;
Athirady Tamil News

ஜனநாயகத்தில் தேர்தல்களுக்கு ஏற்புடைய மாற்று எதுவுமில்லை

0

கலாநிதி ஜெகான் பெரேரா

 

ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்துக்கும் அரசியலமைப்பு ரீதியான ஆணையின் பிரகாரம உள்ள ஐந்து வருட பதவிக்காலத்துக்கும் அப்பால் பதவியில் இருப்பதற்கான சகல தெரிவுகளையும் அரசாங்கத் தலைவர்கள் பரிசீலிக்கின்றார்கள் போன்று தெரிகிறது. ஜனாதிபதி தேர்தலையும் பாராளுமன்ற தேர்தலையும் இரு வருடங்களுக்கு ஒத்திவைப்பது குறித்த யோசனை ஒன்றை ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கடந்த வாரம் அறிவித்தார். தேர்தல்கள் ஒத்திவைக்கப்படக்கூடிய சாத்தியங்கள் குறித்து கணிசமான ஊகங்கள் தெரிவிக்கப்பட்டே வந்திருக்கிறது. உண்மையில் இது ஒரு வருடத்துக்கும் அதிகமான காலமாக அரசியல் கலந்துரையாடல்களின் ஒரு அங்கமாக இருந்துவருகிறது.

பொருளாதார மீட்சியின் பயன்கள் மறுதலையாவதை தடுத்து அவற்றை வலுப்படுத்தவேண்டியது அவசியம் என்பதே பொருளாதார மீட்சி உறுதிப்படுத்தப்படும் வரை அரசியலை

முடக்கவேண்டும் என்ற வாதத்துக்கு கற்பிக்கப்படும் நியாயமாகும். பொருளாதார மீட்சியை உறுதிப்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கமே உகந்தது என்பதும் அதன் இரு வருடகால செயற்பாடுகள் அதற்கு சான்று பகர்கின்றன என்பதுமே இந்த வாதத்தின் அடிப்படையாக இருக்கும் எண்ணமாகும்.

இலங்கையின் பொருளாதார நிலைவரம் முன்னேற்றம் கண்டுவருகிறது என்றும் இந்த முன்னேற்றம் தொடர்ந்து பேணப்படவேண்டியது அவசியம் என்றும் சர்வதேச நாணய நிதியமும் சர்வதேச சமூகமும் ஏற்றுக்

கொண்டிருக்கின்றன. நாட்டின் உறுதிப்பாட்டில் காணப்படுகின்ற முன்னேற்றத்துக்கான பெருமையின் பெரும்பகுதியும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்துக்கே கொடுக்கப்படுகிறது. தொடர்ந்தும் முன்னேற்றத்தைக் காண்பதற்கு அவர் இன்றியமையாதவராக நோக்கப்படுகிறார்.

தேர்தல்களும் அரசாங்க மாற்றமும் இதுவரையில் தங்களுக்காகப் பெறப்பட்ட பயன்களை ஆபத்துக்குள்ளாக்கிவிடக்கூடும் என்று வர்த்தக சமூகத்தையும் அறிவஜீவிகள் குழாத்தையும் சேர்ந்த பல கருத்துருவாக்கிகள் என்று கூறுகின்ற போதிலும் பெரும்பாலான வேறு பலர் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக உணருகிறார்கள். இது அக்கறையுடன் நோக்கவேண்டிய ஒரு விடயமாகும். ஒரு முன்னணி வர்த்தக குழுமம் இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 400 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியை கண்டிருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், மந்தபோசாக்கு மற்றும் வறுமை தொடர்பான புள்ளிவிபரங்கள் அவற்றின் கீழ்நோக்கிய போக்கையே காண்பிக்கின்றன.

இரு வருடங்களுக்கு முன்னர் பொறுத்துக்கொள்ள முடியாத பொருளாதார நிலைவரம் காரணமாக முன்னாள் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும பதவி விலகக்கோரி மக்கள் வீதிகளில் இறங்கிக் கிளர்ச்சி செய்தார்கள். தங்களின் பொருளாதார நிலைவரத்தை சீராக்கக்கூடிய புதிய அரசாங்கம் ஒன்றை அவர்கள் விரும்பினார்கள். அது இன்னமும் நடைபெறவில்லை. சமூகத்தில் விரக்தி அதிகரித்து மாற்றத்துக்கான கோரிக்கை தீவிரமடைந்திருக்கிறது.

