பகிடிவதையின் மறுபக்கம் !
இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் மேலத்தேய கலாசாரமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் அதிகம் தாக்கம் செலுத்தி வருகிறது. இத்தாக்கத்தின் காரணமாக சமுதாய ஆரோக்கியம் பல்வேறு நிலைகளில் கேள்விக்குறியாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஒழுக்க விழுமியமிக்க ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவது என்பது சவாலாக மாறிவிட்டது. ஏனெனில், புதிய தலைமுறையினர்களாகக் கருதப்படும் தற்போதைய பாடசாலை மாணவர்கள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை தொலைக்காட்சி, வானொலி, கையடக்கத் தொலைபேசி, சமூக ஊடகப் பயன்பாடு என்பவற்றுக்கு அடிமைப்பட்டு வருகின்றனர். இதனால், குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே விழுயமிக்க மனிதப் பண்புகள் அகன்று செல்லும் நிலையில், வக்கிர எண்ணங்கள் அதிகரித்து அவ்வெண்ணங்கள் செயல்வடிவில் வெளிப்படுத்தப்படும் அங்கீகரிக்க முடியாத பல சம்பவங்கள் நிறையவே நிகழ்வதைக் காணமுடிகிறது. இதில் ஒன்றாகவே பல்கழைக்கழங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை எனும் வக்கிர எண்ணங்களின் நடத்தைச் செயற்பாடுகளை நோக்க வேண்டியுள்ளது.
புதிய மாணவர்களுடன் சினேகபூர்வமான நட்பை ஏற்படுத்திக்கொள்வதற்காகக் கூறி நான் பெற்ற துன்பம் மற்றவரும் அடைய வேண்டும் என்ற வக்கிர எண்ணத்துடன் மேற்கொள்ளப்படுகின்ற பகிடிவதைகள் பல மாணவர்களை உடல், உள ரீதியாகப் பாதித்திருப்பதுடன் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும் இட்டுச் சென்றிருக்கிறது. இதனால் சில மாணவர்கள் தற்கொலை புரிந்துள்ளதுடன் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டிருப்பதே தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்தப் பகிடிவதை வன்முறைச் செயற்பாடுகளினால் இரண்டாயிரம் மாணவர்கள் வரை பல்கலைக்கழக கல்வியை இடைநிறுத்தியிருப்பதாக தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக கல்வியை இடைநிறுத்தி மாணவர்களுக்கு கல்வியைத் தொடர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள சூழலில், அண்மையில் யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் பகிடிவதைக்குள்ளான சம்பவம் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இதன் எதிரொலிகள் பல்வேறு வடிவங்களை அடைந்திருப்பதையும் நோக்க வேண்டியுள்ளது.
ஒரு நபர் மற்றொரு நபருடன் சமூகமயமாக்கப்படுவதற்கு ஆரோக்கியமான பொறிமுறைகள் பல காணப்படும் நிலையில் மற்றவரைத் துன்புறுத்தி இன்பமடையும் சமூகமயமாக்கல் முறையாகப் பல்கலைக்கழகங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதைகள் தடுக்கப்படுவது அவசியமென்பதுடன் இதனை சட்டங்களைக் கொண்டு நிறுத்த முடியாது என்பதும் தெளிவாகிறது. ஏனெனில, இவ்வன்முறை சமூகமயமாக்கல் செயற்பாடான பகிடிவதையைத் தடுப்பதற்கு சட்டம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அச்சட்டத்தினால் பகிடிவதை நிறுத்தப்படவில்லை என்பதன் மூலம் சட்டத்தினால் மாத்திரம் இதனைக் கட்டுப்படுத்த முடியாது என்பது தெளிவாகிறது.
ஒருவகை ஆளுமை உளக்கோளாறு கொண்டவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற இத்தகைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின் அவர்கள் உளச்சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அத்துடன் அவர்களிடையே விழுமியப் பண்புகள் வளர்க்கப்படுவது அவசியமாகவுள்ளது.
