மீளுமா இலங்கையின் துவண்ட பொருளாதாரம்
இலங்கையில் இன்றைய சூழலிலிருந்து நாளைய நாளுக்காக நாம் நம்மை தேற்றிக் கொள்ள வேண்டும்.
என்னதான் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி சில காலங்களில் மறைந்து போவதற்கான பொருத்தப்பாடுகள் எவையும் நாட்டில் நடப்பதாக இல்லை.
கடனை வாங்கி கடன் அடைப்பது தற்காலிக தீர்வன்றி விரைவான மாற்றங்களை தந்திடும் முயற்சியாக அது அமைந்தது விடாது.
கடன் சுமை
சுதந்திரம் அடையும் போது இலங்கை கடனோடு இருக்கவில்லை. ஆனாலும் கடந்து வந்த நாட்களில் கடனை வாங்கி குவித்து இன்று அது பெருத்து பெரும் பூதமாக இலங்கையை அச்சுறுத்துகின்றது.
வாங்கிய கடனை அடைப்பதை விடுத்து புதிதாக கடன்களை பெற்றுக்கொள்ள நினைப்பது என்பது பொருத்தமற்ற சிந்தனை.
இருந்தும் அவ்வாறு வாங்கிய கடனைக்கொண்டு தொழில்துறையை மேம்படுத்தி வருமானமீட்டி கடனையும் அடைத்து வருவாயையும் பெருக்கி கடனற்ற நாடாக இலங்கையை மாற்ற முயற்சிக்காத இலங்கை அரசாங்கம் தவறான திசையிலேயே பயணித்து விட்டது.
உலகின் முதல் பெண் பிரதமர் என புகழடைந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசாங்கம் தான் இலங்கையில் மிகப்பெரிய முதலாவது பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது.
அந்த அரசாங்கம் சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பெண் தலைமைத்துவ அரசாங்கத்தினால் கூட பொருளாதார இழப்பை ஈடு செய்து நிமிர்த்திக்கொள்ள முடியவில்லை. அதே பொருளாதார இழப்போடு தான் அடுத்து வந்த அரசாங்கங்கள் நடந்து வந்திருக்கின்றன.
இழந்த பொருளாதாரத்தை மீளவும் பெற்றுக்கொண்டு இலங்கையின் நாணயத்தின் பெறுமதியை சிறப்பான ஒரு உயர் நிலையில் பேணுவதற்கு முயற்சிக்கவில்லை.
அவ்வாறு முயற்சித்திருப்பார்களானால் இரண்டாவது பெரிய பொருளாதார இழப்பின் போது இலங்கை பெரும் நெருக்கடியை சந்தித்திருக்காது.
இரண்டாவது பொருளாதார நெருக்கடியும் சுதந்திரக் கட்சியிலிருந்தவர்கள் பிரிந்து சென்று உருவாக்கிய பொதுஜன பெரமுன(மொட்டு) கட்சியின் அரசாங்கத்தின் காலத்திலேயே உருவானது என்பதையும் நோக்க வேண்டும்.
ஒவ்வொரு பொருளாதார நெருக்கடியின் போதும் நெருக்கடிக்கான காரணங்களை முன்பிருந்த அரசாங்கங்கள் தான் விட்டன என்று குற்றம் சுமத்தி விட்டு தாம் தப்பித்துக் கொள்கின்றன.
மைத்திரி பால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் எடுத்துக்கொண்ட பொருத்தமற்ற பொருளாதார முடிவுகளாலேயே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது என கோட்டபாய தலைமையிலான அரசாங்கம் குற்றம் சுமத்தியது.
ஆள் மாறி ஆள் குற்றம்சாட்டி கடந்து போய் விடும் பொறுப்பற்ற அரசியல் நாகரீகம் இலங்கை மக்கள் மீதே பொருளாதார சுமையை சுமத்தி அவர்களை சுமக்க வைக்கின்றது.
