;
Athirady Tamil News

தேர்தல் நிச்சயமற்ற தன்மையே பொருளாதார மீட்சியை மிகவும் கடுமையாக பாதிக்கக்கூடிய காரணி

0

கலாநிதி ஜெகான் பெரேரா

பெட்ரோலுக்கோ அல்லது சமையில் எரிவாயுவுக்கோ மக்கள் நீண்ட வரிசைகளில் இப்போது காத்துநிற்பதில்லை. ஆனால், பொருளாதார புள்ளிவிபரங்கள் கவலையளிப்பவையாகவே இருக்கின்றன. நாட்டின் சர்வதேசக் கடன் பொருளாதார வீழ்ச்சிக்கு முன்னர் இருந்ததைப் போன்றே கட்டுப்படுத்த முடியாத அளவுக்குத் தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டு போகிறது.

இரு வருடங்களுக்கு முன்னர் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது இலங்கையின் சர்வதேசக் கடன் சுமார் 80 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. செய்தி அறிக்கைகளின்படி, இலங்கையின் கடன் மணவீக்கம் போன்ற சில பெரும்போக பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய சிறிய மேம்பாட்டுக்கு மத்தியில், இப்போது 100 பில்லியன் டொலர்களையும் தாண்டிவிட்டது. அதேவேளை, திருப்பிச் செலுத்தப்படாத சில குறிப்பிட்ட கடனின் முதலும் வட்டியும் 6.4 பில்லியன் டொலர்களை தாண்டிவிட்டது.

இது நாட்டுக்கு நல்லதல்ல. கடந்த இரு வருடங்களிலும் அடிப்படையில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை என்பதை இது காட்டுகிறது. நாடும் அரசாங்கமும் சம்பாதிப்பதை விடவும் கூடுதலாகச் செலவு செய்யும் நிலைவரமே தொடருகிறது. வெளிநாடுகளிலிருந்து கடன்களைப் பெறுவதன் மூலமாகவே நிலைமையைச் சமாளிக்கின்றன.

இலங்கை வெளிநாட்டு இருதரப்பு கடன்களையும் வர்த்தக கடன் வழங்குனர்களிடம் இருந்து பெற்ற கடன்களையும் திருப்பிச் செலுத்துவதை 2022 ஏப்ரலில் இடைநிறுத்தியதிலிருந்து திருப்பிச் செலுத்தாத கடன் 4.5 பில்லியன் டொலர்கள் வரை உயர்ந்துவிட்ட அதேவேளை கடந்த வருட இறுதிவரை செலுத்தப்படாத வட்டி 2 பில்லியன் டொலர்கள் வரை சென்றுவிட்டது.

கடந்த வருடம் இலங்கையின் அபிவிருத்திக்கு உதவும் பங்காளிகளுடனும் கடன்வழங்கும் நிறுவனங்களுடனும் செய்துகொண்ட 16 உடன்படிக்கைகள் மூலமாக 2.12 பில்லியன் டொலர்கள் வெளிநாட்டு நிதியை அரசாங்கம் பெற்றது. ஆனால் இவற்றில் அனேகமாக முழுவதுமே ( 2.02 பில்லியன் டொலர்கள் ) திருப்பிச் செலுத்தவேண்டிய கடன் வடிவிலானவை.

2022 ஆம் ஆண்டில் 7.3 சதவீதத்தினால் சுருங்கிய பொருளாதாரம் கடந்த வருடம் 2.3 சதவீதத்தினால் சுருங்கியது. இந்த வருடம் பொருளாதார வளர்ச்சி சுமார் 2 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகின்றது. ஆனால் வருவாய் மட்டம் இரு வருடங்களுக்கு முன்னர் இருந்ததையும் விடக் குறைவானதாகவே இன்னமும் இருக்கிறது. நிலைவரம் மேலும் மோசமாகக்கூடிய வாய்ப்பே இருக்கிறது. இலங்கையின் கடன் நிலைபேற்றுத் தன்மையை மீண்டும் ஏற்படுத்துவதற்கு போதுமானளவுக்கு ஆழமான கடன் மறுசீரமைப்பு அவசியம் என்று உலக வங்கி யோசனை கூறியிருக்கிறது.

பொருளாதார மீட்சி தொடர வேண்டுமானால் நாட்டில் அரசியல் உறுதிப்பாடு தேவை என்று அரசாங்கத் தலைவர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள் மாத்திரமல்ல பொருளாதார நிபுணர்களும் இதையே கூறுகிறார்கள். ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாடு அனுபவிப்பதாகக் கூறப்படுகின்ற பொருளாதார முன்னேற்றம் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என்பதற்கான சான்றுகளையே மேற்கூறப்பட்ட புள்ளிவிவரங்கள் காட்டுவது துரதிர்ஷ்டவசமானது.

