புதிய வருடத்தில் ஒரு அரசியல் தீர்வு?
சமாதானத்துக்கான மதங்களின் சர்வதேச அமைப்பின் மதத்தலைவர்களுடனும் அந்த அமைப்பின் இலங்கைப் பிரிவின் தலைவர்களுடனும் டிசம்பர் 19 ஆம் திகதி நடத்திய சந்திப்பின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசியல்வாதிகள் இனவாதத்தை தூண்டிவிடுவதில் அக்கறை காட்டினாலும் பெரும்பான்மையான மக்கள் இன்னொரு மோதலை விரும்பவில்லை என்று கூறினார்.
இலங்கை மக்கள் இனவாதிகள் அல்லர். ஆனால் அரசியல்வாதிகளினால் தூண்டிவிடப்பட்டார்கள். இனங்களுக்கு இடையிலான அதிகாரப்பகிர்வு மற்றும் மாகாணங்களுக்கான அதிகாரப்பரவலாக்கத்தின் அடிப்படையிலான அரசியல் தீர்வொன்றுக்கான ஆதரவு மட்டம் இரு வருட இடைவெளியில் 23 சதவீதத்தில் இருந்து 68 சதவீதமாக அதிகரித்து மக்களின் அபிப்பிராயம் அரசியல் தீர்வுக்கு ஆதரவாக திரும்பியிருக்கிறது என்றும் அவர் மதத்தலைலர்கள் மத்தியில் தெரிவித்தார்.
அரசியல் தீர்வொன்றுக்கான முயற்சிகளில் முன்னேற்றத்தைக் காண்பதற்கு தற்போதைய தருணம் வாய்ப்பானது என்று தேசிய சமாதானப் பேரவை நம்புகிறது.
இலங்கையின் 75 சுதந்திரதினத்துக்கு முன்னதாக அரசியல் தீர்வொன்றைக் காண்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு வருடத்துக்கு முன்னர் உறுதியளித்ததை நினைவுபடுத்தவிரும்புகிறோம். சுதந்திர தினத்துக்கு பிறகு 11 மாதங்கள் கடந்துவிட்டன.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றையும் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தையும் அமைப்பதற்கான இரு முக்கியமான சட்டமூலங்களை அமைச்சரவை அங்கீகரித்திருப்பது குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
பொதுமக்களும் அக்கறைகொண்ட தரப்புகளும் ஆராய்ந்து மேலும் யோசனைகளை சமர்ப்பிப்பதற்கு வசதியாக இந்த இரு சட்டமூலங்களும் விரைவில் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்படவிருக்கின்றன.
புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் மத்தியில் செயலூக்கம் கொண்ட ஒரு பிரிவினரையும் மூத்த பௌத்தகுருமாரில் ஒரு பிரிவினரையும் ஒன்றிணைப்பதில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சிவில் சமூக முயற்சி அரசியல் தீர்வொன்றுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளுக்கு களம் அமைத்துத்தரக்கூடிய இன்னொரு நேர்மறையான நிகழ்வுப்போக்காகும்.
இனப்பிரச்சினையைப் பொறுத்தவரை இரு தரப்பிலும் காணப்படும் தீவிரமான நிலைப்பாடுகளுக்கு இடையிலான வெளியை நிரவுவதற்கான முதல் அடியெடுத்துவைப்பாக இந்த சிவில் சமூக முயற்சியை தேசிய சமாதானப் பேரவை நோக்குகிறது. இந்த முயற்சியின் மூலமாக பரந்த பேச்சுவார்த்தைகளுக்கும் ஆழமான புரிந்துணர்வுக்கும் வழிவகுக்கமுடியும்.
இனப்பிரச்சினையை ஒப்புரவானதும் நிலைபேறானதுமான முறையில் தீர்த்துவைப்பதற்கு அவசியமான ஒரு தொகுதி கூட்டு கோட்பாடுகளை வகுப்பதில் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் உறுப்பினர்களும் பௌத்தகுருமாரும் இணக்கத்துக்கு வரக்கூடியதாக இருந்ததைக் கண்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த கோட்பாடுகள் பாராளுமன்றத்தில் உள்ள அரசியல்வாதிகளுடனும் முக்கியமான சகல மதத் தலைவர்களுடனும் பகிர்ந்துகொள்ளப்பட்டு அவர்களும் பொதுவில் இணக்கத்தை தெரிவித்திருக்கிறார்கள்.
சமூகங்களுக்கு இடையில் சமத்துவத்தை வலியுறுத்தும் பண்புகளை மையமாகக்கொண்டவை என்பதால் இந்த கோட்பாடுகளை இராஜதந்திர சமூகமும் வரவேற்றிருக்கிறது.
இந்த முன்முயற்சிகளை எதிர்க்கின்ற சிலரும் இருக்கிறார்கள். குறுகிய அரசியல் நலன்களில் கவனம் செலுத்துவதை விடுத்து நாட்டின் பொது நன்மைக்காக இந்த முயற்சிகளை பலப்படுத்துவதற்கான வழிவகைகளைக் கண்டறிய வேண்டுமென்ற எதிர்க்கருத்துக்களைக் கொண்டவர்களை தேசிய சமாதானப் பேரவை வேண்டிக்கொள்கிறது.
ஆனால், போர் முடிவுக்கு வந்து சுமார் 15 வருடங்கள் கடந்துவிட்டபோதிலும், வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பெருமளவில் இராணுவப் பிரசன்னம் இருப்பதுடன் படையினர் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதை எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நிலங்கைளை வெளியில் இருந்து வருபவர்கள் மதரீதியான தேவைகளுக்காகவும் விவசாய நோக்கங்களுக்காகவும் அபகரிப்பதனால் பிரச்சினைகள் தோன்றியிருப்பதையும் காண்கிறோம். இந்த அபகரிப்பு நடவடிக்கைகள் அங்கு வாழும் மக்களுக்கு பாதகமாக அமைகின்றன.
அதனால் முன்னுரிமைக்குரிய தேவையாக அந்த மக்கள் நம்பக்கூடிய, அவர்களது நிலங்களை பாதுகாக்கக்கூடிய, தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய , தங்களது மொழியை அவர்கள் சுதந்திரமாகப் பயன்படுத்துவதற்கு வசதியான ஒரு நிருவாகத்தை தரக்கூடிய அரசாங்கம் ஒன்று இருக்கவேண்டும்.
இந்த நோக்கத்துக்காகவே மாகாணசபைகள் முறை கொண்டுவரப்பட்டது.மக்களினால் தெரிவு செய்யப்படுபவர்கள் மாகாணங்களை ஆட்சிசெய்யக்கூடியதாக மாகாணசபைகளுக்கு தேர்தல்களை தாமதமின்றி நடத்துமாறு அரசாங்கத்தை நாம் வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறோம்.
இன்னொரு வருடம் முடிவுக்கு வந்து புதிய வருடம் ஒன்று பிறக்கும் நிலையில், களத்தில் நிலவும் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கைகளை எடுப்பதுடன் இலங்கையில் சமத்துவமான மக்களாக தங்களது பொருளாதார மற்றும் நீதிப் பிரச்சினைகளுக்கு முடிவுகாணப்படும் என்று வடக்கு, கிழக்கு மக்கள் மனதில் நம்பிக்கையுணர்வு ஏற்படக்கூடியதாக அரசாங்கம் செயற்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.