ஆனாலும் அதனை இலங்கை மக்களும் சரி அரசாங்கமும் சரி புரிந்து கொள்ளவில்லை. ஒரு அரசாங்கம் வெளிநாட்டுக்கடனை அல்லது உள்நாட்டுக்கடனை பெற்றுக்கொள்ளும் போது அதனை மீளச்செலுத்தும் வழிகளை ஆராய வேண்டும்.
பொருத்தப்பாடான வழிகள் இருப்பின் மட்டுமே கடன் வாங்குவதற்கு முனைய வேண்டும்.
அல்லது மீளச்செலுத்தும் இயலுமையை உருவாக்க வேண்டும். ஆனாலும் இலங்கையில் இப்படியான போக்கு பின்பற்றப்படுவதாக தெரியவில்லை. கடனை வாங்குவதில் உள்ள கரிசணை அதனை மீளச்செலுத்துவதில் காட்டப்படுவதில்லை.
இலங்கையின் அரசியலாளர்கள் உள்நாட்டில் நிகழ்த்தும் பேச்சுக்களில் கடன் வழங்கிய நாடுகளை நிறுவனங்களை வசைபாடிய நிகழ்வுகளும் நடந்தேறியமையை நோக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெறுவதற்காக பல நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தும் இக்கட்டில் இலங்கை இருந்தது என்பதும் இப்போது இரண்டாம் கட்ட நிதி விடுவிப்புக்காக நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளை பூர்த்தி செய்ய எடுத்த தாமதம் அதில் செல்வாக்குச் செலுத்தியதையும் நோக்கினால் அதனை புரிந்து கொள்ள முடியும்.
குடிமக்கள் மீது சுமத்தப்படும் கடன் சுமை
வியாபாரத்தில் கூட்டுச் சேர்ந்து இருவர் அந்த வியாபாரம் நட்டமடைந்து விட ஒருவர் மற்றொருவரை குற்றம் சாட்டி சண்டை போடுவதால் நடந்துவிடப் போவது என்ன? கால விரையம் மட்டும் தான்.
மீண்டும் கடனை வாங்கி தொழில் செய்வார்கள்.பொறுப்பான முன் நகர்வை பேணாது விட்டால் மீண்டும் நட்டமடைவார்கள்.
பொறுப்பான வியாபாரிகளாக இருந்தால் தமக்கான இலக்கை நோக்கி முன்னகர நட்டத்திலிருந்து மீண்டு வரும் வழிகளை ஆராய்ந்து முன்னகர்வார்கள்.
இலக்கு இலாபம் என்றால் அதனை அடைவது மட்டுமே வெற்றி. இந்த சிறிய பொருளாதார சிந்தனையைக் கூட இலங்கை அரசாங்கத்தினால் அடிப்படையாக கொண்டு முன்னகர்ந்து வெற்றி பெறுவது பற்றி சிந்திக்க முடியவில்லையா என்ற கேள்வி எழுவது இயல்பாக இப்போய் விட்டது.
இலங்கையின் பொருளாதாரம் என்பது சுற்றுலாப்பயணத் துறை ,வெளிநாட்டுக்கு செல்லும் பணிப்பெண்கள், வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர் போன்ற துறைகளினாலேயே அதிக அந்நியச் செலாவணி பெற்று வந்தது.உள்நாட்டு உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நியச் செலாவணியை பெற்றுக்கொள்ளும் முயற்சிகள் திருப்திகரமாக எப்போதும் இருந்ததாக கருத முடியாது.
சாதாரண குடிமக்கள் ஒரு இறாத்தல் பாணின் விலையைக் கொண்டு இலங்கையின் பொருளாதாரத்தை விளக்கி விடமுடியும் என்ற நிலை ஆரோக்கியமான ஒன்றாக அமைந்து விடாது.
ரூபா இரண்டு முதல் இன்று ரூபா இருநூறு வரை பாணின் விலை மாறியிருந்ததையும் இப்போதும் ரூபா நூற்றியறுபது என்ற நிலையில் தளம்பலை பேணுவதையும் அவதானிக்கலாம்.
