மட்டக்களப்பில் மூவாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு! வேடிக்கை பார்க்கும் அரசியல் தலைவர்கள்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் கால்நடைகளை வளர்க்கும் பண்ணையாளர்களில், பால் உற்பத்தியை நம்பி சுமார் மூவாயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் தற்போது அவர்களின் வாழ்வாதாரம் முற்றாக முடங்கி உள்ளதால் அவர்கள் பெரும் பொருளாதார நெருக்கடியால் தவித்து வருகின்றனர்.
ஆனால், இது குறித்து சிந்திக்காத மட்டக்களப்பு மாவட்ட அரசியல் தலைவர்கள் மட்டக்களப்பிற்கு வரும் ஆளும் கட்சி அமைச்சர்களிடம் மிகவும் நெருங்கி செயற்படுகின்றனர்.
மூன்று நீதிமன்றங்களினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதற்கான தீர்வை வழங்கி அதனை நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
ஆனால் அதனை கூட நிர்வாக ரீதியாக செயற்படுத்த முடியாத நிலையில் தான் மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாவட்ட அபிவிருத்தி குழுவும் உள்ளது என்பதே யதார்த்தமானதாகும்.
பறிக்கப்படும் உரிமைகள்
இனவாத சக்திகளுடன் மோதி மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாழ்வாதார உரிமையை பெற்றுக் கொடுக்க முடியாதவர்கள் அபிவிருத்தி குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது.
அபிவிருத்தி என்பது புதிய திட்டங்களை உருவாக்குவது மட்டுமல்ல இருக்கின்ற உற்பத்திகளை, பொருளாதார வளத்தை அழியவிடாது பாதுகாப்பதும் அபிவிருத்தி தான்.
இங்கு தான் தங்களது மாவட்ட மக்களின் வாழ்வாதார உரிமையை பறிக்கின்றார்கள் என்று தெரிந்தும் அதனை தடுக்காது, அதற்கான மூலோபாய திட்டங்களை வகுக்காது கடந்து செல்வதன் நோக்கம் என்ன?
அரசியலுக்காக பண்ணையாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை கையில் எடுப்போர் ஏற்கனவே நீதிமன்றங்களினாலும், ஜனாதிபதியினாலும் தீர்வு வழங்கப்பட்டதை மறந்து அல்லது மறைத்து பண்ணையாளர்களை பந்தாடி வருகின்றனர்.
நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் தான் கிழக்கு மாகாண இராஜாங்க அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், அபிவிருத்தி குழு கூட்டமும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என்றால் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இனி எந்த ஆளுமைகளை நம்புவது என்ற கேள்வி எழுகிறது?
பண்ணையாளர்களின் போராட்டம்
வாக்கு அரசியலுக்காக செயற்படும் அரசியல் தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களை புறக்கணிக்க வேண்டிய தேவை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களுக்கு உருவாகி உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோரிடம் நெருங்கி செயற்படுபவர்கள் அவர்களிடம் பேசி ஒரே நாளில் முடிக்க வேண்டிய பிரச்சினையை தங்களது அரசியல் நோக்கங்களுக்காக பிச்சைக்காரன் காலில் உள்ள புண்ணைப் போன்று இந்த பிரச்சினையை தீர்க்காது பண்ணையாளர்களை பந்தாடி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஐந்து மாதங்களாக தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து தருமாறு தொடர்ச்சியாக போராடிவரும மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரை பண்ணையாளர்களை நம்பி 982 பால் பண்ணையாளர்களும் அவர்களுக்கு சொந்தமான சுமார் இரண்டு இலட்சம் மாடுகள் காணப்படுவதோடு, இந்த மாடுகளை தமது வாழ்வாதாரமாக நம்பி சுமார் 3,000 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாக பண்ணையாளர்கள் சங்க தலைவர் நிமலன் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து, கூறுகையில் மேய்ச்சல் தரை மீட்கும் மயிலத்தமடு, மாதவனை தமிழ் பண்ணையாளர்களின் போராட்டம் தொடர்கிறது.
ஐந்து மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமக்கும், தமது கால்நடைகளுக்கும், சிங்கள பெரும்பான்மையின விவசாயிகளால் இழைக்கப்படும் அட்டூழியங்களும், அநியாயங்களும் அதிகரித்துள்ளது.
துன்புறுத்தப்படும் கால்நடைகள்
பெரும்பான்மையின சிங்கள விவசாயிகள் தமது கால்நடைகளை தொடர்ச்சியாக துன்புறுத்தி வருவதோடு கொலை செய்தும் வருகின்றனர்.
நாங்கள் தொடர்ச்சியாக 160 நாட்களைக் கடந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அந்த பகுதியில் “அதிகூடிய மின்சாரத்தைக் கொடுத்து குறைமாதத்தில் பசுக்கள் கன்றை ஈன்றுள்ளது.
