;
Athirady Tamil News

தமிழர்தரப்பு பொது வேட்பாளர் தகுதி ஒப்பீட்டளவில் சுமந்திரனிடமே

0

எதிராளியாக சென்றாலும் வழக்காளியாகச் செல்லக் கூடாது என்ற வழக்காறு தற்காலத்தில் மிகவும் அற்புதமாக இன்றைய தமிழரசுக் கட்சியின் சமகால நிலவரத்துடன் பொருந்திவந்திருக்கின்றது.

தனது கட்சிக்குள்ளேயிருந்து கட்சிச் செயற்பாடுகளை வழக்காக்கி, கட்சியிலிருந்தே வழக்காளிகளை உருவாக்கி, எதிராளிகளாக கட்சியின் பதவிக்குரியவர்கள் தோன்றினர், வழக்கு அணைந்துவிடும் என ஒதுக்கியதொரு சந்தர்ப்பச் சூழல் அவ் எதிராளிகளுக்குள்ளே இருந்து ஒரு வழக்காளி தகுதியுடன் எதிராளி பக்கத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆட்சேபனையைத் தெரிவித்து மீளவும் காயும் புண்ணை தோண்டியிருக்கின்றார் என்பதே ஏனைய ஆறு கட்சிப் பிரமுகர்களதும் நிலைப்பாடு.

குறைந்தபட்சம் ஏழுவரில் அறுவரது தீர்மானம் கட்சியின் மத்திய குழுவில் எட்டப்படதாகவும் அமைப்பு சார்ந்து மேற்கொள்ளப்பட்டதாகவும் அவ் அறுவரும் திகதி தீர்மானங்கள் வாரியாக அறிவிக்கின்றார்கள்.

மறுபுறம் தனிஒருவராக இத் தீர்மானங்களுக்கு கட்டுப்படாது தனது சொந்த நிலைப்பாட்டில் முடிவு செய்து கட்சிக்காக வாதாடி கட்சியின் செயற்பாடுகள் சரியானவை என நிறுவுவதற்கு முனைகின்றார் சுமந்திரன்.

சுமந்திரனுக்கான வழக்கு அல்ல
இது தமிழரசுக் கட்சியில் சுமந்திரனுக்கான வழக்கே அன்றி தனிப்பட்ட மதியாபரணம் சுமந்திரனுக்கான வழக்கு அல்ல.

இறுதியாக கட்சி என்ற அமைப்பின் மத்திய குழு என்ற தீர்மானம் மிக்க அலகு எடுத்த தீர்மானத்தினை பின்பற்ற மறுக்கும் சுமந்திரன் கட்சிக்காக வாதாடி நீதியை நிலைநிறுத்த முனைகின்றார் என்ற விடயப்பொருள் எவ்வகையில் பொருத்தப்பாடானதாக இருக்கும்?

சுமந்திரனின் உட்கட்சி ஜனநாயகம் 2024 இல் தமிழரசுக் கட்சியின் தலைவர் தேர்தலில் கட்சியின் உட்கட்சி ஜனநாயகம் அறிய போட்டியிட்ட சுமந்திரன் எழுவரில் அறுவரது நிலைப்பாட்டிற்கும், மத்திய குழுவின் நிலைப்பாட்டிற்கும் மாறாக செயற்படுவது எவ்வகைத் தார்மீகமாக ஒரு ஜனநாயகமாக காணப்பட முடியும்?

கட்சியின் நெறிமுறைகளை மீறிக்கொண்டு செயற்படும் சுமந்திரன் கட்சியின் செயற்பாடு சரியென வாதிடும் யோக்கியம் உடையவர் என எவ்வகையில் யதார்த்தமாக நிறுவி விட முடியும்?

