;
Athirady Tamil News

அகதிகளது எதிர்காலம்

0

அண்மையில் சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் இருந்து சுமார் 260 அகதிகளை ஏற்றிக் கொண்டு ஏடன் வளைகுடா வழியாக சென்ற படகொன்று ஏமன் கடற்கரை அருகே கவிழ்ந்ததில் சுமார் 49 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததாகவும், ஏனையோர் பாதுகாக்கப்பட்டதாகவும் , அதுபோல இம்மாதம் 17ஆம் திகதி தெற்கு இத்தாலியில் மத்தியதரைக் கடல் பகுதியில் பயணித்த இரண்டு படகுகள் கவிழ்ந்ததால் அதில் பயணித்த அகதிகளில் 11பேர் உயிரிழந்தும், 64 பேர் காணாமல் போனதாகவும் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் மனதை நெருடுகின்றது.

கடந்த காலங்களில் தென்னாசிய நாடுகளில் இருந்து அவுஸ்திரேலியா,நியூசிலாந்து, போன்ற நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் படகில் சென்ற மக்கள் பரிதாபகரமாக உயிரிழந்ததனையும் நினைவு கூறுதல் அவசியம்.

தான் இருந்த வீட்டையும், உறவினர்களையும், நாட்டையும் இழந்து தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக சட்ட விரோதமான முறையில் படகுகள் மூலம் வேற்று தேசம் நோக்கி பயணிக்கும் அகதிகள் அடுத்தடுத்து கடலில் மூழ்கி மரணிக்கும் சம்பவங்கள் அண்மைக் காலங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இவற்றையெல்லாம் நோக்கும்பொழுது எமக்கு ஒரு விடயம் புலனாகின்றது. அவர்கள் ஏன் தனது சொந்த தாயகத்தை விட்டு வெளியேற முயற்சிக்கின்றார்கள் ?

உறவுகளை இழந்தவன் அனாதை. சொந்த தேசத்தை இழந்தவன் அகதி எனக் கூறப்படுவதுண்டு.

உள்நாட்டு யுத்தங்களினால் பாதிக்கப்படுவோர் அனேகர்.நாடுகளுக்கு இடையிலான யுத்தங்களினாலும், பயங்கரவாதத் தாக்குதல்களினாலும் சிக்கி சின்னாப்பின்னம் ஆகுவோர் ஏராளம். அரசாங்கங்களின் அச்சுறுத்தல்களினால் அச்சத்துடன் வாழ்வோர் பலர்.

வறுமை, பசி, பட்டினி ஆகியவற்றால் வாழ்க்கையைக் கொண்டு செல்ல நித்தமும் போராடுவோர் எண்ணற்றவர்கள். இன, மத, அரசியல், கருத்து வேறுபாடு போன்ற இன்னோரன்ன காரணிகளினால், தமது தாய் நாட்டையே வெறுத்து வேறு நாடுகளுக்கு செல்ல எத்தனிப்போர் பலர்.

இயற்கையின் சீற்றத்தால் வாழ முடியாத நிலை ஏற்படுகின்ற பொழுது பிற நாடுகளுக்கு செல்ல முயல்பவர்களும் இதற்குள் அடக்கம்.

தம்மிடமிருக்கின்ற சேமிப்பையும், வாழ்வாதாரத்தையும். இருப்பிடத்தையும், உறவுகளையும் , உதறித் தள்ளி விட்டு ஒருவர் வேறு நாட்டிற்குப் குடிபெயர்கின்றார் என்றால் அது எந்தளவுக்கு அவரது மனதில் ஒரு மாறா வடுவினை ஏற்படுத்தியிருக்கும் என்பதனை நோக்க வேண்டும்.

அவரது எண்ணம், இலட்சியம் யாவும் தனது சொந்த மண்ணிலிருந்து விடுபட்டு தப்பி உயிர் பிழைத்தால் மாத்திரம் போதும் என்ற உணர்வுகள் மாத்திரம் தான். இவ்வாறானவர்களையே ” அகதிகள் ” என்ற வகைக்குள் உள்ளடக்கப்படுகின்றனர்.

1951ஆம் ஆண்டின் அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகளின் சாசனமானது ‘அகதி’ என்பதற்கு பின்வருமாறு வரைவிலக்கணம் தருகின்றது.

