;
Athirady Tamil News

மேல்மருவத்தூர் ’அம்மா’ பங்காரு அடிகளார்

0

“அம்மா” என்று பக்தர்களினால் அன்போடு அழைக்கப்படும் உலக புகழ்பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவுனர் பங்காரு அடிகளார் இறையடி சேர்ந்தமை அவரது பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் நல குறைவால் சிகிச்சை பெற்றுவந்த அவர் மாரடைப்பு காரணமாக தனது 82ஆவது வயதில் ஒக்டோபர் 19ஆம் திகதி மண்ணுலகை விட்டு மறைந்தார்.

அவரது பிரிவால் உலகம் முழுவதிலும் உள்ள பங்காரு அடிகளாரின் பக்தர்கள் துயரில் வாடுகின்றனர்.

இத்தருணத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து சாதாரண ஆசியராக பணியாற்றிய இளைஞர் எப்படி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி எனும் ஆன்மீக சாம்ராஜ்யத்தை உருவாக்கினர் என்று பார்ப்போம்.

பல்லாண்டுகளாக ஆன்மிகத்துறையில் பங்காற்றிய யாரும் செய்யாத புரட்சியை பங்காரு அடிகளார் செய்தார். அதுவே அவரது வளர்ச்சிக்கு மிக பெரிய பலத்தை கொடுத்தது. அவர் செய்த மிக பெரிய புரட்சி எதுவென்றால், பெண்களுக்கு ஆன்மீக ரீதியில் சில அதிகாரங்களை, உரிமையை வழங்கி பெண்கள் மாதவிடாய் போன்ற நாட்களிலும் ஆலயத்துக்கு வந்து வழிபடலாம் என்ற முறைமையை உருவாக்கியமையே ஆகும்.

பொதுவாக உலகில் உள்ள சில மத வழிபாட்டு முறைகளில் பெண்கள் மாதவிடாய் நாட்களில் இறைவழிபாட்டில் ஈடுபடுவது தடை செய்யப்பட்ட மரபாகவே உள்ளது.

குறிப்பாக, இந்து மதத்தை பின்பற்றும் பெண்கள் இக்காலப்பகுதியில் ஆலயத்துக்குச் செல்வதோ, இறைவழிபாட்டில் ஈடுபடுவதோ இல்லை.

இது பரம்பரை பரம்பரையாக காலங்காலமாக கடைப்பிடிக்கப்படுகின்ற ஒரு மரபாக உள்ளது. ஆனால், இந்த மரபை உடைத்து புரட்சி செய்தவர் பங்காரு அடிகளாவார்.

ஆம், மாதவிடாய் காலங்களிலும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்துக்குள் பெண்கள் நுழையலாம். வழிபாடு செய்யலாம். அது மட்டுமல்ல, இந்த ஆலயத்தில் பூசாரிகளின் துணையின்றி பெண்கள் கருவறைக்குள் நுழைந்து பூசைகளையும் செய்யலாம் என்பது சிறப்பு.

இந்த புரட்சியை செய்த பங்காரு அடிகளார், மேல்மருவத்தூரைச் சேர்ந்த விவசாயிகளான கோபால் – மீனாம்பிகை அம்மையார் தம்பதிக்கு 1941ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி, இரண்டாவது குழந்தையாக பிறந்தார்.

இவரது இயற்பெயர் சுப்பிரமணி. பங்காரு என்றால் தெலுங்கு மொழியில் ‘தங்கம்’ என்று பொருள்.

பங்காரு அடிகளார் சிறு வயதாக இருக்கும்போதே இவருக்கு அம்மனின் அருள் கிடைத்ததாக அவரது பெற்றோர் நம்பினர். அவ்வப்போது அவரது உடலில் சாமி வருவதும் நடந்தது.

பாடசாலை கல்வியை விடாமல் தொடர்ந்த அவர், ஆசிரியர் பயிற்சியையும் முடித்தார். பின்னர், அச்சிரப்பாக்கம் அரப்பேடு கிராமத்தில் உள்ள ஒரு பாடசாலையில் ஆசிரியர் பணியில் இணைந்தார்.

இதற்கிடையே, 1966ஆம் ஆண்டு… ஒருநாள் பங்காரு அடிகளாரின் குடும்பத்தில் நடந்த விழா ஒன்றில் பங்காரு அடிகளாரை ஆதி பராசக்தி ஆட்கொண்டதாகவும், தீப ஆராதனை தட்டு ஒன்றை வளைத்து தனது சக்தியை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேல்மருவத்தூரில் அற்புதம் நடக்கப் போவதாகவும், தான் அங்கு கோயில் கொள்ளப்போவதாகவும் பங்காரு அடிகளார் வாயிலாக ஆதிபராசக்தி அம்மன் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் குறி கேட்க சுற்றுவட்டார ஊர்களில் இருந்து ஆட்கள் வர ஆரம்பித்தனர். ஆதிபராசக்தியே தன் மீது இறங்கி, பக்தர்களுக்கான செய்தியை தெரிவிப்பதாக சொன்னார் அடிகளார்.

1968ஆம் ஆண்டு செப்டம்பரில் உத்திரமேரூரைச் சேர்ந்த லக்ஷ்மியுடன் இவருக்குத் திருமணமானது. இவர்களுக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் பிறந்தனர்.

