிறுவர்களை முழுவதுமாக கைவிடும் நோக்கத்துடன் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் பொது இடங்களிலோ அல்லது மறைமுகமான இடங்களிலோ அவர்களை அப்படியே கைவிட்டுச்செல்லுதலாகும். மற்றொரு வகை சிறுவர்களை முழுவதுமாக கைவிடும் நோக்கமின்றி அவர்களின் விருப்பு, வெறுப்பு மற்றும் தேவைகளை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதை குறிக்கிறது. இது பெற்றோரின் அலட்சியப் போக்கை காட்டுகிறது.
முதலாவது வகையிலான சிறுவர் கைவிடப்படுதல் இடம்பெறும்போது அது தொடர்பான செய்திகள் பெரும்பான்மையாக வெளிக்கொணரப்படுகின்றன. ஆனால், இரண்டாவது வகையிலான சிறுவர் கைவிடப்படுதலானது பெரும்பாலும் வெளிக்கொணரப்படாமல் இருப்பதுடன் சிறுவர்களின் நலனில் நேரடியாகவும், மறைமுகமாகவும் அதிக தாக்கத்தை செலுத்தக்கூடியதாக உள்ளது.
புறக்கணிப்பு ரீதியான சிறுவர் கைவிடப்படுதலின் வடிவங்களை மூன்றாக வகைப்படுத்தலாம். அதில் ஒன்று “உணர்ச்சி ரீதியான கைவிடுதல் அல்லது உணர்ச்சி ரீதியான புறக்கணிப்பு”. அதாவது சிறுவர்களின் உணர்ச்சி ரீதியான தேவைகளை பூர்த்தி செய்யாமல் அவர்கள் நிராகரிக்கப்பட்ட, விரும்பப்படாத அல்லது வேதனை மிகுந்த தனிமையை உணர்வதை குறிக்கிறது. உதாரணமாக பிள்ளைகள் சோகமாக இருக்கும்போது தாயினது அன்பும் அரவணைப்பும் அவர்களது நல்வாழ்வுக்கு அவசியமான ஒன்றாகும். இவ்வாறான சூழ்நிலையின்போது பிள்ளைகள் எதிர்பார்க்கும் அன்பை தாய் தருவதற்கு தவறும் பட்சத்தில் அல்லது மன மகிழ்ச்சி தரக்கூடிய செயற்பாடுகளை செய்யாமல் புறக்கணிக்கும் போது உணர்ச்சி ரீதியான கைவிடுதல் அல்லது உணர்ச்சி ரீதியான புறக்கணிப்பு இடம்பெறுகின்றது.
சிறுவர் கைவிடப்படுதலின் மற்றொரு வகை “தாய்வழி இறப்பாகும்”. அதாவது தாயின் மரணத்திற்கு பிறகு அவர்களது குழந்தைகள் கைவிடப்படுவதானது இயல்பாக இடம்பெறுகின்றது. தாயின் இறப்பின் பின்னர் குறித்த பிள்ளைக்கு உள ரீதியான ஆதரவு அதிகமாக தேவைப்படுகிறது.
அது கிடைக்கப்பெறாதபோது வெறுமை உணர்வு தோன்றுவதோடு அதற்கு பிற்பட்ட காலங்களிலும் இந்நிலை தொடர்வதால் பிள்ளையின் எதிர்கால வாழ்க்கைக்கு தடையாக இவ்வகையான கைவிடப்படுதல் காணப்படுகிறது. உதாரணமாக தாய் இறந்த பிறகு தனது வெற்றி – தோல்வி, இன்ப – துன்பங்கள், தேவைகள், ஆசைகள் என்பவற்றை பகிர்வதற்கு யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் குறித்த பிள்ளை தான் கைவிடப்படுவதாக உணர்கிறது. அத்தோடு “தத்தெடுத்தல்” புறக்கணிப்பு ரீதியான சிறுவர் கைவிடப்படுதலின் மூன்றாவது வகையாகும். இதனை இரண்டு கோணங்களில் பார்க்கலாம்.