மக்கள் ஆதரவைப் பொறுத்தவரை இரு பிரதான எதிர்க்கட்சிகளையும் விட மிகவும் பின்தங்கிய ஒரூ மூன்றாம் இடத்திலேயே அரசாங்கம் இருப்பதை கருத்துக் கணிப்புகள் வெளிக்காட்டுகின்றன. மக்களின் தீர்ப்புக்கு அரசாங்கம் அஞ்சுகின்றதாகத் தோன்றுகிற இந்த சூழ்நிலையில் இரு வருடங்களுக்கு தேர்தல்களை ஒத்திவைக்கவேண்டும் என்ற கவலைதரும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

சிவில் சமூகச் செயற்பாட்டுப் பரப்பை கட்டுப்படுத்துவதற்கும் எதிர்ப்பை ஒடுக்குவதற்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களின் அதிகாரங்களை அரசாங்கம் திடடமிட்ட முறையில் அரசாங்கம் அதிகரிக்கின்றது என்ற ஒரு விசனம் பரவலாக இருக்கிறது. நீண்டகாலமாக கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகிவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் சமூக ஊடகங்கள் ஊடாக எதிர்ப்பை வெளிப் படுத்துவதற்கான ஜனநாயகப் பரப்பை மூடுவதற்கான அதிகாரத்தை வழங்கும் தற்போதைய இணையவெளி பாதுகாப்பு சட்டத்தையும் பயன்படுத்துவதில் அரசாங்கம் காட்டும் உறுதியான போக்கு எதிர்காலத்துக்கு நல்லதல்ல.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சடடம், ஒலிபரப்பு அதிகாரசபைச் சட்டம் மற்றும் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுனங்கள் சட்டம் ஆகியவை அரசாங்கத்தினால் நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு (தொழிற்சங்க நடவடிக்கைகளும் அரசியல் அபிப்பிராயங்களும் நாட்டின் தேசிய சுயாதிபத்தியத்துக்கும் பொது ஒழுங்கிற்கும் ஊறுவிளைவிக்கின்றன என்று போலியான காரணங்களின் அடிப்படையில் கூட அவற்றை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக )தண்டனை வழங்குவது குறித்து தீர்மானிப்பதற்கான அதிகாரங்களை வழங்கும்.

ஜனநாயகத்தை மலினப்படுத்தல்

மாகாணசபை தேர்தல்களும் உள்ளூராட்சி தேர்தல்களும் ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்டு நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருப்பது ஜனநாயகக் கோட்பாடுகளையும் மக்களின் உரிமைகளையும் மீறுகின்ற செயலாகும். கவலைக்குரிய இந்த சூழ்நிலையில் அதுவும் ஜனாதிபதி தேர்தல் நெருங்குகின்ற வேளையில் ஜனாதிபதி தேர்தலையும் பாராளுமன்ற தேர்தலையும் இரு வருடங்களுக்கு ஒத்திவைக்கவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கூறியிருப்பது இந்த விவகாரத்தில் மக்களினதும் அரசியல் கட்சிகளினதும் பிரதிபலிப்பை அறிந்துகொள்வதற்கான ஒரு முயற்சிக்கு ஒப்பானதாகும்.

ஜனநாயகத்தில் இன்றியமையாத தேர்தல்கள் அரசாங்கம் மக்களின் விருப்பை பிரதிபலிக்கிறதா இல்லையா என்பதை உறுதிசெய்வதற்கான அடிப்படைப் பொறிமுறையாகும். அது குடிமக்கள் தங்களின் தலைவர்களைத் தெரிவு செய்வதற்கும் அவர்களின் செயற்பாடுகளுக்கும் கொள்கைளுக்கும் பொறுப்புக் கூறவைப்பதற்குமான கட்டமைப்பு ரீதியானதும் சட்டபூர்வமானதுமான வழிமுறையை வழங்குகிறது. தேர்தல்கள் சட்டபூர்வமான அதிகார மாற்றத்துக்கும் முரண்நிலைக்கு தீர்வுகாண்தற்கும் வழிசெய்வதுடன் அரசாங்கத்தின் சட்ட பூர்வத்தன்மையையும் பதிலளிக்கும் கடப்பாட்டையும் பேணுகின்றன. அதனால் கிரமமானதும் சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல்கள் இன்றி உண்மையான எந்த ஜனநாயமும் நிலைக்கமுடியாது. ஆனால் தேர்தல்களை நடத்துவதென்பது தற்போதைய அரசாங்கத்தின் விருப்புக்குரியதாக இல்லை.

