;
Athirady Tamil News

தடம் மாறும் அரசியல் தலைமைகளின் மத்தியில் மாமனிதர் நடராஜா ரவிராஜ்

0

தமிழ்த்தேசிய அரசியல் தளத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்த மாமனிதர் சட்டத்தரணி நடராஜா ரவிராஜ் அவர்களின் நினைவுக்குரிய நாளாக ஒவ்வொரு நவம்பர் 10ஆம் திகதியும் கொள்ளப்படுகிறது.

மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் அரசியல் பயணமும், அவரது கொள்கைகளும் இன்றைய தலைவர்களுக்கு காலத்தால் அழியாத கலங்கரை விளக்காக விளங்குகின்றன.

தமிழரசுக் கட்சியின் கொள்கையில் தளம்பல்
நேர்மையும், தைரியமும், மக்களின் அபிலாஷைகளை அடைவதற்காக அவர் கொண்டிருந்த இதய பூர்வமான அர்ப்பணிப்பும், எவரையும் மதிக்கும் சுபாவமும், தனது உறுதியான கருத்துக்களை பொதுவெளியில் வெளியிடும்போது அவர் பேணும் அரசியல் நாகரிகமும், அரசில் களத்தில் வேறுபடுத்தி இனம் காண்பிக்கும் ஆளுமைமிக்க தலைவராக அவரை மாற்றியிருந்தன.

இந்த சூழலில் அவரோடு இணைந்து தமிழத்தேசிய அரசியல் தளத்தில் பயணித்த மூத்த கட்சி உறுப்பினர்களில், மாவை சேனாதிராசா, குலநாயகம், சம்பந்தன், கனகசபாபதி போன்ற சிலரே, தமிழரசுக்ககட்சியின் நீண்டகால செயற்பாட்டாளர்களாக திகழ்கிறார்கள்.

ஏனைய மூத்த செயற்பாளர்கள் பலர் தமிழர்விடுதலைக்கூட்டணியோடு ஐக்கியமாகிவிட்டார்கள். இன்றுள்ள பலர் பழைய வீட்டில், புதிய குடியிருப்பாளர்களாக, குடியமர்ந்துள்ளார்கள்.

இந்த நிலையில் பழைய வீடாகிய தமிழரசுக்கட்சியின் கொள்கை கோட்பாடுகளில் பல்வேறு தளம்பல்கள் ஏற்பட்டுள்ளன.

கட்சி என்பது, தான் சார்ந்த மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும். ஆனால் அவை தடம்மாறி, பதவிகளைப் பெறுவதற்கான ஒரு கட்டுமரமாகவே இக்கட்சி பயன்படுத்தப்படுகிறது. இக்கட்சியின் கொள்கைகளுக்காக பல்வேறு பொதுமக்கள், தலைவர்கள் தமது உயிரை ஆகுதியாக கொடுத்தார்கள்.

பல்வேறுபட்டவர்களின் தியாகத்தால் உருவாக்கப்பட்ட, இந்தக் கட்சி இன்று வழிமாறிப் பயணிக்கிறது. குறிப்பாக கட்சியின் மத்தியகுழுவில் அங்கத்துவம் பெறும் பலர் சுய பிரஞ்ஞை அற்றவர்களாக, தனிநபர் துதிபாடிகளாகவும், தமது பதவி நலம் கருதிக் கூசா தூக்குபவர்களாகவுமே இருக்கிறார்கள். பல்வேறு தொண்டர்களின் அர்ப்பணிப்பை, முறைகேடாக பயன்படுத்துகின்றார்கள்.

தற்போது கட்சித் தலைமைக்கான போட்டி பல்வேறு தளங்களில் ஆரம்பிக்கப்பட்டு விட்டன.

மாமனிதர் ரவிராஜ்
இந்நிலையில் மாமனிதர் ரவிராஜ் அவர்களின் வாழ்வியல் பற்றிய மீள்பார்வை அவசியமாகிறது. கூட்டமைப்பை கட்சிகளாக பிளந்து, தமிழரசு கட்சியை அணிகளாக உடைத்து, தமிழர் எதிர்காலத்தை சிதைத்து நானே அக்கட்சியின் தலைவர் இந்த கோதாவில் வலம் வந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழினத்தின் ஒரு சாபக்கேடு.

தமிழரசுக்கட்சியின் குறித்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கட்சித்தலைவராக வருவதற்காக நீண்டகால நிகழ்ச்சித்திட்டத்தினை தயாரித்து நடைமுறைப்படுத்தி வந்தார். அதில் அவர் வெற்றியும் கண்டார். தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களாக, தனது அணிக்குச் சார்ந்தவர்களை உள்ளீர்த்துக்கொண்டார். எதிரிக்கு எதிரி நண்பர் என தனக்கான ஆதரவுத்தளத்தை பெருக்கினார்.

மாவட்டக்கிளைகளூடாக குறிப்பாக, பருத்தித்துறை, கோப்பாய், சாவகச்சேரி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை என தனது ஆதரவுத்தளத்தை, சட்ட உதவி என்னும் பெயரில் பெருக்கினார். ஆயினும் கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களை அவரால் வீழ்த்த முடியவில்லை.

தான் கட்சித் தலைமையைப் பெறுவதற்குரிய அனைத்து, ஏற்பாடுகளையும் செய்துமுடித்துவிட்டு, பதவிக்காக காத்திருக்கிறார். இவர் கட்சித்தலைவராக வந்தால், தமிழ்மக்களின் கட்சிக்கான வாக்கு வங்கி, பெருமளவில் சரியும். 22 நாடளுமன்ற உறுப்பினரோடு அங்குராப்பணமான தமிழ்தேசியக் கூட்டமைப்பு எப்படி இன்று 11 நாடளுமன்ற உறுப்பினராக இவரால் வந்ததோ, அதுபோன்ற இழிநிலை தமிழரசுக்கட்சிக்கும் ஏற்படுவது தவிர்க்க முடியாத விடயமாகிவிடும்.