தத்தெடுத்தல் இடம்பெறும்போது குறித்த பிள்ளை தனது சொந்த தாயிடம் இருந்து கைவிடப்படும் நிலை உருவாவதோடு, வளர்ப்புத்தாய் ஏதேனும் சந்தர்ப்பங்களின்போது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாரபட்சத்துடன் நடந்துகொண்டால் அங்கு வளர்ப்புத் தாயின் அரவணைப்பில் இருந்தும் குறித்த பிள்ளை கைவிடப்படுகிறது.
அந்த வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி, 60 மில்லியன் சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் தங்களது குடும்பங்களால் கைவிடப்பட்டு அநாதை இல்லங்களில் வாழ்வதோடு ஒவ்வொரு ஆண்டும் 7000க்கு மேற்பட்ட சிறுவர்கள் கைவிடப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. அத்தோடு உலகில் 20 மில்லியனுக்கு அதிகமான சிறுவர்கள் கைவிடப்பட்ட நிலையில் வாழ்வதாக Abandoned Children’s Fund குறிப்பிடுகின்றது.
மேலும் கொவிட் 19 காலத்தில் கைவிடப்பட்ட சிறுவர்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களாக இந்தியாவின் மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு சபையின் அறிக்கை குறிப்பிடுகிறது. உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது சிறுவர் கைவிடப்படுதல் பற்றிய அதிகாரபூர்வமான புள்ளிவிபரங்கள் அநேகமான நாடுகளில் காணப்படுவதில்லை.
இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் கைவிடப்படுதலானது சர்வ சாதாரணமான செயலாக மாறிவிட்டது.
அந்த வகையில் சிறுவர்கள் கைவிடப்படுதலில் பல காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. குறிப்பாக திருமணத்துக்கு முன்னாள் பிரசவித்த குழந்தைகள், அதிகமான பிள்ளைகள் உள்ள குடும்பத்தில் வாழும் குழந்தைகள், தேவையற்ற கர்ப்பத்தினால் பிறக்கும் குழந்தைகள் அதிகமாக கைவிடப்படுகின்றனர்.
சிறுவர் கர்ப்பம் அதேபோன்று பாலியல் பலாத்காரத்தினால் கருத்தரித்து பிறக்கும் குழந்தைகளும் இவ்வாறு கைவிடப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளன.
குறிப்பாக, ஆசிய நாடுகளில் தேவையற்ற கர்ப்பம் எதிர்மறையாக பார்க்கப்படுவதால் பிள்ளைகள் கைவிடப்படுதல் அதிகமாக இடம்பெறுகின்றன. உதாரணமாக: திருமணத்துக்கு முன்னதாக பிரசவித்த குழந்தையை கொழும்பு புகையிரத வண்டிக்குள் குழந்தையின் தாயும் தந்தையும் கைவிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று அண்மைய காலத்தில் இடம்பெற்றுள்ளது.
அத்தோடு பொருளாதார சுமையும் சிறுவர்கள் கைவிடப்படுதலில் அதிக தாக்கத்தை செலுத்துகிறது.
வறுமை, வளப்பற்றாக்குறை, நிதி நெருக்கடி, போதுமான வருமானம் இன்மை என்பன காரணமாக பெற்றோர்கள் தமது பிள்ளைகளை வளர்க்க முடியாத நிலையில் அவர்களை கைவிட்டுச் செல்கின்றனர்.
இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் பொருளாதார சுமை காரணமாக அதிகமான பிள்ளைகள் பெற்றோர்களால் கைவிடப்படுகின்றனர். உதாரணமாக, அம்பலாங்கொடையில் ஆறு மாதக் கைக்குழந்தையையும் ஒன்பது வயது சிறுவனையும் அவர்களது தாயார் முச்சக்கர வண்டி சாரதியிடம் கைவிட்டுச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதனோடு பொருளாதார சுமை காரணமாக தாய் வெளிநாட்டுக்கு செல்வதனாலும் அதிகமான பிள்ளைகள் தாயின் அன்பு, பாசம், பாதுகாப்பு, அரவணைப்பில் இருந்து கைவிடப்படுகின்றனர். தாய் தனது பிள்ளைகளை மற்றையவர்களின் பொறுப்பில் விட்டுச் சென்றாலும் மற்றையவர்களின் முழுமையான கவனிப்பு பிள்ளைகளுக்கு கிடைக்கும் என்று கூறமுடியாது. உதாரணமாக, குருநாகலில் மெல்சிறிபுரவில் இரண்டு பிள்ளைகளை தந்தையின் பாராமரிப்பில் விட்டு விட்டு தாய் வெளிநாட்டிற்கு சென்றுள்ளதுடன் 11 மாதங்களுக்குப் பின்னர் தந்தை இரண்டு பெண் பிள்ளைகளையும் தனியாக கைவிட்டு சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அத்தோடு கணவன் மற்றும் மனைவிக்கு இடையிலான உறவுமுறையில் காணப்படும் சிக்கல் தன்மையும் சிறுவர் கைவிடப்படுத்தலுக்கான முக்கிய காரணமாகும். விவாகரத்துரூபவ் சந்தேகம், பிரிவினை, ஏமாற்றுதல் போன்றன காரணமாக கணவன் – மனைவிக்கிடையில் பரஸ்பர தொடர்பு குறைந்து முரண்பாடுகள் ஏற்படுகின்றன. இதனால் அவர்கள் தமக்கென தனியான வாழ்க்கை அல்லது வாழ்க்கைத்துணையை தேடிச் செல்கையில் அவர்களின் பிள்ளைகள் பெற்றோரால் கைவிடப்படுகின்றனர்.
அத்தோடு சில பெற்றோர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதும் பிள்ளைகள் கைவிடப்படுத்தலுக்கு பிரதான காரணமாகும். மனச்சோர்வு, அடிக்கடி கோபப்படுதல், வெறுப்புணர்வு போன்றவற்றுக்கு பெற்றோர் உள்ளாகும்போது தனது பிள்ளைகள் மீது அக்கறையின்மை மற்றும் பாசம் இல்லாத நிலையை உருவாக்குகிறது. இதனால் குறித்த பிள்ளை பெற்றோரின் அரவணைப்பில் இருந்து கைவிடப்படலாம் அல்லது சில சந்தர்ப்பங்களில் முழுமையாக கைவிடப்படலாம்.
தாய் அதிக வேலைப்பளுவினைக் கொண்டிருக்கும் சந்தர்ப்பங்களிலும் இவ்வாறான நிலைமைகள் அதிகமாக இடம்பெறுகின்றன. அதுமட்டுமன்றி பெற்றோர் பொறுப்பற்றவர்களாக இருக்கும் பட்சத்திலும் பிள்ளைகள் கைவிடப்படுகின்றனர்.
பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரும் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் முறையான பராமரிப்பின்றி பிள்ளைகள் அவதிப்படுவதும் உண்டு. அதேபோன்று பெற்றோரில் ஒருவர் சிறைக்கு சென்றால் அக்குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் நிலை மோசமடைவதோடு, பராமரிக்க வாய்ப்பின்றி கைவிடப்பட்ட சம்பவங்களும் உண்டு.
மேற்கூறப்பட்ட வகையில் சிறுவர்கள் கைவிடப்படும்போது அவர்கள் உடல், உள, சமூக, பொருளாதார ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றனர். உள ரீதியான பாதிப்புக்கள் எனும்போது தாயிடம் இருந்து முழுமையாக கைவிடப்படும்போதோ அல்லது தாயின் அன்பில் இருந்து புறக்கணிக்கப்பட்டு கைவிடப்படும்போதோ பிள்ளைகள் கவலை, விரக்தி, பிரிவு, மனச்சோர்வு, அவநம்பிக்கை, பொறாமை, கோபம், தனிமையுணர்வு, தற்கொலை உணர்வு போன்றவற்றுக்கு உள்ளாகின்றனர்.
அத்துடன் உடல் ரீதியான பாதிப்புக்கள் எனும்போது கைவிடப்படும் பிள்ளைகளுக்கு தாயின் பாராமரிப்பு முழுமையாக கிடைக்கப்பெறாமையால் உடல் மெலிவு, மந்த போசணை, உடல் வளர்ச்சி குறைபாடு என்பவற்றினால் பாதிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் ஆரோக்கியமற்ற சமூகம் உருவாகவும் வழிவகுக்கலாம்.