எதிர்கால சந்ததியினர் மத்தியில் தற்காலத்தில் காணப்படும் விழுமியம் நளுவிய செயற்பாடுகளுக்கு சூழல் மற்றும் ஊடகத்தாக்கங்கள் இன்றியமையாதது. உடல், உள வளர்ச்சிக்குரிய பண்டைய விளையாட்டுக்களும், பொழுதுபோக்குகளும் மறக்கப்பட்ட அல்லது புதிய நவீனத்துவங்களினால் மறைக்கப்பட்ட நிலையில் பல சிறுவர்கள் காட்டூன் பார்ப்பதிலும் வீடியோ கேம் விளையாடுவதிலும் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். அதேபோன்று, கட்டிளமைப் பருவத்தினர் பலர் ஸ்மாட் போன் பயன்பாட்டிலும் பேஷ்புக், வட்ஸ்சப் போன்ற சமூக ஊடகப் பாவனையிலும் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் பல்வேறு பாதக விளைவுகளை பயன்பாட்டாளர்கள் மத்தியில் உருவாக்கியிருக்கிறது. அவர்களின் நேரான பாதைகளை திசைமாற்றியிருக்கிறது.
தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சியின் ஒருபக்கம் மனித சமுதாயத்திற்கு ஆரோக்கியமாக அமைகின்றபோதிலும். அதன் மறு பக்கம் பாதகமாகவும் அமைந்துவிடுகிறது. எந்தவொரு விடயமும் அதன் அளவை மீறிச் செல்கின்றபோது ஆரோக்கியமற்ற நிலையையே தோற்றுவிக்கும். இதனையொட்டியதாக அதிக நேரம் வீடியோ கேம் விளையாடுவது உளவியல் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்து வந்த நிலையில்
வீடியோ கேம் விளையாட்டுக்கு அடிமைப்படுவதை ‘Gaming disorder’ என்ற உளவியல் பாதிப்பாக வகைப்படுத்தப்பட்டு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 12 மணி நேரம் வீடியோ கேம் விளையாடுவது நண்பர்களையும், குடும்பத்தினரையும் எரிச்சலடையச் செய்வதுடன் மனநல பாதிப்புக்களையும் ஏற்படுத்துவதை உறுதிப்படுத்தியுள்ள உலக சுகாதார ஸ்தாபனம் சர்வதேச நோயியல் வகைப்படுத்தலில் வீடியோ கேம் விளையாட்டையும் உளவியல் பாதிப்பாக பிரகடனப்படுத்தியிருப்பது எதுவும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சாகும் என்பதை வெளிப்படுத்தியிருப்பதோடு வழிகாட்டலின் பலவீனத்தையும், விழுமியங்களிலிருந்து சிறுவர்களும், வளர்ந்தவர்களும் விலகி வருவதையும் எடுத்துக்காட்டுவதாகவே கருத வேண்டியுள்ளது.
புதிய தலைமுறையினர்களான சிறுவர்களினதும், கட்டிளமைப்பருவத்தினரதும் மிதமிஞ்சிய செயற்பாடுகள் அளவு கடந்து செல்லாது தவிர்க்கப்பட வேண்டுமாயின் அவர்கள் ஆரோக்கியமான வழிகாட்டல்களுடன், விழுமியப் பண்புகளுடனும் வளர்க்கப்படுவது அவசிமாகவுள்ளது. ஏனெனில், நாகரீகம் என்ற பெயரில் அநாகரீகம் வெகுவாக சமுதாயத்திற்குள் ஊடுருவி வந்துகொண்டிருக்கின்றன. இதனால், புதிய தலைமுறையினர் மத்தியில் கலாசாரச் சீரழிவுகள் ஏற்பட்டிருக்கும் இக்கால கட்டத்தில் முறையான வழிகாட்டல்கள், ஆரோக்கியமானதாகவும் பலமானதாகவும் அமைவதோடு பலவீனமடைந்துள்ள விழுமியங்களைக் கட்டியெழுப்புவதற்காக விழுமியக் கல்விக்கான முக்கியத்துவமும் அவசிமாகவுள்ளது.
ஒரு பிள்ளையின் சிறப்பான வளர்ச்சியில் சமூக முகவர்களான பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமவயதுக் குழுவினரும், சமய போதகர்களும் அதி முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த முகவர்களோடு ஊடகங்களும் முக்கியத்துவம் பெறுகிறது. சமூக முகவர்களின் வழிகாட்டல்கள் பலவீனமடைகின்றபோது, பிள்ளைகளின் விழுமியப் பண்புசார் வளர்ப்பும், வளர்ச்சியும் திசைமாறுவதுடன் எதிர்பாராத விபரீதங்களையும், மரணங்களையும் கூட ஏற்படுத்தி விடுகிறது.