பொருளாதாரத்தின் சில துறைகள் குறிப்பாக சுற்றுலாத்துறையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. ஆனால் சிறு உற்பத்தித்துறை போன்ற ஏனைய துறைகள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்குகின்றன. பெரியளவிலான முதலீடுகள் கணிசமானளவு இடம்பெறுவதாகவும் இல்லை. முதலீடுகள் இடம்பெறுகின்ற மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் போன்றவற்றிலும் நிபந்தனைகள் நாட்டுக்குப் பெருமளவுக்கு அனுகூலமானவையாக இல்லை.

நியாயப்பாடு இல்லாத அரசாங்கம்

இலங்கையில் எதிர்காலத் தேர்தல்களைப் பற்றி நிச்சயமற்ற நிலை ஒன்று காணப்படுகிறது. அரசாங்கம் தேர்தல்களை நடத்துமா இல்லையா என்பது பற்றியே எங்குப் பார்த்தாலும் மக்கள் பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இதுவே நாட்டைப் பாதிக்கப்போகின்ற நிச்சயமற்ற தன்மையாகும்.

ஏற்கெனவே இரு தேர்தல்கள் நடத்தப்படாமல் இருக்கின்றன. மாகாணசபை தேர்தல்கள் ஐந்து வருடங்களுக்கும் அதிகமான காலமாக நடத்தப்படாமல் இருக்கின்ற அதேவேளை உள்ளூராட்சி தேர்தல்கள் ஒரு வருடத்துக்கும் அதிகமான காலமாக நடத்தப்படவில்லை. அரசாங்கத் தலைவர்கள் வெறுமனே உறுதிமொழிகளை வழங்குகிறார்கள் என்பதைத் தவிர இந்த தேர்தல்களில் எந்த ஒன்றுமே அண்மைய எதிர்காலத்தில் நடத்தப்படக்கூடிய அறிகுறியைக் காணவில்லை.

ஜனாதிபதி தேர்தல் இவ்வருடம் நடத்தப்படவேண்டும். அதைத் தொடர்ந்து ஏனைய தேர்தல்களும் நடத்தப்படுவதற்கான களம் அமைக்கப்பட்டு (பொருளாதாரச் சவாலை இலங்கை எதிர்நோக்குவதற்கு மத்தியிலும் ) ஜனநாயக ரீதியில் நாடு உறுதிப்பாட்டை அடைவதற்கான சூழ்நிலை தோன்றும் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம்.

உத்தியோகப்பூர்வமாக வங்குரோத்து நிலையடைந்த இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலுடனான கடன் மறுசீரமைப்பு திட்டம் ஒன்றின் ஆரம்பக் கட்டங்களின் ஊடாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் கடந்த இரு வருடங்களாக பெரும்பாலான கடன்கள் மீளச்செலுத்தப்படுவது இடைநிறுத்தப்பட்டிருக்கிறது. கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இறுதியில் உடன்பாடு ஒன்றுக்கு வரும்போது தற்போது திருப்பிச் செலுத்தப்படாமல் இருக்கும் கடன்களை மீளச் செலுத்த வேண்டியிருக்கும். அப்போது மக்கள் மீதான சுமை மேலும் மோசமாக அதிகரிக்கும்.

இந்த நிலைவரம் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களில் மக்களினால் நியாய பூர்வமாகத் தெரிவு செய்யப்படுகின்ற ஒரு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படக் கூடிய பிரச்சினைத் தீர்வுகளை வேண்டி நிற்கிறது. 2024 ஆம் ஆண்டில் தேர்தல்களை நடத்துவதைத் தவிர்க்கும் ஒரு அரசாங்கம் நியாயப்பாடு இல்லாததாகவே நோக்கப்படும். பொருளாதார நெருக்கடியும் தீவிரமடைவதற்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய சீற்றத்தை அந்த அரசாங்கத்தினால் கட்டுப்படுத்துவதும் கஷ்டமானதாகவே இருக்கும்.

தற்போது அரசியல் உறுதிப்பாடின்மை நிலவுவதற்குக் காரணம் தேர்தல்கள் அல்ல, தேர்தல்கள் நடத்தப்படாமல் போகக்கூடிய சாத்தியங்களேயாகும். அரசியல் உறுதிப்பாடின்மை என்ற காரணத்தின் அடிப்படையில் தேர்தல்களை நடத்தாமல் விடுவது குதிரைக்கு முன்னால் வண்டியைப் பூட்டுவதைப் போன்றதாகும்.

இரண்டாவது உலகப்போருக்கு மத்தியில் இங்கிலாந்து தேர்தல்களை நடத்தியது. அதே போன்றே மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின்போதும் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்குக் கிளர்ச்சிகள் முன்னெடுக்கப்பட்ட காலகட்டங்களிலும் இலங்கையில் தேர்தல்கள் தவறாமல் நடத்தப்பட்டன.

ஜனநாயக சமுதாயம் ஒன்றில் தேர்தல்கள் இன்றியமையாதவை. தேர்தல்களைச் சுற்றியே சகல விவகாரங்களும் கையாளப்படவேண்டுமே தவிர மறுதலையாக அல்ல. இன்று இலங்கையில் அரசியல் உறுதிப்பாடின்மைக்குக் காரணம் தேர்தல்கள் உண்மையில் நடத்தப்படுமா இல்லையா என்பதை நிச்சயமாகத் தெரிந்துகொள்ளமுடியாமல் இருப்பதேயாகும்.

