;
Athirady Tamil News

உலகப்போரின் கதாநாயகனும் வில்லனும்

0

இரண்டாம் உலகப்போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான் அடால்ப் ஹிட்லர். 2ஆம் உலகப்போரின்போது ஜேர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது. 2ஆம் உலகப் போர் 5 கோடி மூள்வதற்கும் அதன் மூலம் பெருமளவினர் இறப்பதற்கு காரணமாக இருந்த ஹிட்லரின் வாழ்க்கை பல திருப்பங்களும் திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தது.

வட ஆஸ்திரியாவில் உள்ள பிரானவ் என்ற ஊரில் பிறந்தார். தந்தையின் பெயர் அலோய்ஸ் கிரப்பர் ஹிட்லர். இவர் சுங்க இலாகா அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மூன்று மனைவிகள். இதில் மூன்றாவது மனைவியான க்ளாராவின் நான்காவது மகன் ஹிட்லர்.

பிறந்தது முதலே ஹிட்லர் நோஞ்சானாக இருந்தார். அடிக்கடி காய்ச்சல் வரும். ஒரு வருடத்துக்குப் பிறகுதான் உடம்பு தேறியது. அலோய்ஸ் கண்டிப்பான தந்தை. தந்தை சுங்க அதிகாரியாக பணியாற்றியதால் அடிக்கடி வெளி ஊர் சென்றுவிடுவார். பள்ளியில் படிக்கும்போது ஹிட்லர் தான் வகுப்பில் முதல் மாணவர். ஹிட்லருக்கு அம்மாவிடம் செல்லம் அதிகம். அலோய்ஸ் ஹிட்லரையும் அரச பணியில் சேர்க்க விருப்பப்பட்டார். ஆனால், ஹிட்லரின் விருப்பமோ தான் ஓர் ஓவியராக வேண்டும் என்பதாகவே இருந்தது.

ஹிட்லருக்கு படிப்பில் ஆர்வம் குறைந்தது. மாணவப் பருவத்திலேயே நிறைய நாவல்கள் படித்தார். போர்கள் பற்றிய கதைகள் என்றால் நாட்டம் அதிகம்.

1903ஆம் ஆண்டு ஹிட்லரின் தந்தை இறந்துபோனார். தந்தையின் கண்டிப்பு இல்லாமல் வளர்ந்த ஹிட்லர் நாளுக்கு நாள் முரடனாக மாறினார். மாணவர்களுடன் சண்டை போடுவதுடன் ஆசிரியர்களுடனும் மோதுவார். தனது 17 வயதில் பள்ளித் தேர்வில் தேறினார். இவரது வாழ்க்கை அரசாங்க உதவிப்பணத்தில் ஓடியது.

18 வயதானவுடன் அம்மாவிடம் பணம் பெற்றுக்கொண்டு ஓவியராகப் போகிறேன் என்று சொல்லி ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவுக்கு ரயிலேறிவிட்டார். ஆனால், இவர் ஓவியப்பள்ளி தேர்வில் தோல்வியடைந்துவிட்டார். எனினும், அடுத்த முறை அனுமதித் தேர்வில் கலந்துகொள்ளவில்லை. அந்த ஆண்டின் இறுதியில் ஹிட்லரின் தாயாரும் இறந்துபோனார்.

ஹிட்லரின் பணம் கரைந்துபோனதனால் பிழைக்க வழி தேடி ஜேர்மனிக்கு வந்தார். ஓவியராக வர முடியவில்லை. இராணுவத்திலாவது சேரலாம் என்று எண்ணி ஜேர்மனி இராணுவத்தில் சேர்ந்தார். அப்போது இவருக்கு வயது 25. முதலாம் உலகப் போர் தொடங்கிய காலமது.