இதே சுமந்திரன் ஒப்பீட்டளவில் இளமைத் தோற்றத்துடன் பெரும்பான்மையான அடர்த்தியான கருமைத் தலைமுடியுடன் 2014 தமிழரசுக் கட்சிக்காக மாவை சேனாதிராசா தலைவராக தெரிவுசெய்யப்பட்டதற்கு 25 செப்டெம்பர் 2014 இல் கொழும்பில் கொழும்புக்கிளைத் தலைவர் சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இரா.சம்பந்தனது பெறுமதி பற்றியும் சர்வதேச மட்டத்தில் சம்பந்தருக்கு இருக்கும் செல்வாக்கு பற்றியும் கூறி மேலும் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் பற்றியும் புகழ்ந்துபேசினார்

மேலும், தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் ஒரு அரசாங்கத்திற்கு உள்ள இராஜதந்திர நகர்வுகள் மற்றும் செயற்பாடுகளுக்கு ஈடான பல விடயங்களை கொண்டிருப்பதாகவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு சர்வதேசம் அங்கீரித்த தமிழ் மக்களது இயக்கம் என்ற வசனத்தினையும் கொள்கை உறுதிப்பாட்டுடன் உள்ளதொரு கட்சி என மிகவும் அழுத்தியிருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு
மேலதிகமாக, பதவியை எவன் ஒருவன் விட்டுக்கொடுக்கின்றானோ அவன் பாரிய சுமைகளை கட்சிக்காக சுமக்க வேண்டிவரும், பதவியை எவன் ஒருவன் இறுகப்பிடித்துக்கொள்கின்றானோ அவனை உலகம் தூற்றும், அவனுக்கு மதிப்பிருக்காது,” எனத்தெரிவித்து இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் இயக்கத்தின் எதிர்காலம், இலக்கு என்பவற்றை இத் தலைவர்கள் தங்களது தலைகளில் பொறுப்புக்களாக சுமந்திருக்கின்றார்கள் என்பதை நாங்கள் உணர்ந்து பொறுப்பான விதத்திலே அந்த தலைமைகளுக்கு பின்னாலே செல்லவேண்டிய அந்தக் கடமையை உணர்வதற்கு ஒரு தருணம் அமைத்து தந்த தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளைக்கு நன்றிகூறி அமர்ந்திருந்தார்.

பத்தாண்டுகளில் அவரது உடல்வாகு, தலைமுடி அடர்த்தி, தலைமுடிக் கருமை என்பன என்ன விகிதாசாரத்தில் இன்று அவருக்கு இழக்கப்பட்டிருக்கின்றதோ அதையும் தாண்டிய விகிதாசாரத்தில் அன்று அவர் புகழ்ந்த, வர்ணித்த, திறமைகள் மற்றும் சிறப்புக்கள் எனவரையறுத்த அத்தனையையும் இக் கட்சியில் இழக்கச்செய்திருக்கின்றார்.

அதற்கான இறுதி ஆதாரமே தற்போதைய வழக்கும் போக்கும் என்பது மேலேற்றமானது.

சுமந்திரன் மீது ஏன் கட்சியால் நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை? உட்கட்சியில் எட்டப்பட முடிவுகளை மீறிச் செயற்படும் சுமந்திரன் மீது ஏன் கட்சியால் உள்ளக ஒமுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை? இதனையே இதற்கு முன்னர் பலதடவைகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்த அத்தனை கட்சிகளினது தலைவர்களும் வினவி வெளியேறியிருந்தனர் அல்லது வெளியேற்றப்பட்டிருந்தனர்.

இன்றைய சூழ்நிலையில் வயதில் மூத்தவரும் பயன்செயன்முறையில் , தழிழரசு கட்சிக்குள் இருக்கும் முரண்நிலையை சுமூகப்படுத்தவேண்டிய பொறுப்புடனும் இருப்பவர்களில் கட்சியின் சிரேஸ்ட தலைவர் சீ.வி.கே. சிவஞானம் முக்கியமானவர்.

இவ்விடயத்தில் அவருக்கு பொறுப்பு உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் தானோ ஏதோ சித்திரைப் புதுவருட வாழ்த்துச் செய்தியிலும் கட்சியின் உள்வீட்டுநெருக்கடிகளை உள்வாங்கியிருக்கின்றார்.

புதுவருட வாழ்த்து செய்தி

புதுவருட வாழ்த்து செய்தியில் கூறவேண்டிய விடயம் என்ன செய்தி என்ன என்பன அவரது விருப்பையோ அல்லது அவர் விரும்பும் விருப்பம் என்ன என்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாகவோ அல்லது அடித்து சொன்னாலும் தான் நடுநிலை ஆனவர் என நிறுவமுனைகின்றார்.