“அகதி” என்பது, இனம், மதம், தேசிய இனம், குறிப்பிட்ட சமூகக் குழுவொன்றில் உறுப்பாண்மை, அரசியல் கருத்து என்பவை காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டவரும், அவருடைய நாட்டுக்கு அல்லது சொந்த இடத்துக்கு வெளியில் இருப்பவரும், அந்த நாட்டினுடைய பாதுகாப்பைப் பெற முடியாத அல்லது பயம் காரணமாக அவ்வாறான பாதுகாப்பை நாட விரும்பாதவருமான ஒருவரைக் குறிக்கும். அகதி என்ற கருத்துரு, மேற்படி உடன்பாட்டின் இணைப்புக்கள் மூலமும், ஆபிரிக்காவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் நடைபெற்ற பிரதேச மாநாடுகளிலும் விரிவாக்கம் பெற்றது. இதனால், சொந்த நாட்டில் இடப்பெறும் போர் அல்லது வேறு வன்முறைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறுபவர்களும் அகதிகள் என ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அகதிகள் என்பவர்கள் யார் ?, அவர்களது உரிமைகள், புகலிடம் கொடுத்த நாடுகளின் பொறுப்புகள் என்ன போன்றனவைகள் இந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சர்வதேச அகதிகள் தினமானது ஒவ்வொரு வருடமும் ஜூன் 20 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.

அகதிகளின் அவல நிலையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், துன்பங்களைச் சமாளிப்பதில் அவர்களின் மன உறுதியை அங்கீகரிக்கவும் அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாள் மோதல், துன்புறுத்தல் அல்லது வன்முறை காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள அகதிகளின் தைரியம், வலிமை மற்றும் உறுதிப்பாட்டைக் கௌரவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

உலக அகதிகள் தினம், அகதிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களின் சமூகங்களுக்கு அவர்கள் செய்யும் நேர்மறையான பங்களிப்புகளை பிரதிபலிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் உலகளாவிய அகதிகள் நெருக்கடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இது ஒரு நாள்.

பல்வேறு காரணிகளினால் ஏனைய நாடுகளுக்கு அரசியல் தஞ்சம் கோரி செல்கின்ற மக்களுக்கு ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் தினமாக இந்த தினம் கருதப்படுகின்றது.

அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையினது A/RES/55/76 தீர்மானத்தின்படி, ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி “சர்வதேச அகதிகள் தினமாகக்” கொண்டாடப்பட வேண்டும் என ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இன்று உலகில் அகதிகள் தொடர்பான செய்திகள் பரவலாக வெளி வந்து கொண்டிருக்கின்றன.

தமது உயிரைப் பற்றி கவலைப்படாமல் , அகதிகள் தமது தாய் நாடுகளிலிருந்து உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய பயணங்களை மேற்கொண்டு, பிற நாடுகளுக்கு தப்பிச் செல்ல எத்தனிக்கின்றனர்.

2023 ஆம் ஆண்டின் இறுதி கட்டத்தில் சுமார் 11.73 கோடி மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையம் தெரிவித்துள்ளது. குறித்த எண்ணிக்கையானது 2024 ஆம் ஆண்டு முதல் பகுதியில் தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடம்பெயர்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக அதிகரித்து வரும் நிலையில், 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள அகதிகள் , புகலிடக் கோரிக்கையாளர்கள், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் நாடற்றவர்களின் எண்ணிக்கையைக் கண்காணிக்கும் புள்ளிவிவரங்களைக் கோடிட்டுக் காட்டும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஸ்தானிகலாலயம் உலகளாவிய போக்குகள் அறிக்கையில் இந்த புதிய தரவுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பெருமளவிலான இடப்பெயர்வுகளுக்கு மோதல் என்பது தான் மிக ஆழமான தூண்டுதலாக காணப்படுவதாக என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையத்தின் தலைவர் பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார்.

“சர்வதேச புவிசார் அரசியலில் மாற்றம் ஏற்படாத வரை, இந்த எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதை நிறுத்த முடியாது ” என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சிரியாவில் இகம்பெற்ற போர் உலகின் மிகப் பெரிய இடப்பெயர்வுக்கு நெருக்கடியாக உள்ளதுடன், 13.8 மில்லியன் மக்கள் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இடம்பெயர வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு சூடானில் ஏற்பட்ட மோதலின் காரணமாக சுமார் ஆறு மில்லியன் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதுபோல இஸ்ரேலுக்கும், காஸாவுக்கும் இடையிலான யுத்தத்தில் சுமார் 1. 7 மில்லியன் மக்கள் காஸாவின் உள்ளேயே இடம் பெயர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று ஆப்கானிஸ்தான், சிரியா , கொங்கோ குடியரசு , யுக்ரெயின், மியன்மார், சூடான், எதியோப்பியா , கென்யா, சோமாலியா , கொங்கோ ஜனநாயக குடியரசு, வெனிசுவேலா , ஆர்மேனியா போன்ற நாடுகளில் நிலவும் மோதல்கள், வன்முறைகள் ஆகியவற்றின் காரணமாக அங்கிருந்து அகதிகளாக வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

இவற்றுக்கு மேலதிகமாக பொருளாதார ரீதியாக, அகதிகளாக, வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே செல்கின்றது.