1914இல் தொடங்கி 1918 வரை நடந்த முதலாம் உலகப் போரின்போது ஜேர்மனி இராணுவத்தில் சேர்ந்தார். இராணுவத்தில் சோல்ஜராக இருந்தார். அங்கே அவருக்கு “ரன்னர்” பதவி தரப்பட்டது. போரின்போது எதிரிகளால் “மஸ்டர்ட் வாயு” வீசப்பட்டதனால் ஹிட்லரின் ஒரு கண் தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. நுரையீரலும் பாதிப்புக்கும் உள்ளாகி, ஹிட்லர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜேர்மனி, முதலாம் உலகப் போரில் சரணடைந்தது. மருத்துவமனையில் இருந்த ஹிட்லர் கதறியழுதார். ஜேர்மனியின் தோல்விக்கு கம்யூனிஸ்ட்களும் யூதர்களும் காரணம் என அவர்கள் மீது வெறுப்பை வெளிப்படுத்தினார்.

பின்னர், இவர் புதிதாக தொடங்கப்பட்ட “தேசிய சோசியலிஸ்ட் ஜேர்மன் தொழிலாளர் கட்சி”யில் உறுப்பினராக சேர்ந்தார். 1920 பெப்பரவரி 29ஆம் திகதி அந்த கட்சியின் முதல் பொதுக் கூட்டம் நிகழ்ந்தது. அதில் ஹிட்லர் தனது முதல் உரையை தொடங்கினார். சுவஸ்திகா சின்னத்தை கட்சியின் சின்னமாக பயன்படுத்தினார்.

1923இல் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி செய்ததாக ஹிட்லர் கருதப்பட்டார். அதனால் ஹிட்லரையும் அவரது சகாக்களையும் சிறையில் அடைத்தது, ஜேர்மனி அரசு.

ஹிட்லருக்கு முதல் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஓர் ஆண்டாக குறைக்கப்பட்டது. இவர் சிறையில் இருந்தவாறே “எனது போராட்டம்” (Main Kamp) என்ற நூலை எழுதினார்.

1928இல் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வி அடைந்தது. இவர் ஜனாதிபதித் தேர்தலில் “ஹிண்டன் பேர்க்” எனும் மூத்த தலைவருக்கு எதிராக போட்டியிட்டு தோற்றார். ஹிண்டன் பேர்க் கட்சியினருக்கு ஆட்சியமைக்க ஹிட்லரின் நாஜி கட்சியின் ஆதரவு தேவைப்பட்டது.

எனவே ஹிட்லருக்கு “சான்சலர்” பதவி கிடைத்தது. ஆனால், ஹிட்லரின் மீது இருந்த பயத்தின் காரணமாக அதிகாரங்கள் குறைக்கப்பட்டே கொடுக்கப்பட்டது. அதே சமயம் பாராளுமன்றக் கட்டடம் கொளுத்தப்பட்டது. ஜனாதிபதி ஹிண்டன்பேர்க் மக்களின் போராட்டத்துக்கு அடிபணிந்தார்.

1933 ஜனவரி 30ஆம் திகதி ஹிட்லரை அழைத்து பிரதமராக நியமித்தார். இவர் பதவியேற்ற ஒரு வருடத்தில் ஹிண்டர்பேர்க் உயிரிழந்தார். இதனால் ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றி எதிர்ப்பாளர்களை ஒழித்துவிட்டு ஜேர்மனியின் சர்வாதிகாரியானார் ஹிட்லர். இராணுவ இலாகாவையும் இராணுவப் பதவியையும் தானே எடுத்துக்கொண்டார். அரசியல் கட்சிகளை தடை செய்தார். பாராளுமன்றத்தை கலைத்தார். எதிரிகளை சிறையில் தள்ளினார்.

யூதர்களை கைது செய்து சிறையில் பட்டினி போட்டும் விஷப்புகை செலுத்தியும் கொன்றார். தினமும் ஆறாயிரம் முதல் பத்தாயிரம் பேர் விஷப்புகையினால் கொல்லப்பட்டனர்.

ஜேர்மனியின் தரைப் படை, கடற்படை, விமானப்படை மூன்றும் உலகின் சிறந்த படைகளாக உருவெடுத்தன.

1939ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி எதுவித போர்ப் பிரகடனமும் தெரிவிக்காமல் போலந்து நாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டை கைப்பற்றிக்கொண்டார். அப்போது ஹிட்லருடன் நட்பு கொண்டார், இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி.