மாறாக அதற்கான முனைப்புக்களோ, முயற்சிகளோ, செயன்முறைகளோ காத்திரமாக அவரால் மேற்கொள்ளப்பட்டதாக அறிய முடியவில்லை. அவ்வாறு ஆற்றியிருப்பின் அவரது சித்திரைப் புதுவருட வாழ்த்துச் செய்தியை விடவும் கனமானதொரு செய்தியாக வெளியாகியிருக்க வேண்டும்.

இவ்வகையானதொரு ஆளுமை முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக அனைத்து விடயங்களையும் கட்சியின் ஒரு பிரிவின் ஊடாக வழிநடாத்திய காலஞ்சென்ற மாகாண சபையினதும் இன்றுவரை பதவியில் உள்ளவருமான அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் என ஏன் பதவி வகிக்கின்றார்?

சீ.வீ.கே சிவஞானத்தின் அனைத்து செயற்பாடுகளும் சுமந்திரனது ஆலோசனைகள் இன்றி நடப்பதில்லை. அதற்கு ஒரு சின்ன உதாரணமாக சீ.வி.கே சிவஞானத்தினால் முன்வைக்கப்படும் அனைத்து சட்டரீதியான விடயங்களுக்கும் சுமந்திரனே சட்டத்தரணியாக தோன்றுவார்.

அதற்கு அவர் தனது வாடிக்கையாளர் எனவும் அவர் எனது தொழில்முறை சட்டத்தரணி எனவும் நியாயம் கற்பிக்க முனையலாம். ஆனால், சீ.வீ.கே சிவஞானம் தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக எவற்றையும் முன்வைக்கவில்லை, அவர் ஒரு மக்கள் பிரதிநிதியாக தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவராக இன்னும் பதவி ஒன்றில் கடமையாற்றிக்கொண்டு இருப்பவர்.

மாகாண சபை கலைந்தபின்னர் மாத்திரம் அண்ணளவாக 68 மாதங்களாக இருபது மில்லியனுக்கு அதிக எரிபொருள் கொடுப்பனவையும், (முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் 500 லீட்டர் டீசலாக குறைக்கப்பட்டதற்கு அமைவானது மாத்திரம், அதற்கு முன்னைய நாட்களில் 1000 லீட்டர் டீசல்) பத்து மில்லியனுக்கு அதிக ஏனைய கொடுப்பனவுகளையும் வடக்கு மாகாண சபையில் இருந்து மக்களது வரிப்பணத்தில் ஊதியமாக பெற்றுக்கொண்டு இருக்கும் ஒருவர் என்பதை அவரும் ஏனையவர்களும் மறந்துவிடக் கூடாது.

ஆதலால் இவற்றிலிருந்து அவர் தன்னை விடுவித்துக்கொள்ளவோ தனிமனித செயற்பாடுகள் எனவோ வெளிப்படுத்த முடியாது.

மேடைக்கு மேடை 13 வது திருத்த சட்டத்தில் இருப்பது தமிழருக்கு போதாது, மாகாண சபை அதிகாரம் அற்றது என கூறிவரும் சீ.வீ.கே சிவஞானம் மாகாண சபை கலைந்ததன் பின்னராக அவையில் கடமைகள் அற்ற நிலையிலும், அரசியலமைப்பின் ஏற்பாட்டில் முப்பது மில்லியனுக்கு அதிக பணத்தினை ஈட்டியுள்ளார்.

இது திருட்டாகவோ மோசடியாக பெறப்பட்டதோ அல்ல. இவர்கள் சொல்லிக்கொள்ளும் ஒன்றும் இல்லாத மாகாண சபை அதிகாரத்தினால் வகிக்கும் பதவிக்காக சீ.வீ.கே. சிவஞானம் என்ற பணிக்குரியவரின் பதவிக்காக அவரது கணக்கிற்கு வரவிடப்படும் வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு குடிமகனும் பல சட்ட ரீதியான கொடுப்பனவுகளாக செலுத்திய மக்கள் பணமே ஆகின்றது.