தான் ஆட்சிக்கு வந்தால் பாணின் விலையை குறைப்பதாக தேர்தல் வாக்குறுதி வழங்கியிருந்தார் சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க.
ஆட்சியில் இருப்பவர்களின் பொருத்தமற்ற பொருளாதார கொள்கையினால் ஏற்படும் கடன் சுமையை பொதுமக்களின் மீது சுமத்தி விடுதல் என்பது நியாயமற்றது.
பொருந்தாத பொருளாதார கொள்கைகளால் நாட்டினை கடன் சுமையோடு விட்டுச் செல்லும் ஒவ்வொரு அரசாங்கமும் அதன் நடத்துனர்களை பணக்காரராகவே அனுப்பி வைக்கின்றது. இலங்கை ஆட்சி செய்த எந்தவொரு அரசாங்கத்தினதும் அதனை தலைமை தாங்கிய யாராவது ஒருவர் வறுமையோடு வீடு சென்றதாக குறிப்பிட முடியாது.
ஆனாலும் அவர்களது பொருளாதார அணுகலினால் நாட்டு மக்கள் தொடர்ந்து வறுமை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சர் உள்ளிட்ட ஆட்சியாளர்களிடம் இருந்து ஏற்படும் பொருளாதார இழப்புக்கான ஈடுசெய்யும் தொகையை அவர்கள் ஆட்சிமாறிச் செல்லும் போது பெற்றுக்கொள்வதாக ஒரு சட்ட நடைமுறையிருந்தால் எப்படி இருந்திருக்கும்.
சிந்தனைக்கு நன்றாக இருந்தாலும் நடைமுறைக்கு சாத்தியமற்றதே.
பொறுப்பற்ற அரசின் செயலால் பொறுப்பாக சிக்கனமாக வாழ்ந்த சில குடிமக்களும் நாட்டின் கடன் சுமையை சுமக்கும் பொறுப்பற்ற செயற்பாடு இன்று இலங்கையில் இருப்பது கவலைக்குரியது.
பொருந்தாத செயற்பாடுகள்
நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்து செல்லும் போது நாட்டினுள் நடக்கும் பொருந்தாத செயற்பாடுகளை தவிர்த்துக்கொள்ள முயற்சிக்கப்படவில்லை.
இனங்களிடையே விரிசலைத்தோற்றுவிக்கும் செயற்பாடுகளாக நிகழ்ந்தேறும் புதிய விகாரைகளின் தோற்றம். இதனால் நாட்டின் பொருளாதாரம் எப்படி நிமிர்ந்து கொள்ளும்.
தையிட்டி, குருந்தூர் மலை போன்ற விகாரையமைப்புக்கள் இலங்கையின் இன்றைய சூழலுக்கு பொருத்தமற்ற செயற்பாடாக இருக்கின்ற போதும் அதனை எப்படி அரசாங்கம் அனுமதிக்கின்றது.
அந்த முயற்சியில் இருக்கும் பௌத்த துறவிகளுக்கு கூட புரியவில்லை தங்கள் பௌத்த சிங்கள நாட்டின் (அவர்கள் கொள்கை வழியில் இலங்கை பௌத்த சிங்கள நாடு) பொருளாதாரம் எங்கே செல்கின்றது என்று.
மட்டக்களப்பு மயிலத்தமடு மேச்சல் தளத்தில் விலங்கு வளர்ப்போருக்கு இடையூறு செய்து இடங்களை அடாத்தாக ஆக்கிரமித்து பால் உற்பத்தியினளவை வீழ்ச்சியடையச் செய்யும் தேரரின் அவருடன் சேர்ந்த சிங்கள மக்களின் செயற்பாடுகள் இலங்கையின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்பது திண்ணம்.
பொருளாதார அறிவற்ற மக்கள் கூட்டமாக பௌத்த பிக்குகள் தங்களை அடையாளம் காட்டத்தலைப்படுகின்றனர் போலும்.
தினம் தினம் நடக்கும் ஆர்ப்பாட்டங்களால் உழைக்கும் மனிதவலுக்கள் உழைப்பை இழந்து உழைக்கும் சிந்தனையை இழந்து பொருளாதார இழப்புக்கு பங்களிப்புச் செய்கின்றன.