உலகளாவிய ரீதியில் இரண்டு செக்கன்களுக்கு ஒருவர் வீதம் இடம்பெயர்வதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராயலம் சுட்டிக்காட்டியுள்ளது.

1983 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரினால் பெருமளவான தமிழ் மக்கள் இலங்கையிலிருந்து தமிழகத்துக்கும், உலகில் உள்ள பல்வேறு நாடுகளுக்கும் இடம்பெயர்ந்து சென்றனர்.

தமிழகத்துக்கு சென்ற இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டுமென பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்திருந்தாலும் கூட, இற்றை வரை எந்தவித தீர்மானத்துக்கும் உட்படுத்தப்படவில்லை என்பதனையே அறிய முடிகின்றது.

அண்மையில் அமுலாக்கப்பட்ட இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தில் கூட இலங்கையிலிருந்து சென்ற அகதிகளின் குடியுரிமை தொடர்பான அம்சம் உள்ளடக்கப்படாமை ஒரு கவலைக்குரிய விடயமாகும்.

மேலும் பல நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களில் பெரும்பாலானோர் இன்று நல்ல நிலையில் இருப்பதோடு அவர்கள் கௌரவமாகவும், சிறப்பாகவும் செயல்படுவதனை அவதானிக்க முடிகின்றது.

இலங்கையானது 1951 ஆம் ஆண்டின் அகதிகள் சாசனம், மற்றும் அதன் 1967 ஆம் ஆண்டு நெறிமுறை ஆகியவற்றில் இணையா விட்டாலும் , சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சிகிச்சை அல்லது தண்டனைக்கு எதிரான சாசனம் மற்றும் சர்வதேசம் போன்ற சர்வதேச மரபுச் சட்டம் மற்றும் மனித உரிமைகள் ஒப்பந்தக் கடமைகளுக்கு இலங்கை கட்டுப்பட்டிருக்கின்றது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகராலயத்தின் 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, இலங்கையில் 567 அகதிகளும் 224 புகலிடக் கோரிக்கையாளர்களும் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

இதே வேளை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகராலயமானது (UNHCR) இந்த ஆண்டு இறுதிக்குள் கொழும்பில் உள்ள தனது அலுவலகங்களை மூடுவதாக அறிவித்துள்ளது. இதனால் இலங்கையிலுள்ள நூற்றுக்கணக்கான அகதிகளது எதிர்காலமானது ஒரு நிச்சயமற்ற நிலையில் காணப்படுகின்றது.

இலங்கையானது அகதிகள் உடன்படிக்கையில் கையெழுத்திடாத ஒரு நாடாகும் . அதே வேளை

அகதிகள் அல்லது புகலிடக் கோரிக்கையாளர்களைக் கையாள்வதற்கான உள்நாட்டுச் சட்டம் அல்லது பொறிமுறை எதுவும் இல்லையென்பதுவும் குறிப்பிடக்கூடிய அம்சமாகும்.

அகதிகளாக வெளியேறுபவர்களை ஏற்றுக் கொள்ளும் நாடுகள் கண்ணியத்துடனும், மனிதாபிமானத்துடனும், “மக்கள் யாவரும் சமமே” என்ற அடிப்படையில் அவர்களை வழி நடத்துவது அவசியம்.

ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் அரசாங்கங்கள் தத்தமது நாட்டிலுள்ள அனைத்துப் பிரஜைகளையும் சமமாக நடாத்துவதன் மூலம் அகதிகள் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

“பிறப்பால் மனிதர்கள் யாவரும் சமமே ” என்ற உன்னதக் கோட்பாட்டை பின்பற்றினால், இந்த உலகில் எல்லோரும் சரி சமமாக மதிக்கப்பட்டு, மகிழ்ச்சியாக, தாம் இருக்கும் இடங்களிலேயே வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள முடியும் என்பதே உண்மையாகும்.

பல்வேறு நாடுகளில் அகதிகளாக குடியேறும் மக்களின் செயற்பாடுகளை அவதானிக்கின்ற பொழுது “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூற்று வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.