தங்களுக்குச் சாதகமான சூழல் அமைகின்றபோது சிறுவர்களும், கட்டிளமைப்பருவத்தினரும் விழுமியங்களுக்கு அப்பால் சென்று வழிகாட்டல்களை மிஞ்சிய செயற்பாட்டை பரீட்சிக்க முற்படுகின்றனர். இதனால், அவர்கள் பல்வேறு விபரீதங்களை எதிர்நோக்குவதுடன் சமூக, பொருளாதார ரீதியிலும் பாதிப்புக்களை ஏற்படுத்துக்கின்றனர். நாகரீகம் என்ற போதைக்குள் விழுந்துள்ள புதிய தலைமுறையினர் அதன் விளைவுகளையும் எதிர்நோக்கி வருகின்றனர். அண்மைக்காலமாக இத்தகைய சம்பவங்கள் பரவலாக இடம்பெறுவதைக் காணமுடிகிறது.
நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள நிலையில், அதில் பங்காளர்களாகவும் பரிதாபத்துக்குரியவர்களாகவும் சில சிறுவர்களும், வளர்ந்தவர்களும் காணப்படுகின்றனர். பாடசாலை மாணவர் ஒருவர் சக மாணவர்களினால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிர் இழக்கும் சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றிருக்கின்றன. பகிடிவதை என்றபோர்வையில் சிரேஷ்ட மாணவர்களில் கனிஷ்ட மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் நிலை பல்கலைக்கழகங்களில் இடம்பெறுகிறது. இச்சம்பவங்கள் பல்கலைகக்கழங்கள் மற்றும் பாடசாலைகளில் காணப்படும் வழிகாட்டலிலுள்ள பலவவீனத்தைப் புடம்போடுவதோடு விழுமியக் கல்வியின் அவசியத்தையும் வலியுறுத்தியிருக்கிறது எனக் கருத வேண்டியுள்ளது.
அத்துடன், பாலியல் வன்கொடுமைகள், வீட்டு வன்முறைகள் என பல கோணங்களில் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் இச்சம்பவங்களினால் பாதிக்கப்படுகின்றவர்கள் மற்றும் இச்சம்பவங்களுடன் தொடர்புபடுகின்றவர்கள் உளவியல் பாதிப்புக்குள்ளாகும் நிலையும் அவதானிக்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வருகின்ற விழுமியங்களின் பலவீனமும், விழுமியமற்ற நடத்தைகளும், செயற்பாடுகளும்தான் இச்சம்பவங்களுக்கு பின்னணி வகிக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. இவை ஒரு புறமிருக்க, அறியாமல் புரியப்படுகின்ற அல்லது சூழலின் சாதக நிலைமையினாலும், நவீன ஊடகங்களின் தாக்கத்தினாலும் அவற்றுக்கு அடிமையாவதனாலும் ஏற்படுகின்ற விளைவுகள் பெறுமதிமிக்க உயிர்களையும் காவுகொள்கின்றன.
சிறுவர்கள் வழிதவறுவதற்கும் பரிதாபகரமான சம்பவங்களுக்கு உள்ளாகுவதற்குமான சூழலை ஏற்படுத்திவிட்டு அவை ஏற்பட்ட பின்னர் அவை குறித்து கவலை கொள்வதில் எவ்வித அர்த்தமுமில்லை என்பதை கவலையோடு சுட்டிக்காட்டுவது கடப்பாடாகவுள்ளது. ஏனெனில், அண்மைக்காலமாக இத்தகைய பரிதாப சம்பவங்களினால் பல சிறுவர்கள் மர
ணித்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.
அதேபோன்று, கட்டிளமைப் பருவத்தினரும் வழிகாட்டல்களை மீறிய அல்லது அவர்களுக்கு வழங்கப்படும் வழிகாட்டல்களின் பலவீனம் காரணமாக பல்வேறு பாதக நடவடிக்கைகளில் ஈடுபட்டு உடல், உள பாதிப்புக்குள்ளாகுவதுடன், உயிர் இழப்புக்களையும் சந்தித்து வருகின்றனர். இளம் தலைமுறையினர் தற்கொலை செய்து கொள்கின்ற சம்பவங்களும் அதிகரித்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
இந்நிலைமைகள், புதிய தலைமுறையினர் சவால்களுக்கு முகம்கொடுத்து வாழ்வதற்கு வழிகாட்டப்படவில்லை என்பதை புடம்போடுவதாகவே கருத வேண்டியுள்ளது. இத்தகைய சம்பவங்கள் அவர்களை மாத்திரமின்றி ஏனையவர்களையும் பாதிப்புக்குள்ளாக்குவதுடன், துயரத்திற்குள்ளும் தள்ளிவிடுகின்றன.