ஒரு கிராமத்தினை நிர்வகிப்பற்கு மூன்று அரச உத்தியோகத்தர்கள் கடமையாற்றும் நிலை இன்றுள்ளது.
கிராமசேவகர்,சமுர்த்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் என்னும் மூவரினால் மூன்று வகை பொறுப்புக்களால் கிராமங்கள் நிர்வகிக்கப்பட்டும் எத்தகைய பொருளாதார முன்னேற்றங்களையும் அக்கிராம மக்கள் அடைந்துவிடவில்லை.
அதிகமான கிராமங்களைச் சேர்ந்தோர் ஏதோவொரு வகை உதவியில் தங்கியிருப்பதனை அவதானிக்க முடிகின்றது. இவை செம்மைப்படுத்தப்படாதது கவலைக்குரியதாகும்.
மாணவர்களுக்கான கல்வித்திட்டங்கள் தொழில்துறைகளை நோக்கியதாக இன்னும் செம்மைப்படுத்தப்பட வேண்டிய நிலையில் இருப்பதனையும் உற்று நோக்கல் நன்று.
படித்து முடித்தவர்கள் கூட அரச வேலைக்காக காத்திருக்கும் போது படிக்காதவர்களின் நிலை எப்படி இருக்கும்? சுயமாக தொழில்துறைகளை உருவாக்கி அதனை மேம்படுத்திச் செல்லும் புதிய சிந்தனைகளை கொண்ட மனிதர்களை ஆக்குவதற்கேற்றால் போல கல்விக் கொள்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
வணிகத்துறையில் பட்டம் பெற்ற ஒருவர் எழுது வினைஞராக கடமையாற்றுகின்றார். அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமனம் பெற்ற ஒருவர் அந்த வேலையில் திருப்தியில்லை என காரணம் சொல்லி விட்டு ஆசிரியராக பணியில் சேர்கிறார்.
இத்தகைய போக்கு இலங்கையில் இருப்பதை அவதானிக்கலாம்.இது துறைசார் நிபுணத்துவத்தை வழங்காது. இதனால் அபிவிருத்திப் போக்கு வலுவில்லாத நிலையை எட்டும். பொருளாதார மீட்சிக்காக போராடும் இலங்கையின் இன்றைய ரணில் அரசாங்கம் தன் உள்ளக நிர்வாகவியலிலும் நாடடின் அரசு இயந்திரத்திலும் ஏராளமான மாற்றங்களை நிகழ்த்தி செலவைக் குறைத்து வரைப் பெருக்கும் வழிகளை ஆராய்ந்து முன்னகர வேண்டும்.
பொது மக்களின் ஊதாரித்தனமான செலவுகளை குறைத்து அரசின் உதவியை எதிர்பார்த்து வாழும் நிலையை இல்லாதொழிக்க வேண்டும். இது உடனடிச் சாத்தியப்பாடற்றதாக இருக்கின்ற போதும் நீண்ட கால நோக்கில் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் கொள்கை வகுப்புக்களையாவது செய்துகொள்ள வேண்டும்.
அடிமட்டச் செயற்பாட்டில் மாற்றம் வேண்டும்
பொருளாதார அபிவிருத்தி என்பதை நானோ தொழில்நுட்பம் போல் சிந்திக்கத் தலைப்பட வேண்டும். சதாரண அளவில் காபன் துணிக்கையின் வலுவிலும் பார்க்க நானோ பருமனில் அதன் வலு அதிகம்.
இதனாலேயே நானோ பருமனில் காபன் துணிக்கைகள் நானோ தொழில் துறைக்கு பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக வலிமை மிக்க பொருட்களின் உற்பத்திக்கு நானோ தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது.
சாதாரண நிலையில் உள்ள பொன்னை விட நானோ பருமனில் உள்ள பொன் நிறத்திலும் வலிமையிலும் கூடியதாக இருக்கின்றது.