மரத்தில் இருந்து தவறிவிழும் கனிகள் தமது கூடைகளுக்குள் விழவேண்டும் என தமிழ்த்தேசியமக்கள் முன்னனி போன்ற கட்சிகள் காய்நகர்த்த தொடங்கிவிட்டன.

இந்திலையில் தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவியில் சுமந்திரன் வெற்றிபெறுவது உறுதியானால், 1960 களில் தமிழ்நாட்டில் தி. மு.க தலைவர் அண்ணாத்துரை சொன்ன வாக்கியம் தான் நினைவுக்கு வருகிறது.

ரவிராஜின் உச்சத்தை தொட முடியாதவர்கள்
ஆட்சியில் வென்றுவிட்டோம் கட்சியில் தோற்றுவிட்டோம் என்ற நிலைபோல, தமிழரசுக்கட்சியின் தலைமையை சுமந்திரன் அணி கைப்பற்றி அக்கட்சி மக்கள் ஆதரவுத்தளத்தை இழந்து தோற்றுவிடும் நிலைதான் ஏற்படப்போகிறது.

அது மாத்திரமன்றி தமிழரசுக் கட்சி தனது நோக்கத்திலிருந்து பிறழ்வுபட்டு வேறொரு திசையிலேயே பயணப்பட ஆரம்பிக்கும் கட்சியினுடைய பதவிக்காக போட்டியிடும் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் யாருமே ரவிராஜின் இடத்தை பெறமுடியாதவர்கள் அல்லது ரவிராஜின் உச்சத்தை தொட முடியாதவர்கள்.

எந்த சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் விலை போகக் கூடியவர்கள் என்பது பெரும்பாலான மக்கள் மனதில் பதிந்திருக்கும் எண்ணம். ஆனாலும் யாரோ ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்குள் கட்சி தள்ளப்பட்டு இருக்கிறது. ஒரு இளம் துடிப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினராக தனக்கு வாக்களித்த மக்களின் அபிலாசைகளை கருத்தில் கொண்டு இன ஒற்றுமையை மனதில் கொண்டு போராடிய ஒரு தலைவரே மாமனிதர் ரவிராஜ்.

தனது மக்களின் விடிவிற்காக தனது உயிரையே கொடுக்க தயாராக இருந்த ஒரு தலைவர் மத்தியில் இன்று தங்களுடைய பணப்பெட்டிகளையும் வாக்கு வங்கிகளையும் நிரப்பும் நோக்கில் செயற்படும் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் மாமனிதர் ரவிராஜ் அவர்களின் அரசியல் பயணத்திலிருந்து இருந்து பெற வேண்டிய பெறுமதியான படிப்பினைகளை உள்வாங்குவதில் தவறிவிட்டார்கள்.

கஜேந்திரகுமார் வெளியேற்றம் முதல் கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவு வரை தமிழரசுக் கட்சியின் தலைவர்களின் முடிவுகளும் அவர்களின் நடத்தை கோலங்களும் சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது என்பது போல அரசியல் முதிர்ச்சியற்றவையாகவே இருக்கின்றன.

மாகாண சபையை செயற்படவிடாது தடுத்ததில் தமிழரசுக் கட்சி தலைமைக்கு முக்கிய வகிபாகம் உண்டு. அதை தொடந்து பல சந்தர்ப்பங்களில் கூட்டமைப்பை சிதைக்கும் நடவடிக்கையை ஒருவர் முன்னெடுக்க அதைக் கண்டும் வாழவிருந்த தலைவர்களே இன்று தமிழரசுக் கட்சி தலைமைக்காக போட்டியிடுகின்றனர்.

இச்சந்தர்ப்பத்தில் தமிழர் எதிர்காலத்திலும் அவர்கள் அபிலாஷையிலும் அக்கறை கொண்ட ஒரு தலைவனாக இதய சுத்தியுடைய ஒரு அரசியல் ஆளுமையாக புடமிடப்பட்டிருந்த மாமனிதர் ரவிராஜ் அவர்களின் வாழ்க்கையிலிருந்து, தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது.

தமிழர் தேசிய மன உணர்வை சிதைத்து, கலாச்சார விழுமியங்களை மழுங்கடித்து மென்வலு எனும் தீர்க்கதரிசனமற்ற சொல்லாடல் மூலம் தமது செல்வாக்கை மக்கள் மத்தியில் தக்க வைத்துக்கொள்ள முடியும் என நினைத்த தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆசனம் ஒன்றைப் பெறுவதற்காக, தேர்தல் முறைகேடுகள் வரை செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவானது.

மாமனிதர் ரவிராஜ் அவர்களிடம் நாம் கண்ட துணிச்சலையோ இதயசுத்தியான நடத்தையையோ எந்த தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடமோ, அதன் தலைவரிடமோ நாம் எதிர்பார்க்கமுடியாது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆயினும் மக்களின் நலன் சார்ந்தும் தமிழ் மக்களின் ஒற்றுமை சார்ந்தும் அவர்கள் செயற்பட வேண்டும். சரியான ஓர் தலைமை தெரிவு செய்யப்படாத பட்சத்தில் தமிழரசுக் கட்சியிலிருந்து தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மேலும் வீழ்ச்சியடையும்.

நாடாளுமன்ற ஆசனத்தை பெறுவதற்காக மீண்டும் ஒரு தடவை தேர்தல் முறைகேடுகள் வரை பயணப்பட வேண்டியிருக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.