மனித படுகொலைகளின் களமாகும் இலங்கை 7 மாதங்களில் 358 படுகொலைகள் பதிவு
உலகில் இன்றைய நவீன காலத்தில் மனித உயிர்களுக்கான மதிப்பும் முக்கியத்துவமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ரஷ்ய – உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் உட்பட உலகத்தின் பல்வேறு பாகங்களிலும் மானிடர்களுக்கெதிரான வன்மையான சூழல் நாளுக்கு நாள் அச்சத்தையே ஏற்படுத்துகிறது. இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து சுமார் 13 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அன்றைய காலத்தை விட இன்றைய சூழலில் ஏற்படக்சூடிய இயற்கைக்கு முரணான மனிதப்படுகொலைகள் நாட்டு மக்களிடையே பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. அவ்வாறான அச்சத்தை ஏற்படுத்திய சம்பவங்களை பரவலாக அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
அந்த வகையில் கடந்த செப்டெம்பர் மாதம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 6 வயது சிறுமியொருவர் கொல்லப்பட்டார். துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபர்களின் இலக்கு சிறுமியின் தந்தையாவார். எனினும் தந்தையை இலக்காக வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் அப்பாவி சிறுமியின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சம்பவம் மாத்திரமேயாகும். இவ்வாறு நாட்டின் பல பகுதிகளிலும் இதுபோன்ற வன்ம சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் பதிவாகிக் கொண்டு தான் இருக்கின்றன.
அந்த வகையில் இவ்வாண்டில் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் 358 மனிதப்படுகொலைகள் பதிவாகியுள்ளதாக குற்றப்புலனாய்வு, பகுப்பாய்வு மற்றும் தடுப்புப்பிரிவு தெரிவிக்கின்றது. இவற்றில் தனிநபர்களால் 77 கொலைகளும், குழுக்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட 67 கொலைகளும் உள்ளடங்குகின்றன. இவற்றில் 35 கொலை சம்பவங்கள் துப்பாக்கிச்சூட்டினால் இடம்பெற்றுள்ளன. எம்பிலிபிட்டி, நுகேகொட, களனி, தங்காலை, பாணந்துரை, கம்பஹா, எல்பிட்டி, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, கேகாலை, மாத்தறை, நீர்கொழும்பு, கெப்பிட்டிகொல்லாவ, வவுனியா, காலி, பொலன்னறுவை, முல்லைத்தீவு மற்றும் சீதாவாக்கை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இவ்வாறிருக்க மறுபுறம் வாள் வெட்டு சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மைக்காலமாக அடிக்கடி வாள் வெட்டு சம்பவங்கள் பதிவாகின்றமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. 1985ஆம் ஆண்டு மே மாதம் நெடுந்தீவுக்கும் புங்குடுதீவுக்கும் இடையில் சென்ற குமுதினி படகில் பயணித்த 23 பேர் கூட்டாக படுகொலை செய்யப்பட்ட குமுதினி படகு படுகொலைக்கு பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் ஒரே வீட்டில் 5 முதியவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் புங்குடுதீவையே உலுக்கியது. 70 வயதுக்கு மேற்பட்ட மூன்று பெண்கள் உட்பட ஐவர், பணத்துக்காக மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.
சம்பவத்தின் போது அச்சத்தில் குரைத்த நாயொன்றையும் சந்தேகநபர் கொல்ல முயற்சித்திருந்த போதிலும், அந்த நாய் வெட்டுக்காயங்களுடன் உயிர் பிழைத்தது. இவ்வாறு மனித உயிர்களுக்கு மாத்திரமின்றி , விலங்குகளின் உயிருக்கு கூட பாதுகாப்பு அற்ற மிக மோசமான சமூகமே இன்றைய காலத்தில் காணப்படுகிறது. இவ்வாண்டில் ஜூலை வரையான காலப்பகுதியில் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குருணாகல், மாத்தறை, நீர்கொழும்பு, இரத்தினபுரி, கிளிநொச்சி, எம்பிலிபிட்டி, சீதாவாக்கை, குளியாப்பிட்டி, பாணந்துறை, எல்பிட்டி மற்றும் தங்காலை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்தக் கொலைகள் பதிவாகியுள்ளன.
துப்பாக்கிச்சூடு, வாள்வெட்டு உட்பட வெ வ்வேறு முறைகளில் அதிகளவில் பெண்களே கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு கொலை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 264 ஆகும். அதே போன்று 93 ஆண்களும், ஒரு குழந்தையும் கொல்லப்பட்டுள்ளனர். குடும்ப தகறாரு, காணி பிரச்சினை மற்றும் தனிப்பட்ட கோபதாபங்கள் என்பனவே இவ்வாறான மனிப்படுகொலைகளுக்கான பிரதான காரணம் என இனங்காணப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவிக்கின்றது. குறிப்பாக கத்தி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகவும், அவற்றுக்கும் மேற்குறிப்பிட்டவையே அடிப்படை காரணங்களாகும் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முழுவதிலும் அதாவது 12 மாதங்களில் 599 மனிதப்படுகொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது. ஆனால் இவ்வாண்டில் 7 மாதங்களிலேயே 300க்கும் மேற்பட்ட கொலைகள் பதிவாகியுள்ளமையானது கொலைகளின் அதிகரிப்பை தெளிவாகக் காண்பிக்கிறது. உயிர் வாழ்வதற்கான உரிமை ஒவ்வொரு மனிதனதும் அடிப்படை உரிமையாகும். அதனை எந்தவொரு காரணத்தைக் கூறியும் பறிப்பதற்கு இடமளிக்க முடியாது. அதன் அடிப்படையில் இவ்வாறு சமூகத்தில் பதிவாகும் கொலை குற்றச் செயல்களை தடுப்பதற்கு பொலிஸ் தலைமையகத்தினால் முன்னெடுக்கப்பட்டு நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இவ்வாறு விளக்கமளிக்கின்றார் .
