திரைக்குப் பின்னால் நிகழக்கூடிய தேர்தல் நாடகம்
இன்று இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் பொருளியல் நெருக்கடி மற்றும் ஈழத்தமிழர் சார்ந்து உள்நாட்டில் இனப் பிரச்சினைக்கான தீர்வு, சர்வதேச ரீதியாக எழுந்திருக்கும் இனப்படுகொலை, போர் குற்றம், சர்வதேச நீதிவிசாரணை போன்ற பிரச்சினைகளில் இருந்து இலங்கையை காப்பாற்ற மேற்குலகத்தினாலும் அதன் சார்பு சக்கதிகளினாலுமே பெரிதும் முடியும்.
எனவே மேற்குலகம் சார்ந்து இலங்கைக்கு ஏற்பட்டிருக்கின்ற சர்வதேசரீதியான அழுத்தம் மற்றும் உள்நாட்டு பிரச்சினைகளை கையாளக்கூடிய ஒரு வல்லமை வாய்ந்த ஒரு சிங்களத் தலைவரின் தேவையை வரலாற்று நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
இனவாத பின்னணி
அத்தகையவர் இனவாத பின்னணியை கொண்டவராகவும் இருப்பதோடு மட்டுமல்ல இந்தியாவை சமாளிக்க கூடியவராகவும் இருக்க வேண்டும். இனவாதம் இன்றி தலைவர் இலங்கையில் ஒருபோதும் உருவாகவும் முடியாது. நிமிரவும் முடியாது. நிலை பெறவும் முடியாது.
இலங்கையின் சிங்கள அரசியல் தலைவர்கள் பெரும்பாலானவர்கள் அங்கிலிக்கான் திருச்சபை பின்னணி பாரம்பரித்தை கொண்டவர்களாகவும் மேற்குலகம் சார்ந்தவர்களாகவுமே தம்மை இனங்காட்டி வந்திருக்கிறார்கள்.
இந்தப் பின்னணியில் ஆங்கில ஆங்கிலிக்கான் பாரம்பரிய ஆட்சி கலை நுட்பங்களை நன்கு அறிந்தவரும் அதனை இலாபகமாக கையாளக்கூடியவருமாக இன்றைய இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருக்கிறார்.
அது மட்டும் அல்ல அவர் மேற்கத்திய அரசியல், வாழ்வியல் பாரம்பரியத்தை கொண்டவராகவும் இருக்கிறார். இன்று மேற்குலகம் அவருக்கு ஆதரவாகவே உள்ளது.
இவை இரண்டு காரணங்களும் ரணிலை சர்வதேசரீதியாக குறிப்பாக மேற்குலகம் அவரை பலம்மிக்கவர் ஆக்குவதில் தெளிவாக இருக்கிறது.
உள்நாட்டில் கோட்டாபாய ராஜபக்சாவுக்கு அரசியல் நெருகடி ஏற்பட்டபோது ராஜபக்சக்களை பாதுகாப்பதற்காகவே ராஜபக்சக்களின் மொட்டுக் கட்சி ரணில் விக்ரமசிங்காவை ஜனாதிபதி ஆக்கியது. எனவே அவர் ஐக்கிய தேசியக் கட்சி முகத்துடன் மொட்டு கட்சியின் ஜனாதிபதியாக பதவி வைக்கிறார்.
ஆகவே அவரின் பின்னே சிங்கள பௌத்த இனவாதம் திரண்டு நிற்கிறது. கூடவே இந்திய எதிர்ப்புவாத சிங்கமும் வாளேந்தி நிற்கிறது. இந்த இரண்டு அடிப்படை காரணிகளும் இன்றைய இலங்கை அரசியலை கையாளவும், நிர்வகிக்கவும் மிகவும் தேவையாக உள்ளன.
எனவே வயது மூப்பு நிலையில் அந்திமக் காலத்தில் இருக்கும் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி சிம்மாசனத்தில் வைத்திருப்பது ராஜபக்சக்களின் தெளிவான முடிவாகும்.ரணில் விக்ரமசிங்க மக்கள் பலம் அற்றவர்.