சிறுவர்கள் கைவிடப்படுவதனால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படுகிறது. இதனால் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு அவர்கள் முகங்கொடுப்பதோடு சிறுவர் கடத்தல்களும் அதிகமாக இடம்பெறலாம். அதுமட்டுமன்றி, சிறுவர்கள் கைவிடப்படுவதால் தனது தேவையை தானே பூர்த்தி செய்யவேண்டிய கட்டாயத்தில் அவர்கள் சிறு சிறு தொழில்களில் ஈடுபட எத்தனிக்கும்போது சிறுவர் தொழிலாளர்கள் அதிகரித்தலும் இடம்பெறுகிறது. கைவிடப்படும் சிறுவர்கள் தமக்கென தனியான உலகத்தை உருவாக்கி தான் செய்வது சரியென்ற நிலைப்பாட்டில் குற்ற செயல்களை செய்ய ஆரம்பிப்பர். உதாரணமாக போதைப்பொருள் பாவணை, போதைப்பொருள் கடத்தல், தனக்கு ஆறுதல் கிடைக்கும் என்று தவறான மற்றும் ஆபாசமான புகைப்படங்கள், வீடியோக்கள் என்பவற்றை பார்த்தல் மற்றும் தமது தேவையை பூர்த்தி செய்வதற்காக களவெடுத்தல், விபச்சாரத்தில் ஈடுபடல், கொலை செய்தல் போன்ற குற்ற செயல்களையும் மேற்கொள்ளலாம். இது எதிர்காலத்தில் நன்னடத்தையுள்ள ஆரோக்கியமான சமுதாயம் உருவாவதற்கு தடையாக அமையும். இது சிறுவர்களின் ஆளுமை வளர்ச்சியில் பாதிப்பை உருவாக்கலாம்.
சிறுவர்களின் நலன் ஒரு நாட்டின் வளமான வளர்ச்சிப் பாதைக்கு முக்கியமானதாகும். சிறுவர்கள் கைவிடப்படுவதனால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்படுகின்றது. எனவே சிறுவர்கள் கைவிடப்படுதல் தொடர்பாக அனைவருக்கும் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதோடு பெற்றோருக்கும் சிறுவர் பாராமரிப்புரூபவ் பாதுகாப்பு பற்றிய அறிவினை வழங்குதலும் அவசியமானதொன்றாகும்.
அதுமட்டுமன்றி கைவிடப்படும் சிறுவர்களின் உடல், உள ரீதியான ஆரோக்கியத்தை பேணி அவர்களை சிறந்த ஆளுமை உள்ளவர்களாக உருவாக்குதல் இன்றியமையாததாகும். கைவிடப்பட்ட சிறுவர்கள் உள ரீதியான பாதிப்புக்களுக்கு அதிகமாக உள்ளாவதால் அவர்களை உள ரீதியில் வலுப்படுத்தும் வகையில் மனநல ஆலோசனைகளையும் உள விருத்தி சார்ந்த செயற்பாடுகளையும் அவர்களுக்கு மேற்கொள்ள வேண்டும். கைவிடப்பட்ட சிறுவர்களுக்கு எதிர்காலம் குறித்த அச்சம் அதிகமாக காணப்படுவதால் அது குறித்த பயத்தை போக்கும் முகமாக அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு மன தைரியத்தை ஏற்படுத்த வேண்டும். முக்கியமாக கைவிடப்பட்ட சிறுவர்களுக்கு முறையான கல்வியை வழங்குவதன் மூலம் அவர்களை வலுப்படுத்த முடியும் என்பதோடு அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் விளையாட்டு, கலை, நடனம் போன்ற அழகியல் சார் செயற்பாடுகளிலும் அவர்களை ஈடுபட வைப்பதன் மூலம் ஆளுமைமிக்க சிறுவர் சமூகத்தை உருவாக்க முடியும்.