நல்லெண்ண அடிப்படை
மாகாண சபை அற்ற நிலையில் மாகாண சபைக்கு அவைத் தலைவர் தேவையா? வேறுயாரையாவது சுழற்சி முறையில் நியமிக்க முடியுமா? இவ்வரப் பிரசாதங்களை பொது நோக்கத்திற்கு பிரயோகிக்க முடியுமா?

தற்போதைய அவைத் தலைவர் இறந்தால் அல்லது பதவியை விட்டு விலகினால் அதற்குரிய மாற்று ஏற்பாடுகள் என்ன? என்பது பற்றி அரசியல் அமைப்பின் விதிகள் பற்றி ஏனையவர்களும் சாமானியர்களும் அறிந்திருக்க வாய்ப்புக்கள் குறைவாக இருப்பினும் சுமந்திரன் அறியாதிருக்க கிஞ்சித்தும் சந்தர்ப்பம் இல்லை.

கட்சி ஒரு நல்லெண்ண அடிப்படையில் மக்கள் பணவிரயம் தொடர்பில் கவனம் கொண்டு மிகவும் சிறப்பானதொரு ஜனரஞ்சக முடிவுக்கு வரமுடியும்.

ஆனால் இதனை செய்யாது இங்கே தொடர்வது ஆனது சட்டரீதியான சலுகைகள் கொடுப்பனவுகள் உட்பட்ட அனைத்தும் அனுபவிக்க தடங்கல் இன்றி அனுமதிப்பது ஒரு சாராரது சில தேவைகளுக்காக வழங்கப்படும் இலஞ்சத்தின் வகையாகவே பார்க்கவேண்டியுள்ளது.

ஒரு அரசியல் கட்சியில் இருந்துகொண்டு தனது அரசியல் கட்சிக்குள்ளேயே ஒருவரது நன்மைக்காக ஒரு அரச வளத்தினை அனுபவிக்க தடங்கல் செய்யாது இருந்து வழங்கும் ஒரு பொறுப்பற்ற ஒத்துழைப்பு என்பதை ஆழமாக ஆயந்து மறுத்துவிட முடியாததாகின்றது.

கடந்த சித்திரைப் புத்தாண்டு தினத்தில் மாலை 3.40 மணிக்கு ஏ9 நெடுஞ்சாலையில் மீசாலைச் சந்தியில் பாதசாரிகள் கடவையில் பாதசாரிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கி நின்ற ஒரு வானுக்கு மிகஅருகில் வடக்கு மாகாண ஆளுநரது வாகனத் தொடரணி வாகனங்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியிருந்தது.

ஆளுநர் குடும்பத்துடன் தனிப்பட்ட பயணமாக இயக்கச்சியில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்திற்கு சென்று யாழ்ப்பாணம் மீளும்பொழுது இவ் அனர்த்தம் இடம்பெற்றிருந்தது. இவ் விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனம் கடந்த மாதமே வடக்கு மாகாண சபையின் நிதியில் ஆறு மில்லியன் செலவில் திருத்தப்பட்டிருந்தது.

மீளவும் இவ் விபத்திற்கு பின்னராக பெரியதொரு தொகை செலவுசெய்யப்பட இருக்கின்றது. குறைந்த பட்சம் இவ் விடயத்திற்கு ஒரு எதிர்ப்பு கூட தெரிவிக்க முதுகெலும்பு அற்ற நிலையிலேயே தனது கதிரைக்கும் வருமானத்திற்கும் பங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக சீ.வீ.கே சிவஞானம் செயற்படுகின்றாரோ என எண்ணத்தோன்றுகின்றது.

நடைமுறையில் அரச பணிதொடர்பில் தொழில்முறை ரீதியான மிகுந்த பட்டறிவு நிறைந்த சீ.வி.கே சிவஞானம் இவ் விடயங்களில் மௌனம் காப்பது மிகவும் வருத்தத்திற்கு உரியதே.

இவ் வகையில் கை நனைத்த ஒரு சிரேஸ்ட உப தலைவரால் எவ்வகையில் கட்சிக்குள் இருக்கும் நிலையை நேர்மையாக அணுகி ஒரு தீர்மானத்திற்குள் கொண்டுவர முடியும்?