பலவீன அரசியல் யாப்பு
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவருடைய கட்சி ஒரு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை கூட பெற முடியாமல் தோல்வியடைந்து தேசிய பட்டியல் உறுப்புரிமை ஊடாக பின்கதவால் நாடாளுமன்ற உறுப்பினரானவர்.
அத்தகையவர் இலங்கையில் ஏற்பட்ட திடீர் அரசியல் கொதிநிலையில் அந்த அரசியல் கொதிநிலையை தணிப்பதற்கு ராஜபக்சகளினால் இன்று ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் என்பதிலிருந்து இலங்கையின் ஜனநாயகமும், இலங்கை அரசியல் யாப்பும் எவ்வளவு பலவீனமானவை என்பதனை கோடிட்டு காட்டுகிறது.
இலங்கை அரசியல் யாப்புக்கு ஊடாக எத்தகைய ஜனநாயக விரோத செயற்பாடுகளை சிங்கள பௌத்த பேரினவாதத்தால் முன்னெடுக்க முடியும் என்பதை கருத்தில்கொள்ள வேண்டும்.
இன்று இலங்கையில் மக்கள் பலமுள்ள தலைமைத்துவம் என்றால் ராஜபக்சக்கள்தான். இலங்கையில் எந்த அரசியல் முடிவுகளையும் ராஜபக்சகளின் மொட்டுக் கட்சி ஆதரித்தால் அதனை மகாசங்கமும் ஆதரிக்கும். சிங்கள ராஜதந்திர வட்டாரங்களும் ஆதரிக்கும். இராணுவமும் ஆதரிக்கும். இந்த மூன்று அணிகளும்தான் இலங்கையின் அரசியல் செல்நெறியை தீர்மானிக்கின்ற சக்திகள்.
அதே நேரத்தில் மக்கள் பலத்தின் பின்னேதான் இந்த மூன்று அணிகளும் நிற்கும். மறுவளமாக மக்கள் பலத்தை தீர்மானிப்பதிலும் இம்மூன்று சக்திகளுக்கும் ஒரு கணிசமான பங்கு உண்டு.
எனவே இப்போதைக்கு தனிப்பட்ட ரீதியாகவோ ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகவும் ரணில் மக்கள் பலத்தை திரட்டவோ, நம்பியிருக்கவோ தேவையில்லை. அதனை ரணிலுக்காக ராஜபக்சர்களே செய்வார்கள். ஏனெனில் இங்கே பரஸ்பர நலன்கள் தங்கி உள்ளன. ரணிலின் பதவியை பாதுகாப்பது ராஜபக்சக்களின் கடமையாகும்.
இதேவேளை ராஜபக்சர்களை சர்வதேச நெருக்கடியிலிருந்த பாதுகாப்பது ரணிலுக்கு தவிர்க்க முடியாததாகும். ரணில் உயிர் உள்ளவரை பதவியில் அமர்ந்திருக்க ராஜபக்சக்கள் தேவைப்படுகிறார்கள்.
அதேநேரம் ரணில் இறக்கும் வரை அந்த சிம்மாசனத்தில் வைத்திருக்க வேண்டியது ராஜபக்சக்களுக்கு தேவையாக உள்ளது. ஏனெனில் ராணிலின் பின்னே அனேகமாக குறை நிரப்பு கால ஜனாதிபதியாக நாமல் ராஜபக்சேவை அமர்த்துவது மகிந்த ராஜபக்சவின் இலட்சியமாகும்.
இது ஒன்றை மாத்திரமே கருத்தில் கொண்டு மொட்டு கட்சியை ராஜபக்சக்கள் வழி நடத்துவர். எனவே ரணிலுக்காக மக்கள் பலத்தை திரட்டுவதில் ராஜபக்சக்கள் ஈடுபட்டிருப்பார் அது அவர்களுடைய அரசியல் தவறுகளினால் ஏற்பட்ட வரலாற்று நிர்ப்பந்தம் ஆகும்.
