;
Athirady Tamil News

ஈழத் தமிழருக்கு குரல் கொடுப்பதில் முன்னுதாரணமான நாடு கனடா….

0

ஈழத் தமிழ் மக்களின் நீதிக்கும் உரிமைகளுக்கும் குரல் கொடுப்பதில் கனடா நாடு தொடர்ந்தும் நம்பிக்கையூட்டுகிறது.உலக அரங்கில் ஒடுக்கப்பட்ட மக்களின் மனித உரிமைகளுக்கும் நீதிக்கும் குரல் கொடுப்பதில் நீதியின் முகமாக கனடா விளங்குகிறது.

அண்மைய காலத்தில் சிறிலங்கா அரசுக்கு பெரும் மனவுலைச்சலை ஏற்படுத்திய நாடாக கனடா இருப்பதும், சில நகர்வுகளை புலம்பெயர் அமைப்புக்கள் சிலவற்றைக் கொண்டு சிறிலங்கா அரசு முன்னெடுப்பதும் நாம் அறிந்த விடயங்கள்தான்.

இந்த நிலையில் இந்த நகர்வுகளுக்குப் பிறகும் ஈழத் தமிழ் சமூகத்தின் உயர்வுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொடுத்துள்ள குரல் சிறிலங்காவுக்கு பெருத்த பதிலாகவும் அமைந்துவிடுகிறது.

ஈழத் தமிழ் சமூகத்துடன் கனடா
தைப்பொங்கல் நிகழ்வொன்றில் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் பங்கெடுத்து கூறிய கருத்துக்கள், ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கையைப் புதுப்பித்துள்ளன.

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் சவால்களுக்குட்பட்டு வருவதாகவும் தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும் என்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் கனடா சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து தமிழர் நலன் தொடர்பில் செயற்பட்டு வருவதாக அவர் கூறியிருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.

மீண்டும் உலக அரங்கில் மாண்புமிகு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களின் பேச்சு ஈழத் தமிழருக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.

அது மாத்திரமின்றி, 1983ஆம் ஆண்டு இலங்கையில் வன்முறைகள் ஆரம்பித்த காலத்தில் தமது தந்தையாரின் தலைமையிலான லிபரல் கட்சி 1800 இலங்கை தமிழர்களை கனடாவில் குடியேற்றியது என்றும் இந்த தொகை கடந்த பல தசாப்தங்களில் அதிகரித்து இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகமாக வசிக்கும் நாடாக கனடா பார்க்கப்படுவதாகவும் கனடாவின் வளர்ச்சிக்கு தமிழர்களின் பங்களிப்பு வியக்கத்தக்கது என்றும் இதனால் 2016ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தை தமிழர் வரலாற்று மாதமாக கனேடிய அரசாங்கம் பிரகடனம் செய்தது என்றும் கனேடியப் பிரதமர் கூறியிருக்கின்றார்.

ஈழத் தமிழர்களுக்கான நீதி
போர் முடிவடைந்து இன்றைக்கு 15 ஆண்டுகள் ஆகின்ற போதும், ஈழத் தமிழ் மக்களுக்கான நீதியை வழங்காமல் காலத்தை இழுத்தடிக்கும் வகையில் சிறிலங்கா அரசு காய்களை நகர்த்தி வருகின்றது.

ஐக்கிய நாடுகள் அவையின் அமர்வுகளும் அணுகுமுறைகளும் அதில் பதவி வகிக்கும் ஆணையாளர்களின் செயற்பாடுகளும் ஈழத் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதாயில்லை என்ற நிலையில், அதற்கப்பால் ஈழத் தமிழர் இனப்படுகொலை விவகாரம் நகர வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில் பொறுப்புக்கூறல் மற்றும் இனப்படுகொலைக்கான நீதி சார்ந்து கனடா உலகின் நீதிமுகமாகவும் விளங்குகின்றது.

இம்முறை பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள், இலங்கை தமிழர்களின் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் கனடா தொடர்ந்தும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் ஏனைய அமைப்புக்களுடன் செயற்பட்டு வருகிறது என்றும், எந்த நாடும் நடைமுறைப்படுத்தாத வகையில் இலங்கை தமிழர்களின் மனித உரிமைகளுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு கனடா தடை விதித்துள்ளது என்றும் இந்த செயற்பாடுகள் தொடரும், தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும் என்றும் கூறியிருப்பதே முக்கியமானது.

ஈழத் தமிழ் மக்களுக்கான நீதிக்காக கனடா எடுத்து வரும் நகர்வுகளும் அணுகுமுறைகளும் மிகுந்த நம்பிக்கை அளிப்பவையாகும்.