சுமந்திரன் எதிராளி
வழக்கின் இடைமனுத்தாரராக உள்நுழைந்த கொழும்புவாசி இனிவரும் நாட்களில் வழக்காளியாகவும் சுமந்திரன் எதிராளியானவும் இவ் வழக்கினை மிக நன்றாக அழைத்துச்செல்ல மிகவும் சிறந்த சந்தரப்பம் வாய்த்திருக்கின்றது.

இதற்கு சமாந்தரமாக சுமந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டு சட்டரீதியான நடவடிக்கை எடுத்து கட்சியில் இருந்து நீக்கி அவர் இவ்வழக்கின் வகைசொல்லவேண்டியவரே அல்ல என்பதை நிறுவுவதற்கு இன்றைய தமிழரசுக் கட்சிக்குள் இருக்கும் நிர்வாகிகளுக்கு திராணி இருக்கின்றதா?

மறுபுறம், ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஏனைய தமிழ் கட்சிகளுக்கு ஏதோ ஒரு நிலைப்பாடு இருக்கின்றது, ஆனால் தமிழரசுக் கட்சிக்குள் இரண்டு நிலைப்பாடும் இருக்கின்றது. தலைவர் போட்டியில் சந்தித்த இருவரும் இருவேறு துருவங்களில் இருந்து கருத்து வெளியிட்டு வருகின்றார்கள். ஒரு கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை அறிவிக்கும் தகுதி யாருக்கு இருக்கின்றது.

ஒரு மக்கள் பிரதிநிதியாக சுயேட்சை இன்றி ஒரு அரசியல் கட்சியின் விதிகள் நியமங்களுக்கு கட்டுப்பட்டு மக்கள் பிரதிநிதியாக வரப்பிரசாதங்களை அனுபவிக்கும் ஒருவரால் இது எனது கட்சியின் கருத்து அல்ல தனிப்பட்ட கருத்து என பொதுவெளியில் கூறுவது எவ்வகையில் ஏற்புடையது?

அவ்வாறு ஒரு நியாயம் கற்பிப்பது என்றால் குறித்த பிரமுகர் தான் சார்ந்த கட்சியின் திறத்தில் இருந்து விடுபட்டு மக்கள் பிரதிநிதி என்ற வரப்பிரசாத அங்கியை அகற்றிவிட்டு தனிப்பட்ட மனிதனாக மாறியபின் மாத்திரமே கருத்து தெரிவிக்க வேண்டும்.

இங்கே இவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கும் கட்சியின் நிலைப்பாட்டிற்கும் எந்த வகையான தொடர்பு உள்ளது. இத் தீர்மானம் எங்கே நிறைவேற்றப்பட்டது என்பதை இரு தரப்பும் தெளிவுடன் அறிக்கையிடவேண்டும். மாறாக தன்னிச்சையாக மக்களது எண்ணங்களை தூண்டுவதும், தவறாக வழிநடாத்த எத்தனிப்பதும் தர்க்கவியல் நியாயம் கற்பிப்பதும் இன்றைய உலக ஒழுங்கில் அரசியலுக்கு பொருத்தமற்ற செயற்பாடுகளை மேற்கொள்ளும் செயற்பாட்டாளர்களாகவே காண்பிக்கின்றது.

தமிழ்ப் பொது வேட்பாளர்

இக் கேள்வியை இரண்டு முறைகளில் அணுகுதல் பொருத்தமானதாக இருக்கும். முதலாவதாக தர்க்கரீதியில் தமிழர் தரப்பிற்கு ஜனாதிபதிப் பொது வேட்பாளர் அவசியமா? என்று பார்க்கையில் தமிழர் ஒருவர் இலங்கையில் ஜனாதிபதியாக வர முடியாது என்பது யதார்த்தமானது.

அடிப்படையில் கட்சிகளின் பகுப்புக்களே இன அடிப்படையில் பிரிந்திருக்கின்றது. முக்கியமாக சிறுபான்மைக் கட்சிகள் இனத்தின் அடையாளப்பெயருடனேயே கட்சிக்கே பெயர் வைத்திருக்கும் மனோநிலையிலேயே அரசியலில் இருக்கின்றார்கள்.