முன்கூட்டியே தேர்தல்கள்

ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக்காலங்களை நீடிக்கவேண்டுமானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றில் மக்களின் அங்கீகாரமும் தேவை என்று அரசியலமைப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். தற்போதைய ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப்படாதவர் என்பதால் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான அவரது எந்த முயற்சியும் நியாயப்பாடு இல்லாததாகவே இருக்கும் என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு ஜனாதிபதியைப்போலன்றி, பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு ஜனாதிபதி பதவிக்காலத்தில் நான்கு வருடங்கள் நிறைவடைந்த பிறகு உரிய காலத்துக்கு முன்கூட்டியே தேர்தல்களுக்கு உத்தரவிடமுடியாது என்று அரசியலமைப்பின் 31 ( ஈ ) சரத்து கூறுகிறது. அரசாங்கம் அதன் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்குப் போவது சாத்தியமில்லை. நடைமுறை நிலைவரங்களை நோக்கும்போது இதைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.

ஐக்கிய மக்கள் சக்தியையும் தேசிய மக்கள் சக்தியையும் சேர்ந்த எதிரணி .ஜனாதிபதி வேட்பாளர்களே மக்கள் மத்தியிலான ஆதரவைப் பொறுத்தவரை ஜனாதிபதியையும் விட முன்னணியில் இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. அதனால் தேர்தல்களை ஒத்திவைப்பதையும் அரசாங்கத்துக்குப் பதவியில் இருப்பதற்கு மேலும் கால அவகாசத்தை வழங்குவதையும் பெரும்பான்மையான வாக்காளர்கள் விரும்பமாட்டார்கள் என்று ஊகிக்கமுடிகிறது.

ரணில் விக்கிரமசிங்க 2022 ஜூலையில் பாராளுமன்றத்தினால் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டபோது அந்த நேரத்தில் நிலவிய பிரத்தியேகமான நிலைவரம் காரணமாகவே போராட்ட இயக்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்து அதைச் செயலிழக்கவைக்கக்கூடியதாக இருந்தது. பொருளாதார நிலைவரம் மோசமாக இருந்ததுடன் வீதிப்போராட்டங்களும் கட்டமீறிப் போய்க்கொண்டிருந்தன.

ஆனால் இன்று ஒரு வழமைநிலை காணப்படுகிறது. பொருட்களுக்குத் தட்டுப்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளை 2022 ஆம் ஆண்டில் 7 சதவீதத்தினாலும் 2023 ஆம் ஆண்டில் 2 சதவீதத்தினாலும் பொருளாதாரம் சுருங்கியதன் விளைவாக அன்று இருந்ததையும் விட மக்களின் பொருளாதார நிலை மோசமாக இருக்கிறது.

படுமோசமாகிக்கொண்டு போகும் நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைவரம் கவலை தருவதாக இருக்கிறது. இந்த பிரச்சினையைக் கையாளுவதற்கே தலைமைத்துவம் உயர்ந்த முன்னுரிமை கொடுக்கவேண்டும். சுயநலன்களை விடுத்து தேசிய நலன்களுக்கே தலைமைத்துவம் முன்னுரிமை கொடுக்கவேண்டும்.

அத்துடன் வாக்களிப்பதற்கான தங்களது உரிமையை மறுப்பதற்கு ஒரு அரசாங்கத்தினால் எடுக்கப்படக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் மக்கள் இணங்கிப்போவது சாத்தியமேயில்லை. இலங்கை அதன் கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டுக்கு வந்து கடன்களை மீளச்செலுத்த ஆரம்பித்ததும் பொருளாதார நிலை மேலும் மோசமடையக்கூடிய சாத்தியம் இருக்கிறது. அதனால் சர்வதேச கடன்கள் தோற்றுவிக்கின்ற சவால்களைக் கையாளுவதற்கு மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட நியாயப்பாடு கொண்ட அரசாங்கம் ஒன்று தேவை.

இத்தகைய சூழ்நிலைகளில் மக்களக்கு பயன்தரத்தக்கப் பொருளாதார மீட்சிக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டியது அவசியமாகும். தேர்தல்களை ஒத்திவைப்பது என்பது ஜனநாயக ரீதியில் நியாயப்பாடு இல்லாதது மாத்திரமல்ல, மக்களின் எதிர்ப்பையும் கிளப்பும். அதன் விளைவாக அரசியல் நிச்சயமற்ற தன்மை ஏற்படும் என்பதுடன் பொருளாதார முதலீட்டாளர்களும் நம்பிக்கை இழக்கும் ஆபத்து ஏற்படும்.

அதனால் காலந்தாமதிக்காமல் மிக விரைவாக ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படுவதற்கு அரசாங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதன் மூலமாக அரசியல் நிச்சயமற்ற தன்மையை முடிவுக்குக் கொண்டுவருவதே அரசாங்கத்துக்கு இருக்கக்கூடிய சிறந்த தெரிவாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.