இதேபோன்று, தொடச்சியாக இடம்பெறுகின்ற சில துன்பியல் சம்பவங்கள் மனிதாபிமானம் கொண்டவர்களின் உள்ளங்களை வேதனையில் நனைத்தது. அதுதான் சுற்றுலாச் செல்லும் மாணவர்களும், வளர்ந்தவர்களும், கடல், ஆறு, குளம், நீர் வீழ்ச்சி என்பவற்றில் குளிக்கச் சென்று உயிரிழக்கும் பரிதாபகரமான சம்பவங்களாகும். இவ்வாறான பரிதாபகரமான சம்பவங்களினால் அண்மைக்காலமாக உயிர் இழப்புக்கள் அதிகம் ஏற்பட்டு வருவதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
உரிய வழிகாட்டல் ஆலோசனைகள் வழங்கப்படுகின்ற போதிலும் அவற்றை கருத்திற்கொள்ளாது செயற்படுவதனால் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுகிறதா அல்லது வழங்கப்படுகின்ற வழிகாட்டல் ஆலோசனைகள் பலவீனமடைந்துள்ளதா என்ற கேள்விகளும் பல்வேறு தரப்புக்களிலிமிருந்து எழுப்பப்படுவதையும் காண முடிகிறது. இது தவிர, மது, புகைத்தல் மற்றும் போதைவஸ்துப் பாவனைக்கு அடிமைப்படுவது, வன்முறைகள், துஷ்பிரயோகச் செயற்பாடுகளில் ஈடுபவது அவற்றிற்கு உள்ளாகுவது போன்றவற்றினாலும் புதிய தலைமுறையினர் எதிர்கால வளமுள்ள வாழ்நாட்களைக் காவுகொள்ளச் செய்கின்றனர். இவ்வாறு பதிவாகும் துன்பியல் சம்பவங்கள் வீட்டிலும், பாடசாலையிலும், மத வழிபாட்டுத்தளங்களிலும் வழங்கப்படுகின்ற வழிகாட்டல்களைக் கேள்விக்குறியாக்கியிருக்கின்றன. விழுமியங்களை பலவீனமடையச் செய்திருக்கின்றன.
சமுதாயத்தினால் அங்கீகரிக்க முடியாத நிகழ்வுகள் அவற்றில் ஈடுபடுகின்றவர்கள் அல்லது அவற்றினால் பாதிப்புக்குள்ளாகின்றவர்களின் நடத்தைகள், மனவெழுச்சி குறித்தான உளநலப் பரீட்சித்தல் அவசியமாகவுள்ளது. ஒருவரின் உடல் தகைமை எவ்வாறு உள்ளது என்பதற்காக மருத்துவப் பரிசோதனை இடம்பெறுகின்றபோதிலும், உளநலத்துக்கான பரீட்சித்தல் பொதுவாக இந்நாட்டில் இடம்பெறுவதில்லை என்ற நிலையில் உளநலத்துக்கான ஆலோசனைகளும், வழிகாட்டலும் அவசியமாகவுள்ளதுடன் விழுமியக் கல்வியின் அவசியமும் உணரப்படுவது முக்கியமாகவுள்ளது. ஏனெனில், மேைலத்தேயவர்களின் விழுமியமற்ற நடத்தைகளை நாகரீகமென்றண்ணியிருக்கும் புதிய தலைமுறையினர் அவற்றைப் பின்பற்ற முயல்வதானது பல ஆபத்துக்களை எதிர்நோக்கச் செய்கிறது
புதிய தலைமுறையினரின் நாகரீக நடத்தைகள் அநாகரீகத்தை நோக்கி நகர்ந்து செல்வதனால் பல்வேறு விளைவுகளுக்கு அவர்கள் முகம்கொடுத்துக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. குறிப்பாக ஆண், – பெண் நட்பு என்பது பாலியல் உறவை அடைந்துகொள்வது என்ற அர்தத்திற்குள்ளாகி அதற்கான தவறான வழிகளைத் தேடிக்கொண்டு அலையும் இளைய சமூகத்தின் எண்ணிக்கையை அறைகள் வாடகைக்கு என்ற விளம்பரத்துடன் அதிகரிக்கப்பட்டுள்ள வியாபாரத்தை கணிப்பிட்டுக் கண்டு கொள்ள முடிவதுடன், ஒவ்வொரு வருடத்திலும் வெப்ரவரி மாதம் 14ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற காதலர் தினத்தில் வாடகைக்காகப் பதிவு செய்யப்படுகின்ற அறைகளின் எண்ணிக்கையைக் கொண்டும் மதிப்பிட்டுக்கொள்ள முடிகிறது.