ஜப்பான் உட்பட வேறு சில நாடுகளும் ஜேர்மனியுடன் கைகோர்த்துக்கொண்டன. ஹிட்லரை கொலை செய்ய அவருடைய தளபதிகளே சதித்திட்டம் தீட்டினர். இவர்களுக்கு தலைவன் “கர்னல் வான்ஸ்டப்பன் பர்க்” ஆவான்.

1940 ஜூலை 20ஆம் திகதி நடந்த கொலை முயற்சியில் மயிரிழையில் உயிர் தப்பினார், ஹிட்லர். கொலை முயற்சியாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஹிட்லர் பதவியேற்றபோது 1933இல் ஜேர்மனியில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 60 இலட்சம். ஆனால், 1936இல் வேலையில்லாதவர் என்று ஒருவர் கூட இல்லை. படுவேகமாக கார்கள் போவதற்கும் மிக நீண்ட அதிவேக பாதை உலகில் முதல் முறை கட்டப்பட்டது, ஜேர்மனியில் ஹிட்லர் ஆட்சிக் காலத்திலேதான். முதியவர்களுக்கு ஓய்வூதியம், இலவச வைத்தியம், காப்புறுதி திட்டங்கள், சாமான்யர்களுக்கான கார் முதலிய வசதிகள் கொண்டுவரப்பட்டது, இவரது காலத்தில்தான்.

தொழிற்சாலைகளால் ஏற்படக்கூடிய மாசினை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். மருத்துவத் துறையிலும் ஜேர்மனியை வியக்கத்தக்க வகையில் முன்னேற்றினார்.

பெண்களுக்கு இராணுவத்தில் பல பணிகளை ஒதுக்கி இடமளித்து பெண்ணுரிமை காப்பதில் தலைசிறந்து விளங்கினார். மிருக வதை தடுப்புச்சட்டத்தை அமுல்படுத்தினார். குழந்தைகளிடம் அன்பு காட்டி அவர்களுக்கு பிடித்த மனிதராக திகழ்ந்தார். ஹிட்லரின் காலத்தில் ஜேர்மனிய இராணுவம் தொழில்நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்தது.

ஹிட்லர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது ஜேர்மனியின் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம்தான். அப்போது சிறந்த ஆயுதங்கள் கூட இல்லை. ஆனால், ஹிட்லர் ஆட்சியேற்ற 4 ஆண்டுகளில் ஐரோப்பாவில் மிகப்பெரிய பிரம்மாண்டமான இராணுவமாக மாறியது ஜேர்மனிய இராணுவம்.

நவீன போர் விமானங்கள், துப்பாக்கிகள், டாங்கிகள் போன்றவற்றை கொண்டமைத்து அசுர சக்தியாக ஜேர்மனிய இராணுவம் மாறிய வேகம் உலக வரலாற்றிலே பெரிய ஆச்சரியம் என்று உலகப்பெரும் இராணுவ ஆராய்ச்சியாளர்கள் இன்றும் வியந்து கூறுகின்றார்கள்.

ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில் சுரங்கம் அமைத்து தங்கியிருந்தார், ஹிட்லர். 1945 ஜனவரி 16ஆம் திகதி முதல் ஹிட்லர் அங்கு வசிக்கலானார்.

1804இல் மாவீரன் நெப்போலியன் பயன்படுத்திய நாற்காலி ஒன்று இவரிடம் இருந்தது.

1945 ஏப்ரல் பின்பகுதியில் பேர்லின் நகரம் மீது ரஷ்ய விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. ஹிட்லர் தங்கியிருந்த இடத்துக்கு அருகிலும் குண்டுகள் விழுந்தன. ஈவாபிரவுன் என்ற பெண் 1930ஆம் ஆண்டு முதல் ஹிட்லரின் மனம் கவர்ந்த காதலியாக இருந்து வந்தாள்.

முசோலினி சிறைவைக்கப்பட்ட நேரத்தில் ஹிட்லர் தன் ஆத்ம நண்பரான முசோலினியை மீட்க ரகசியப்படையை அனுப்பி முசோலினியையும் அவரது குடும்பத்தினரையும் மீட்டார்.