கிராமங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களும் தங்கள் பொருளாதாரத்தை ஆரோக்கியமான முறையில் பேணினால் நாட்டின் பொருளாதாரம் தன்பாட்டில் வளர்ச்சியடைந்து செல்லும்.
ஆனாலும் இந்த மனோநிலை கிராமங்களில் இல்லை.உதவிக்கு கோரிக்கை விடும் மக்கள் அந்த உதவிகளை பயணுறுதிமிக்கதாக மாற்றிக்கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை.
கடன் வாங்கி வீட்டில் ஒரு விசேட நிகழ்வை நிகழ்த்த முனைந்து நிகழ்த்தி விட்டு அந்த கடனை அடைப்பதற்காக அடுத்து வரும் சில வருடங்களை செலவழிக்கின்றனர்.
இந்த சூழலில் அவர்களின் அன்றாட நுகர்வுத் தேவைகளுக்காக உதவிகளை தேடிச் செல்கின்றனர்.
பொருத்தமில்லாத ஆடம்பரத்தால் ஏற்பட்ட கடனால் தான் தங்களுக்கு வறுமை வந்தது என்ற உணர்வு மேலோங்கி அதிலிருந்து இத்தகைய முடிவுகள் தவறென உணர்ந்து திருந்தாத வரை அவர்களை மாற்ற முடியாது.
நாயாக நினைக்கும் வரை நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது போல இன்று இலங்கையின் சமூக நிலை இருப்பதை நோக்கலாம்.
இது நாளைய இலங்கைக்கு ஆரோக்கியமற்றது. பசிக்கு உணவை உண்ணாத உணவின் சுவை மீதுள்ள ஆசைக்கு உணவை உண்ணும் பழக்கமும் (பசிக்கு பூசிக்காது உருசிக்கு உண்ணல் நலமன்றோ?) பொருளாதார இழப்புக்கு காரணமாகி விடுகிறது.அந்த உணர்வால் தேவைக்கு அதிகமாக உணவை நுகர பழகி அதனால் ஏற்படும் அசௌகரியங்களாலும் உணவுக்கான பற்றாக்குறையால் புதிய சிக்கல் நிலைமைகள் தோற்றம் பெற்றும் விடுகின்றன.
கிராமிய வளங்களைக் கொண்டு ஒவ்வொரு கிராமங்களையும் தனியலகாக கருதி தனிநபர் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தும் போது மாற்றங்கள் மெல்ல நிகழ ஆரம்பித்துவிடும்.
இது இப்போது நாட்டில் இல்லாமலில்லை. நடைமுறைப்படுத்தப்பட்டுக்கொண்டிருப்தாக சொல்லிக்கொண்ட போதும் அவை மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்பது உண்மை.இங்கே தேவை பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தவல்ல செயற்பாடுகள் என்பது நோக்கத்தக்கது.
தனிமனித நடத்தை ஒரு நாட்டின் பொருளாதாரம் மேம்பாட்டை பாதிக்கும். செலவை குறைத்து அடிப்படைத் தேவைகளுக்காக செலவுகளைத் திட்டமிடும் போது மட்டுமே மாற்றங்களை சந்திக்க முடியும்.
ஒவ்வொரு தனிநபர் நுகர்வையும் தேவைக்கு மட்டுப்படுத்தும் போது வீண் விரயம் குறைவதோடு இழப்புக்களும் தவிர்க்கப்பட்டு விடும்.
மாற்றங்கள் நன்றே ஆனால் நாளை நாடு அமைதியாகும். வாட்டி வதைக்கும் வறுமைக்கு ஈடு கொடுத்து எதிர்த்து நின்று வாகை சூடும் தென்பிருந்தும் தோற்று வாடி வதங்கி போவதெனோ?
முயற்சி என்ற ஒன்றை முயன்று தான் பார்க்கலாமே. மாற்றம் கொஞ்சம் எட்டிப் பார்க்கும் நம்மையும் தானிங்கே, ஏற்றம் கூடி தோற்றம் மாறிட பாராட்டி புகழ்ந்திடும்படி.