இதேவேளை, பங்காரு அடிகளார் வீட்டின் பின்புறம் இருந்த வேப்ப மரத்தில் பால் வடிவதாக தகவல் பரவவே ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு செல்ல ஆரம்பித்தனர்.

வேப்பமரம் இருந்த இடத்தில் சிறிய அளவிலான கூரை கொட்டகை அமைக்கப்பட்ட நிலையில், ஆசிரியராக இருந்த பங்காரு அடிகளார் அருள்வாக்கு கூறுதல், வேப்பிலை மந்திரித்தல் போன்றவற்றை செய்து வந்தார். அந்த வேப்பமரம் இருந்த இடத்தில்தான் தற்போது ஆதிபராசக்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

1970களின் தொடக்கம் முதல் சக்தி பீடத்தை நிறுவி பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லிவந்தார். இவர் நிறுவிய ஆதிபராசக்தி பீடம் செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் உள்ளது.

1975இல் அங்கு ஆதிபராசக்தியின் சிலை நிறுவப்பட்டது. இந்த ஆலயம் இந்த ஊரின் அடையாளமாக மாறியது. இப்படியாகத்தான் மிகப்பெரிய ஆன்மிக சாம்ராஜ்யத்தின் விதை ஊன்றப்பட்டது.

ஆன்மிகத்துடன் சமுதாய தொண்டையும் செய்துவந்த இவர், 1978இல் முதன்முதலாக காஞ்சிபுரத்தில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தைத் தொடக்கி வைத்தார்.

இவர் நிறுவிய ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்கள் கருவறை வரை சென்று பூஜை செய்யலாம், மாதவிடாய் காலத்திலும் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்யலாம் என்ற வழிமுறைகளை அறிமுகம் செய்ததால், 1980களில் பங்காரு அடிகள் மிகவும் பிரபலம் அடைந்தார்.

ஆதிபராசக்தியின் வெளிப்பாடாக தன்னை அவர் அறிவித்துக்கொண்டதால், அவருக்கு பக்தர்கள் அதிகரிக்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் பக்தர்கள் அவரை ‘அம்மா’ என்று அழைக்கத்தொடங்கினர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்கள் மட்டும் மாலை அணிந்து செல்வது போல, பெண்கள் மாலை அணிந்துகொண்டு ஆதிபராசக்தி கோவிலுக்கு வரும் வழிமுறையை கொண்டு வந்ததால், பல கிராமங்களில் இருந்தும் பெண்கள் கூட்டமாக அவரது கோவிலுக்கு வருகை தந்த வண்ணமிருந்தனர்.

ஆடி மாதத்திலும் தைப்பூசத்தை ஒட்டியும் பக்தர்கள் தங்கள் ஊர்களில் இருந்தபடி வேண்டிக்கொண்டு, பாத யாத்திரையாகவும் வாகனங்கள் மூலமும் சாரைசாரையாக மேல் மருவத்தூருக்கு வர ஆரம்பித்தனர். இந்தக் காலகட்டத்தில் ஆதிபராசக்தியின் மகிமையைச் சொல்லும் விதமாக ‘மேல்மருவத்தூர் அற்புதங்கள்’ என்ற பெயரில் ஒரு திரைப்படமும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதற்குப் பிறகு, மேல்மருவத்தூருக்கு வரும் கூட்டம் மேலும் அதிகரித்தது.

அவரின் வழிபாட்டு மன்றங்கள் காஞ்சிபுரத்தை அடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் 1980களின் தொடக்கத்தில் பரவியது.

தற்போது 7,000க்கும் மேற்பட்ட பங்காரு அடிகளாரின் வார வழிபாட்டு மன்றங்கள் இந்தியா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளதாக கூறப்படுகிறது.

அத்தோடு, 25க்கும் மேற்பட்ட சக்தி பீடங்களும் மேல்மருவத்தூர் சித்தர் பீடத்துக்கு தொண்டாற்றி வருகின்றன. இந்த சித்தர் பீடத்தின் சார்பில் மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, இயன்முறைக் கல்லூரி, மருந்தியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பல்தொழில்நுட்பப் பயிலகம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, விவசாயக் கல்லூரி, பாடசாலைகள் ஆகியவை இயங்கி வருகின்றன.

2010ஆம் ஆண்டுக்கு பின்னர் வருமான வரி உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் இவரும் இவரது உறவினர்களும் சிக்கினர். ஆயினும் பங்காரு அடிகளார் ஆற்றிய சேவைக்காக மத்திய அரசு அவருக்கு 2019ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

இந்நிலையில், ஆன்மிகத்தோடு சமூகப்பணி செய்துவந்த பங்காரு அடிகளாரின் மறைவு அவரது பக்தர்களுக்கு பெருந்துயரை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது இறுதி நிகழ்வில் பக்தர்கள் கதறி அழுத காட்சியே இதற்கு பெரும் சான்று. பிரதமர் மோடி தொட்டு பல அரசியல் தலைமைகள் பங்காரு அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, முழு அரச மரியாதையுடன் பங்காரு அடிகளாரின் இறுதி நிகழ்வு நடைபெறும் என அறிவித்தார். அதற்கிணங்க, 42 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரச மரியாதையோடு, பங்காரு அடிகளாரின் பூதவுடல் சித்தர் முறைப்படி அமர்ந்த நிலையில் அடிகளார் அருள்வாக்கு சொல்லும் புற்று மண்டபம் கருவறை அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. ஓம் சாந்தி..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.