இவ்வாறான தகாத உறவுகளினால் ஏற்படுகின்ற நோய்களினால் பாதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கையில் கணிசமான எண்ணிக்கையினர் இளவயதினராக உள்ளதாகவும் கடந்த கால சுகாதாரத் தகவல்கள் சுட்டிக்காட்டியிருந்தன. இலங்கையில் 10 வயதிற்கும் 19 வயதுக்குமிடைப்பட்டவர்கள் பாலியல் நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல்களும் கடந்த காலங்களில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்ததோடு எதிர்கால சந்ததியினரின் இந்த ஆபத்தான நிலை குறித்து சகலரும் சிந்திப்பதையும் அவசியமாக்கியிருக்கிறது.
பாலியல் சம்பந்தமான நோய்களுக்காக சிகிச்சை பெற வருவோரில் பாடசாலை மாணவ, மாணவிகளும் இருப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இவை தொடர்பில் பெற்றோர்களும், ஆசிரியர் சமூகத்தினரும் கூடுதலாக கவனம் செலுத்த
வேண்டுமென வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுமுள்ளதுடன், எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாலியல் நோய்கள் பரவும் ஆபத்து இருப்பதாக எச்சரித்திருந்ததையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
பாலியல் நோய்த்தொற்றானது அதிகளவில் தகாத பாலியல் நடத்தைகளின் காரணமாகவே ஏற்படுகிறது. விழுமியங்கள் பலவீனப்படுத்தப்பட்டு இடம்பெறுகின்ற விபசாரமும், ஒருபால் உறவும் உலகில் மலிந்து விட்டது. மதங்களையும், கலாசாரத்தையும் மதிக்கின்ற நமது நாட்டிலும் விபசாரம் அதிகரித்துவிட்டது. மசாஜ் சிகிச்சை நிலையங்கள் என்ற போர்வையில் நடத்தப்படுகின்ற பல விபசார நிலையங்கள் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் அவ்வப்போது கைது செய்யப்படும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.
சமூக வலைத் தளங்கள் என்றும் கையடக்கத் தொலைபேசி என்றும் தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்படுத்தியுள்ள வசதிகளின் காரணமாக தகாத உறவுகள் ஏற்பட்டு அதனால் கட்டிக்காக்கப்பட வேண்டிய ஒழுக்க விழுமியங்கள் சிதைக்கப்பட்டு வருகின்றன. தகாத பாலியல் உறவுகளினால் பாலியல் நோய்கள் மாத்திரமல்ல உயிர்ப் பலிகளும் ஏற்படுகின்றமை புதிய தலைமுறையினரின் வாழ்க்கைப் பாதையையும், எதிர்காலத்தையும் கேள்விக்குட்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
இலங்கையில் 96 வீதமானோர் பாலியல் காட்சிகளைப் பார்ப்பதற்கும், பிறரின் குற்றங்களைப் பகிர்ந்து கொள்வதற்குமே இணையங்களைப் பயன்படுத்துவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதிலிருந்து நாகரீகத்தின் வெளிப்பாடுகள் அநாகரீகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதையும் தகாத பாலியல் உறவுகள், அவசியமற்ற கருக்கலைப்புக்களையும், சிசுக்கொலைகளையும் இலங்கையில் அதிகரிக்கச் செய்துள்ளமையையும் காண முடிகிறது.