ஒரு பொது வேட்பாளர் வெல்வதற்கு பெரிய கட்சிகள் அல்ல சிறுபான்மைக் கட்சிகளே உடன்படப்போவதில்லை. இது தோற்றுப்போகும் விடயம் என்பதால் விஞ்ஞான ரீதியான அடைவுகளின்பால் பொது வேட்பாளர் தேவை இல்லை என்பது தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரன் தரப்பு வியாக்கியானம் ஆகின்றது. இது தேர்தலில் வெல்லுதல் என்பதன் அடிப்படையில் மாத்திரம் பெறுமானம் பெறுவதாகின்றது.

இரண்டாவது பார்வையில் தமிழர் தரப்பிற்கு ஒரு பொதுவேட்பாளர் தேவையா? என்று பார்க்கையில் அரசியல் ரீதியாக பல விடயங்களை இன்னமும் பெரும்பான்மை அரசிடம் இருந்து பெற்றுக்கொள்ளவேண்டிய சூழ்நிலையில் இனங்களுக்குள் முன்னுரிமை வரிசையில் பின்னிற்கு இருக்கும் ஒரு சமூகமாக காணப்படும் தமிழர் தரப்பிற்கு இத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைப் பெற்று அத் தோல்வியின் ஊடாக அரசுக்கும் சர்வதேசத்திற்கும் ஒரு பொதுவான விடயத்தினை செய்தியாக்கவேண்டிய தேவை தவிர்க்கமுடியாததாக காணப்படுகின்றது.

தமிழர் தரப்பு சிறுபான்மை வாக்குக்களை குறித்த தமிழ்ப் பொதுவேட்பாளர் அதிகளவில் பெற்றுத் தோல்வி அடைய வேண்டும்.

தோல்வி அடைந்தே தீருவார். மாறாக இத் தேர்தல் தோல்வியில் தமிழர் தரப்பின் ஒரு வெற்றிச் செய்தியை நிலைநாட்டவேண்டும் என்பதே தமிழரசுக் கட்சிக்குள் இருக்கும் சிறீதரன் தரப்பு வியாக்கியானம் ஆகப்பார்க்கப்படுகின்றது.

இன ரீதியாக இடைவெளி காணப்படும் ஒரு நாட்டில் சிறுபான்மைகள் ஜனநாயக முறையில் ஒரு செய்தியை சொல்வதற்கு இரண்டாவது வழி மிகச் சிறப்பானதாக இருக்கும். இவ் வழியானது நேரடியாக தேர்தலில் பெரும்பான்மைக் கட்சிகளில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தோற்றும் போது அவர்களுள் ஒரு அழுத்தத்தை பிரயோகிக்கும் என்பதை நிதர்சனமாகின்றது.

தமிழர் தரப்பு பொது உடன்பாடு என்ற ஒற்றுமைத் தோல்வியைக் காட்டிலும் தர்க்க ரீதியான தோற்கும் விடயத்திற்காக பொது வேட்பாளர் தேவையில்லை என்பதோ தேர்தல் புறக்கணிப்பு என்பதோ ஒரே வகையான விளைவை மாத்திரமே தரும் என்பது நிதர்சனமானது.

தமிழர் தரப்புக்கு பிரச்சினை என ஏதோ ஒன்று உள்ளது என்ற ஒற்றைச் செய்தியை மாத்திரமேனும் தோல்விப் பொதுவேட்பாளரது ஒற்றுமைத் தோல்வியின் ஊடாக விஞ்ஞான ரீதியான முடிவுகளுக்கு அழைத்துச் செல்லமுடியும் என்ற தர்க்கரீதியான பார்வையை தமிழர் தரப்பு தவிர்ப்பது புத்திசாலித்தனமற்றதாகின்றது.

தமிழர்தரப்பில் பொது வேட்பாளருக்கான தகுதி யாருக்கு உரியது?

தமிழர் தரப்பில் ஜனாதிபதிப் பொது வேட்பாளர்களாக இதுவரை போட்டியிட்டவர்கள் ஒரு விடயக் கேளிக்கையையே உண்டுபண்ணியிருக்கின்ற வரலாறே நிறைவாக காணப்படுகின்றது.