கனடாவின் இனப்படுகொலைத் தீர்மானம்
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை முதன் முதலில் உலகில் ஏற்றுக்கொண்ட நாடு என்ற வகையிலும் கனடா முதன்மை பெறுகிறது.வரும் காலத்தில் இந்த தீர்மானத்திற்கு பல நாடுகள் வரும்.

அதற்கு முன்னூதாரணமான நாடாக கனடா இருப்பது ஆறுதலும் பெருமையும் தரக்கூடியது. அந்த வகையில் கடந்த மே மாதம் நடந்த இனப்படுகொலை நினைவேந்தலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று ஏற்றுக்கொண்டிருந்தமை உலக அரங்கில் ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை குறித்த அவதானத்தை ஏற்படுத்தியிருந்தது.

அத்துடன் “நாங்கள் 14 வருடங்களிற்கு பின்னர் துன்பகரமான விதத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை நினைகூறுகின்றோம் என தெரிவித்துள்ள கனடா பிரதமர் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலையில்உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் இழக்கப்பட்டன,பலர் காணாமல்போனார்கள் காயமடைந்தார்கள் இடம்பெயர்ந்தார்கள்.

கொல்லப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் மற்றும் அர்த்தமற்ற வன்முறையால் ஏற்பட்ட துயரத்துடன் தொடர்ந்தும் வாழும் அவர்களின் குடும்பத்தவர்கள் குறித்து எங்கள் சிந்தனைகள் உள்ளன…” என்று அவர் கூறியிருந்தமை முக்கியமானது.

இனப்படுகொலை நினைவுதினம்
இதேவேளை, “கனடாவின் பல சமூகங்களில் நான் சந்தித்த பலர் தமிழ் கனடா பிரஜைகளின் கதைகள் மனித உரிமைகள் சமாதானம் ஜனநாயகம் போன்றவற்றை இலகுவாக கருதமுடியாது என்பதை நினைவுபடுத்தி நிற்கின்றன.

இதன்காரணமாகவே கடந்த வருடம் மே18ம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவுதினமாக நாங்கள் அங்கீகரித்தோம் என தெரிவித்துள்ள கனடா பிரதமர் மோதலால் கொல்லப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் உரிமைக்காகவும் இலங்கையில் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளவர்களிறகாக குரல்கொடுப்பதை கனடா நிறுத்தாது…” என்றும் அழுத்தம் திருத்தமாக கடந்த மேயில் கூறினார்.

இதேவேளை, கனேடியப் பாராளுமன்றத்தில் இனப்படுகொலை நினைவேந்தல் அங்கீகரிக்கப்பட்டமையும் இதற்கு முந்தைய முக்கிய நகர்வாகவும். அந்த வகையில் ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை அரச நினைவேந்தல் வாரமாக அனுஸ்டிக்கும் தீர்மானம் கனேடியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்துடன் கடந்த சில ஆண்டுகளின் முன்னர் தை மாதம் தமிழ் மரபுரிமைத் திங்களை கொண்டாடவும் கனடா அரசு அங்கீகாரத்தை அளித்தது. தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம், வளர்க்கும் வண்ணம், பகிரும் விதமாக தை மாதம் தமிழ் மரபுரிமைத் திங்கள் அனுஷ்டிக்கப்படுகிறது.

இமாலயப் பிரகடனம் தோல்வி
ஈழத் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கையான வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய ஆட்சி, இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி போன்ற விடயங்களை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் அண்மைய காலத்தில் இமாலயப் பிரகடனம் என்ற நிகழ்வு அரங்கேற்றப்பட்டிருந்தது.

இதற்கு உலகத் தமிழர் பேரவை மற்றும் கனேடியத் தமிழ் காங்கிரஸ் போன்ற அமைப்புகள் துணை நின்றிருந்தன. எனினும் குறித்த பிரகடனத்தின் உண்மை தன்மை மற்றும் நோக்கம் என்பன மக்கள் மத்தியில் தெளிவுபெற்றிருப்பதுடன் பெரும் எதிர்ப்புக்களும் எழுந்துள்ளன.

குறிப்பாக கனடாவின் இனப்படுகொலைத் தீர்மானத்தால் பதற்றமடைந்த சிறிலங்கா அரசு, அதனை எதிர்கொள்ளவும் சர்வதேச சூழலில் இனப்படுகொலைக்கான நீதிக்கான நகர்வுகளை முடக்கவும் புலம்பெயர் அமைப்புக்களை சிதைக்கவும் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் மீண்டும் ஈழத் தமிழ் மக்களின் நீதிக்காகவும் உரிமைகளுக்காகவும் கொடுத்திருக்கும் குரலென்பது இத்தகைய நகர்வுகளுக்குமான பதிலாகவும் செயலாகவும் அமைந்திருப்பதும் கவனம்கொள்ளத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.