1945 ஏப்ரல் 30ஆம் திகதி இரவு 9 மணியளவில் முசோலினியும் அவர் மனைவியும் எதிர்ப்பாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என சுவீடன் நாட்டு வானொலி சேவை அறிவித்த செய்தியை ஹிட்லர் கேட்டு மிகுந்த வேதனையடைந்தார். அன்றிரவு 12 மணியளவில் பெர்லின் நகரம் முழுவதும் ரஷ்யப்படைகள் வசமாகிவிட்டது என ஹிட்லருக்கு தகவல் கிடைத்தது.

1945ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் திகதி பெர்லின் நகரை ரஷ்யப் படைகள் சூழ்ந்துகொண்டன. எப்பொழுதும் எதிரிகளிடம் கைதிகளாக பிடிபடலாம் என்ற நிலை உருவாகியது. இதனால் எதிரிகளிடம் சிக்குவதை விட தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவை ஈவாபிரவுனிடம் தெரிவித்தார்.

அந்த ஆண்டு ஏப்ரல் 27ஆம் திகதி ஹிட்லரின் பிறந்த நாளை முன்னிட்டு பாதாள அறையில் விருந்து நடந்தது. மறுநாள் ஏப்ரல் 28ஆம் திகதி ஹிட்லர், ஈவாபிரவுன் திருமணம் நடைபெற்றது. காலை 11 மணிக்கு ஹிட்லர் தனது உயிலை எழுதினார்.

அந்த உயிலில் தன் சொத்துக்கள் யாவும் நாட்டுக்குச் சேரவேண்டும் என குறிப்பிட்டார். பிறகு தன் அந்தரங்க உதவியாளரை அழைத்து, “நானும் ஈவாவும் ஒன்றாக இறந்துவிடப் போகின்றோம். நாங்கள் இறந்த பின்னர், எங்கள் உடல்களை ஒரு போர்வையில் சுருட்டி பெற்றோலால் எரித்து சாம்பலாக்கிவிடுங்கள். எங்கள் அறையில் உள்ள கடிதங்கள், டைரிகள், என் உடைகள், என் பேனாக்கள், கண்ணாடி முதலிய பொருட்களை சேகரித்து ஒன்றுவிடாமல் எரித்துவிடுங்கள் என்று கூறி தன் மனைவியுடன் தன் அறைக்குச் சென்றார். அறைக்கதவு மூடப்பட்டது. வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. நீண்ட நேரம் கழித்து காத்திருந்த மந்திரிகளும் தளபதிகளும் கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றனர்.

ஒரு சோபாவில் உட்கார்ந்த நிலையில் ஹிட்லரின் உயிரற்ற உடல், அவர் காலடியில் ஒரு துப்பாக்கி கிடந்தது. அதன் நுனியில் இருந்து புகை வந்துகொண்டிருந்ததால், அவர் சற்று நேரத்துக்கு முன்பே தன்னை சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிந்தது. ஹிட்லரின் வலது கரம் அவரது தாயாரின் படத்தை அணைத்தபடி இருந்தது. ஹிட்லர் உடல் இருந்த சோபாவில் சாய்ந்த பிணமாக இருந்தாள் ஈவா.

ஹிட்லரின் உடலையும் ஈவாவின் உடலையும் ஒரு கம்பளப் போர்வையில் சுற்றினார்கள். பிறகு அந்த உடல்களை அறையில் இருந்து தலைமைச் செயலகத் தோட்டத்துக்கு தூக்கிக்கொண்டு போனார்கள். அங்கே பெற்றோலையும் எரிவாயுவையும் கொண்டு இரு உடல்களையும் எரித்து சாம்பலாக்கினார்கள். சில மணிநேரம் கழித்து வந்த ரஷ்யப் படையினர் ஹிட்லரை காணாமல் திகைத்துப் போனார்கள்.

அந்த சம்பவத்துக்கு பிறகு ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டமை, ஹிட்லரினதும் அவரது மனைவியினதும் உடல்கள் எரிக்கப்பட்டமை தொடர்பான செய்திகள் பரவின. எனினும், அப்போது ஹிட்லர் இறக்கவில்லை; தலைமறைவாக இருக்கிறார் என்று நம்பியவர்களும் ஏராளம்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.