தேர்தல்களை ஒத்திவைப்பது குறித்த ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரின் யோசனை ஜனநாயகத்தினதும் பொறுப்புக்கூறலினதும் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது. தேர்தல் தினத்தில்தான் மக்கள் உண்மையில் மேன்மையானவர்களாக மாறுகிறார்கள் என்பதுடன் தங்களது பிரதிநிதிகளை தொடர்ந்தும் வைத்திருப்பதா அல்லது வெளியேற்றுவதா என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தையும் தங்கள் கைகளில் எடுக்கிறார்கள்.

இலங்கை மக்கள் தேர்தல்களில் துடிப்பாக பங்கேற்று வருபவர்கள். தேர்தல்களில் அவர்களின் பங்கேற்பு 70 சதவீதத்துக்கும் அதிகமானதாகும். வெளிநாடுகளில் வேலைசெய்யும் சுமார் 20 சதவீதமான இலங்கை வாக்காளர்களையும் சேர்த்தால் இந்த வீதம் மேலும் அதிகமானதாக இருக்கும்.

ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக்காலங்களை நீடிப்பதன் மூலமாக ஜனநாயகத்தின் அடிப்படைகளை மலினப்படுத்துவதில் பொதுச் செயலாளர் ரங்க பண்டார வெளிப்படுத்தும் விருப்பம் அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பற்கான நிர்ப்பந்தத்தின் விளைவானது. இந்த மாதிரியான ஜனநாயக விரோத திட்டத்தை முன்னெடுப்பதில் அரசாங்க தலைவர்கள் இரு தடவைகளில் வெற்றி கண்டாரகள்.

1972 ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவந்த அரசாங்கம் மேலதிகமாக இரு வருடங்களுக்கு அதிகாரத்தில் இருப்பதற்கு வழிசெய்துகொண்டது. அதைத் தொடர்ந்து 1982 ஆம் ஆண்டில் அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு பதிலாக பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை ஐந்து வருடங்களுக்கு நீடிப்பதற்கு மிகவும் துஷ்பிரயோகங்கள் நிறைந்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்தியது. அதைத் தொடர்ந்து 1983 ஆம் ஆண்டில் தமிழர்களுக்கு எதிரான இனவன்செயல் கட்டவிழ்த்துவிடப்பட்டது. அதில் அரசாங்கத்தின் மூத்த தலைவர்களே முன்னரங்கத்தில் நின்று செயற்பட்டார்கள். அதையடுத்து மூண்ட முழு அளவிலான உள்நாட்டுப்போர் மூன்று தசாப்தங்களுக்கு நீடித்தது.

பதவிக்காலங்களை நீடிப்பதில் வெற்றிகண்ட முன்னைய இரு அரசாங்கங்களையும் மக்கள் வெறுப்பும் விரக்தியும் காரணமாக முறையே ஏழு வருடச் சாபக்கேடு என்றும் பதினேழே வருடச் சாபக்கேடு என்றும் குறிப்பிட்டனர். இதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது மேலும் இரு வருடங்களுக்கு தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய எந்தவொரு முயற்சியையும் மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. அத்தகைய ஒத்திவைப்பை பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் கடுமையாக எதிர்க்கும் என்பதும் நிச்சயம். தேர்தல் ஒன்று நடைபெற்றால் அதற்கு பிறகு தனக்கு அதிகார மையத்தில் இடமிருக்கப்போவதில்லை என்று அரசாங்கம் கவலைகொள்கின்ற என்றால் மறுபுறத்தில் எதிர்க்கட்சிகள் தேர்தலில் தங்களுக்கு சிறப்பான வெற்றிவாய்ப்பு குறித்து நம்பிக்கையுடன் இருக்கின்றன.

இந்த பின்புலத்தில் நோக்கும்போது சர்வேதச சமூகத்தின் பிரதிபலிப்பை அறிந்து கொள்வதற்காகவும் தேர்தல்களை ஒத்திவைப்பது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டிருக்கக்கூடியதும் சாத்தியம். பொருளாதார மீட்சிக்கு முற்றிலும் அவசியமான நிதியுதவியையும் சந்தையையும் வழங்குவதால் சர்வதேச சமூகம் அரசாங்கத்துக்கு மிகவும் முக்கியமாக வந்துவிட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தை சர்வதேச சமூகம் மிகவும் ஆதரித்துவருகிறது.

