இலங்கையில் தினமும் 50 பேர் மதுசாரம் அருந்துவதால் உயிரிழப்பு
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 3 ஆம் திகதி சர்வதேச மதுசார தடுப்பு தினம் அனுஸ்டிக்கப்பட்டுவருகிறது. உலகளவியரீதியில் ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லியன் இறப்புகள் இடம்பெறுவதுடன் பல நோய்கள் மற்றும் விபத்துகள் ஏற்படுவதற்கு மதுசாரம் அருந்துதல் முதன்மைக் காரணமாக அமைகின்றது. மேலும், கல்லீரல் ஈரல் அழற்சி, புற்றுநோய் மற்றும் வீதி விபத்துகள் உட்பட தொற்றாத நோய்களால் ஆண்டுதோறும் ஏராளமானவர்கள் பாதிப்படைகின்றனர். இலங்கையில் தினமும் 50 பேர் மதுசாரம் அருந்துவதால் இறக்கின்றனர்.
மதுசார வரி மூலம் கிடைக்கும் வருவாயைக் கணக்கிடுவதனால் மாத்திரம் அரசின் வருமானத்தை கணிக்க முடியாது. மதுசாரம் அருந்துவதால் அவர்களின் உடல் நலம், பொருளாதாரம் மற்றும் இதர செலவுகளுக்கு அரசு மேற்கொள்ளும் நிதிச் செலவுக்கும், மதுசார வரியின் அளவுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் கணக்கிட்டு, மதுசாரவரித் தொகை அரசுக்கு வருமானமாக அமைகின்றதா இல்லையா என்பதை அறிவியல் பூர்வமாகக் கணக்கிட வேண்டும். 2022 ஆம் ஆண்டில் மதுசார வரி வருமானம் 165.2 பில்லியன் ரூபாவாக இருந்ததுடன், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியம் UNDP (இலங்கையில் மதுசாரக் கட்டுப்பாட்டிற்;கான முதலீட்டு சபை) 2023 இல் நடத்திய ஆய்வின்படி, இலங்கையில் மதுசார பாவனையால் ஏற்பட்ட சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகள் 237 பில்லியன் ரூபாவாகும். மதுசாரத்தின் பயன்பாடு ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.
நம் நாட்டில் மதுசாரத்தின் பயன்பாட்டைக் குறைப்பது, நாட்டு மக்களின் ஆரோக்கியத்திற்கும், பொருளாதாரத்தை சிறந்த நிலைக்கு கொண்டு வருவதற்கும் வலுவான பங்களிப்பை அளிக்கிறது. ஆனால் நாட்டில் மதுசாரம் தொடர்பான தற்போதைய நிலைமை மதுசார பாவனையை ஊக்குவிப்பதில் வலுவாக பங்களிக்கிறது.
• சுற்றுலாவை மேம்படுத்துவதாக கூறி ஒவ்வொரு நகரத்திலும் மதுசார சாலைகளை ஆரம்பித்தல்.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் வசீகரமான இயற்கை அழகை ரசிப்பதற்காகவே வருகின்றனர். மாறாக மதுசாரம் அருந்துவதற்காக வருபவர்கள் அல்ல என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. சுற்றுலாப் பயணிகளுடன் நடத்தப்பட்ட ஆய்வில், சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் பெயர்பலகை போடுதல், பாதுகாப்பு, சுத்தமான கழிப்பறை வசதிகள் போன்றன இருக்க வேண்டுமென்பதே முக்கியமான கோரிக்கைகளாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், நாட்டின் ஒவ்வொரு புறநகர் மற்றும் கிராமங்களிலும் மதுசார சாலைகளைத் திறப்பது, மதுசார நிறுவனங்களின் தூண்டுதலின் பேரில் சுற்றுலாவை மேம்படுத்துகிறோம் என்ற போர்வையில் இடம் பெறும் மதுசார வியாபாரத்திற்கான விளம்பரமாகும்.
• சதொச விற்பனை நிலையங்களில் மதுசார சாலைகளை ஆரம்பித்தல்.