கடந்த கால தரவுகளின் பிரகாரம் வருடமொன்றுக்கு ஏறக்குறைய 360,000 பெண்கள் கருவுறுகின்றபோதிலும், இதில் 15,000 கருக்கள் சட்டவிரோதமாகக் கருக்கலைப்புச் செய்யப்படுவதாகவும் இச்சட்டவிரோத கருக்கலைப்பினால் கருவுறுகின்ற பெண்களில் 10 உயிரிழப்பதாகவும் கருவுறுகின்றவர்களில் 24,000 பேர் இளவதியினர் எனவும், இளவயதினரின் கருவுறுதலுக்கு போதிய கல்வி அறிவின்மை, வறுமை, தகாத உறவுகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் என்பவை காரணமாக இருப்பதாகவும் நாளொன்றுக்கு சராசரி 650 சட்ட விரோதக் கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றன.
திருமணமாகாத பல யுவதிகள் தகாத உறவின் மூலம் கருவுற்று கருக்கலைப்புச் செய்வதையும், கருவினைக் கலைக்க முடியாதவர்கள் பிள்ளைகளைப் பெற்று அச்சிசுக்களை வீதியோரங்களிலும் காடு, பற்றைகளிலும் எறிந்து விட்டுச் செல்வதையும் அதற்காக அத்தகையவர்கள் கைது செய்யப்படுவதும் இலங்கையில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்களின் பட்டியலில் ஒன்றாகக் காணப்படுகிறது. நாகரீகம் என்ற போர்வையில் விழுமியங்கள் மாசுபடுத்தப்படுகின்றமையே இந்நிலைமைகளுக்குக் காரணமாகிறது என்பதையும் சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.
அநாகரீகப் போதைக்குள் விழுந்து தத்தளிக்கும் இளம் சமுதாயத்தினருக்கு ஒழுக்க விழுமியங்க ேளாடு வாழ்வதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்படுவது அவசியமாகும். சமூக, பொருளாதார, குடும்ப சீரழிவை ஏற்படுத்தும் ஒழுக்கவிழுமியமற்ற நடத்தைப் பிறழ்வுகளிலிருந்து எதிர்கால சமூகத்தைப் பாதுகாக்கவும் ஒழுக்கவிழுமியமிக்க எதிர்கால சமூகத்தை உருவாக்கவும் விழுமியமிக்க கல்வித்திட்டமும், விரசமற்ற பாலியல் கல்வியும் முறையாக பாடசாலைகளில் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை குறித்து சமகாலத்தில் பேசப்பட்டு வருகின்றன.
இலங்கையில் மாணவப் பருவத்திலுள்ளவர்களும் பாலியல் நோய்த் தொற்றுகைக்கு உள்ளாகி வருகின்றனர். இது தொடர்பில் மாணவர்கள் அறிவூட்டப்படுவது அவசியமாகவுள்ளது. இதற்கு பாடசாலைகளில் பாலியல் கல்வி கட்டாயமாக்கப்படுவது அவசியம் என்ற கருத்துக்கள் பரிமாறப்பட்டு வந்தாலும், மாணவர்களை அறிவூட்டுவதற்காக பாடசாலைகளில் பாலியல் கல்வி நடைமுறைப்படுத்தப்படுகின்றபோது இக்கல்வி நடவடிக்கைகளும் அதன் பாடப்பரப்புக்களும் பாலியல் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக அமைந்து விடாத வகையில் இப்பாடத்துக்கான பாடவிதான அலகுகள் தயார்படுத்தப்படுவது அவசியமாகும்.