தகுதியற்ற வேட்பாளர்
இவ்வாறான அனுபவச் சூழலில் தமிழர் தரப்பு ஜனாதிபதி வேட்பாளர் நிச்சயமான தோல்வி வேட்பாளர் என்பது நிச்சயமாக தெரியும், இருப்பினும் அத் தோல்வியானது நாட்டின் இனப்பரம்பலினதும் அரசியலமைப்பினதும் மாற்றிவிடமுடியாத விடயங்களால் ஏற்பட்டவைகளே அன்றி தேர்தலில் தோற்றிய பிரமுகரது செல்வாக்கு இன்மை என்ற காரணத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது.

இங்கே ஒரு தகுதியற்ற வேட்பாளர் முன்னிலையாகி தோற்குமிடத்து அத் தோல்வி ஒரு தனிமனிதனது செல்வாக்கின் தோல்வியாக சிறுபான்மைகள் மட்டத்திலும், தமிழர் தரப்பின் தோல்வியாக பெரும்பான்மைகள் மட்டத்திலும் பார்க்கப்படுவதுடன் ஒற்றுமைத் தோல்வி என்ற கருப்பொருள் மறைபொருளாக்கப்பட்டுவிடும்.

மாறாக, ஒற்றுமைத் தோல்வி என்ற கருப்பொருளை சுமப்பதற்கு ஒரு பொருத்தமான தகுதியுடைய ஒரு ஜனாதிபதி வேட்பாளர் தமிழர் தரப்பிற்கு அவசியமாகின்றது.

அதற்கு பொருத்தப்பாடாக இச் செய்தியை பலவிடத்திலும் எடுத்தியம்பி செயற்படுத்தும் தமிழர் தரப்பில் பிரபல முன்னிலையில் சுமந்திரன் இருக்கின்றார் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

ஏனெனில் தமிழரசுக் கட்சிக்குள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும் சுமந்திரன் என்ற ஆளுமை சாதித்த விடயங்கள் மிக அதிகம். அவை நேர்த்தாக்கங்களையும் எதிர்த்தாக்கங்களையும் உருவாக்கியிருக்கலாம் ஆனால் சுமந்திரன் சாதித்த விடயங்களே அதிகம்.

இவ்வாறான பின்னணியில் தமிழர் தரப்பு ஒற்றுமைத் தோல்வியின் விடயத்தினை ஒருங்கிணைக்கும் தகுதி ஒப்பீட்டளவில் சுமந்திரனிடமே காணப்படுகின்றது.

அரசியலிலும் சமதளம் அற்ற சிறுபான்மைக் கட்சிகளுக்குள்ளிருந்து சுமந்திரனது அரசியலமைப்பு மீதான நம்பிக்கை, இன ரீதியான பாகுபாடு அற்ற செயற்பாடுகள், சுமந்திரன் மீதான பொரும்பான்மை தீர்மான சக்கதிகளின் அரசியல் ரீதியான பார்வை ஆகியன இத் தேர்தலில் தமிழர்தரப்பு பொது வேட்பாளர் என்ற கருப்பொருளை மாற்றமடையவோ கருத்துத் திசை திருப்பத்திற்கோ பாவிப்பது என்பது பெரும்பான்மைச் சமூகத்திற்கு இருக்கும் ஒரு சவாலா மாறிவிடும்.

மாறாக இவ் விடத்தினை சுமந்திரன் தவிர வேறுயாராவது இச் சந்தர்ப்பத்தில் தோன்றித் தோற்கும்போது அது வேறு விதமான பார்வைகளையும் அர்த்தங்களையும் வெளிப்படுத்தும் என்பதே நிதர்சனமானது.

சிறுபான்மைகளின் அரசியல் நிலைப்பாட்டினை ஒற்றுமைத் தோல்வியின் ஊடாக நாட்டிற்கும், மக்களிற்கும் , சர்வதேசத்திற்கும் எடுத்தியம்பும் ஒரு வளமாக 2024 இல் சுமந்திரன் மாத்திரமே தமிழர் தரப்பில் உள்ளார் என்பதை தாண்டிச் செல்ல முடியாது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.