சதொச விற்பனை நிலையங்களில் மதுசார விற்பனைக்கான அனுமதியை பெற்றுக்கொள்வதன் மூலம் இலகுவாக மதுசாரம் கிடைப்பது அல்லது கிடைப்பனவு அதிகரிப்பதுடன் மதுசார பாவனை அதிகரிக்கின்றது. இதுபோன்ற பல்பொருள் அங்காடிகளுக்கு குழந்தைகள்,சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகமாக வருகை தருவதனால், மதுசாரத்தை அழகாக பொதி செய்து வைத்திருப்பதை பார்ப்பதன் மூலம் மதுசாரத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, மதுசாரத்தை அருந்தத் தூண்டுகிறது. இது, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைப் பயன்படுத்தி, தங்கள் சொந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டு, விற்பனையை அதிகரிக்க, மதுசார நிறுவனங்களின் நயவஞ்சகத் திட்டமாகும்.
• மதுசாரங்களின் விலை உயர்வினால் சட்டவிரோத மதுசார விற்பனை அதிகரித்துள்ளதாக போலியான கூற்றுக்களை வெளியிடுதல்
தற்போது மதுசாரத்தின் விலை அதிகமாக உள்ளதால், சட்டவிரோத மதுசார விற்பனை அதிகரித்து, அதனால் அரசின் வரி வருவாய் குறைந்துள்ளதால், விலையை குறைக்க வேண்டும் என்ற கருத்து மதுசார நிறுவனங்களினால் உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர, சட்டப்பூர்வ மதுசாரத்தின் விலையை குறைப்பது சட்டவிரோத மதுசாரம் அருந்துவதை கட்டுப்படுத்துவதற்கு ஒரு பயனுள்ள உத்தியாகக் கருத முடியாது. 1995 ஆம் ஆண்டில், சட்டவிரோத மதுசாரம் பயன்பாட்டைக் குறைப்பதற்காக பியர் மீதான வரிகள் கடுமையாக குறைக்கப்பட்டன, இதன் விளைவாக பியர் நுகர்வு அதிகரித்தது.
மதுசாரம் பயன்படுத்துவோரின் சமூக நிலைகள், பயன்பாட்டின் எதிர்பார்ப்புகள், சட்டப்பூர்வ மதுசாரத்தின் விலை உயர்வு போன்ற காரணங்களால், சட்டவிரோத மதுசாரத்திற்கு மாறுவது நடைமுறையில் நடப்பதில்லை.
• வரவு செலவு திட்டத்தில் 2024, பணவீக்கத்திற்கு விகிதாசாரமாக மதுசார வரிகளுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தல்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மதுசார வரிவிதிப்பு மற்றும் விலை நிர்ணயக் கொள்கைகள் மிகவும் செலவு குறைந்த மதுசார கட்டுப்பாட்டு நடவடிக்கைகளாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. மதுசாரத்தின் மீதான வரிகளை அதிகரிப்பது புதிய பாவனையாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் தற்போதைய பாவனையாளர்களின் பயன்பாட்டைக் குறைக்கிறது. மதுசாரம் அருந்துவதால் நாட்டுக்கு ஏற்படும் சுகாதாரச் செலவுகளை ஈடுகட்ட தேவையான அரசாங்க வருவாயையும் இது வழங்குகிறது.
சர்வதேச நாணய நிதியம் (ஐஆகு) 2023 இல் நம் நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, ஜனவரி 1, 2024 க்குள், அரசின் வரி வருவாயை அதிகரிக்கவும், மதுசாரத்தின் பயன்பாட்டைக் குறைக்கவும் பணவீக்கத்திற்கு விகிதாசார மதுசார வரிகளுக்கான விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படுவதன்; மூலம் அரசின் சுகாதாரச் செலவைக் குறைக்கலாம்
எனவே, எதிர்வரும் 2024 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் மூலம், பணவீக்கத்திற்கு விகிதாசாரமாக மதுசார வரிகளுக்கான விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு, வரியை வசூலிப்பதன் மூலம் நாட்டில் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியை முகாமை செய்வதற்றகாக, மதுசாரத்திற்கு விஞ்ஞானரீதியான மற்றும் தர்க்க ரீதியான வரிக் கொள்கை மிகவும் முக்கியமானது. நாட்டுக்கு வரி வருவாய் இழப்பு மற்றும் மதுசாரத்தினால் ஏற்படும் பாதிப்புகளினால் ஏற்படும் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும்;, இலகுவாக மதுசாரம் கிடைப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் என்ற வகையில் வலியுறுத்துகின்றோம்.