‘தனிப்பட்ட தகறாருகளால் இடம்பெறும் குற்றச் செயல்களை பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாது. சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பொலிஸாருக்கு நேரடி தொடர்பு இல்லை – பொலிஸ் பேச்சாளர்’
‘காணி உள்ளிட்ட தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக பதிவாகும் குற்றச் செயல்களும் உள்ளன. இவ்வாறானவற்றை பொலிஸாரால் நேரடியாகக் கட்டுப்படுத்த முடியாது. இவை சமூககத்தில் காணப்படும் பிரச்சினைகளால் இடம்பெறுபவையாகும். எனவே இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதேனும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் எம்மால் இவற்றைக் கட்டுப்படுத்த முடியாது. உதாரணமாக முறையற்ற காதல் தொடர்புகள் ஏற்படும் போது தொடர்பில் உள்ள கணவன் அல்லது மனைவி அவர்களுடன் தொடர்புடையவர்களால் கொல்லப்படுகின்றனர். இவ்வாறானவற்றை பொலிஸாரால் கட்டுப்படுத்துவது கடினமாகும். ஆனால் இவ்வாறான பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த விழிப்புணர்வை எம்மால் ஏற்படுத்த முடியும். எவ்வாறிருப்பினும் இவ்வாறான பின்னணிகள் காணப்படும் சமூகத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகள் முதலில் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களே நேரடியாக தொடர்புபடுகின்றன. இவ்வாறான குற்றச் செயல்களுடன் பொலிஸாரால் நேரடியாக தொடர்புபட்டு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.
இவற்றில் பிரதானமானவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களாவர். வெளிநாடுகளிலிருந்தவாறு இலங்கையில் போதைப்பொருளுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்தியுள்ளோம். அவை தவிர விசேட அதிரடிப்படையினர், புலனாய்வுப்பிரிவு உள்ளிட்ட சகலரும் இணைந்து சுற்றிவளைப்புக்கள் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். அவற்றின் அடிப்படையில் பெரும்பாலான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு குற்றப்புலனாய்வு பிரிவின் கீழ் இது தொடர்பில் விசேட விசாரணைப் பிரிவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. மேலும் போதைப்பொருளுடன் தொடர்புடைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக சட்ட நடவடிக்கை பிரிவு, திட்டமிட்ட குற்றச்செயல்களுக்கான விசாரணைப்பிரிவு என்பவையும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழ் பொலிஸார் பிரத்தியேகமாக பயிற்றுவிக்கப்பட்டு களப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறான குற்றச் செயல்களின் போது பாதிக்கப்படும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பொலிஸாருக்கு நேரடி தொடர்பு கிடையாது. பெற்றோர், பாடசாலை நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களே மாணவர்களின் பாதுகாப்பில் நேரடியாக தொடர்புபடுகின்றனர். 18 வயதுக்கு மேட்பட்டவர்களுடனேயே பொலிஸார் நேரடியாக செயற்படுகின்றனர். மாறாக 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு போக்குவரத்து பாதுகாப்பு, குற்றச்செயல்களுக்குள் அகப்படாமல் பாதுகாப்பாக வாழ்தல் போன்றவை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்ற செயற்பாடுகள் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படுகி;ன்றன. ஆனால் சிறுவர்களுக்கு எதிராக ஏதேனும் குற்றச் செயல்கள் பதிவாகும் போது சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸார் அர்பணிப்புடன் உள்ளனர்.’
துப்பாக்கிச்சூடு, வாள் வெட்டு, அடித்துக் கொலை செய்தல் உள்ளிட்ட அனைத்து கொலைக்குற்றங்களின் பின்னணியிலும் மனதில் காணப்படும் பழிவாங்கும் எண்ணமும், வன்மமுமாகும். காணி பிரச்சினையானாலும், காதல் விவகாரமானாலும், வேறு எந்த பிரச்சினைகளானாலும் ஒருவர் மீது கோபம் கொண்டு, அதனை வன்மமாக்கி அவரைக் கொலை செய்வதால் மாத்திரம் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு விட முடியாது. மறுபுறம் தான் எதிரியாக எண்ணுபவர்களை கொலை செய்து விடுவதால் நிம்மதி கிடைக்கப் போவதில்லை. மாறாக ஒரு உயிரைப் பறித்து விட்டோமே என்ற மன அழுத்தமும், அச்சமுமே அதிகரிக்கும். எனவே பிரச்சினைக்கான தீர்வு அதனுடன் தொடர்புடையவர்களைக் கொன்றுவிடுவதே என்ற எண்ணத்திலிருந்து வெளிவர வேண்டும். தம்தரப்பில் நியாயமிருந்தால், அதனை எவ்வாறு சட்ட ரீதியாக பெற்றுக் கொள்வது என்பது தொடர்பில் அதற்கமைய செயற்பட வேண்டும். அதனை விடுத்து துப்பாக்கியையோ, ஆயதத்தையோ ஏந்தினால் அவற்றை ஏந்துபவர்களின் முடிவும் அவற்றினாலேயே நிச்சயிக்கப்படும். எனவே கொடூர எண்ணங்களையும், வன்மங்களை விடுத்து அமைதியானவர்களாக வாழ முயற்சித்தாலே பிரச்சினைகளை தவிர்க்கவும், கொலைக்குற்றங்கள் அற்ற சமுதாயத்தையும் கட்டியெழுப்ப முடியும்.