சமூக ஒழுங்குப் பிறழ்வுகள், பயில் நிலை வழியாகச் சீர்படுத்தப்பட வேண்டுமாயின் பாடசாலைக் கலைத்திட்டத்தில் அனுபவங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். பாடசாலைக் கலைத்திட்ட அமைப்பியலையும் அதன் சமகாலச் செயல் நிலைகளையும் ஆராய்ந்து பார்க்கும்பொழுது மாணவர்களிடையேயும் ஒரு சில ஆசிரியர்களிடையேயும் ஆரோக்கிய மனவெழுச்சிக்குரிய பயிற்சிகள் போதாமல் இருப்பது தெளிவாகிறது. இதனைப் புடம்போடும் வகையில், பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
ஆரோக்கியமான மனவெழுச்சிக்குரிய பயிற்சிகளும் விழுமியக் கல்வியும் ஒன்றிணைந்தவையாகக் காணப்படுவது அவசியமாகும். தற்கால பாடசாலை மாணவ சமூகத்தினதும் சில ஆசிரியர்களினதும் மனவெழுச்சிகள், மனப்பாங்குகள், நடத்தைக்கோலங்களை உற்றுநோக்குகின்றபோது அவை ஆரோக்கியமானதாக அமையவில்லை. அவ்வாறுதான் சில பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் நடத்தைக் கோலங்களும் காணப்படுகின்றன
ஒழுக்க விழுமியமுள்ள எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் கேந்திரத் தளமாக பாடசாலைகள் மிளிர்கின்றன. அவ்வாறுதான் கல்விப் புலமைகொண்ட புதிய தலைமுறையினரை பல்கலைக்கழகங்கள் உருவாக்குகின்றன. பாடசாலைகளிலிருந்து ஒழுக்கவிழுமியமுள்ள எதிர்கால சமூகம் உருவாக்கப்படுவது இன்றியமையாதது. நடத்தைப் பிறழ்வுகளால், விழுமியமற்ற செயற்பாடுகளால் ஏற்படுகின்ற நோய்கள் முதல் ஏனைய சமூகம் அங்கீகரிக்காத சமூக விரோத நடவடிக்கைகள் சமூகத்தின் மத்தியிலிருந்து ஒழிக்கப்பட வேண்டுமாயின், அதன் ஆபத்துக்கள் அதிகரிக்கப்படாமல் தடுக்கப்பட வேண்டுமாயின் அவை தொடர்பான வழிகாட்டல் ஆலோசனை, விழிப்புணர்வு நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்படுவதுடன் ஒழுக்க விழுமியங்களைப் பேணி நடக்கக் கூடிய ஆரோக்கியமுள்ள எதிர்காலச் சமூகம் கட்டியெழுப்பப்படுவதும் காலத்தின் கட்டாயமாகும்.
விழுமியங்களும், வழிகாட்டல்களும் பலவீனமடைகின்றபோது பிள்ளைகள் வழிதவறுவதையும், திசைமாறிப் பயணிப்பதையும், பரிதாப உயிர் இழப்புக்களைச் சந்திப்பதையும் தவிர்க்க முடியாது. ஆதலால், ஒரு பிள்ளையின் சமூக மயமாக்கல் முகவர்களும் இவற்றோடு ஊடகங்களும் புதிய தலைமுறையினருக்கு சிறந்த வழிகாட்டல் ஆலோசனகளை வழங்குவதில் அக்கறை செலுத்த வேண்டுமென்பதுடன் பாடசாலை, பல்கலைக்கழங்களில் விழுமியக் கல்வியும், வழிகாட்டல் ஆலோசனை நடவடிக்கைகளும் சக்திமிக்கதாக்கப்பட வேண்டும்.
புதிய தலைமையினரில் ஒரு சாரார் தமது எதிர்கால நல்வாழ்வுக்கான வழிகளைத் தேடி அப்பாதை வழிேய தங்களது எதிர்காலப் பயணத்தை ஆரோக்கியமாக நகர்த்திச் செல்லும் தருணத்தில் இத்தலைமுறையின் மற்றுமொரு சாரார் கொலை, கொள்ளை, வன்முறை, சிறுவர், பெண்கள் மீதான துஷ்பிரயோகம், தற்கொலை, போதைப் பொருள் பாவனை, விற்பனை என்ற சமூக விரோதச் செயற்பாடுகளில் தங்களது ஒளிமயமான எதிர்காலத்தின் திசையை மாற்றிப் பயணிக்கின்றனர். அதனால் அவர்களாகவே அவர்களின் எதிர்காலத்தைச் சூனியமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தகையவர்கள் சமூக விழுமியங்களையும், ஒழுக்க நெறிகளையும் பின்பற்றி கட்டுக்கோப்புக்குள் வாழ வழிகாட்டப்படுவது காலத்தின் நிதர்சனமாகும். பாதை மாறிப் பயணிக்கும் இப்புதிய தலைமுறையினர்களான இத்தகையவர்களின் நெறி பிறழ்வான பாதையை மாற்றியமைப்பதில் சமூக முகவர்களதும், ஊடகங்களதும் வகிபங்கு அளப்பெரியதாகும். சமூக முகவர்களின் அர்ப்பணிப்பானது பல்கலைக்கழங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை முதல் ஏனைய விழுமியம் தவறிய நடவடிக்கைகளைத் தடுக்க பேருதவியாக அமையும். அத்துடன் நெறி பிறழும் புதிய தலைமுறையினரின் எதிர்காலத்தை ஒளிமய மாக்கும் என்பதில் சந்தேகமில்லை.