இங்கே நடைமுறை அரசியலில் ரணிலை இறுக்கமான இடுப்பு பிடியில் கெட்டியாக மகிந்த ராஜபக்ச பிடித்திருப்பார். அதே நேரத்தில் ராஜபக்சவின் கழுத்து கயிற்றை ரணில் விக்ரமசிங்க கெட்டியாக பிடித்திருப்பார்.
எனவே இங்கே முரண்பட்ட இரண்டு சக்திகளும் ஒரே அச்சில், ஒரே நேர்கோட்டில், ஒரு திசையில் பயணிப்பது தவிர்க்க முடியாததாகிறது.
இங்கே இரண்டு சக்திகளும் தமது நலன்களை சமமாகவும், பூரணமாகவும் அனுபவிப்பர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. இதுவே அரசியல் ராஜதந்திரமும் ஆட்சிக் கலையுமாகும்.
தேசிய அபிலாசை
மேற்குறிப்பிட்ட பின்னணியில் இருந்து கொண்டுதான் இலங்கை அரசியலையும், இலங்கை ஆட்சியாளர்களையும், இலங்கையின் வெளியுறவுக் கொள்கை சார்ந்தும், இலங்கையின் உள்நாட்டு கொள்கை சார்ந்தும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றில் இருந்து கொண்டுதான் தமிழ் மக்கள் தமக்கான தேசிய அபிலாசைகளை அடைவதற்கான மார்க்கங்களைத் தேடவேண்டும்.
இந்த அரசியல் பின்னணியில் இலங்கையின் சிங்கள அரசியல் கட்சிகளையும், சிங்கள தலைவர்களையும் நெருக்கடிக்கு உள்ளாக்கி அந்த நெருக்கடியில் இருந்து நிர்பந்தங்களை ஏற்படுத்துவதன் மூலமே தமிழ் மக்கள் எதனையும் சாதிக்க முடியும்.
எனவே தமிழ் அரசியல் தலைமைகள் எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வது என்பதும் சிங்கள அரசியல் தலைவர்களை எவ்வாறு நெருக்கடிகள் உள்ளாக்குவது என்பதில் இருந்துதான் தேர்தல் கையாளுகை பற்றிய முடிவுக்கு செல்ல வேண்டும்.
இந்த தேர்தலில் சிங்கள தேசியக் கட்சிகளுக்கு ஆதரவளிப்பதோ அல்லது இந்த தேர்தலை பகிஷ்கரிப்பு என்பதோ இரண்டும் சிங்கள தேசத்துக்கு சேவகம் செய்வதாகவே அமையும். ஆதரிப்பதனால் இனவாதத் தலைவர் தோன்றுவார்.அவ்வாறே தேர்தலை பகிஷ்கரிப்பதனால் வாக்களிக்கப்பட்ட வாக்குகளில் அதிக விகிதாசாரத்தில் இனவாத சிங்களத் தலைவன் தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஆகவே இந்த இரண்டு செயலும் இனவாத சிங்கள தலைவனை வெற்றி பெற வைப்பதற்கான சேவகம் செய்தலாகவே அமையும்.
எனவே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு ஒரு பொது தமிழ் வேட்பாளரை நிறுத்தி தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி தமிழ் வாக்குகளை ஒன்று திரட்டுவதன் மூலம் அல்லது ஒன்று குவிப்பதன் மூலம் போட்டியிடும் சிங்களத் தலைவர்கள் ஐம்பது விகிதத்திற்கு மேல் வாக்குகளை பெறுவது கடினமாக்கலாம். இதனால் சிங்கள தலைமைகளை திணறடிக்கவும், நெருக்கடிக்குள் தள்ளாவும் முடியும்.
அத்தகைய நெருக்கடிக்கு உள்ளாக்குவதன் மூலம் சிங்களத் தலைவர்கள் தமிழ் தலைமைகளிடம் கீழ் இறங்கி வந்து பேரம்பேச வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்த முடியும்.