குறை மாதத்தில் பிறந்த கன்றால் எழும்பிகூட நிற்க முடியவில்லை. இந்த கன்று குட்டிகளை பத்தி சிந்திக்க வேண்டும்.இது அநியாயம்தானே? இது வாய்பேச முடியாத மிருகம் தானே? இது மின்சாரக் கம்பியா? இல்லையா என இதுக்கு தெரியுமா? பௌத்த தர்மத்தை மதிக்கும் அனைவரும் இது பற்றி சிந்திக்க வேண்டும்.
வாய்பேச முடியாத ஜீவன்களுக்கு இவ்வாறு செய்கிறீர்கள்? சுடுகிறீர்கள். வாய் வெடி போடுகிறீர்கள். கட்டுத் துப்பாக்கியால் சுடுகிறீர்கள். வெட்டுகிறீர்கள்.
நீங்களா, பௌத்த தர்மத்தை மதிப்பவர்கள்?” என்ற கேள்வி எழுகிறது? மயிலத்தமடு, மாதவணையில் மேய்ச்சல் தரையை பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள சிங்கள விவசாயிகளை அகற்றுமாறு தமிழ் பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பொலிஸாரிடம் முறைப்பாடு
கடந்த வருடம் செப்டெம்பர் 13ஆம் திகதி, மட்டக்களப்பு மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் பாற்பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்க முடியாது என மாவட்டத்தின் அப்போதைய செயலாளர் கலாமதி பத்மராஜா தெரிவித்ததை அடுத்து, செப்டெம்பர் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக தமிழ் பாற்பண்ணையாளர்கள் முதன் முதலாக போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இந்த போராட்டம் இன்று வரை தொடர்கிறது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தம்மை சந்திப்பதாக (பெப்ரவரி 25) தெரிவித்த, மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, தம்மை சந்திக்கவில்லை என மயிலத்தமடு மாதவணை பால் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சீனிதம்பி நிமலன் தெரிவித்திருந்தார்.
அத்துமீறி மேய்ச்சல் தரையை பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள சிங்கள விவசாயிகள், போராட்டம் ஆரம்பித்த நாள் முதல் இதுவரை 275 மாடுகளை கொலை செய்துள்ளனர்.
இது தொடர்பில் கரடியனாறு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் இதுவரை எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. குறித்த 275 மாடுகளும் 22 பண்ணையாளர்களுக்கு சொந்தமானதென அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
மேய்ச்சல் தரையை கைப்பற்றியுள்ள சிங்கள விவசாயிகள் சிறிய குளங்கள் மற்றும் ஆறுகளையும் ஆக்கிரமித்துள்ளமையால் மாடுகளின் தாகத்தைத் தீர்க்க வழியின்றி பண்ணையாளர்கள் தடுமாறுவதாக அவர் வலியுறுத்துகின்றார்.
பாதிக்கப்படும் வாழ்வாதாரம்
சுமார் 6,500 ஏக்கர்களைக் கொண்ட குறித்த மேய்ச்சல் தரை காணியில் 5,000 ஏக்கர் வரையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயப் பணியில் ஈடுபடுவதற்கென அந்த பிரதேசத்தில் சுமார் 700 பேர் வரையில் தங்கியிருப்பதாகவும் பால் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டுகின்றார்.
தனக்கு சொந்தமான 50 மாடுகளில், 15 மாடுகளை விவசாயிகள் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கும் பண்ணையாளர் ஒருவர், தமது வாழ்வதாரம் முற்றாக கேள்விக்குறியாகியுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.
“காலங்காலமாக மாடுகள் கொண்டுவந்து கட்டும் இடம் இது இவர்கள் அத்துமீறி குடியேறியமைால் எங்கள் மாடுகளை கட்ட முடியாமல் உள்ளது. வெட்டுவதும், சுடுவதுமாக என்னுடைய 15 மாடுகள் இவ்வாறு உயிரிழந்துள்ளன. இதற்கு அரசாங்கம்தான் பொறுப்புக்கூற வேண்டும். எங்களுக்கு வேறு தொழில் இல்லை.
மாடு தான் எங்களின் வாழ்வாதாரம் என்றார். மயிலத்தமடு, மாதவணையில் மேய்ச்சல் தரையை நம்பி 982 பால் பண்ணையாளர்களுக்குச் சொந்தமான சுமார் இரண்டு இலட்சம் மாடுகள் காணப்படுவதோடு, இந்த மாடுகளை தமது வாழ்வாதாரமாக நம்பி சுமார் 3,000 குடும்பங்கள் வாழ்கின்றனர்.
இவர்கள் அனைவரது வாழ்வாதாரமும் தற்போது கேள்விக் குறியாகியுள்ளதாக மயிலத்தமடு மாதவணை பால் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சீனித்தம்பி நிமலன் தெரிவித்தார்.