சர்வதேச சமூகத்தின் அக்கறைப்படக்கூடிய எந்தவொரு விவகாரம் தொடர்பிலும் மிகுந்த அறிவார்ந்த கருத்தாடலைச் செய்யக்கூடிய ஒரு தலைவர் என்ற வகையில் தாங்கள் காரியமாற்றுவதற்கு அந்த சமூகம் விரும்பக்கூடிய ஒருவராக விக்கிரமசிங்க நோக்கப்படுகிறார். தேர்தல்களை ஒத்திவைப்பது தொடர்பாக தனது கட்சியின் பொதுச் செயலாளர் கூறிய கருத்தில் இருந்து ஜனாதிபதி தன்னை தூரவிலக்கியிருக்கிறார். ஆனால் ஜனநாயக செயன்முறைகள் மீதான பற்றுறுதியைப் பொறுத்தவரை அரசாங்கம் அதன் நம்பகத்தன்மையை நிலைநிறுத்துவதற்காகவும் தேசிய நலன்களுக்காகவும் தெளிவுபடுத்தவேண்டிய சந்தேகங்கள் இருக்கின்றன.

பிரதிபலிப்புகளை அறிவதற்காக தேர்தல்களை ஒத்திவைப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சர்வதேச சமூகத்திடமிருந்து எந்த உற்சாகமும் கிடைக்கவில்லை. இலங்கையின் ஜனநாயகத்தை மதிக்கும் சர்வதேச சமூகம் அந்த ஜனநாயகத்துக்கு தேர்தல்கள் முக்கியம் என்று நோக்குகிறது.

தேர்தல்களை ஒத்திவைப்பது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் யோசனையை முனவைத்த உடனடியாகவே கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஷங் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்று ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து விசாரித்தார். அது தவிர ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்துவந்த தேர்தல் கண்காணிப்பு தூதுக்குழுவும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விஜயம் செய்தது. பொருளாதார மற்றும் சமூக உறுதிப்பாட்டுக்கான திட்டங்களைப் பொறுத்தவரை தேர்தல்கள் முக்கியமானவை என்ற செய்தி இதன் மூலம் தெளிவாகிறது. இந்த விவகாரத்தில் சவால்களுக்கு இலங்கை வாக்காளர்களும் அரசும் முகங்கொடுக்க வேண்டும்.

இறுதி நேரத்தில் தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு பதிலாக பின்வரும் விடயங்களை அரசாங்கம் அக்கறையுடன் பரிசீலிப்பது விவேகமானது ;

ஊழலுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுதப்படுவதை உறுதிப்படுத்தும் சான்றுகளை காண்பிக்க வேண்டும் ; நாட்டின் முன்னேற்றம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்த திருப்தி குறித்து பெரிதாக கொண்டாடப்படுகின்ற போதிலும், ஆட்சிமுறை தொடர்பிலான சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் முப்பது சதவீதமானவை மாத்திரமே உண்மையில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன ; உறுதிமொழிகளை நிறைவற்றத் தவறியமையே பத்தொன்பது கடப்பாடுகள் கவனிக்கப்படாமல் இருப்பதற்கான காரணமால் இருப்பதற்கு காரணமாகும். அவற்றில் பத்து கடப்பாடுகள் வெளிப்படைத்தன்மை, அரசாங்க கொள்வனவு கொந்தராத்துகள், முன்னர் அளிக்கப்பட்ட வரிவிலக்குகள் பற்றிய மதிப்பீடு, வரி ஊக்குவிப்புகளின் விளைவான செலவுகளின் மதிப்பீடு ஆகியவை அடங்குகின்றன.

இவையெல்லாம் தான் பாரிய ஊழல்களுக்கு இடமளிப்பவை. அதனால் நாட்டைக் கட்டியெழுப்பவதற்கான ஒரு ஜனநாயக ஆணையுடன் கூடிய சட்டரீதியான நியாப்பாடு கொண்ட அரசாங்கம் பதவிக்கு வருவதை உறுதிசெய்வதற்கு குறுகிய காவரையறைக்குள் ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல், மாகாணசபை தேர்தல், உள்ளூராடசி தேர்தல் ஆகியவ்றை நடத்தவேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.