ஜனாதிபதி தேர்தல்
இவ்வாறு தமிழ் வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தேர்தல் காலத்தில் தமிழ் தேசியக் கட்டுமானத்தை விரிவுபடுத்தவும், விரைவுபடுத்தவும், மீள்கட்டமானம் செய்யவும், தமிழ்த் தேசியம் சார்ந்த கருத்துக்களை எந்த தடைகளும் இன்றி, அரச அழுத்தங்கள் இன்றி சுதந்திரமாக செயல்படுத்துவதற்கான ஒரு களமாகவும், கூட்டங்களை தங்கு தடை இன்றி நடத்தவும் முடியும். இதனை ஒரு தமிழ் தேசிய பேரெழுச்சிக்கான ஒரு காலமாகவும், களமாகவும் ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்த முடியும்.
எனவே எதிர்வரும் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை தமிழ் தரப்பினர் எவ்வாறு கையாளுகின்றார்கள் என்பதிலிருந்துதான் சிங்கள தேசத்தின் அரசியல் இன்னொரு பக்க பரிமாணத்தை பெறப்போகின்றது.
மாறாக வழக்கம் போல தமிழ் தலைமைகள் ஜனாதிபதி தேர்தலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு கட்சி பகிஷ்கரிப்பு மற்றையது ஏதோ ஒரு சிங்கள கட்சிக்கு ஆதரவளிப்பு என அரசியல் நடத்தினால் சிங்கள தேசத்தின் அரசியல் என்பது அதன் இயல்பான செல்போக்கிலேயே பயணிக்கும்.
இவ்வாறு தமிழர் தரப்பினர் விளக்கமான பாணியில் இத்தேர்தலை எதிர்கொண்டால் இந்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலே வெற்றி பெறுவார். ரணிலை வெற்றி பெறவைப்பதுதான் ராஜபக்சக்களின் விருப்பம்.
ஆனாலும் ரணிலுக்கு நெருக்கடியையும் பதட்டத்தையும் கொடுப்பதற்காக ரணிலைத் தொடர்ந்து தம்மீது தங்கியிருக்க வைப்பதற்காக ரணிலுக்கு சற்றும் மன மாற்றங்கள் ஏற்படுவதை தடுப்பதற்காக அரசியலில் வெளிப்பார்வைக்கு சில சலசலப்புகள் செயற்கையாக தோற்றுவிக்கப்படும்.
அதிகாரக்கலை நுட்பம்
உதாரணமாக கடந்த உலக ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக்கட்சிக்குள் இருந்து அழகப்பெருமாவை ஒரு போக்காக போலியாக முன் நிறுத்தியது போன்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரையும் முன்மொழியக் கூடும்,முன்னிறுத்தவும் வாய்ப்புண்டு.
ஆனால் மொட்டுக் கட்சியிலிருந்து ராஜபக்சவின் குடும்பத்துக்கு வெளியே ஒரு பலம்மிக்க தலைவரை ராஜபக்சர்கள் ஒருபோதும் முன்னிறுத்த மாட்டார்கள்.அவ்வாறு முன்னிறுத்தினால் எதிர்காலத்தில் ராஜபக்சக்களின் குடும்ப அரசியல் இத்துடன் முடிவுக்கு வந்துவிடும்.
எனவே நாமல் ராஜபக்சவை இலங்கை சிம்மாசனத்தில் அமர்த்த வேண்டுமாக இருந்தால் ரணிலைத் தொடர்ந்து பதவியில் அமர்த்துவதே இப்போதைக்கு சிறந்த வழியாகவும், தெரிவாகவும் உள்ளது.இதுவே ஆட்சிகலை, அதிகாரக்கலை நுட்பமுமாகும்.
எனவே அதனையே ராஜபக்சக்கள் விரும்புவர். நிகழக்கூடிய இந்த வியூகத்தை கருத்திற்கொண்டு தமிழ்த் தரப்பினர் முன்யோசனையுடன் செயற்பட வேண்டும்.